அந்தரங்கம் புனிதமானது!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 செப்
2019
00:00

'ஓவர்கோட்' மாட்டியபடியே, ''இன்னிக்கு மட்டும், அம்மாவை, 'மதுராதாமு'க்கு கூட்டி போய் காட்டிட்டு வர்ரீயா?'' என்றாள், சித்ரா.
''ஏன்... உனக்கு வேலை இருக்கிறதா?'' என்றேன், சற்று எரிச்சலுடன்.
''சாரி, குமார்... திடீரென்று, என், 'ஹெட்' ஒரு, 'வீடியோ கான்ப்ரன்சு'க்கு ஏற்பாடு செய்துட்டார். இந்தியா, ஜெர்மனி, பிரான்ஸ் மற்றும் யு.எஸ்., என, நான்கு நாட்டைச் சேர்ந்த, மேனேஜர்கள் பேசுகின்றனர்,'' என்றாள்.
பிரபல பன்னாட்டு நிறுவனத்தில், ஐ.டி., துறையில், ப்ராஜக்ட் மேனேஜர், சித்ரா. நெதர்லாந்தில், வேலை. தங்குவதற்கு, 40வது மாடியில், 'த ஹேக்' விசாலமான, 'பிளாட்' கொடுத்துள்ளனர்.
நானும், வேறொரு நிறுவனத்தில், அதேபோல், ஐ.டி.,யில் தான் இருக்கிறேன். ஆனால், சித்ராவை போன்ற சலுகைகள் கிடையாது. அதனால், எனக்கு சட்டென்று விடுமுறை எடுத்துக் கொள்ளும் சாத்தியங்கள் இருந்தன. முதல் முறையாக, நெதர்லாந்துக்கு வந்திருக்கிறார், சித்ராவின் அம்மா.
நெதர்லாந்தில் உள்ள பிரபலமான சுற்றுலா தலம், 'மதுராதாம்!' நெதர்லாந்து வரும் சுற்றுலா பயணியர், இந்த இடத்தை பார்க்க தவறுவதில்லை.
''சரி... நான் அழைத்துச் செல்கிறேன்,'' என்றேன்.
ஆனால், அது வேறு ஒரு பிரச்னையை கொண்டு வரப்போகிறது என்று, எனக்கு அப்போது தெரியவில்லை.
மதுராதாமை பார்த்த பின், அருகில் இருந்த, 'காபி ஹவுஸி'ல், காபி சாப்பிட அமர்ந்தோம்.
சித்ராவின் தாய், சந்தியா, அப்படியொன்றும் பழமைவாதியல்ல. சென்னையில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து, ஓய்வு பெற்றவர். ஐந்து ஆண்டுகளுக்கு முன் தவறி விட்டார், கணவர். சித்ரா, ஒரே மகள்; எதிர்ப்புகளும், எதிர்பார்ப்புகளும் அதிகம் இல்லாத, காதல் திருமணம்.
நாங்கள் காபி அருந்திக் கொண்டிருக்கையில், என் மாமியாரின் வயதொத்த ஒரு பெண்மணி, அவரை உற்று பார்த்தபடி, ''நீங்க, சந்தியா தானே?'' என்றார்.
''ஆமாம்... நீங்கள்?''
''நான், ஜானகி சுந்தரேசன்... மாநில கல்லுாரியில் ஒன்றாக படித்தோமே... நினைவில்லையா?''
அத்தையின் முகத்தில், வியப்பு, சந்தோஷம்.
சந்தியாவின் கை பற்றி குலுக்கினார், ஜானகி.
''எப்போ பிரிந்த நாம், இத்தனை ஆண்டுகளுக்கு பின், இங்கு சந்திக்கிறோம்?'' என்றார்.
''இவர்?'' என்று, என்னை பார்த்து கேட்க...
''என் மருமகன்,'' என்று, அறிமுகம் செய்தார், அத்தை.
''மகள் சித்ரா, இங்கு வேலை செய்கிறாள்.- இவரும், இங்கு தான் வேலையில் இருக்கிறார்,'' என்றார்.
''நானும், ஜானகியும், பி.யூ.சி.,யில் இருந்து, எம்.ஏ., வரை, ஒன்றாக படித்தோம். நெருங்கிய தோழிகள்... 30 ஆண்டுகளுக்கு பின் சந்திக்கிறோம்,'' என்றார், அத்தை.
''சரி... நீங்கள் பேசிக் கொண்டிருங்கள்... நான், சற்று காலாற நடந்து வருகிறேன்,'' என்று, தோழிகளை பேச விட்டு, அங்கிருந்த பரந்த வெளியில் நடக்க துவங்கினேன்.
