சென்னையை மிரட்டிய எம்டன்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 செப்
2019
00:00

செப்., 22, எம்டன் கப்பல் சென்னையை தாக்கிய நாள்

சினிமாவை மிஞ்சும் காட்சிகள், சில நேரங்களில், நிஜ வாழ்விலும் அரங்கேறி விடுகின்றன. செப்., 22, 1914ம் தேதி இரவு, சென்னைவாசிகள், ஒரு காட்சியை பார்த்து, மிரண்டு போயினர்.
முதல் உலக போரால், பல நாடுகளும் அல்லோகலப்பட்டுக் கொண்டிருந்த வேளையில், நவராத்திரி கொண்டாட்டங்களில் மூழ்கியிருந்த சென்னைவாசிகளை, அச்சத்தில் உறைய வைத்தது, அந்த காட்சி.
சென்னை துறைமுகத்திற்கு மிக அருகில், திடீரென காட்சி கொடுத்தது, ஜெர்மானிய போர்க் கப்பலான, எம்டன்! பிரிட்டிஷ் கப்பற்படையின் கண்களில் மண்ணை துாவி, சென்னை துறைமுகத்தை நெருங்கிய அந்த கப்பல், சென்னை மாநகரை நோக்கி குண்டு மழை பொழியத் துவங்கியது. துறைமுகத்திற்குள் இருந்த, 'பர்மா ஆயில் கம்பெனியின்' எண்ணெய் கிடங்குகள், கொழுந்து விட்டு எரிந்தன.
எண்ணெய் கிடங்குகளை கபளீகரம் செய்த, எம்டன் கப்பல், அடுத்தபடியாக, துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த, சிறிய வணிக கப்பல் ஒன்றையும் சுட்டு வீழ்த்தியது. கப்பலில் இருந்த, மூன்று பணியாளர்கள் உயிரிழந்தனர்; 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
பிரிட்டன் படைகள், சுதாரித்து, எதிர்தாக்குதல் நடத்த, அரைமணி நேரம் ஆகிவிட்டது. அதற்குள், மேலும் சில குண்டு தாக்குதலை சென்னைக்கு பரிசளித்து, விரைந்து, மறைந்தது, எம்டன் கப்பல்.
அடுத்த நாள் காலை, எம்டன் வீசி சென்ற குண்டுகள், உயர்நீதிமன்றம், பூந்தமல்லி நெடுஞ்சாலை, சூளை மற்றும் நுங்கம்பாக்கம் என, பல கி.மீ., துாரம் சிதறிக் கிடந்தன. இதை பீதியுடன் பார்த்துச் சென்றனர், மக்கள்.
எம்டன் பற்றிய செய்தி, காட்டுத் தீயாக பரவியது. 'மீண்டும், எம்டன் வந்து தாக்கலாம்...' என்ற வதந்தி பரவியது. பீதியடைந்த மக்கள், நகரை விட்டு வெளியேற துவங்கினர். தினமும், 20 ஆயிரம் பேர், சென்னை நகரை காலி செய்து கிளம்பியதாக, அன்றைய நாளிதழ்கள் தெரிவிக்கின்றன. ரயில் நிலையங்களில் கூட்டம் அலை மோதியதால், கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டனர்.
ரயில்களில் இடம் கிடைக்காதோர், சாலை மார்க்கமாக பயணித்தனர். எங்கு பார்த்தாலும் மூட்டை முடிச்சுகளோடு, கூட்டம் கூட்டமாக வெளியேறினர், மக்கள். கடைகள் அடைக்கப்பட்டன. திறந்திருந்த ஒரு சில கடைகளில் விலைவாசி விண்ணில் பறந்தது.
'வதந்தி கிளப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்...' என, அரசு எச்சரித்தும், எந்த பயனும் இல்லை. வதந்திகள் பரவ, பரவ வெளியேறியபடி இருந்தனர், மக்கள்.
எம்டன் கப்பல் தாக்குதல் நடத்திய போது, அப்போதைய சென்னை ஆளுனராக இருந்த, லார்ட் பெண்ட்லாண்ட், ஊட்டியில் இருந்தார். தகவல் கிடைத்த பிறகும், சென்னைக்கு வரவில்லை.
பொறுமையாக, செப்., 25ல், தாக்குதல் நடந்த இடங்களை பார்வையிட்டு, 'எம்டன், திரும்பி வராது; பயப்படாதீர்கள்...' என்று கூறி, மீண்டும், ஊட்டிக்கு திரும்பி விட்டார்.
'எம்டன் வராது என்றால், ஆளுனர் இங்கேயே இருக்க வேண்டியது தானே, நகரில் இருப்பதை... ஏன் தவிர்க்கிறார்...' என்று, கேள்வி எழுப்பினர், பொதுமக்கள்.
ஆனால், பதில் சொல்லத்தான் யாரும் இல்லை.
அந்த காலத்தில், பிரிட்டீஷ் ஏகாதிபத்தியத்தின் மகுடமாக கருதப்பட்ட இந்தியாவில், அதுவும், அவர்கள் முதன் முதலாக காலடி வைத்தது, சென்னை. அங்கேயே வந்து, ஒரு எதிரி தாக்கிவிட்டு பத்திரமாக திரும்பியது, ஆங்கிலேய படைக்கு மிகப்பெரிய அவமானமாக இருந்தது.
இந்த ஒரு காரணத்திற்காக, இந்திய மக்கள், எம்டன் கப்பலை, 'ஹீரோ' ஆக போற்றினர். அதன் பின், அசகாய சூரர்களை, எம்டன் என்று, அழைக்கத் துவங்கினர்.
ஆங்கிலேயர்களுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்த, எம்டன் கப்பல், தன் பணி காலத்தில், 31 கப்பல்களை மூழ்கடித்திருக்கிறது. தன் வசீகர தோற்றத்தால், 'கிழக்கின் அன்னப்பறவை' என, எதிரி படைகளாலும் வர்ணிக்கப்பட்ட பெருமை, இதற்கு உண்டு. ஜெர்மானிய கப்பல் படையில் முக்கிய அங்கம் வகித்த, இந்த கப்பலுக்கு, 1913ல், வான் முல்லர் என்பவர், கேப்டனாக பொறுப்பேற்றார்.
அந்த காலத்தில், இந்துமகா சமுத்திரம் முழுவதும், பிரிட்டீஷ் கப்பல்கள் நிறைந்திருக்கும். ஒட்டுமொத்த சமுத்திரத்திலும் தாங்களே ஆதிக்கம் செலுத்தியதால், இந்துமகா சமுத்திரத்தை, 'பிரிட்டனின் ஏரி' என்று ஆங்கிலேயர்கள், கர்வத்துடன் கூறிக் கொண்டனர்.
இந்த கர்வத்திற்கு தான், மரண அடி கொடுத்தார், முல்லர். எம்டன் கப்பலில் இருந்த, செண்பகராமன் என்ற விடுதலை போராட்ட வீரரின் கோரிக்கையை ஏற்றே, சென்னை மீது, முல்லர் தாக்குதல் நடத்தியதாகவும் சொல்லப்படுகிறது. ஆனால், இதுபற்றி உறுதியான ஆவணங்கள் எதுவும் இல்லை.
பல நாட்டு கப்பல்களும், எம்டன் கப்பலை வீழ்த்த, எவ்வளவோ முயற்சித்தன; ஆனால், முடியவில்லை. இறுதியில், வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு என்பதை நிரூபிக்கும் வகையில், எம்டனுக்கு போட்டியாக, ஒரு கப்பல் களமிறங்கியது.
முதல் உலக போர் உச்சத்தில் இருந்தபோது, ஆஸ்திரேலியாவின், சிட்னி என்ற நவீன போர்க்கப்பலுடன், எம்டன் மோதியது. கடுமையான சண்டைக்கு பிறகு, எம்டன் கப்பல் சுட்டு வீழ்த்தப்பட்டது. கேப்டன் முல்லர் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். பல வெற்றிகளை நிலைநாட்டிய, அதே கடலில், அமைதியாக ஜல சமாதியானது, எம்டன்!

