பம்மல் என்ற ஊரில், சுதா - ரவி தம்பதியர் வசித்து வந்தனர். இருவரும் கடுமையாக உழைத்து, குடும்பத்தில் வசதிகளை பெருக்கினர்.
அவர்களது ஒரே மகன் வருண். கவுரமிக்க பள்ளி ஒன்றில், 9ம் வகுப்பு படித்து வந்தான்; மிகவும் புத்திசாலி. நற்குணங்கள் நிரம்ப பெற்றவன். கவனமாக படித்து, பாடங்களில், 95க்கும் அதிக மதிப்பெண் வாங்கி, வகுப்பில் முதல் மாணவனாக திகழ்ந்தான்.
திடீர் என, வருணின் நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டது. இதை கவனித்த அம்மா, கண்காணித்து வந்தாள்.
அவனை தேடி, புதிய நண்பர்கள் வந்தனர்; அவர்களுடன், வெகுநேரம் அரட்டை அடித்து விளையாடினான்; படிப்பில் ஆர்வம் குறைந்தது. நற்குணங்கள் ஒவ்வொன்றாக காணாமல் போயின; துர்குணங்களை துணைக்கு அழைத்து, துன்பங்களை அனுபவித்தான்.
கொஞ்சம் விட்டு பிடிக்க எண்ணிய அம்மா, சிறிதும் பதட்டம் அடையாமல், உன்னிப்பாக அவனை கவனித்து வந்தாள்.
அந்த மாத பள்ளித் தேர்வு முடிந்து, மதிப்பெண் பட்டியலை கொண்டு வந்தான் வருண். பாடங்களில், 60க்கும் குறைவான மதிப்பெண்கள் தான் பெற்றிருந்தான். அதை பார்த்து, மெல்லிய புன்னகையுடன், 'என்னடா... மதிப்பெண் குறைந்திருக்கு...' என்று விசாரித்தாள்.
அலட்சியமாக, 'ஒன்றும் பாதகமாக போய்விடவில்லை... 50 எடுத்தாலும், 90 மார்க் எடுத்தாலும் பாஸ் தானே... எதற்காக சிரமம் எடுத்து படிக்கணும்...' என்றான்.
தவறான சேர்க்கையால், படிப்பில் ஆர்வமும், அக்கறையும் குறைந்துள்ளதை புரிந்து, தக்கபடி உணர்த்த முடிவு செய்தாள்.
வருணின் பிறந்த நாள் அன்று -
வழக்கம் போல், நட்சத்திர ஓட்டலில், ஆடம்பர விருந்துடன், பிரம்மாண்டமாக பிறந்தநாள் விழா நடக்கும் என, ஆவலுடன் காத்திருந்தான். ஆனால், அதற்கு எந்த ஏற்பாடும் நடக்காதது கண்டு திடுக்கிட்டான்.
அன்று மாலை, சாதாரண ஓட்டல் ஒன்றுக்கு அழைத்து சென்றனர் பெற்றோர். அங்கு உணவின் தரமும், சுவையும் சுமாராகத்தான் இருந்தது.
மனம் வாடிய வருண், 'என்னம்மா... எப்பவும் பெரிய நட்சத்திர ஓட்டலில் தானே, என் பிறந்த நாள் விழாவை கொண்டாடுவோம். மிக சாதாரண ஓட்டலுக்கு அழைத்து வந்து விட்டீர்களே... என் நண்பர்களை கூட அழைக்கவில்லை. உணவின் சுவையும் சரியில்லை...' என, கோபமாக கேட்டான்.
மிகவும் நிதானமாக, 'எங்கே சாப்பிட்டாலும், வயிறு நிறையணும் அவ்வளவு தானே; அதுக்காக நட்சத்திர ஓட்டலுக்கு போய், அதிக பணத்தை செலவு செய்யணுமா... இந்த சாப்பாடே போதும்...' என்று விளக்கம் கொடுத்தாள்.
அவளது செயல், வருணுக்கு, 'பட்'டென புரிந்தது. மிகுந்த பணிவுடன், 'மன்னித்து விடுங்க அம்மா... 50 மதிப்பெண் ஒருபோதும், 90க்கு இணையாகாது என்பதை தெரிந்து கொண்டேன். இனி கவனம் பிசகமாட்டேன்...' என்றான்.
பின், பழக்க வழக்கங்களை மாற்றிய வருண், படிப்பில் தீவிர கவனம் செலுத்தி, முதல் மாணவனாக உயர்ந்தான்.
குட்டீஸ்... படிப்பில் சிறு அலட்சியம் கூட, வாழ்வின் லட்சியத்தை அடைய விடாமல் தடுத்து விடும். மதிப்பையும் குறைத்து விடும். மிகவும் கவனமாக படித்து முன்னேறுங்கள்.
எஸ்.ஷோபனா