கொலு! | வாரமலர் | Varamalar | tamil weekly supplements
கொலு!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 

பதிவு செய்த நாள்

22 செப்
2019
00:00

''என்ன பண்ணுவீங்களோ, ஏது பண்ணுவீங்களோ தெரியாது... இந்த வருஷம், நம்மாத்துல, கொலு வெச்சே ஆகணும்,'' என்று கண்டிப்புடன் கூறிய அலமேலுவை, ஆச்சரியத்துடன் பார்த்தேன்.
அலமேலு, என் மனைவி. செல்லமாய், அம்முலு என்றழைப்பேன்.
கல்யாணமாகி, 25 ஆண்டுகளில், எங்கள் வீட்டில், கொலு வைத்ததே இல்லை. திடுதிப்பென்று, 'இந்த வருஷம், நம்மாத்துல, கொலு வைத்தே ஆக வேண்டும்...' என்று, அம்முலு சொன்னதும், எனக்கு ஆச்சர்யமாக இருந்தது.
''என்ன... தமாஷ் பண்றியா?''
''தமாஷ் எல்லாம் இல்லை... கண்டிப்பா, கொலு வெக்கணும்... வெக்கறோம்,'' என்றாள்.
''வெறுமனே பொம்மைகளை அடுக்கி வெக்கறதும், எடுத்து வெக்கறதும், கொலு இல்லேம்மா... அதுக்குன்னு சில விதிமுறைகள், சம்பிரதாய, சடங்குகள் இருக்கு,'' என்றேன்.
''எல்லாம் எனக்கும் தெரியும்!'' என, கொலு வைக்கும் முறை மற்றும் வாங்க வேண்டியது குறித்து அம்முலு பட்டியலிட, பிரமித்தேன்.
''அது சரி, கொலு வெக்கணும்னா, பொம்மைங்க வேணும்... அதை வெக்க படிக்கட்டு வேணும்... அப்புறம், நீ ஏதோ பட்டியல் போட்டியே, அதெல்லாம் வாங்க, முக்கியமா பணம் வேணும்... தெரியுமில்லே,'' என்றேன்.
நான் சொன்னதை கேட்டு சிரித்த அம்முலு, ''கொலு வெக்கணும்ங்கற திட்டத்தை உங்களாண்ட பிரஸ்தாபிக்கறதுக்கு காரணமே, பணம் தாண்ணா... என் அளவில் முடியற காரியமா இருந்தா, உங்ககிட்ட சொல்லியே இருக்க மாட்டேன்,'' என்றாள்.
'போச்சு... அரசாங்கம் அறிவித்திருக்கும், 60 நாள், 'போனஸ்' தொகைக்கு, ஏதோ உலை வைக்கப் போகிறாள்...' என்பது மட்டும் தெளிவாக புரிந்தது.

