இருள் அகலா பொழுது அது. சின்னஞ்சிறு பறவைகளின் பேரிரைச்சல், விடியப் போவதை உணர்த்தியது, கடிகாரம். காலை, மணி, 5:45.
ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால், இல்லத்திலிருந்து சைக்கிளில், கடற்கரை, காந்தி சிலை வந்தேன். ஆண்களும் - பெண்களும், உற்சாகமாய் நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர்.
பயண சினேகிதம் போல, நடை பயிற்சியில் நண்பரானவர், ராகவன். ஓய்வு பெற்ற, உயர் அதிகாரி. வழக்கமாக சந்திக்கும் இடத்தில் காணவில்லை.
சற்று நேரம் தேடிய பின், மொபைலில் தொடர்பு கொண்டேன். 'சுவிட்ச் ஆப்' என, பதில் வந்தது. சுற்றும் முற்றும் தேடி, களைத்து, கடற்கரை மணலில் அமர்ந்தேன்.
திடீரென ஒரு இடத்தில், மக்கள் கூட்டம். படபடப்போடு, பதற்றமாய் அங்கு ஓடினேன். கூட்டத்திலிருந்து வெளியே வரும் ஒவ்வொருவரும், கையில் ஒரு பூச்செடியை வைத்திருந்தனர்.
ஒரு ரோஜா செடியோடு, கைப்பை ஒன்றையும் வைத்திருந்த, ராகவனை பார்த்ததும், நிம்மதிப் பெருமூச்சு விட்டபடி, கூட்டத்தை சற்று விலக்கி, எட்டி பார்த்தேன்.
வெள்ளை வேட்டி, தொளதொள சட்டை, மிடுக்கான தேகம்... வீரத்தை உணர்த்தும், முறுக்கு மீசை... பொலிவான முகம், 60 வயதிருக்கலாம், அந்த முதியவருக்கு. அவர் தான், எல்லாருக்கும் பூச்செடிகளை இலவசமாக வழங்கிக் கொண்டிருந்தார்.
கூட்டம் முழுவதும் கலைந்து செல்லும் வரை காத்திருந்து, நானும் ஒரு மல்லிகை செடியை வாங்கி, விபரம் கேட்டேன்.
''ஐயா... உடம்பு பரிசோதனைக்காக மருத்துவமனை போனேன்; 'இதயத்துல அடைப்பு, ஆபரேஷன் செய்தாலும், அதிக காலம் இருக்கமாட்டே'ன்னு, டாக்டர் சொல்லிட்டாரு... மீதியிருக்கும் காலத்த வீணாக்க விரும்பல... நாற்றங்கால் பயிரிட்டு, மரக்கன்றுகளை வளர்த்து, இலவசமா கொடுக்கலாம்ன்னு நினைச்சேன்...
''இந்த வேலையை துவங்கி, 10 வருஷமாயிடுச்சி... இப்போ, நல்லா தான் இருக்கேன்... மத்தவங்களுக்காக வாழும்போது, உடல் நோய் ஒன்றும் செய்யாதுன்னு புரிஞ்சுது... வாரா வாரம், விடுமுறை நாட்கள்ல, வெவ்வேறு இடங்களில் தொடர்ந்து செய்யறேன்... மனசுக்கு மகிழ்ச்சியா இருக்கு,'' என்று, அவர் சொன்னது, வியப்பாக இருந்தாலும், எனக்குள் ஒரு உற்சாகம் பிறந்தது.
சட்டென, என்னை பார்த்து, ''சார்... இவர் சொல்றது, எனக்கு ஆச்சரியமா இருக்கே... இதெல்லாம் சாத்தியமா,'' என்றார், ராகவன்.
''ஏன் சாத்தியமில்ல, ராகவன்... மத்த உயிரினங்களை தவிர, இந்த மனுஷங்களுக்கு மட்டும் தான், வயசானா, வியாதி வரும்; முடியாமப் படுத்துடுவோம்; உதவிக்கு ஆள் வேணும்... இப்படி சொல்லி சொல்லியே, மத்தவங்கள எதிர்பார்த்து வாழ ஆரம்பிச்சிட்டோம்...
''ஒண்ணு ஞாபகம் வச்சிக்கோங்க... முதுமை, நோய்ன்னு எதுவும் இல்ல... முடியாதுன்னு ஒண்ணுமேயில்ல. எல்லாத்துக்குமே நம் மனசும், நம்பிக்கையும் தான் காரணம். இதையெல்லாம் நான் சொல்லல, 300 வருஷத்துக்கு மேல் வாழ்ந்த, 'சித்தர்கள் வரலாறு' படிச்சி தெரிஞ்சிக்கிட்டேன்.''
