அன்னையிடம் கற்றது! | சிறுவர் மலர் | Siruvarmalar | tamil weekly supplements
அன்னையிடம் கற்றது!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 

பதிவு செய்த நாள்

20 செப்
2019
00:00

அமெரிக்காவின், வெர்ஜீனியா மாகாணத்தில் உள்ள படர்சனில், நான்சி ஹாங்க்ஸ் என்ற பெண், 1784ல் பிறந்தாள். அவளுக்கு, 12 வயதான போது, தாய் மாமா வீட்டிற்கு வந்தாள். அங்கே, பள்ளி செல்ல வசதியில்லை. மிகவும் முயன்று, எழுத, படிக்க கற்றுக் கொண்டாள். தையல் கலையிலும் தேர்ச்சி பெற்றாள்.
நற்குணங்கள் வாய்ந்த அவள், வீடுகளில் பணி பெண்ணாக வேலை செய்தாள். அவளது ஈடுபாடும், நேர்த்தியான வேலைத் திறனும் அனைவரையும் கவர்ந்தது. பணி செய்த வீடுகளில், ஒரு அங்கத்தினராகவே அவளை மதித்தனர்.
தாமஸ் லிங்கன் என்ற இளைஞன், வேலை பழகுவதற்காக, அவளது மாமாவை தேடி வந்தான். அவனுக்கு, தச்சு வேலையில் ஆர்வம் இருந்தது. அதில் பயிற்சி பெற்றான். பணியில் தீவிர ஈடுபாடு காட்டிய அந்த இளைஞன் மீது, மாமாவுக்கு நல் எண்ணம் ஏற்பட்டது. மருமகள் நான்சியை, அவனுக்கு மணம் முடித்தார்.
தாமஸ் லிங்கனுக்கு, எழுத, படிக்க தெரியாது. அவனுக்கு ஆரம்பக் கல்வியை புகட்டியதோடு, பணிகளையும் முறைப்படுத்த உதவினாள் நான்சி.
இந்த தம்பதியருக்கு, இரண்டாவது குழந்தையாக, ஆபிரகாம் லிங்கன் பிறந்தார். மிகவும் சிரமத்துடன் குழந்தைகளை வளர்த்தனர். ஏழ்மையான நிலையில், ஒரு சிறிய மர வீட்டில் வாழ்ந்தனர்.
மகன் ஆபிரகாம் லிங்கனுக்கு நற்குணங்களை போதித்தாள் நான்சி. மகனுக்கு, ஒன்பது வயதான போது, கொடிய நோயால் நான்சி இறந்தாள். அவள் ஊட்டிய அன்பு, ஒழுக்கம், பொறுமை போன்ற நற்குணங்கள், அவர் மனதில் பதிந்தன. செயல்களில் மேன்மையாக வெளிப்பட்டன.
பிற்காலத்தில், அமெரிக்க ஜனாதிபதியான போதும், தாய் ஏற்படுத்திய தாக்கத்தை மறக்கவில்லை ஆபிரகாம் லிங்கன்.
'எனக்கிருக்கும் நம்பிக்கைகள் எல்லாம், என் அன்னையிடம் பெற்றவை...' என்று, மனம் கனிந்து கூறுவார்.

Advertisement

 



We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X