நவராத்திரிக்கு, 15 நாட்களுக்கு முன் பரபரப்பாகி விடுவாள், அம்மா.
ராமர் பட்டாபிஷேகம், கிருஷ்ணனும், கோபியரும், தசாவதாரம், அஷ்டலட்சுமியர், அர்த்தநாரீஸ்வரர், முருகர், நடராஜர், விநாயகர், துர்கா - லட்சுமி- - சரஸ்வதி...
பேண்ட் வாத்திய கோஷ்டி, தெப்பக் குளம், குரங்கு பொம்மைகள், விவேகானந்தர், புத்தர், காந்தி, பூங்கா, கோபுரம் மற்றும் ரயில், கார், பஸ் என்று, அம்மாவின் கை வண்ணத்தில், ஒவ்வொரு படியும் கலை நயத்தோடு மிளிரும்.
கடந்த, 1939ல், தலை தீபாவளிக்கு, பட்டு புடவை எடுக்க, காஞ்சிபுரம் சென்றிருந்த போது, புடவையோடு, வரதரையும் வாங்கி வந்திருந்தாள்.
அப்பாவும் சாமானியமானவர் அல்ல. காலை, 6:00 மணிக்கே குளித்து, மடியுடன் ஆரம்பிக்கும் பூஜை முடிந்து, தீபாராதனை காட்ட, 9:00 மணியாகி விடும்.
நவராத்திரி நேரத்தில், தேர்வு விடுமுறை இருப்பதால், சமாளிக்க முடிந்தது. சாதாரண நாட்களானால், பட்டினியோடு தான் செல்ல நேரிடும்.
விதம் விதமான சித்ரான்னங்கள் நிவேதனம் செய்யப்பட்டாலும், ஒன்பது நாட்களிலும், காலை உணவாக, உப்பு போட்டு வேக வைத்த சேனைக்கிழங்கு மட்டும் தான் உண்பார், அப்பா. இரவில் இரண்டு, மலை வாழைப் பழமும், ஒரு டம்ளர் பாலும்.
விஜயதசமி அன்று தான், அப்பாவின் விரதம் பூர்த்தியாகும். அன்று, வடை, பாயசத்துடன் விருந்து.
மாலை வேளை, அம்மாவின் ராஜ்ஜியம். அம்மாவின் தோழிகளும், குழந்தைகளுமாய் வீடே திணறிப் போகும். தோழிகளின் வீட்டுக்கும் விஜயம் செய்வாள், அம்மா.
இந்த ஆண்டு நவராத்திரியின் ஒரு வாரத்துக்கு முன், சுகவீனமானாள், அம்மா.
பரிசோதித்த டாக்டர், ராமகிருஷ்ண ராவ், 'அம்மாவுக்கு, டைப்பாய்டு... ஓய்வெடுக்க வேண்டும்...' என்று, 15 நாட்களுக்கு மருந்து மாத்திரைகள் எழுதிக் கொடுத்து, ஆகார விபரங்களையும் பட்டியலிட்டு, கிலியூட்டினார்.
'நவராத்திரிங்கறது, பெண்டுகள் கொண்டாடுற விசேஷம். ஆத்துல நான் இல்லை. அதனால, இந்த வருஷம், நம்மாத்துல, கொலு வைக்க வேண்டாம். பொழைச்சு கிடந்தா, அடுத்த வருஷம் வெச்சுக்கலாம்...' என்று, கிளி பிள்ளைக்கு சொல்வது போல், திரும்ப திரும்ப, அப்பாவிடம் சொல்லி, என்னையும் அழைத்து, தாத்தா வீட்டுக்கு ரயிலேறினாள், அம்மா.
அம்மாவை அலட்சியப்படுத்தி, வீட்டில் கொலு வைத்தார், அப்பா.
டாக்டர் சொன்ன மாதிரி, டைப்பாய்டு, 15 நாட்களுக்கு நீடித்திருந்தால், அப்பா, கொலு வைத்த விஷயம், அம்மாவுக்கு தெரிந்திருக்காது. 10 நாளிலேயே சரியாகி, புறப்பட்டு விட்டாள்.

