முதன்மையான செல்வம், மனநிறைவு தான் என்பது, முன்னோர் வாக்கு. இதை விவசாயி ஒருவர் மூலம் விளக்குகிறார், பகவான்.
விவசாயி ஒருவர் ஏழ்மை நிலையில் இருந்தார். மனம் கலங்காமல், சத்தியம் தவறாமல் நல்வழியிலேயே நடந்து வந்தார். எந்த நிலையிலும், எதற்கும் ஆசைப்படாத அந்த விவசாயியைத் தேடி, பகவானே வந்து விட்டார்.
ஒருநாள், அந்த விவசாயி செல்லும் வழியில் இருந்த, நதிக்கரையில் இரண்டு நல்ல ஆடைகளை விரித்துப் போட்டார், பகவான். தனக்கும் அதற்கும் தொடர்பில்லை என்பதைப் போல, ஓர் ஓரமாக மனித வடிவில் அமர்ந்தார்.
விவசாயி வந்தார். ஆற்றங்கரையில் கிடந்த அழகான ஆடைகளை கண்டும், அவற்றின் மீது கடுகளவு கூட ஆசைப்படாமல் போய் விட்டார்.
மறுநாள், அதே இடத்தில், தங்க மீன் ஒன்றை, விவசாயியின் பார்வையில் படும்படியாகப் போட்டு வைத்தார், பகவான்.
விவசாயி வந்தார்; தங்க மீனை பார்த்தார்.
'ஆற்றங்கரையில் யாருமில்லாத இடத்தில், அற்புதமான பொருள் கிடக்கிறது. இதை நான் எடுத்துக் கொண்டால், யாருக்கும் தெரியப் போவது இல்லை. ஆனால், அறிந்தோ, அறியாமலோ இன்று வரை நான் சேர்த்து வைத்துள்ள தர்மம், என்னை விட்டுப் போய் விடும்...' என்று எண்ணியபடியே, தங்க மீனை தீண்டாமல் போய் விட்டார், விவசாயி.
பகவானும் விடவில்லை. மனித வடிவில் விவசாயியின் வீட்டிற்குப் போனார்.
விவசாயியின் மனைவியிடம், 'அம்மா... நதிக்கரையில் விதிவசமாக கிடைத்த பெரும் செல்வத்தை, உன் கணவன், எடுக்காமல் வந்து விட்டான். இப்போது, அதை யாரோ எடுத்து போய் விட்டனர்.
'உன் கணவன், பெரிய பக்தன் தான், இல்லையென்று சொல்லவில்லை. ஆனால், செல்வமில்லாத வாழ்வு ஒரு வாழ்வா?' என்றார்.
அதைக்கேட்ட பெண்மணி, தன் கணவரிடம் விபரம் கூறினாள்.
மனித உருவில் இருந்த பகவானை பார்த்து, 'ஐயா... நீங்கள் சொல்வதை என்னிடம் சொல்லுங்கள்...' என்றார், விவசாயி.
'துாயவனே... நல்ல காலம் என்பது, எப்போதும் வரக்கூடியதில்லை. பெருஞ்செல்வம் கிடைத்தும், அதை பொருட்படுத்தாமல் வந்து விட்டாய். தங்க மீன் அங்கேயே தான் இருக்கும். இப்போது போய் எடுத்து வா, மனைவியுடன் சுகமாக வாழ்...' என்றார்.
அமைதியாகப் பதில் சொல்லத் துவங்கினார், விவசாயி...
'ஐயா... எதன் மீதும் ஆசையில்லாமல் இருப்பதே, எனக்குப் பெரும் செல்வமாக இருக்கிறது. யாரிடமும் கோபம் கொள்ளாமல் இருப்பதே, புண்ணிய தீர்த்தத்தில் நீராடலுக்கு சமம்; அன்புடையவனாக இருப்பதே, மந்திர ஜபம். மனதில் நிறைவோடும், அமைதியோடும் இருப்பதைப் போன்ற செல்வம், வேறு எதுவும் இல்லை.
'மனதாலோ, வாக்காலோ, எந்த ஜீவராசிக்கும் துன்பம் இழைக்காமல் இருப்பதே, ஸித்தி; அடுத்தவர் பொருளை எட்டிக்காய் போல நினைப்பதே, விரதம்.
'அடுத்தவர் பொருளை எடுத்து வந்து, அதை வைத்து தர்மம் செய்து புண்ணியம் சேர்ப்பதை விட, அப்பொருளைத் தீண்டாமல் இருப்பதே பெரும் புண்ணியம். ஆகவே, நீங்கள் சொல்லும் செல்வத்தை நான் எடுத்துக் கொள்ள மாட்டேன்...' என்றார்.
விவசாயியின் துாய மனம் கண்டு, மலர்மாரி பொழிந்தனர், தேவர்கள்.
செல்வம் என்பது மனநிறைவே என்பதை விளக்கும் கதை இது.
பி. என். பரசுராமன்