''ஓ... மைகாட்...
30 ஆண்டுகளுக்கு பின், உன்னால் எப்படி, என்னை அடையாளம் கண்டுகொள்ள முடிந்தது?'' என்றார், அத்தை.
''ரியலி... ஆச்சர்யம் தான்... உன் முகத்தில் அதிக மாற்றங்களே இல்லை. பெரிய கண்களும், அழகான மூக்கும் அப்படியே இருக்கிறது,'' என்று, ஜானகி சொன்னபோது, பெருமையாக இருந்தது, எனக்கு.
ஏனெனில், சித்ரா அப்படியே அவள் அம்மாவின் சாயல். அதே பெரிய கண்கள்; அழகான நாசி.
''அந்த காலத்தில், ஆப்ரஹாம், உன் முகத்தை பாராட்டி, எத்தனை கவிதைகள் எழுதி இருக்கிறான்?'' என்றார்.
''ஷ்ஷ்... ஜானகி, ப்ளீஸ்... அதைப் பற்றி பேச வேண்டாம். ஓ... நேரமாகி விட்டது... நான் கிளம்பட்டுமா... குமார் வந்து விட்டார்,'' என்றார், புன்னகைத்தபடி.
என்னை திரும்பிப் பார்த்தார், ஜானகி.
''ஓ... சரி... கிளம்பலாம்... இந்தா, என் போன் நம்பர்... இந்தியா வந்ததும், கட்டாயம் போன் செய்ய வேண்டும்,'' என்றார்.
ஒருவரை ஒருவர், மேற்கத்திய பாணியில் கட்டித் தழுவிக் கொண்டனர்.
''உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி... அதை விடவும், என் பழைய தோழியை பார்த்ததில், இன்னும் பல மடங்கு மகிழ்ச்சி... உடம்பை பார்த்துக் கொள். பை,'' என்று விடைபெற்றார், ஜானகி.
நானும், அத்தையும் மவுனமாக அருகில் இருந்த, மதுராதாம் ரயில் நிலையத்திற்கு நடக்கத் துவங்கினோம்.
நெதர்லாந்தில் எந்த இடத்திலும் பெரும் கூட்டத்தை காண முடியாது. நாங்கள், ரயில் நிலையத்தை நெருங்குகையில், ஓர் ரயில் வந்து நின்று, புறப்பட்டு சென்றது தெரிந்தது. அடுத்த ரயில் வர, 10 நிமிடங்களாவது ஆகும்.
சந்தியா அத்தையின் முகத்தில் மகிழ்ச்சியுடன், சிறிது சோகமும் தெரிந்தது. சற்று அமைதி காத்தார்.
''முப்பது ஆண்டுகள் என்பது, மிக நீண்ட காலம் இல்லையா, குமார்?''
''ஆமாம்!'' என்றேன்.
''ஜானகி, என்னை அடையாளம் கண்டுகொண்டது ஆச்சரியம் தான். அவள் தோற்றம் தான் மாறி இருக்கிறது,'' என்றார்.
''வயது, அனுபவம் எல்லாம் தான்,'' என்றேன், பொதுவாக.
''ஆனால், எத்தனை காலங்கள் ஆனாலும், சில நினைவுகள், நீறு பூத்த நெருப்பாய் மனதின் அடியில் கனன்று கொண்டே இருக்கும் போலிருக்கிறது,'' என்றார், அத்தை.
சில விநாடிகள் ஒன்றும் புரியாமல், என்ன பதில் சொல்வது என்று தெரியாமல், பேசாமல் இருந்தேன்.
''உங்களிடம் சொல்வதில் தப்பு இல்லை, குமார்... என்னை பார்த்த அடுத்த நிமிஷம், ஆபிரஹாம் என்ற பெயரை சொன்னாரே, ஜானகி... உங்கள் காதில் விழுந்திருக்கும் என்று நினைக்கிறேன்,'' என்றார்.
''ஆம்... கேட்டேன்... ஏதோ, உங்கள் முகத்தை பற்றி, கவிதைகள் எழுதியதாக,'' என்று இழுத்தேன்.
''ஆப்ரஹாம், என் வாழ்க்கையின் தொடக்கத்தில் துவங்கி, அப்போதே முடிந்து போன அத்தியாயம்,'' என்றவர், தொடர்ந்தார்.