ஸ்டேஷனுக்கு வந்திருந்த அப்பா, அம்மாவையும், என்னையும் அழைத்துச் சென்றது, ஒரு புது வீட்டுக்கு. வீட்டில் சாமான்கள் தாறுமாறாக சிதறிக் கிடந்தன; கூடவே பொம்மைகளும்.
'என்னண்ணா இது... நான் தான் கொலு வெக்க வேண்டாம்ன்னு, படிச்சுப் படிச்சு சொல்லிட்டு போனேனே... ஏன் வெச்சேள்... ஏன் கலைச்சேள்...' என்றாள், ஆவேசமாக.
'மனசு கேக்கலேடி... ஒரு வருஷம் முடங்கினா, தொடர்ந்து மூணு வருஷம் முடங்கும்ன்னு சொல்லுவா... அதான் அப்படி முடங்க வேணாமேன்னு வெச்சேன்...' என்றார்.
'சரி... வெச்சது வெச்சேள், அதை ஏன் முடியறதுக்கு முன் கலைச்சேள்?'
'நாம குடியிருந்த விட்டு உரிமையாளர், கோபாலய்யருக்கு, அவசரமா, 100 ரூபா தேவைன்னு கேட்டான். கொலுவை வெச்சுட்டு, யாராவது கடன் கொடுப்பாளா... இல்லைன்னேன்... உடனே, 'வீட்டை காலி பண்ணு'ன்னான்... பண்ணிட்டேன்...' என்றார், அப்பா.
'ஏண்ணா... விஜயதசமி முடிஞ்சு, காலி பண்றேன்னு சொல்ல வேண்டியதுதானே?'
'சொன்னேண்டி... அந்த மனுஷன் கேட்டாத்தானே... கன்னா பின்னான்னு கத்தி, ரகளை ஆகி, தெருவுல கூட்டம் வேடிக்கை பார்க்க ஆரம்பிச்சிடுத்து...
'அப்பத்தான் மஹாதேவய்யர், 'நம்மாத்துல, ஒரு போர்ஷன் காலியா இருக்கு... சாமான் செட்டை எடுத்துண்டு வாரும்... ரெண்டு மாசம் வீடு காலியா கெடந்தாத்தான், கோபாலய்யருக்கு புத்தி வரும்'ன்னு, சொல்லி கூப்பிட்டார். வந்துட்டேன்...' என்றார் அப்பா, அப்பாவியாக.
வீடு மாறுவது ஒன்றும் புதிதில்லை. அக்ரஹாரத்திலுள்ள, 30 வீடுகளில், ஏறக்குறைய, 20 வீடுகளிலாவது மாறி மாறி குடியிருந்து இருப்பாள், அம்மா; இந்த முறை, அப்பா.
வீடு மாறியதில், அம்மாவுக்கு வருத்தமில்லை. ஆனால், கொலு வைத்து, அதை பாதியில் கலைத்ததைத்தான் சகித்துக் கொள்ள முடியவில்லை.
பிடிவாதத்தில், அம்மாவும் - அப்பாவும், ஒருவருக்கொருவர் சளைத்தவர்களல்ல.
படித்து படித்து சொல்லியும் கேட்காமல், அப்பா, கொலு வைத்து, முடிவதற்கு முன் கலைத்தார் அல்லவா... அதனால், இனி, வீட்டில் கொலுவே வைப்பதில்லை என்று முடிவெடுத்தார், அம்மா. அவர் உயிரோடு இருந்த வரை, அந்த முடிவை மறுபரிசீலனை செய்யவேயில்லை.
அப்பாவும் சாமானியர் அல்ல. கொலு வைத்தாலென்ன, வைக்காவிட்டால் என்ன என்று, நவராத்திரி ஒன்பது நாட்களும், விஷ்ணு சஹஸ்ரநாமம் சொல்லி, தொடர்ந்து விரதத்தை கடைப்பிடித்து வந்தார். அந்த விஷப்பரீட்சையில் நான் இறங்கியதில்லை.
அதன் பின், வீட்டில் கொலு வைக்கவே இல்லை. கொலு வைத்திருந்ததன் ஞாபகமாக, 1 அடி உயரமிருந்த, இரண்டு மரப்பாச்சி பொம்மைகளை தவிர, மற்ற பொம்மைகளை, வீட்டுக்கு வரும் குழந்தைகளுக்கு கொடுத்து, ஒரே வருஷத்தில் காலி செய்தாள், அம்மா.
அந்த பொக்கிஷம், அம்முலுவின் கண்களில் பட்டதன் விளைவே, கொலு வைத்தே ஆக வேண்டுமென்ற ஆசை.
விளையாட்டு போல, 50 ஆண்டுகள் உருண்டோடி விட்டன. கல்யாணம் முடிந்து, 25 ஆண்டுகளாக தோன்றாத ஆசை, அம்முலுவுக்கு, 26ம் ஆண்டில் தோன்றியுள்ளது ஆச்சர்யம் தான்.
அம்முலுவும் பிடிவாதத்தில், அவளது மாமியாரை மாதிரி தான். கொலு வைக்க வேண்டுமென்று முடிவெடுத்து விட்டால், கண்டிப்பாக வைத்தே தீருவாள்.
''சரி... அம்முலு, நான் என்ன செய்யணும் சொல்லு?'' என்றேன்.
''மயிலாப்பூர் கிரி டிரேடர்ஸ்ல, கழட்டி மாட்டுறா மாதிரி, கொலு படிக்கட்டுகள் இருக்குண்ணா... கொலு முடிஞ்சதும் கழட்டி, அலமாரியா உபயோகப்படுத்திக்கலாம்... 8,500 ரூபாயாம்,'' என்றாள்.
