செப்., 18 புரட்டாசி மாதம் ஆரம்பம்
புரட்டாசி மாதத்தில், திருப்பதியில் பிரம்மோற்சவம் நடப்பது போலவே, பல பெருமாள் கோவில்களிலும் வருடாந்திர திருவிழாக்கள் நடைபெறும்.
* திருப்பதி வெங்கடாசலபதியை குல தெய்வமாக கொண்டுள்ள குடும்பங்களில், புரட்டாசி மாதம், மாவிளக்கு ஏற்றி, பூஜை செய்வது நல்லது
* புரட்டாசி சனிக்கிழமையில் தான், சனி பகவான் அவதரித்தார். அதன் காரணமாக, அவரால் ஏற்படும் கெடு பலன்கள் குறைய, காக்கும் கடவுளான, திருமாலை வணங்குவது வழக்கத்தில் வந்தது
* புரட்டாசி மாதத்தை, எமனின் கோரைப் பற்களுள் ஒன்று என, அக்னி புராணம் குறிப்பிடுகிறது. எம பயம் நீங்கவும், துன்பங்கள் விலகவும், புரட்டாசி மாதத்தில், காத்தல் கடவுளான விஷ்ணுவை வணங்க வேண்டும்
* காகத்திற்கு, ஆல் இலையில், எள்ளும், வெல்லமும் கலந்த அன்னம் வைத்தால், சனியின் தாக்கம் நீங்கும்
* பித்ரு தேவதை வழிபாடு, இறை வழிபாடு, சக்தி வழிபாடு என, அனைத்தும் புரட்டாசி மாதத்தில் அடங்கி உள்ளது. பித்ருக்களை வழிபடும் மஹாளயம், பெண்களுக்கு மகிழ்ச்சி தரும், நவராத்திரி இவையும் சேர்ந்து, புரட்டாசிக்கு பெருமை சேர்க்கிறது
* பெருமாளின் அம்சமாக கருதப்படும், புதனுடைய வீடு கன்னி. கன்னி ராசியில் சூரியன் அமர்வது, புரட்டாசி மாதத்தில் தான். ஆகவே, இந்த மாதத்தில், பெருமாளுக்கு, பஜனை மற்றும் பிரம்மோற்சவங்கள் நடைபெறும். புதனுக்கு நட்பு கிரகம், சனி பகவான். அதனால் தான், புரட்டாசி மாதத்தில் வரக்கூடிய சனிக்கிழமைகள் விசேஷமாக கொண்டாடப்படுகிறது
* புரட்டாசி சனிக்கிழமை, பெருமாளுக்கு, 'தளியல்' போடுவது வழக்கம். பெருமாள், பாயசப் பிரியர் என்பதால், அன்று, பாயசம் செய்வது முக்கியமானது
* புரட்டாசியில் வளர்பிறை சதுர்த்தி திதியில், சித்தி விநாயகர் விரதம் இருந்து வழிபட்டால், எதிரிகள் தொல்லை விலகும்
* புரட்டாசி மாதம் எந்த விரதம் இருந்தாலும், செல்வம், ஆயுள், ஆரோக்கியம் ஆகிய மூன்றும் குறைவின்றி கிடைக்கும்
* புரட்டாசி மாதம் வளர்பிறை, அஷ்டமி தினம் முதல், ஓராண்டுக்கு, விநாயகருக்கு அருகம்புல் மாலை சார்த்தி அர்ச்சித்து வழிபட்டால், உடல் வலிமை உண்டாகும்
* புரட்டாசி சனிக்கிழமை விரதம் இருந்தால், குலதெய்வ அருள் கிடைக்கும்
* புரட்டாசி மாதம், சங்கடஹர சதுர்த்தி அன்று, விநாயகரை நினைத்து விரதம் கடைப்பிடித்தால், சுகபோக வாழ்வு கிடைக்கும்
* கடவுளுக்கு காணிக்கை மற்றும் நேர்த்திக்கடன் செலுத்த, புரட்டாசி மாதமே சிறந்த மாதமாக கருதப்படுகிறது
* புரட்டாசி சனிக்கிழமை மட்டுமின்றி, திங்கள் மற்றும் புதன் கிழமையும், பெருமாள் வழிபாட்டுக்கு உகந்தது. அன்றைய வழிபாடுகள், மகாலட்சுமியை மகிழ்ச்சியடையச் செய்யும்
* கல்வி தடை, திருமண தடை, நோய் மற்றும் பணப் பிரச்னை உள்ளோர், புரட்டாசி திருவோண தினத்தன்று, பெருமாளை வழிபட்டால், நல்ல தீர்வு கிடைக்கும்.
தொகுப்பு: ஏ.எஸ்.கோவிந்தராஜன்