''காதல்... ஊகித்திருப்பீர்கள்... உண்மை தான். ஆப்ரஹாம், என் கல்லுாரித் தோழன். ஒரே மாதிரி கருத்துக்களும், எண்ணங்களும், எங்களை காதலர்களாக்கின. ஆனால், இந்த காலத்தில் உள்ள சுதந்திரம் அப்போது எங்களுக்கு இல்லை. அவர்கள் குடும்பம், மத நம்பிக்கை கொண்டது. என்னுடையதும் அப்படித்தான்...
''எங்கள் திருமணம் நடக்க வேண்டுமென்றால், நான் மதம் மாற வேண்டும் என்றனர்; ஆப்ரஹாமும் தான். வீட்டில் ஒப்புக்கொள்ளவில்லை. ஏன்... எனக்கே உடன்பாடு இல்லை. காதலை முறித்துக் கொண்டோம். மெல்போர்ன் போய் விட்டான், ஆப்ரஹாம். சிறிது நாட்கள் திருமணம் வேண்டாம் என்றிருந்தேன்...
''பின்னர், வீட்டில் பார்த்து நிச்சயம் செய்த திருமணம். காலம் ஓடியது... ஜானகி, என்னுடன் படித்தவள். அவளுக்கு எல்லாம் தெரியும். ஆப்ரஹாமுக்கு ஆங்கிலத்தில் புலமை அதிகம். கவிதைகள் எழுதுவான்...
''என்னை பற்றியும், என் முகத்தை பற்றியும் பல கவிதைகள் எழுதி இருக்கிறான். அது, ஜானகிக்கும் தெரியும்... ''உங்களுக்கு, கவிதை எழுத வராது இல்லையா?'' என்றார். ''எனக்கு, கம்ப்யூட்டர் புரோகிராம் தான் எழுத வரும்,'' என்று சொல்லி, சிரித்தேன்.
''சில காரியங்கள் நடக்காது என்று தெரிந்தும், மனித மனம் அதற்கு ஆசைப்படுகிறது. அப்படிப்பட்டது தான் எனக்கும், ஆப்ரஹாமுக்கும் இடையே தோன்றிய காதல்... வெறும் கானல் நீர்,'' என்றார், சோகத்துடன்.
''வாஸ்தவம் தான்,'' என்றேன்.
பின்னர், ரயில் வந்தது. தலைநகர் ஹேகில் இறங்கும் வரை, நாங்கள் எதுவும் பேசிக் கொள்ளவில்லை.
ஸ்டேஷனில் இருந்து சிறிது துாரம் நடக்க வேண்டும் வீட்டிற்கு. வெளிநாட்டுக்கே உரிய சில்லிப்பு இருந்தது.
''உங்களிடம் ஒரு வேண்டுகோள், குமார்... செய்வீர்களா?'' என்றார்.
''என்ன?''
''நான், ஜானகியை பார்த்தது, ஆப்ரஹாம் பற்றி, உங்களிடம் பேசியது, இவை எதையுமே, தயவுசெய்து, சித்ராவிடம் சொல்ல வேண்டாம்,'' என்றார்.
''சித்ராவுக்கு உங்கள்...'' என்று, இழுத்தேன்.
''தெரியாது... தெரியவும் வேண்டாம்... இது, என் அந்தரங்கம்... அந்த விஷயம் எதிர்பாராமல், உங்கள் முன் உடைந்து விட்டது... இந்த விஷயம் இதோடு போகட்டும்,'' என்றார்.
''உங்களை, ஒன்று கேட்கலாமா?'' என்றேன்.
''என்ன?''
''பொதுவாக, தாய்- - மகள்களுக்கிடையே, அந்தரங்கமும், ஒளிவு-மறைவு இருக்காது என்று சொல்வரே?''
''யார் சொன்னது... ஒவ்வொரு மனித உயிருக்கும், உள்ளே - வெளியே காட்டிக்கொள்ள விரும்பாத, ஒரு அந்தரங்கம் இருக்கும்... அது, கறை படிந்ததா, புனிதமானதா என்பது, அவரவரைப் பொறுத்த விஷயம்...
''சித்ரா மனதில் உருவாகி இருக்கும், தாய் என்ற பிம்பத்துடன், இந்த காதலில் தோல்வி கண்ட ஓர் இளம் பெண்ணின் உருவம் பொருந்தாது. அதை நான் உடைக்க விரும்பவில்லை. உங்களுக்கென்று எந்த அந்தரங்கமும் இல்லையா, குமார்...
''இருக்கும்... அதை, எவரிடமும் பகிர்ந்துகொள்ள விரும்ப மாட்டீர்கள்... அதில், தவறு இல்லை... அவரவர்களுக்கு அவர்களது அந்தரங்கம் புனிதமானது... அதனால், அது பற்றி பேச வேண்டாம்,'' என்றார்.