''சார்... உங்க கூட பழகிய நாள்ல இருந்து பாக்கறேன், எப்பவும் சந்தோஷமாவே இருக்கறீங்க... எந்த பண்டிகை வந்தாலும், மகிழ்ச்சியா இருக்கீங்க... உங்களை பார்த்தா, எனக்கு பொறாமையா இருக்கு,'' என்றார், ராகவன்.
''என்ன, ராகவன்... மனைவி, மகன், மருமக, பேரன்னு, இப்படி எல்லாருடனும் கூட்டுக் குடும்பமா இருக்குறீங்க... நீங்க இப்படி பேசலாமா... ஆமாம்... அதென்ன கையில் பை,'' என்றேன்.
''உங்ககிட்ட சொல்றதுக்கென்ன, சார்... இதுல, என்னோட சட்டை துணி தான் இருக்கு... யார்கிட்டயும் சொல்லாம, வீட்டை விட்டு வந்துட்டேன்,'' என்றார்.
அதிர்ச்சியில், உறைந்தேன்.
''என்ன சொல்றீங்க... அதான் மொபைல் போனை, 'சுவிட்ச் ஆப்' செய்து வச்சிருக்கீங்களா... என்னாச்சு உங்களுக்கு,'' அக்கறையுடன் விசாரித்தேன்.
''என்ன சார், பெரிய வாழ்க்கை... ஆபீசுல பெரிய அதிகாரியா இருந்து, நிறைய பேரை, என் கட்டுப்பாட்டுல வச்சிருந்தேன்... ஆனா, இப்போ, வீட்டுல இருக்கறவங்க, என் பேச்சை கேட்க மாட்டேங்கிறாங்க... பெரியவங்க இருக்கோம்கிற நினைப்பே இல்ல...
''எதையும் கலந்து பேசாம, அவங்க இஷ்டப்படி எல்லாத்தையும் செய்றாங்க... வேறு வழியில்லாம, 'சரி, உங்க இஷ்டம்'ன்னு, பல நேரங்களில் ஊமையாகவே இருந்துடறேன்... எவ்வளவு நாளைக்கு தான் பொறுத்து போறது,'' என்றார், ராகவன்.
''சார்... மொதல்ல, நீங்க ஒரு அதிகாரிங்கற நினைப்பை விடுங்க... எல்லாத்துலயும் குற்றம் பாக்கறத விட்டுட்டு, பிள்ளைகளோட அனுசரிச்சு போங்க; எல்லா பிரச்னையும் குறையும்,'' என்றேன்.
''எதை சார் அனுசரிச்சு போக சொல்றீங்க... எனக்கு வறட்டு பிடிவாதமாம்... எல்லாத்துலயும் தலையிட்டு, அறிவுரை சொல்றேனாம்... எதுவுமே கேட்கக் கூடாதுன்னா, எப்படி சார்... அதான் வெளிய வந்துட்டேன்,'' என்ற ராகவனின் எதிர்பார்ப்புகள், ஏக்கங்களாக தேங்கியுள்ளது தெரிந்தது.
இதற்கு மேல் நடை பயிற்சி செய்வது சாத்தியமில்லை என அறிந்து, ராகவனை அழைத்து, இளநீர் அருந்த சென்றேன்.
'மொபைல் போன் ஆப்' மூலம், உணவை கொண்டு சேர்க்கும் நிறுவன ஊழியர் ஒருவருக்கு, 10 இளநீரை சீவிக் கொடுத்து, எங்கள் பக்கம் திரும்பிய கடைக்காரரிடம், ''இரண்டு இளநீர்,'' என்றேன்.
''இதென்ன சார், அநியாயமா இருக்கு,'' என்றார், ராகவன்.
''நீங்க எதை சொல்றீங்க,'' என்றேன்.
''இதோ இந்த இளநீரை கூட, 'மொபைல் போன் ஆப்'பில், 'ஆர்டர்' கொடுத்து, சாப்பிடற நிலையை சொன்னேன்,'' என்றார்.
''இதுல என்ன அநியாயம் இருக்கு, ராகவன்... காலையில் படுக்கையிலிருந்து எழுப்ப, அப்பாவுக்கு பதிலா, 'அலாரம் ஆப்!' நண்பனுக்கு பதிலா, நடை பயிற்சிக்கு, 'கவுன்ட் ஆப்!' அம்மாவுக்கு பதிலா, சாப்பாட்டுக்கு, 'உணவு கொண்டு வர ஆப்!' துணி வாங்க, கடைத் தெருவுக்கு போகாம, 'ஆன்லைன் துணிமணி ஆப்' இருக்கு.