''ம்... அப்புறம்?''
''பரிசு பொருட்கள், ஜாக்கெட் துணி, மஞ்சள்- குங்குமம், -சீப்பு, -கண்ணாடி காம்போ பேக், பன்னீர் பாட்டில் எல்லாம் சேர்த்து மொத்தம், 3,000 ரூபாய் ஆகும்ண்ணா.''
''ம்... அப்புறம்?''
''அப்புறம் என்ன அப்புறம், விழுப்புரம். இங்கே, என்ன கதையா சொல்லிக்கிட்டிருக்கேன்?'' சீறினாள்.
''ப்ச்... நான் அப்படி சொன்னேனா... பட்ஜெட்டைத் தானே கேட்டுண்டிருக்கேன்... மேலே சொல்லு,'' என்றேன்.
''தேங்காய், பூ, பழம், வெத்தலை பாக்கு; சுண்டலுக்கு, நவ தானியம்; நைவேத்திய பிரசாதம் பண்ண, மளிகை சாமான்; ஆயுத பூஜைக்கு, அவல், பொரி, கடலை, நாட்டு சக்கரை, ஆப்பிள், சாத்துக்குடி இதெல்லாம், 3,000 ரூபாய்க்குள்ள முடிச்சுக் கறேண்ணா,'' என்றாள்.
''ஓ.கே., மீதி, 2,408 ரூபா இருக்கு... இதை போக்குவரத்து செலவுக்கு வெச்சிக்க,'' என்றேன்.
''என்னண்ணா... கிண்டலா?''
''கிண்டல் இல்லேம்மா... சீரியஸாத்தான் சொன்னேன்... 'போனஸ்' தொகை, 16 ஆயிரத்து, 908 ரூபாய். அதுல நீ சொன்ன கணக்கு போக, மீதி, 2,408 ரூபா இருந்தது. அதைத்தான் போக்குவரத்து செலவுக்கு வெச்சுக்கோன்னேன். இவ்வளவு சாமானை எல்லாம் வாங்கிண்டு பஸ்லயா வருவே... ஆட்டோவிலோ, 'கால் டாக்சி'லயோ தானே வருவே?''
'போனஸ்' தொகையில், 12 ஆயிரத்துக்கு, 'ஆண்ட்ராய்ட்' மொபைல் போன் வாங்க இருந்தேன். அம்முலுவின், கொலு, 'கான்செப்ட்'டால், என் ஆசை அம்பேலானது.
''ரொம்ப சந்தோஷம்ண்ணா... இந்த வருஷம், நம் ஆத்துல, கொலு வெச்சு, 'தினமலர்' பத்திரிகைகாரர்களிடம் காட்டி, பரிசு வாங்கணும்ண்ணா,'' என்றாள்.
''ஓ... அப்படி ஒரு ஐடியா வேற இருக்கோ... அது சரி, எல்லாம் சொன்னியே, கொலு வெக்க முக்கியமானதை பத்தி, இதுவரை மூச்சு விடலியே... அதுக்கு எவ்வளவு, 'எஸ்டிமேட்' போட்டு வெச்சிருக்கே?'' என்றேன்.
''எது... பொம்மைங்க தானே?''
''ஆமாம், சரியா சொல்லிட்டே... பொம்மைகளுக்கு என்ன பண்ண போறே?''
''டேய்... சுந்தர், இங்கே வா... நாம வாங்கி வெச்சிருக்குற, பொம்மைகளை எல்லாம் உங்கப்பாவுக்கு காட்டுடா,'' என்று, மகனுக்கு உத்தரவிட்டாள்.
அடுத்த ஐந்தாவது நிமிடம், அவனது அறையில், கட்டிலுக்குக் கீழே வைத்திருந்த அட்டைப் பெட்டிகளை எடுத்து வந்து காட்டினான், சுந்தர்.
அத்தனையும் பொம்மைகள், மெருகு குலையாமல் பளபளத்துக் கொண்டிருந்தன. அடுக்கி வைத்தால், ஆறேழு படிகளை நிரப்பும் போலிருந்தது.
''ஏண்டி... இவ்வளவு பொம்மைகளை எங்கே, எப்போ, எப்படி வாங்குனே?'' என்று கேட்டேன்.
''போன வருஷம், நவராத்திரி முடிஞ்சு, கபாலீஸ்வரர் கோவிலுக்கு போயிருந்தோமா, அங்கே, பொம்மை கடையை மூடிண்டிருந்தா... 'விக்காம இருந்த மொத்தத்தையும் வாங்கிக்கறோம்'ன்னு சொன்னோம்... 8,000 ரூபா கேட்டான்... 'என்னிடம், 5,000 தான் இருக்கு'ன்னான், சுந்தர்.
''அவனும், 'சரி... கொடு'ன்னு வாங்கிண்டு, அழகா, 'பேக்' பண்ணி, மாட்டு வண்டியில ஏத்தி, ஆத்துல எறக்கிட்டு போயிட்டான்... நீங்க கொடுக்குற பாக்கெட் மணியை அனாவசியமா செலவு பண்ணாம, சேர்த்து வெச்சிருந்த காசுல, சுந்தர்தாண்ணா பொம்மைகளை வாங்குனான்,'' என்றாள், அலமேலு.
''சபாஷ்... ஒரு வருஷமா, 'பிளான்' பண்ணி இருக்கீங்க,'' என்றேன்.
''ஆமாம்ண்ணா,'' என்றாள், அலமேலு.
பீரோவிலிருந்து, 'போனஸ்' பணத்தை, அம்முலுவிடம் கொடுத்து, ''குட்... ஜமாய்ங்க... ஆல் தி பெஸ்ட்,'' என்று ஆசீர்வதித்தேன்.

