மணியோசை... | சிறுவர் மலர் | Siruvarmalar | tamil weekly supplements
மணியோசை...
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
Advertisement
 

பதிவு செய்த நாள்

13 செப்
2019
00:00

காட்டுப்பட்டி மலைப்பகுதியை காத்து வந்தாள், மலைதேவதை. மலையின் எல்லா பகுதிக்கும் சென்று, மக்கள் நலனை விசாரிப்பாள். பாதிரிகள் முகாமிட்டிருந்த பகுதியில் ஒரு நாள், விஜயம் செய்தாள். அங்கு சுகாதாரம் நிறைந்திருந்தது; மக்கள் மகிழ்ச்சியுடன் வாழ்வதைக் கண்டாள். அதற்கான காரணத்தை ஆராய்ந்து அறிந்து கொண்டாள்.
ஒரு நாள் -
மக்கள் வேலைகளில் ஈடுபட்டிருந்தனர். அங்கு வந்த ஊர் தலைவன், 'இங்கு முகாமிட்டுள்ள பாதிரிகள் உதவிகரமாக உள்ளனரா...' என்று விசாரித்தான்.
'பாதிரிகள் மிகவும் நல்லவர்கள்; அவர்களின் சேவையால் நோய், நொடி இல்லாமல் வாழ்கிறோம்...' என்று புகழ்ந்தனர் மக்கள்.
இதைக் கேட்டு திருப்தியடைந்த தலைவன், மகிழ்ந்து துாங்கப்போனான். கனவில், ஒரு பக்கம் பாதிரிகளும், மறுபக்கம் மலைதேவதையும் நிற்பதைக் கண்டான்.
பாதிரிகளிடம், 'மக்களுக்கு நீங்கள் செய்யும் உதவிக்கு மிக்க நன்றி...' என்றான்.
'எங்கள் கடமையை தான் செய்தோம்; இதற்குப் போய் எதற்காக நன்றி சொல்கிறீர்; மக்களுக்கு இன்னும் ஏதாவது செய்ய வேண்டுமா...' என்றனர் பாதிரிகள்.
'இதுவரை செய்த உதவிக்கு, என்ன கைமாறு செய்வது என்று யோசித்துக் கொண்டு இருக்கிறேன்...' என்று கூறிய போதே, பாதிரிகள் மறைந்தனர்.
அப்போது புன்னகைத்த மலை தேவதை, 'அன்பனே... உன் மக்களை நலமுடன் வாழ வைக்கும் பாதிரிகளுக்கு என்ன கைமாறு செய்யப் போகிறாய்...' என்றாள்.
'அம்மா... அதைப் பற்றித்தான் யோசிக்கிறேன்; நீ என்ன சொல்கிறாயோ அதன்படி செய்கிறேன்...' என்றான் தலைவன்.
'அந்த பாதிரிகளுக்காக, ஒரு தியானக்கூடம் கட்டி கொடு...' என்ற மலைதேவதை, சட்டென மறைந்தாள்.
கனவில் வந்த காட்சியை எண்ணி மகிழ்ந்த ஊர் தலைவன், அதை நனவாக்கும் முயற்சியில் ஈடுபட்டான். மக்களின் உதவியுடன் தியானக்கூடத்தைக் கட்டினான்.
அந்த கூடம், பாதிரிகளுக்கு மகிழ்ச்சி அளித்தது. அங்கு தங்கி, பணி செய்தனர். அவர்களின் தொண்டு, பல இடங்களிலும் பரவியது.
பாதிரிகளுக்கு உதவும் விதமாக செல்வந்தவர்கள், பல இடங்களிலும் தியானக்கூடங்கள் கட்டினர். மேலும், கடற்கரைப் பகுதியில், அழகிய தியானக்கூடம் ஒன்று அமைக்கப்பட்டது. அது வசதிமிக்கதாக திகழ்ந்தது.
கலைத்திறன் மிக்க சிற்பிகள் உதவியுடன், வேலைப்பாடு மிக்க சிலைகளை நிறுவி, அழகு படுத்தினர் மக்கள். பலவகை கலைப்பொருட்களால் அலங்கரித்தனர். கலைநயம் மிக்க, பெரிய அழைப்பு மணியும் அங்கு வைக்க முடிவு செய்தனர்.
ஒன்று இரண்டல்ல; ஐந்து அழைப்பு மணிகளை தியானகூடத்துக்கு அன்பளிப்பாகக் கொடுத்தனர். ஏராளமான சொத்துக்களையும் தானமாக கொடுத்தனர்.
அந்த பகுதியில், கடற்கொள்ளையர் நடமாட்டம் அதிகம்.
