வேறொரு படப்பிடிப்பில் இருந்ததால், ஒரு மணி நேரமாக, சிவாஜி காத்திருக்க வேண்டியதாயிற்று. முகத்தை அப்பாவியாக வைத்து, அவர் முன் போய் நின்றேன்.
'சாரி, சார்... தாமதமாயிடுச்சு... அங்கே, என்ன ஆச்சுன்னா...' என, முடிப்பதற்குள், 'என்ன, சார்... உன் விளக்கம் எதுவும் எனக்கு தேவையில்லை...' என்று, கண்களை உருட்டி, ஒரு பார்வை பார்த்தார்.
நானும், அவரது முகத்தை நேருக்கு நேர் பார்த்தேன்.
சட்டென்று, 'சார்...' என்று கூறி, 'ஊகூம்... வேண்டாம்...' என்றேன்.
'என்ன வேண்டாம்...' என்றார், அவர்.
'இல்லை... உங்க முகத்துல, கம்பீரமான மீசை ஒட்டியிருக்கீங்க; நல்லா தான் இருக்கு. ஆனா, என் வேண்டாத வேளை, அதை கிட்டத்தில் பார்த்து விட்டேன். ஒரு பக்கம் மீசை, இன்னொரு பக்க மீசையை விட கொஞ்சம் கீழே இறங்கி இருப்பது போல தெரிஞ்சுது, அதான்...' என்றேன்.
நான் பேசியதை கேட்டு, 'டச் - அப்' செய்பவரை நோக்கி பார்வையை திருப்பினார். அவர், கண்ணாடியை எடுத்து வந்து, சிவாஜியின் முகத்துக்கு முன் காட்டினார். இப்படியும் அப்படியுமாக முகத்தை திருப்பி திருப்பி, மீசையை கண்ணாடியில் உற்றுப் பார்த்தார், சிவாஜி.
அடுத்து, 'மேக் - அப்' போடுபவரை கூப்பிட்டார். 'இவன் சொல்றது சரி தான். இந்த பக்கம் மீசை, லேசாக இறங்கி இருக்கு, தெரியுதா...' என்றார்.
'ஆமாண்ணே... இதோ, சரி பண்ணிடறேன்...' என்றார், 'மேக் - அப்' போடுபவர்.
'மேக் - அப்' அறையிலிருந்து வந்த, சிவாஜி, 'என்ன, நாகேஷ்... இப்போ சரியா இருக்குல்ல...' என்று கேட்டார்.
'ஓ... இப்ப தான் நீங்க, 'பர்பெக்ட்'டா இருக்கீங்க...' என்றேன்.
'அண்ணே... ஒரு, 'ரிகர்சல்' பார்த்திட்டு, 'ஷாட்'டுக்கு போகலாமா...' என்று, இயக்குனர் கேட்க, படப்பிடிப்பு தளத்தில் பரபரப்பு தொற்றிக் கொண்டது.
என் தாமத வருகையால், கடும் கோபத்தில் இருந்த, சிவாஜியின் கவனத்தை திசை திருப்ப, சரியாக இருந்த அவரது மீசையை, கொஞ்சம் இறங்கி இருப்பதாக சொன்னது, அவருக்கு தெரியாது. காரணம், அவருக்கு நடிப்பில் அத்தனை ஈடுபாடு.
சிவாஜி கணேசனுடன் சேர்ந்து நடிப்பதற்கு, நிறைய வாய்ப்பு கிடைத்தது, என் அதிர்ஷ்டம்.
மகத்தான நடிகர், சிவாஜி என்றால், மகத்தான மனிதர், எம்.ஜி.ஆர்.,
என் மீது எம்.ஜி.ஆருக்கு எப்போதுமே, தனி பிரியம் உண்டு. 'கால்ஷீட்' பிரச்னை காரணமாக, அவரது படங்களின் படப்பிடிப்பிற்கு, நான் கால தாமதமாக சென்றதுண்டு.
அந்த சமயங்களில், என் இக்கட்டை புரிந்து, இயக்குனரிடம், 'மற்ற காட்சிகளை எடுங்கள்; நாகேஷ் வந்தவுடன், அவர் சம்பந்தப்பட்ட காட்சிகளை எடுத்துக் கொள்ளலாம்...' என்று சொல்லி விடுவார்.
ஆகவே, நான் தாமதமாக போனாலும், எம்.ஜி.ஆர்., படங்களை பொறுத்த வரையில், படப்பிடிப்பு தடை படாது.
எம்.ஜி.ஆரின் சிறப்பு, அவரது ஈகை குணம் தான். அவரின் தாராளமான உதவும் மனப்பான்மையால், நானும் பயனடைந்திருக்கிறேன்.
