அன்பு சகோதரிக்கு —
மகனின் நல்வாழ்வுக்காக, வழி தேடும் அம்மா நான். வயது, 56. கணவர் இறந்து விட்டார். பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிகிறேன். மகன் வயது, 27; தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறான்.
மகனுக்கு திருமணம் செய்து வைக்க, பெண் தேடினேன். எங்கள் ஊருக்கு அருகில் உள்ள ஊரிலிருந்து வந்த, ஒரு ஜாதகம் பொருந்தியது.
மகனுக்கு பெண்ணை பிடித்துப்போக, பெண் வீட்டிலும் சம்மதிக்க, திருமண ஏற்பாடுகளை செய்தோம்.
திருமணத்துக்கு பின், மகனுடன், அப்பெண் சந்தோஷமாக வாழவில்லை. ஏற்கனவே, அவளது அத்தை பையனை விரும்பி இருக்கிறாள். ஆனால், இவளை நிராகரித்து, வேறு பெண்ணை திருமணம் செய்து வைத்திருக்கிறார், அத்தை.
இதில் மனம் ஒடிந்தவள், திருமணத்தன்று, தற்கொலைக்கு முயற்சித்திருக்கிறாள். எப்படியோ காப்பாற்றி, என் மகனுக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர்.
இந்த விஷயம், திருமணத்துக்கு பின் தான், எங்களுக்கு தெரிய வந்தது. நானோ, மகனோ, அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. சந்தோஷமாக வாழ்ந்தால் போதும் என்று இருந்தோம்.
ஆனால், என் மருமகளின் மனமோ, இன்னும் சமாதானமாகவில்லை. படிப்பு, வேலை, வசதி மற்றும் அழகு என்று ஒவ்வொரு விஷயத்திலும், அத்தை பையனுடன், என் மகனை ஒப்பிட்டு பேசி, நோகடிக்கிறாள்.
அத்தை பையனை விட, என் மகனை, பந்தயத்தில் முந்த வைக்கும் உந்துதலில், உறுதியாக இருப்பது தான் கஷ்டமாக இருக்கிறது. இதையே கொஞ்சம் பாசம் கலந்து செய்தால், மனம் குளிரும்.
தான் நிராகரிக்கப்பட்ட இடத்தில், தன் நிலையை உயர்த்தி காட்டும் ஆத்திரத்தில், என் மகனை படாதபாடு படுத்தி வருகிறாளே தவிர, குடும்பம் நடத்த அக்கறை காட்டுவதில்லை.
திருமணம் ஆகி ஒரு ஆண்டு கடந்தும், 'எங்க வீட்டு மானத்தை காப்பாற்றவே, உன்னோடு இருக்கேன்...' என்று அடிக்கடி சொல்கிறாள். இவ்வாறு கூறுவது, அவமானமாக இருப்பதாக மகன் சொல்லும் போது, பெற்ற வயிறு பற்றி எரிகிறது.
சொல்ல முடியாத வேதனையில் இருக்கும் எனக்கு, நல்ல ஆலோசனை தருவாயா.
— இப்படிக்கு,
உங்கள் சகோதரி.
அன்பு சகோதரிக்கு —
அத்தை மகனையோ, மாமன் மகனையோ, கல்லுாரி தோழனையோ, உடன் பணிபுரியும் ஆண் மகனையோ காதலித்த பெண்கள், சூழ்நிலை நிர்பந்தத்தால் வேறொருவனுக்கு கழுத்தை நீட்டுகின்றனர். அந்த பந்தத்தில் திருப்தியான தாம்பத்யம் கிடைத்தால், 99.99 சதவீத பெண்கள், தங்களது பழைய காதல்களை முழுமையாக தலை முழுகி விடுகின்றனர்.
பொதுவாக, பெண்கள் தங்களது வாழ்க்கையை, இரண்டாக பிரித்துக் கொள்கின்றனர். திருமணத்திற்கு முன், 1,000 ஆண் நண்பர்களுடன் குதியாட்டம், கும்மாளம் போட்டிருந்தாலும், அதன் பின், குறிப்பாக குழந்தை பிறந்தவுடன், கணவனே கண் கண்ட தெய்வம் என்ற நிலைக்கு தாவி விடுகின்றனர். உன் மருமகள், ஒரு விதிவிலக்கு.
திருமணத்திற்கு முன், உன் மகனுக்கு மனைவியாக வரப்போகிறவள் பற்றி, தீர விசாரித்திருக்கலாம்.