கொள்ளையர் தாக்கினால், தியானகூடத்தின் அமைதி கெடும்; செல்வங்கள் சூறையாடப்படும். இதை எண்ணி பாதிரிகள் பயந்தனர்.
ஆனால், எவரும் நெருங்க முடியாத இடத்தில் பாதுகாப்பாக அமைந்திருந்தது தியானக்கூடம். அதை, சாம்பல் நிறப் பாறைகள் மறைத்திருந்தன. எனவே, கடல் கொள்ளையர் கண்ணில் படாமல் தப்பிவந்தது.
ஒரு பாதிரியின் செயலால் ஆபத்து ஏற்பட்டது. மணிகளை இழுத்து இயக்கும் பொறுப்பு அவருடையது. அவை எழுப்பும் பேரோசையில், மனம் லயித்துப்போவார்.
கடற்கொள்ளையர், அந்த பகுதியில் முகாமிடும் போது, மணிகளை ஒலிக்ககூடாது என, உத்தரவிடப்பட்டிருந்தது.
அதன் அடிப்படையில், இரண்டு நாட்களாக தியானக்கூட மணிகள் ஒலிக்கவில்லை. மணியை இயக்கும் பாதிரிக்கோ தவிப்பு; தினமும், மணி ஓசை எழுப்பாவிட்டால், அவருக்கு துாக்கம் வராது. அவரது கைகள் துடித்தன.
'ஒரே ஒருமுறை மணியை ஒலித்தால் என்ன' என்று, எண்ணி, இயக்கும் கயிற்றை இழுத்தார். ஒரு மணி அசைந்து ஒலி எழுப்பியது.
அவ்வளவுதான்... கடற்கொள்ளையர் செவிகளில் மணியோசை விழுந்தது. தியானக்கூடங்களில் குவிந்திருக்கும் செல்வம் பற்றி அறிந்திருந்த கொள்ளையருக்கு, அந்த ஓசை தேனாக பாய்ந்தது. கொள்ளையடிக்க திட்டமிட்டனர்.
கொள்ளையர்களைக் கண்டதும், செல்வங்களை மூட்டையாகக் கட்டி, மலைக் குகைக்குள் மறைத்தனர்.
தியானக்கூட கதவை உடைத்த கொள்ளையர் ஏமாற்றம் அடைந்தனர். மணிகள் மட்டுமே அங்கே இருந்தன. அவற்றை தங்கள் கப்பலின் சேமிப்பு கிடங்கில் பதுக்கினர்.
கொள்ளையரின் கப்பல் புறப்பட்ட போது, 'கொடியவர்களே... அந்த மணிகளை தியானக்கூடத்திலே வையுங்கள்...' என்று, ஒரு அசரீரி குரல் கேட்டது.
திகைத்து சுற்றும் முற்றும் பார்த்த கொள்ளை கும்பல் தலைவன், கோபம் பொங்க, 'யார் நீ... உன்னால் என்ன செய்ய முடியும்...' என்றான்.
'மணிகளை எடுத்துச் சென்றால், கடும் விளைவை சந்திப்பாய்...' என்று, மீண்டும் அசரீரி குரல் கேட்டது.
அதை பொருட்படுத்தாமல், கப்பலைக் கிளப்ப முயன்ற போது, சேமிப்புக் கிடங்கில் வைக்கப்பட்டிருந்த மணிகள் அதிர்ந்து ஓசை எழுப்பின. முதலில், மிக மெதுவாகவும், இனிமையாகவும் துவங்கி, செவிப்பறையை கிழிப்பது போல் ஓலமிட்டன.
ஒரு அங்குலம் கூட நகரவில்லை அந்த கப்பல். காதை செவிடாக்கும் மணியோசையால், கதி கலங்கிய கொள்ளையர், செய்வதறியாது திகைத்து ஓடினர்.
இந்த காட்சியைப் வியப்புடன் பார்த்துக் கொண்டிருந்தனர் மக்கள். சற்று நேரத்தில் அங்கு தோன்றிய மலை தேவதை, 'சிறிது நேரத்தில், கப்பல் மூழ்கப் போகிறது; அதற்குள், மணிகளை தியானக்கூடத்துக்கு எடுத்து வாருங்கள்...' என்று கட்டளையிட்டாள்.
அடுத்த கணம் -
அற்புத அழைப்பு மணிகள் தியானக்கூடத்துக்கு எடுத்து வரப்பட்டன; அன்று முதல், அந்த பகுதியில் கொள்ளையர் பயம் நீங்கியது. அங்கு மணியோசை ஒலிக்கும் போதெல்லாம், மலை தேவதையின் அருளை நினைத்து, மக்கள் வணங்கினர்.
- ஸ்ரீ செண்பகா பதிப்பகம்

Advertisement

 We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X