ஏடாகூடம்!
தாறுமாறாக எதையாவது செய்தால், 'ஏடாகூடமாக செய்து மாட்டிக்கொள்ளாதே...' என்று, எச்சரிப்பதை கேட்டிருப்போம். அது ஒருவகை, பேச்சு வழக்கு. இங்கே அறியப்போகும், 'ஏடாகூடம்' வேறு வகையிலானது.
புதிர் விளையாட்டு கருவி ஒன்றுக்கு, ஏடாகூடம் என்று பெயர். அது, 'ரூபிக் கியூப்' என்ற புதிர் சதுரம் போன்றது. சொல்லப் போனால், அதற்கு அடித்தளமாக அமைந்தது.
ஏடாகூடம், மர கட்டைகளால் உருவாக்கப்பட்ட கருவி; மர துண்டின் வெட்டுப் பள்ளங்களில், ஆப்புக் கட்டைகளை இணைத்து உருவாக்கப்பட்டிருக்கும்; எளிதில் பிரிக்க முடியாது. ஆனால், குறிப்பிட்ட ஆப்பு இணைப்பை உருவினால், சுலபமாக பிரியும்.
அந்த ஆப்பைத் தவிர, வேறு எந்த கட்டையை இழுத்தாலும், சிக்கல் அதிகரிக்கும். அதனால் தான், ஏடாகூடம் என்று பெயர்.
கையடக்கமாக செய்த ஏடாகூடம் கருவிகள், கடந்த நுாற்றாண்டில், தமிழகத்தில் புழக்கத்தில் இருந்தன. பணப்பெட்டி, பொருள் பாதுகாப்பு அறை போன்றவற்றை, ஏடாகூடம் தொழில்நுட்ப அடிப்படையில், பாதுகாத்தனர். அவை, வலிமையான பூட்டுகளாக விளங்கின.
கேரளாவில், திருவிதாங்கூர் சமஸ்தான பகுதிகளில், ஏடாகூடம் கருவிகள் காணப்பட்டன. மூன்று கட்டை, ஆறு கட்டை, பன்னிரெண்டு கட்டை என, பல ரகங்களில் புழக்கத்தில் இருந்தன.
ஏடாகூடத்தை, 'ஊரா குருக்கு' என்றும் அழைத்தனர். இதற்கு, அவிழ்க்க முடியாத முடிச்சு என்று பொருள். ஆங்கிலத்தில், 'டெவில்ஸ் நாட்' அதாவது, 'நரக முடிச்சு' என்பர். இந்த கருவியை, இப்போது காண்பது அரிது.
ஏடாகூடம் கருவி உருவாக்கி, சாதித்தவர்களும் சமீபத்தில் உண்டு. கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளை அருகே, மீனச்சல் கிராமத்தை சேர்ந்த ஓவியர் ராஜசேகரன், சிறுவயதிலேயே, ஏடாகூடம் பற்றி அறிந்திருந்தார்.
இணையத்தில் உலாவிய போது, 19 அடி நீள, ஏடாகூடம் கருவி இருப்பதை கண்டார். ஐரோப்பா கண்டம், சுவிட்சர்லாந்தை சேர்ந்த ஒருவர் அதை உருவாக்கி, கின்னஸ் சாதனை படைத்திருந்தார்.
அதைக் கண்ட உத்வேகத்தில், 24 அடி நீளத்தில், ஆறு பலகைகளை இணைத்து, பிரம்மாண்ட ஏடாகூடம் கருவியை, கேரள மாநிலம், கொல்லத்தில் உருவாக்கி, கின்னஸ் சாதனை புரிந்துள்ளார். ஓவியம் வரைவதிலும், அவர் கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.
மூச்சு வாங்குது...
சில வகை மீன்கள், தண்ணீருக்கு வெளியே அடிக்கடி துள்ளிக் குதிக்கும். மீன்கள், நீரில் உள்ள ஆக்சிஜனை சுவாசித்தே வாழ்கின்றன. இந்த நிலையில், அவை நீருக்கு வெளியே குதிப்பதன் ரகசியம் என்ன...
தண்ணீரில் உள்ள ஆக்சிஜனை, செவுள்களால் சுவாசிக்கின்றன மீன்கள். சில ரக மீன்களுக்கு, இந்த ஆக்சிஜன் போதுமானதாக இல்லை. அவற்றின் சுவாச உறுப்பு, காற்றை நேரடியாக சுவாசிக்கும் வகையில் அமைந்திருக்கும்.
இந்த வகை மீன்கள், தண்ணீருக்கு வெளியே அடிக்கடி குதித்து, சுவாசிப்பதை வழக்கமாக்கி கொள்ளும். இனப்பெருக்க காலத்தில், அதிக சுறுசுறுப்புடன் நீருக்கு வெளியே குதித்து, உற்சாகத்தை வெளிப்படுத்துவதும் உண்டு.
- என்றென்றும் அன்புடன், அங்குராசு.