மகன் வருகிறான்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 செப்
2019
00:00

அன்று இரவு, துாக்கமே வரவில்லை. கோபமும், இயலாமையும், பாக்கியநாதனை துாங்க விடாமல் செய்தது.
வயலுக்கு வேலி போட்டு இரண்டு நாள் கூட ஆகவில்லை. வேலியை பிடுங்கி போட்டிருந்தனர். முத்தரசன் மகன்களின் வேலை, இது. ஊரில், அவர்களின் கொட்டம் தான், கொடி கட்டி பறக்கிறது.
'போக்கிரிப் பசங்க, யாருக்கும் கட்டுப்பட மாட்டாங்க...' என, ஒதுங்கி கொண்டனர், ஊர்க்காரர்கள்.
முன்பு இருந்த தெம்பு, இப்போது இல்லை, பாக்கியநாதனுக்கு. வயது, 70ஐ தொடுகிறது. உடம்பில் பலவீனம் ஒட்டிக் கொண்டிருந்தது. அதனால், ஓங்கி சத்தம் போடக் கூட யோசிக்க வேண்டியிருந்தது.
ஒரு முறை, அப்படி குரல் கொடுக்கப் போய், சண்டைக்கு வந்து விட்டனர், முத்தரசனின் மகன்கள். நடுக்கம் வந்து, பின் வாங்கி விட்டார்.
''நீங்க எதுக்கு, இவங்களோடு மல்லுகட்டிகிட்டு... சென்னையில் இருக்கிற, மகன், ராஜனை வரவழைங்க... அவன் வந்தா தான், சரிப்பட்டு வருவானுங்க... இல்லைன்னா, இப்படி தான் உன்னை சீண்டிகிட்டே இருப்பானுங்க,'' என்றார், பக்கத்து வீட்டு, ராமசாமி.
சென்னையில், கன்டெய்னர் லாரி டிரைவராக இருக்கிறான், ராஜன். வெளி மாநில பயணம் போனால், வீடு திரும்ப, ஒரு வாரம் அல்லது 10 நாள் ஆகும். நேரம் கிடைப்பது அரிது. திருவிழா, விசேஷங்களுக்கு கூட வர முடியாமல், மனைவி, குழந்தைகளை அனுப்பி வைத்தான்.
ராஜன், ஊருக்கு வரும் போது, பவ்யமாகி, 'நாங்களா, சீண்டுகிறோமா... நீங்க வேற, அவருக்கும், வயலுக்கும், நாங்க தானே பாதுகாப்பு கொடுத்துகிட்டு இருக்கோம்... நாங்க இல்லைன்னா, இங்கே தனியா வாழ்ந்துட முடியுமா அப்பாவால...' என்பர்.
'அவங்க சொல்றதும், சரியாத் தான் இருக்கு... வரப்புன்னு இருந்தா, கொஞ்சம் முன்ன பின்ன தள்ளி நடவு போடறது தான்... பெரிசு பண்ணாம அனுசரிச்சு போயேன் பா...' என்பான்.
அவன் தலை மறைந்ததும், கொக்கரிப்பர்.
'மாத செலவுக்கு பணம் அனுப்புகிறான். சாப்பாட்டுக்கு, கை செலவுக்கு குறை இல்லை. ஆனால், இந்த பாவிப் பசங்க நிம்மதியா இருக்க விடுறதில்லையே... பழைய தெம்பும், ஆரோக்கியமும் இருந்தால், இவன்களை ஒற்றைக் கையால் துாக்கி பந்தாடி விடலாம்; ரெண்டு அடி கொடுத்து மிரட்டலாம்.
'இப்போது, அந்த தைரியமும், வலுவும், மகன், ராஜனுக்கு இருக்கிறது. அவன், ஒரு குரல் கொடுத்தால் அதிரும். எதிரில் வர அஞ்சுவர்...' என, நினைத்துக் கொண்டார்.
ஒருமுறை, மகனை பார்க்க, சென்னைக்கு போனபோது, 'அந்த முத்தரசன் மகன்கள், பிரச்னை பண்றாங்க... நீ ஊர்ல இருந்த வரைக்கும், ஒடுங்கி இருந்தானுங்க... உனக்கு வேலை கிடைச்சு, சென்னைக்கு வந்த பின், ஊர் பக்கம் நீ வர்றதே இல்லை...
'வந்தாலும், உடனே புறப்படறே... பிரச்னையை கேட்டு, அவங்களை கண்டிச்சு, ஒரு வார்த்தை சொல்லி, நிலத்துக்கு ஒரு வேலி கட்டிக் கொடுத்துட்டு வந்தா போதும்...' என்றார்.
'வருகிறேன்...' என்ற ராஜன், இதுவரை வரவில்லை.
'ஏன் மாமா... அங்கே தனியா இருந்து அவதிப்படறீங்க... இங்கே வந்துடுங்களேன்... பேரக் குழந்தைகளை, பார்த்துகிட்டிருந்தாலே நேரம் போகுமே...' என்று, மருமகளும் வற்புறுத்தினாள்.
ஆனால், அவரோ, 'கிராமத்தில் இருந்து பழகி போச்சு... மாடு, கன்னு, வயல்வெளின்னு வாழ்க்கை பிணைஞ்சு கிடக்கு... தினமும் யாருடனாவது பேசியபடி, காலாற நடந்து கொண்டிருந்தால், பொழுது போகுது... ஒரு வேளை சோறு வடிச்சுகிட்டு, மூணு வேளைக்கு வச்சு சாப்பிட்டுக்குவேன்... திண்ணையில உருண்டு கிடப்பேன்...