என் ஐந்தாவது வயதில், கொலுவுக்கு மூன்று நாட்களுக்கு முன், 'டைபாய்டு' வந்த அம்மாவும், நானும், தாத்தா வீட்டுக்கு போனோம். இப்போது, அம்முலு மற்றும் கொலுவை பார்த்து பரவசமடைய முடியாதபடி, அலுவலகத்திலிருந்து, ஒரு பயிற்சிக்காக, மைசூர் அனுப்பி வைக்கப்பட்டேன்.
பயிற்சி முடிந்து, ஆயுத பூஜைக்கு முதல் நாள், வீடு திரும்பியபோது, ஹாலில், கொலு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது. ஆனால், அம்முலு மற்றும் சுந்தரின் முகம் களை இழந்து, பேயறைந்தது போல காணப்பட்டது.
காபி கலந்து எடுத்து வந்த அம்முலுவிடம், ''என்னம்மா... ஏன், 'டல்'லா இருக்கீங்க... எல்லாம் நல்லபடியா, நினைச்சா மாதிரி நடந்ததில்லே?'' என்றேன்.
''எங்கே நடந்தது... எல்லாம் வேஸ்ட்... 'தினமலர்' பத்திரிகைக்காரங்களை தவிர, யாரும் வரலைண்ணா... எல்லாரையும், பாழாய் போன, 'டிவி' தொடரில் முடக்கிப் போட்டுடுத்துண்ணா,'' என்றாள், கண்ணீர் தளும்ப.
''சரி... சரி... இந்த பாழாய் போன மெகா தொடர்கள், காலை வேளையில கொண்டாடுற, தீபாவளி, பொங்கலையே விடுறதில்லை. சாயந்தரத்துல கொண்டாடுற நவராத்திரியையா விட்டு வைக்கும்,'' என்றேன், எரிச்சலோடு.
''அம்மா... 'தினமலர்' கொலு போட்டி பிரிவில் இருந்து பேசறாங்க,'' என்று சொல்லி, மொபைல் போனை அம்முலுவிடம் கொடுத்தான், சுந்தர்.
''நம்மாத்து கொலுவுக்கு பரிசு கிடைச்சிருக்காம்ண்ணா... நாளை மறுநாள், தேனாம்பேட்டை காமராசர் அரங்கத்துல விழாவாம்... குடும்பத்தோடு வந்து கலந்துக்கணுமாம்... அழைப்பிதழ் அனுப்பறாளாம்,'' என்றாள்.
''அப்பாடா... இப்பத்தான், 'ரிலாக்ஸ்' ஆச்சு... 'டிவி' தொடர்களால் கலாசார சீரழிவு ஒரு பக்கம் நடந்தாலும், 'தினமலர்' பத்திரிகை, அதை நிவர்த்திக்கும் விதமா, வாசகர்களை உற்சாகப்படுத்தி இருக்குல்ல... அதுவரைக்கும் சந்தோஷம்,'' என்றேன்.
சிறு சேமிப்பு, தன் குடும்பத்திற்கு ஒரு சந்தோஷத்தை ஏற்படுத்தி கொடுத்துள்ளதை நினைத்து, சுந்தர் சிரித்தான்; கூடவே, அம்முலுவுடன், நானும் சிரித்தேன்!

எஸ். ராமசுப்ரமணியன்

Advertisement

 We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X