வெறுமனே தலையசைத்தேன். அத்தையின் ஆழமான பேச்சும், கருத்தும், என் மனதில் அலைகளைத் தோன்றுவித்தன. ஆம்... என்னிடமும் சில பகிர்ந்து கொள்ளாத அந்தரங்கங்கள் உள்ளன. அத்தை சொன்னது சரி தான்.
''சொல்ல மாட்டேன்... இந்த விநாடியுடன் இவ்விஷயத்தை மறந்து விடுவோம்,'' என்றேன்.
மாலை -
அலுவலகத்திலிருந்து உள்ளே நுழைகையில்,''எப்படி இருந்தது, மதுராதாம்?'' என்று உற்சாக குரலில் கேட்டாள், சித்ரா.
''உங்கள் மொழியில் சொல்ல வேண்டுமென்றால், ரியலி ஆஸம்,'' என்றார், அத்தை.
அன்று இரவு, எனக்கு துாக்கம் வரவில்லை; வேலையின் அலுப்பில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள், சித்ரா. படுக்கையிலிருந்து எழுந்து, ஹாலுக்குள் நுழைந்தேன்.
ஹாலில் ஒரு பகுதி தவிர, மற்ற இடங்களில் கண்ணாடி சுவர்கள் தான். 40வது மாடியிலிருந்து நகரத்தை பார்ப்பது, இரவில் ஓர் அற்புதமான காட்சியாக இருக்கும். மங்கலான வெளிச்சத்தில், கண்ணாடி சுவர் வழியாக வெளியே பார்த்துக் கொண்டிருந்தார், அத்தை.
கூப்பிடலாம் என்று வாய் எடுத்தவனுக்கு, அந்த வெளிச்சத்திலும், அவர் முதுகு குலுங்குவது தெரிந்தது; அழுது கொண்டிருக்க வேண்டும். அன்று பிற்பகல் நடந்த நிகழ்வுகளும், அத்தை என்னிடம் தெளிவாக பேசியதும், அதன் அடிநாதமாக ஒலித்த சோகமும் நினைவுக்கு வந்தது.
'அந்தரங்கம் புனிதமானது' என்றாரே, அந்தரங்கம் புனிதமானது மட்டுமல்ல; பல சமயங்களில், மிகவும் சோகமானதும் கூட என்பதும், மறுக்க முடியாத நிஜம்.
வயதும், அனுபவங்களும் மன முதிர்ச்சியை தந்தாலும், சில நுண் உணர்வுகள் மாய்ந்து போவதில்லை. அவை மனதின் மூலையில் தொடர்ந்து கொண்டே தான் இருக்கும்.
'காதல்' என்பது, மனித மனதில் தோன்றும் ஓர் ஆழமான நுண் உணர்வு. அது, எத்தனை காலமானாலும் நீறு பூத்த நெருப்பாக மனதின் ஏதோ ஒரு மூலையில் கனன்று கொண்டே தான் இருக்கும் போல!
அழட்டும்; கண்ணீர் தான் அதற்கு மருந்து.
அவர் மனதின் சோகம், எனக்குள்ளும் லேசான தாக்கத்தை தர, அமைதியாக அறைக்கு திரும்பினேன்.

தேவவிரதன்

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
கதிரழகன், SSLC - சிவகங்கை, TN,இந்தியா
15-செப்-201920:56:12 IST Report Abuse
கதிரழகன், SSLC என்ன கவிதை எழுதி என்ன? மதம் தாண்டி மனிதம் பார்க்கும் சகிப்பு தன்மை இல்லாத ஆபிரகாம்களை துரத்தி அடிக்கிறதுதான் நல்லது. எப்படி பெரிய ஆபத்துலேந்து தப்பிச்சோமினு அவுங்களுக்கு தெரியல. நம்ம சனங்க பலருக்கும் புரிய மாட்டேனுது. நிழல்ல இருக்கிறவரைக்கும் வெயில் கொடுமை தெரியாது.
Rate this:
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
16-செப்-201904:22:32 IST Report Abuse
skv srinivasankrishnaveniஇன்றும்கூட பலகாதல்களுக்கு பெரிய தடையாக இருக்கே சாதி அண்ட் மதம் . பல திருமணங்கள் பெற்றோரின் விருப்பம்களுக்காகவேதான் நடக்குது பாவம் . மதம் மாறியே ஆவோனும் என்ருகட்டாயம் எதிர்பார்க்கும் ஏசுபிரியர்கள் அல்லாஹ்வின் அன்பர்களும் உள்ளவரை இது தொடர்கதையேதான்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X