மீசையை முறுக்கும், சந்தானம்!
காமெடியனாக நடித்து வந்த சந்தானம் திடீரென்று, 'ஹீரோ'ஆன போது, அவரது நட்பு வட்டார, 'ஹீரோ'க்கள் அவரை கிண்டல் செய்தனர். 'உங்கள், 'ஹீரோ' ஆட்டம் பாட்டமெல்லாம், ஓரிரு படத்தோடு முடிந்துவிடும்...' என்றனர். ஆனால், ஒரு டஜன் படங்களுக்கு மேல், 'ஹீரோ' ஆக நடித்து, மார்க்கெட்டில் நின்று கொண்டிருக்கும், சந்தானம், அடுத்த படியாக, ஒரு படத்தில் மூன்று வேடங்களில் நடிக்கப் போகிறார். 'இந்த படத்தில், ஒவ்வொரு வேடத்திலும், ஒவ்வொரு மாதிரியான நடிப்பை கொடுத்து, என்னை கிண்டல் செய்தவர்களுக்கு, நான் யார் என்பதை நிரூபிக்கப் போகிறேன்...' என்று, மீசையை முறுக்குகிறார்.
- சினிமா பொன்னையா
'பிளாக் பெல்ட்' வாங்கிய கவர்ச்சி நாயகி!
இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் நடித்த, யாஷிகா ஆனந்தை, நமக்கெல்லாம் கவர்ச்சி நடிகையாக மட்டும் தான் தெரியும். ஆனால், கராத்தேயில் அவர், 'பிளாக் பெல்ட்' வாங்கிய வீராங்கனை. அதனால், 'ஆக் ஷன்' திறமையை வெளிப்படுத்த, நேரம் பார்த்து வந்தார். இந்நிலையில், யோகிபாபுவுடன் நடிக்கும் ஒரு படத்தில், கராத்தே கலையை பயன்படுத்தி, ஒரு, 'ஆக் ஷன்' காட்சியில், வில்லனுடன் படுபயங்கரமாக சண்டை செய்துள்ளார், யாஷிகா. இதையடுத்து, 'ஆக் ஷன்' காட்சிகளில் நடித்து, தன் மீது அழுத்தமாக பதிந்துள்ள, கவர்ச்சி நடிகை என்ற, 'இமேஜை' படிப்படியாக மாற்றப் போகிறார். ஆரியக் கூத்தாடினாலும், காரியத்திலே கண்!
—எலீசா
கோலிவுட் நடிகைகளை அதிர வைத்த, மஞ்சுவாரியர்!
தனுஷ் நடித்து வரும், அசுரன் படம் மூலம், தமிழில் அறிமுகமான, பிரபல மலையாள நடிகை, மஞ்சு வாரியருக்கு, தொடர்ந்து தமிழில் நடிக்கும் ஆர்வம் ஏற்பட்டுள்ளது. அதனால், மலையாளத்தைப் போலவே தமிழிலும், குடும்ப பின்னணி கொண்ட, கதையின் நாயகி வேடங்களில் நடிக்க தயாராகி விட்டார். இதனால், கதையின் நாயகியாக நடித்து வரும் ஜோதிகா, நயன்தாரா மற்றும் த்ரிஷா போன்ற நடிகைகள், மஞ்சுவாரியர், தங்களது வாய்ப்புகளை தட்டிப்பறித்து விடுவாரோ என்று, அதிர்ந்து போயிருக்கின்றனர். அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்!
— எலீசா
ரஜினிக்கு பிறகு, விஜய் தான்!
'ரஜினிக்கு பிறகு, 'சூப்பர் ஸ்டார்' யார்?' என்ற சண்டை, விஜய் - அஜீத் ரசிகர்களுக்கு இடையே சத்தமில்லாமல் நடந்து கொண்டிருக்கிறது. இந்த நேரத்தில், விஜயின் தாயார், ஷோபா சந்திரசேகரன் வெளியிட்டுள்ள ஒரு செய்தியில், 'தியாகராஜ பாகவதர், எம்.ஜி.ஆர்., ரஜினிகாந்துக்கு பிறகு, சூப்பர் ஸ்டாராக உன்னை கொண்டாட உலகமே காத்திருக்கிறது. தாய் என்பதை மறந்து, ரசிகர்களின் கூட்டத்தோடு கூட்டமாக நின்று, நானும் விசில் அடிக்க காத்துக் கொண்டிருக்கிறேன்...' என்று குறிப்பிட்டுள்ளார்.
— சினிமா பொன்னையா
கறுப்புப்பூனை!
* தாரா நடிகையுடன் நடித்தால், அது தனக்கு, 'பிளஸ்' ஆக இருக்கும் என்று தான், இரண்டு படங்களில் அவருடன் நடித்தார், மெரினா நடிகர். ஆனால், அவருடன் நடித்த இரண்டு படங்களுமே, 'பிளாப்' ஆகி, நடிகரின் மார்க்கெட்டையே அதலபாதாளத்தில் தள்ளி விட்டு விட்டது. அதனால், தாராவின் பெயரை சொன்னாலே, தெறித்து ஓடும், மெரினா நடிகர், 'இனிமேல், எந்த நடிகைகளுடன், 'டூயட்' பாடினாலும், முன்பே அவர்களின் ஜாதகத்தை பார்த்து, எனக்கு செட்டாவர் என்றால் மட்டுமே இணைவேன். இல்லையேல், அவர், எத்தனை பெரிய நடிகையாக இருந்தாலும், மறுபரிசீலனை இன்றி, துரத்தியடித்து விடுவேன். அந்த அளவுக்கு, தாரா, எனக்கு பெரிய பாடத்தை புகட்டி விட்டார்...' என்கிறார், நடிகர்.
* 'டேய்... சிவகார்த்தி... போன முறை, நண்பனோட சேர்ந்து சைக்கிள் கடை வைக்கிறேன்னு, ஆரம்பிச்ச... என்னாச்சு... உன்னை ஏமாத்திட்டு, இரண்டு சைக்கிளை, 'ஆட்டைய' போட்டுட்டான்... அப்பவும் உனக்கு புத்தி வராம, திரும்பவும், அவனோடு சேர்ந்து, ஜூஸ் கடை போட்ட... அதுவும், ஊத்தி மூடிகிச்சு... இப்பவாவது சொல்றத கேளு... அவனை கழட்டி விட்டுட்டு, ராசியான நண்பனா, யாரையாவது சேர்த்து, தொழில ஆரம்பி...' என்றார், பெரியப்பா.
சினி துளிகள்!
* சிவகார்த்திகேயன் நடித்து வரும், ஹீரோ படத்தில், அர்ஜுன் வில்லனாக நடிக்கிறார்.
* யோகிபாபு நம்பர் ஒன் காமெடியனாகி, தன்னை பின் தள்ளி விட்டதால், சம்பளத்தை கணிசமான அளவு குறைத்து விட்டார், சூரி.
அவ்ளோதான்!