''இப்படி, எல்லாத்துக்கும், மொபைல்போன்ல ஒரு, 'ஆப்' வச்சிக்கிட்டு, உட்கார்ந்த இடத்துலயே, உள்ளங்கையில எல்லாமே கிடைக்கற இது, 'ஹைடெக்' காலம்தானே, விடுங்க சார்... நாம தான் எல்லாத்தையும் ஏத்துக்கிட்டு, அனுசரிச்சு போகணும்.''
வாழ்க்கையின் யதார்த்தத்தை சொல்லி, கைக் கடிகாரத்தை பார்த்தேன். மணி, 8:30.
''என்ன சார், புறப்படணுமா... கடிகாரத்தை பார்த்ததும், பதற்றமாய் இருக்கீங்க,'' என்றார், ராகவன்.
''ஆமாம், ராகவன்... இன்னக்கி பேரனுக்கு பிறந்த நாள். வீட்டை சுத்தம் செய்யணும்... மனைவி, தனியா கஷ்டப்படுவா... நான் கூட இருந்தா, அவளுக்கு பக்கபலமா இருக்கும்,'' என்றேன்.
பதில் ஏதும் பேசாமல் அமைதியாய் நின்றிருந்தார், ராகவன்.
அவர் நிலைமை புரிந்து, ''எதுவா இருந்தாலும் பார்த்துக்கலாம்... பிறந்த நாள் முடியட்டும்... இப்ப என் கூட வீட்டுக்கு வாங்களேன்,'' என்றேன்.
''ரொம்ப நன்றி சார்... சாயங்காலம் வீட்டுக்கு வர்றேன்... உங்க மகன், பேரன், எல்லாரையும் பார்க்கணும்ன்னு ஆசையா இருக்கு.''
''இரவு, 7:00 மணிக்கு அவசியம் வரணும். வந்து, என் பேரனை ஆசீர்வாதம் செய்யணும்,'' என்று, வீட்டு விலாசத்தை கொடுத்து, ராகவன் நிலையை எண்ணி மனச்சுமையோடு விடைபெற்றேன்.
அப்போது, அவர் பார்த்த ஏக்கப் பார்வை, 'கொடுத்து வச்ச மனுஷன் சார் நீங்க...'ன்னு, என்னைப் பார்த்து சொல்வது போல இருந்தது.
மாலை, 6:30 மணி.
அந்தி மறைந்து, வீடெங்கும் விளக்குகள் ஒளியூட்டிக் கொண்டிருந்தன. இன்னும் சற்று நேரத்தில், பேரனின் பிறந்தநாள் கொண்டாட்டம். பரபரப்பாய் இருந்தாள், மனைவி கற்பகம். எல்லாம் தயாராக இருந்தது. எதிர்பார்த்தபடி, வந்து விட்டார், ராகவன்
''வாங்கண்ணே, வாங்க... உங்கள பத்தி தினமும் நிறைய பேசுவார்... நீங்க வந்தது, ரொம்ப சந்தோஷம்... காபியா, டீயா, சர்க்கரை எவ்வளவு போடணும்,'' எனக் கேட்டாள், கற்பகம்.
''சர்க்கரை இல்லாம, காபி போதும், தங்கச்சி!'' என்றார்.
வேகமாய் அடுக்களைக்கு சென்று, கையில் காபியுடன் திரும்பினாள்.
''என்ன சார்... நம் மூன்று பேரை தவிர, யாரையும் காணல,'' என்றார், ராகவன்.
''சரியா, ௭:௦௦ மணிக்கு வந்துடுவாங்க.''
''ஏன்... அவங்க, உங்க கூட இல்லையா,'' என்ற, ராகவனுக்கு பதில் சொல்லாமல், புன்னகைத்தபடி, கடிகாரத்தை பார்த்தேன்; மணி, 7:00.
கைப்பேசியில் அழைப்பு வந்தது. பரபரப்பாக, 'லேப்டாப்'பை திறந்து, மேசை மீது வைத்து, 'ஆன்லைன்' இணைப்பை ஏற்படுத்தினேன். குழப்பத்தில், 'திருதிரு'வென விழித்தார், ராகவன்.
'லேப்டாப்' திரையில், பேரன் புது சட்டையணிந்து நின்றிருந்தான்.