சிவாஜி நடிக்க, அவரது, 'ஆடிட்டர்'கள், சித்ரா பவுர்ணமி என்று ஒரு படம் எடுத்தனர். காஷ்மீரில் படப்பிடிப்பு நடந்தது. படத்தில், ஒரு ஸ்பெஷல் குதிரை வரும். அதையும், காஷ்மீருக்கு அழைத்து வந்திருந்தனர்.
காஷ்மீரில் படப்பிடிப்பின் போது, பண தட்டுப்பாடு காரணமாக, சாதாரண ஓட்டலில் தான், எங்களை தங்க வைத்தனர். கிடைத்ததை சாப்பிட்டு, ஒத்துழைப்பு தரும்படி கேட்டுக் கொண்டனர். படப்பிடிப்பு வேகமாக நடைபெற முடியாதபடிக்கு, இயற்கை கூட சதி செய்தது.
எந்த இடம் என்று முன்கூட்டியே திட்டமிட்டு, படக்குழுவினர் போய் இறங்குவர். ஆனால், அங்கே, போதிய வெளிச்சமின்றி, பனி பொழிவால், படப்பிடிப்புக்கு தடங்கல் ஏற்படும். இப்படியே நாட்கள் நகர்ந்தன.
அந்த சமயத்தில், வேறு ஒரு தமிழ் படத்தின் படப்பிடிப்பு, காஷ்மீரில் நடந்தது. படத்தின், 'ஹீரோ' எம்.ஜி.ஆர்., எங்கள் படத்தின் நிலைமைக்கு நேர் எதிரான சூழ்நிலை, அங்கே நிலவியது.
எம்.ஜி.ஆர்., படத்தின் படப்பிடிப்பு, எந்த பிரச்னையுமின்றி, மடமடவென்று நடந்து கொண்டிருந்தது. யூனிட்டில் அனைவருக்கும் வாய்க்கு ருசியாக சாப்பாடு. குளிருக்கு போட்டுக் கொள்ள, எம்.ஜி.ஆர்., தன் சொந்த செலவில், அனைவருக்கும் வாங்கிக் கொடுத்த, 'ஸ்வெட்டர், ஷூ' என்று ஒரே அமர்க்களம் தான்.
ஒரு நாள் காலை, நான் தங்கியிருந்த ஓட்டலுக்கு, ஒரு பெரிய கார் வந்தது. அதிலிருந்து இறங்கிய எம்.ஜி.ஆர்., வரவேற்பாளரிடம் விசாரித்து, என் அறைக்கே வந்து விட்டார். இன்ப அதிர்ச்சி அடைந்தேன்.
'இங்க நிலைமை கொஞ்சம் சரியில்லைன்னு கேள்விப்பட்டேன். உங்க வேலை முடிந்தவுடன், உடனடியாக ஊருக்கு புறப்பட்டுடுங்க... செலவுக்கு, இதை வைத்துக் கொள்ளுங்கள்...' என்று, பையிலிருந்து சில ரூபாய் கட்டுகளை எடுத்து, என் கையில் திணித்தார், எம்.ஜி.ஆர்.,
எம்.ஜி.ஆரின் திடீர் வருகையால் ஏற்பட்ட இன்ப அதிர்ச்சியிலிருந்தே மீள முடியவில்லை. இந்நிலையில், அவரது இந்த செயல், பேரதிர்ச்சியையும், அதே நேரம், பெரும் நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியது.
எம்.ஜி.ஆர்., விடைபெற்று போன பின், அவர், என் கைகளில் திணித்த ரூபாயை பார்த்தேன். மூன்று, 100 ரூபாய் கட்டுகள் இருந்தன; 30 ஆயிரம் ரூபாய்.
என்னை பொறுத்த வரை, இன்னொரு யுக்தியை, படப்பிடிப்பின் போது கடைபிடிப்பார், எம்.ஜி.ஆர்., நேரத்துக்கு போனாலும் சரி, தாமதமாக போனாலும் சரி, படப்பிடிப்பு தளத்திற்குள் போனவுடன், 'வாங்க... என் பேர், எம்.ஜி.ராமச்சந்திரன்' என்று, சிரித்தபடியே அறிமுகப்படுத்திக் கொள்வார்.
பதிலுக்கு, 'நான், செய்யூர் கிருஷ்ணாராவ் என்கிற நாகேஸ்வரன்' என்று, அறிமுகம் செய்து, எம்.ஜி.ஆரே முதலில் கையை நீட்ட, நானும் கை குலுக்குவேன்.
- தொடரும்
நன்றி: கிழக்கு பதிப்பகம், சென்னை.
எஸ். சந்திரமவுலி