*முதல் உலக போரின் போது, இந்தியாவில் தாக்குதலுக்கு உள்ளான ஒரே நகரம், சென்னை தான்
*எம்டன் கப்பல் தாக்கியதில், சென்னை உயர்நீதிமன்ற சுற்றுச் சுவரின் ஒரு பகுதி சேதமடைந்தது. இதன் நினைவாக, நீதிமன்றத்தில், இன்றும் ஒரு கல்வெட்டு இருக்கிறது
*ஜெர்மனியின்,'எம்ஸ்' நதிக்கரையில் உள்ள, எம்டன் நகரின் நினைவாக, இந்த கப்பலுக்கு, 'எம்டன்' என பெயரிடப்பட்டது.

ஜோல்னாபையன்.

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (3)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rangiem N Annamalai - bangalore,இந்தியா
24-செப்-201919:38:41 IST Report Abuse
Rangiem N Annamalai அன்று இரவு நேரத்தில் மின்சாரம் துண்டிக்க பட்டது.கலங்கரை விளக்கத்தில் குண்டு போடப்பட்டது.அன்று கலங்கரை விளக்கம் இருந்தது, இப்போதய உயர் நீதி மன்றம் .
Rate this:
Cancel
மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
24-செப்-201918:40:53 IST Report Abuse
மலரின் மகள் எம்டனை பற்றி எழுதிய திரு ஜோல்னாபையனும் எம்டன் தான். உங்களின் கட்டுரைகள் சிறியதாக இருக்கும். தொடர்ந்து வாய்ப்பிருக்கும் போது படிப்பேன். என்னை மிகவும் கவர்ந்தது இந்த எம்டன் வரலாறு தான். படிப்பதற்கு ஆர்வமாகவும் அன்றைய நிகழ்வை அப்படியே கண் முன் நிறுத்தியிருக்கிறீர்கள். மிக சிறப்பு. உங்கள் கட்டுரையை படித்த பின்பு விடுதலை போராட்ட வீரர் செண்பகராமன் பற்றி அறிய ஆவல் பிறந்திருக்கிறது. அவரின் பிறந்த நாளன்று நீங்கள் மீண்டும் அவரை பற்றிய வரலாறை எழுதுவீர்கள் என்றும் அதை படிக்க வேண்டும் என்றும் ஆசை. வரலாற்று புத்தகங்களில் படிக்காத பல செய்திகள் தினமலரில் இன்று படிக்க முடிகிறது. நீங்கள் நல்ல சிறப்பு பெற்று அன்பான வாழ்க்கை வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்.
Rate this:
pradeesh parthasarathy - Mylapore,இந்தியா
25-செப்-201911:22:12 IST Report Abuse
pradeesh parthasarathyசெண்பகராமன் குமாரி மாவட்டத்தை சார்ந்தவர் ......
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X