'தாத்தா, பாட்டிக்கு, வணக்கம் சொல்லு...' என, பேரனின் இரு கையெடுத்து, வணங்கச் சொல்லிக் கொடுத்தான், மகன். அவனைச் சுற்றி பெரிய கூட்டமே நின்றிருப்பது, 'லேப்டாப் ஸ்கிரீனில்' தெரிந்தது.
வழக்கமான விசாரிப்பு முடிந்து, சிறிது நேரத்தில், 'ஹேப்பி பர்த்டே டூ யூ...' பாடல் இசைக்க, 'கேக்' வெட்டினான், பேரன். அரைமணி நேர கொண்டாட்டம், விரைவாய் முடிந்து, ஓய்ந்தது.
'லேப்டாப்'பை மூடி வைத்து வருவதற்குள், பிறந்தநாள் விருந்து பரிமாறிக் கொண்டிருந்தாள், கற்பகம்.
கண்களில் வழிந்த கண்ணீரை துடைத்தபடி, என்னை பார்த்தார், ராகவன்.
''நீங்க என்ன கேட்க வர்றீங்கன்னு, எனக்கு புரியுது, ராகவன்... கல்யாணமான கையோடு மகனும் - மருமகளும், வெளிநாடு போயிட்டாங்க... மூன்று வருஷமாச்சு... அப்பப்போ, யார் மூலமாவது பணமும், பொருளும் கொடுத்து அனுப்புவான்... வாரா வாரம், 'வீடியோ கால்'ல பேசுவான்... பிறந்த பேரக் குழந்தையையே, 'வீடியோ'வுல தான் பார்த்தோம்...
''பண்டிகை நாட்களில், மணிக்கணக்காய் பேசுவோம்... அப்போதெல்லாம் மனக்கவலை பறந்து போகும்... ஆனாலும், சந்தோஷமா இருக்கேன்... எல்லாத்துக்கும் மனசு தான் காரணம்,'' என்றேன்.
''சாரி, சார்... இதை நான் எதிர்பார்க்கல... இந்த நிலையிலயும், எப்படி சார் உங்களால மகிழ்ச்சியா இருக்க முடியுது,'' என்றார், ராகவன்.
''இருக்கறத அப்படியே ஏத்துக்கறது தான் வாழ்க்கை... மகிழ்ச்சிக்கும் அதுதான் ஒரே வழி. அதை விட்டுட்டு, எதிர்க்க ஆரம்பிச்சோம்னா, அதுவே மனநோய்க்கும் வழி வகுத்துடும்... நீங்க தப்பா எடுத்துக்கலன்னா, நான் ஒண்ணு சொல்லவா, ராகவன்.''
''சொல்லுங்க, சார்!''
''உறவுக்காக ஏங்கும் பெற்றோரின் வரிசையில், நானும், என் மனைவியும் இருக்கோம்... ஆனா, நீங்க அந்த வரிசையில வேணாமே,'' என்றேன்.
பேசி முடிக்கும் முன், மொபைல்போனில், மகனிடமிருந்து, '30 மிஸ்டு கால்' இருப்பதை காட்டினார்.
அவரிடமிருந்து மொபைல் போனை வாங்கி, அவரது மகனுக்கு போன் செய்தேன்.
''தம்பி... உங்க அப்பாவோட சினேகிதன் பேசறேன்... நடை பயிற்சி போகும்போது, காலையில் எனக்கு ஒரு பிரச்னை... உதவியா, என் கூடவே இருந்ததால, வீட்டுக்கு அப்பாவால வர முடியல. இப்போ எல்லாம் சரியாயிடுச்சு... இன்னும் கொஞ்ச நேரத்துல, வீட்டுல இருப்பார்,'' எனப் பேசி, மொபைல் போனை ராகவனிடன் கொடுத்தேன்.
''நீங்க தெய்வம், சார்,'' என்றார், ராகவன்.
''என்ன, ராகவன்... பெரிய பெரிய வார்த்தையெல்லாம் பேசறீங்க,'' என்றேன்.
''ஆமாம் சார்... மத்தவங்களோட துன்பத்தை பார்த்து இரக்கப்படறவன், மனுஷன். ஆனா, அந்த துன்பத்தை, நிரந்தரமா நீக்கறவன், தெய்வம் சார்!''
என்னை கட்டியணைத்து, நன்றி கூறி, கண்ணீர் மல்க விடை பெற்றார், ராகவன்.
பூபதி பெரியசாமி