இது உங்கள் இடம்! | வாரமலர் | Varamalar | tamil weekly supplements
இது உங்கள் இடம்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 

பதிவு செய்த நாள்

15 செப்
2019
00:00

மருமகளை மகளாக பாவித்தால்...
கட்டுமான நிறுவனத்தில், மேலாளராக பணிபுரிகிறேன். இதுவரை, எங்கள் நிறுவனம் மூலம் வீடு வாங்கிய வாடிக்கையாளர்களில் பெரும்பாலானோர், 'புக்' செய்யவோ, கட்டப்படும் வீட்டை பார்வையிடவோ அல்லது கட்டிய வீட்டின் சாவி வாங்கவோ, தங்கள் பெற்றோரை அழைத்து வரவில்லை.
ஆரம்பத்தில், யதார்த்தமாக நடக்கிறதோ என்று நினைத்தேன். ஒருமுறை, வாடிக்கையாளர் ஒருவரிடம் பேச்சு வாக்கில் கேட்டபோது, அவர் சொன்ன பதில், என்னை சிந்திக்க வைத்தது.
'சார்... நான், வீட்டிற்கு ஒரே பிள்ளை. சிறு வயதிலிருந்தே, தாய்க்கு என் மேல் அளவு கடந்த பாசம். திருமணம் ஆன பின், மனைவிக்கும், தாயாருக்கும் ஒத்து போகவில்லை. அதனால், தாயார் என்னை விட்டு விலக ஆரம்பித்தார்; தந்தையிடமும், எனக்கு ஒட்டுதல் இல்லை.
'சொந்த வீடு கட்ட வேண்டுமென்று, தாயார் பெயரில் இருந்த, பூர்வீக இடத்தை கேட்டேன். தாயார் பேச்சை கேட்டு, அந்த இடத்தை தர மறுத்தார், தந்தை. ஆனால், மாமனார் மற்றும் மைத்துனர், பாசத்துடன் இருந்தனர்.
'வீடு கட்ட பணம் போதவில்லை என்றதும், ஏழ்மையிலும், சிறிதும் யோசிக்காமல், 'பிராவிடண்ட் பண்ட்' பணத்தை, எனக்கு தந்து உதவினார், மாமனார். எனவே, மன ரீதியாக, நாங்கள், அவர்களை சார்ந்து வாழ பழகிவிட்டோம்...' என்றார்.
அவர் கூற்றில் நியாயம் இருந்தாலும், சொந்தங்களை பேண இரு தரப்பினரும் முயற்சி எடுக்கவில்லை என்பதை தெரிந்து கொண்டேன். 'ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்...' என்பது போல, ஒவ்வொரு வீட்டிலும், இதுபோன்ற ஏதோ ஒரு பிரச்னை உள்ளது.
அதனால் தான், பெற்றோரை அழைக்கவில்லை என்பதை புரிந்து கொண்டேன்.
மகனுக்காக, சொந்தங்களை எல்லாம் விட்டு வந்த மருமகளை, மகள் போல பாவித்தால், பிரச்னையே இல்லை. எல்லாமே பெண்கள் கையில் தான் உள்ளது.
— சித. பழனியப்பன், மதுரை.

இளநீர் வியாபாரியின் நுட்பமான செயல்!
பொள்ளாச்சியில், இளநீர் வியாபாரி ஒருவர், நடைபயிற்சி மேற்கொள்வோரிடம் இளநீர் விற்பனை செய்து கொண்டிருந்தார். அவரிடம் இளநீர் குடித்த ஒவ்வொருவருக்கும், காலியான இளநீர் கூட்டில், நாற்று செடிகளை வழங்கினார்.
இளநீர் வியாபாரியிடம் விசாரித்தபோது, 'காலியான இளநீர் கூட்டில், மண் நிரப்பி, அதில் விதைகளை ஊன்றி வைக்கிறேன். இரண்டு வாரம் கழித்து, அந்த கன்றுகளை வாடிக்கையாளர்களுக்கு கொடுத்து, வீட்டில் வளர்க்குமாறு கேட்டுக் கொள்வேன்...' என்றார்.
ஒன்றுக்கும் உதவாத இளநீர் கூட்டை சாலையில் வீசாமல், உரமாகவும், விதை ஊன்றி பயனுள்ளதாக்கி, வருகிறார்.
இயற்கைக்கு, இவர் செய்யும் தொண்டு, என்னை நெகிழ வைத்ததுடன், பிரமிக்கவும் வைத்தது. இதுபோல், நாமும் செய்தால், வாழுமிடத்தை சோலைவனமாக மாற்றலாம்.
எம். நந்தினி, கோவைப்புதுார்.

பிளாஸ்டிக்கை விரட்டிய வாழை இலை!
என் தாத்தாவுக்கு, 80 வயதாகிறது. கிராமத்தில் இருந்து, சென்னை வந்த அவர், ஒரு மாதம், எங்களுடன் தங்கினார்.
ஒருநாள் வெளியில் சென்று வந்தவர், பிளாஸ்டிக்கின் உபயோகத்தை அரசு தடை செய்துள்ள போதும், பெருமளவு மாற்றம் இல்லாததை கண்டு மனம் வருந்தினார்.
மறுநாள், கோயம்பேடு காய்கறி சந்தைக்கு சென்று, நீளமான வாழை இலைகளை, குறைந்த விலைக்கு பேரம் பேசி வாங்கி வந்தார். அவற்றிலிருந்து, நுனி இலை, ஏடு, டிபன் ஏடு என்று பிரித்தெடுத்தார். டிபன் ஏடை விட, சற்று சிறிதாய் விழுந்த இலைகளையும் தனியாக எடுத்து வைத்துக் கொண்டார்.
வீட்டில் உள்ளவர்களை, டிபன் மற்றும் சாப்பாட்டை வாழை இலையில் சாப்பிட செய்தார்.
'வாழை இலையில் சாப்பிடுவது, உடலுக்கு ஆரோக்கியமானது. சாப்பிட்ட இலையை எறிந்து விடலாம். தட்டுகளாக இருந்தால், அலம்பி சுத்தப்படுத்த வேண்டும். தண்ணீர் தட்டுப்பாடு உள்ள இந்நேரத்தில், இலையில் சாப்பிடுவதால், கணிசமான அளவு நீரை சேமிக்கலாம்...' என்றார்.
எங்கள் குடியிருப்பில் இருப்பவர்களிடம் தன்மையாக பேசி, அவர்களையும், வாழை இலையில் சாப்பிட பழக்கி விட்டார்.
கைவசமிருந்த சிறிய ஏடுகளை, அப்பகுதியில் இருந்த, பூ, வெற்றிலை மற்றும் வெண்ணெய் விற்கும் சிறு வியாபாரிகளிடம் கொடுத்தார். பொருட்களை அவற்றில் கட்டி, வாடிக்கையாளர்களுக்கு தரும்படி கேட்டுக் கொண்டார்.
சிறிது காலமே எங்கள் வீட்டில் தங்கிய அவர், வாழை இலைகளின் மீது ஈர்ப்பு வரும்படி செய்த அதிசயத்தை கண்டு, அனைவரும் பெருமை கொண்டோம்!
இதுபோல், அவரவர் பகுதியில் செய்ய முயலலாம். மாற்றம் என்பது முடியாதது இல்லை அல்லவா!
கே. நடராஜன், சென்னை.

Advertisement

 We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X