உன் மருமகள், அத்தை மகனை காதலித்ததையும், திருமணத்தன்றே தற்கொலைக்கு முயன்றதையும், நீயும், உன் மகனும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என கூறுவது, திடுக்கிட வைக்கிறது. மனதை அத்தை மகன் மீது வைத்து விட்டு, உடலை, உன் மகனுக்கு முழு மனதாய் தருவாளா, உன் மருமகள்?
ரோஜாப்பூவுடன் மல்லிக்கைப் பூவை ஒப்பிட முடியாது. ரோஜாவுக்கு, கவர்ச்சிகரமான நிறம்; மல்லிகைக்கு மனதை மயக்கும் மணம். ஒவ்வொரு ஆணும், ஒவ்வொரு விதம்.
ஒவ்வொரு மனைவியும், தன் கணவனை மற்ற ஆண்களுடன் ஒப்பிட்டு பார்ப்பதும், ஒவ்வொரு கணவனும், தன் மனைவியை மற்ற பெண்களுடன் ஒப்பிட்டு பார்ப்பதும், வாழும் வாழ்க்கையை நரகமாக்கி விடும். உணவு, உடை, வீடு மற்றும் கிடைத்த துணையில் திருப்தி அடைதல் சாலசிறந்தது.
உன் மகனுக்கும், அத்தை பையனுக்கும் ஓட்டபந்தயம் வைக்கிறாள், மருமகள். அதை பாசம் கலந்து வைத்தால், மனம் குளிரும் என்கிறாய். இந்த எண்ணம் அபத்தமானது.
வீட்டுக்கு வந்த மருமகளை கையாள்வதில், நீயும், உன் மகனும் பெரும் தவறு செய்கிறீர்கள். உங்களது மனோபாவத்தை கண்டு தான், தறிகெட்டு ஓடுகிறாள், மருமகள். ஏதோ ஒரு சுயநலத்தால், மருமகளின் துர்நடத்தையை, நீயும், மகனும் கண்டு கொள்ளாமல் இருக்கிறீர்கள். உங்களது பலவீனப் புள்ளியை, மோப்பம் பிடித்து விட்டாள், மருமகள்.
திருமணமாகி ஒரு ஆண்டு கடந்து விட்டதே... உன் மகனுக்கும், மருமகளுக்கும் தாம்பத்யம் நடக்கவே இல்லையா... குழந்தை பிறந்தால், மருமகளின் மனநிலை மாற, 50 சதவீதம் வாய்ப்பு இருக்கிறது.
மருமகளிடம், 'அம்மா... உன்னை வலுக்கட்டாயப்படுத்தி, என் மகன் திருமணம் செய்து கொள்ளவில்லை. என் மகனுக்கு எந்த உடல் குறையும் இல்லை. மாதம், பல லட்சம் சம்பளம் வாங்காவிட்டாலும், அவனின் கல்வித் தகுதிக்கேற்ப ஒரு பணியில் இருந்து, குறிப்பிட்ட பணத்தை சம்பளமாக பெறுகிறான். அவனிடம் எந்த கெட்ட பழக்கவழக்கங்களும் இல்லை.
'நீ ஏற்கனவே ஒருவனை காதலித்து, தற்கொலைக்கு முயன்றிருக்கிறாய் என்று, உன்னிடம் ஒருநாளும் அவன் வெறுப்பை காட்டியதில்லை. நீ விரும்பிய அத்தை மகன், வேறொரு பெண்ணை மணம் செய்து சந்தோஷமாக வாழ்ந்து வருகிறான்.
நீதான் அவனையே நினைத்து, உங்கள் வாழ்க்கையை நரகமாக்கி வருகிறாய்.
'என் மகனுடன் திருப்தியாய் வாழ விரும்பினால் வாழ். இல்லையென்றால், பரஸ்பர சம்மதத்துடன் சட்டரீதியான விவாகரத்து பெற்றுக் கொள். அதன் பின், நீ விரும்பிய வாழ்வை வாழ்ந்து கொள். எந்த ஆணுடனும் தன்னை ஒப்பிடாத ஒரு பெண்ணை மறுமணம் செய்து, என் மகன் நிம்மதி பெறட்டும்...' எனக் கூறு.
உன்னுடைய அதிர்ச்சி வைத்தியத்தில், மருமகள் திருந்த வாய்ப்பு இருக்கிறது. இல்லையென்றால், சட்ட ரீதியான விவாகரத்துக்கு ஏற்பாடு செய்.
புறாவுக்கும், குயிலுக்கும் ஜோடி பொருத்தம் அமையவே அமையாது. கட்டை அவிழ்த்து விடு. வானில், அதது சுதந்திரமாக பறக்கட்டும் சகோதரி.
-— என்றென்றும்
சகுந்தலா கோபிநாத்.