'இங்கே, அறைக்குள்ள இருக்க முடியலைம்மா... ரெண்டு நாள் இருந்தாலே, சிறை மாதிரி இருக்கு... 'டிவி' பார்க்கிற பழக்கமும் இல்லை... இப்படியே இருந்துட்டு போயிடறனே... ஒரு குறையும் இல்லை... அந்த வயல்காரங்க தான் தொல்லை பண்ணிகிட்டிருக்காங்க. ராஜன்... ஊருக்கு வந்து, அவங்களை அதட்டி, கையோடு ஒரு வேலி கட்டி கொடுத்துட்டா நல்லது...' என்றார்.
ஒவ்வொரு முறை, பிரச்னை வரும்போதும், 'இருங்கடா... ராஜா வருவான், அவன்கிட்ட பேசுங்க... வந்து, உங்களை என்ன செய்யறான் பாருங்க...' என்று, அவர்களை, ஒரு பயத்திலேயே வைத்திருந்தார்.
ஆனால், ஒவ்வொரு முறையும் அவர், சென்னைக்கு சென்று தனியாக திரும்பி வருவதாலும், ஆண்டுக்கணக்கில் ராஜா, ஊர் பக்கம் வராததாலும், முத்தரசனின் மகன்களுக்கு தைரியம் துளிர் விட்டது.
'என்ன செய்தாலும், மகன் வரப் போவதில்லை. இந்த கிழம், இனி, கேட்க ஆள் இல்லாத அனாதை...' என்று மிரட்ட ஆரம்பித்தனர்.
சென்னையிலிருந்து திரும்பிய பாக்கியநாதனிடம், 'என்ன... இந்த முறையும், பையன் வரலையா... வந்தா மட்டும் பயந்துடுவோமா... அந்த நிலத்துல, கால் பங்கு எங்களோடது... எங்க வேணும்னாலும் பேசிக்க...' என்றனர்.
சோர்ந்து போனார்.
முன்பு இருந்த தைரியம் கூட இப்போது இல்லை. நிலத்தின் பக்கமும் போகவில்லை, பாக்கியநாதன்.
''இப்படியே இருந்தால், அவங்க கொஞ்சம் கொஞ்சமா, ஆக்கிரமிப்பு பண்ணிடுவான்க... என்ன தான் சொல்றான் உன் மகன்...'' என்றார், ராமசாமி.
''வரணும்ன்னு தான் நினைக்கறான், முடியலை... பணம் மட்டும் கொடுக்கிறான்,'' என்றார்.
''அதை மட்டும் வச்சுகிட்டு என்ன பண்றது... இங்க உள்ள பிரச்னையை, வந்து சரி செய்துட்டு போனால் தானே, உன்னால் நிம்மதியாக இருக்க முடியும்... ஒரு நாள் வந்து போக முடியாதபடிக்கு, அப்படி என்ன, ஐ.ஏ.எஸ்., உத்யோகம்...
''நீ செத்து போனாலும், இப்படி தான் பாராமுகமா இருப்பானா... அப்ப வந்தால், காரியம் முடியற, 10 நாள் வரைக்குமாவது ஊரில் தங்கி தானே ஆகணும்... அப்படின்னு நினைச்சுகிட்டாவது வரக் கூடாதா,'' என்று, மகன் ராஜனை திட்டினார்.
சங்கடமாக இருந்தது. மகனின் அலட்சியப் போக்கு, மன உளைச்சலை கொடுக்க, மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் சோர்ந்தார்.
தன்னை, கை கழுவிட்டானோ என்று கவலை கூட வந்தது. சாப்பாடு கூட சரிவர இறங்கவில்லை.
ஒருநாள் திண்ணையில் சுருண்டு கிடந்த, பாக்கியநாதனிடம், ''உன் பையன் வரான்யா,'' என்று, ராமசாமி கூறினார்.
கிண்டல் செய்கிறாரோ என்று நினைத்து, சந்தேகமாக எட்டிப் பார்த்தார்.
தொலைவில், பஸ்சை விட்டு இறங்கி, வீடு நோக்கி வந்து கொண்டிருந்தான், ராஜன்.
கம்பீர நடையும், கைவீசி அவன் வந்த தோரணையை பார்த்த நொடியில், அவருக்குள் தெம்பு ஊற்றாக பிரவகித்தது. நிமிர்ந்து நின்றவர், கண்களில் பிரகாசம்.
''இப்ப வாங்கடா... சல்லைப் பசங்களா... குள்ள நரி மாதிரி ஒளிஞ்சு ஒளிஞ்சு சீண்டிகிட்டிருந்தீங்களே... சிங்கம் மாதிரி வர்றான்... பதில் சொல்லுங்கடா டேய்,'' என்று உரக்க கத்தினார், பாக்கியநாதன்.
அந்த குரலை கேட்டவர்கள், திகைத்து போயினர்.
'மகனைப் பார்த்ததும், இந்த கிழவனுக்கு தான் எத்தனை தைரியம்...' என்று ஆச்சரியப்பட்டனர்.
முத்தரசன் வகையறாக்கள் கூட, கொஞ்சம் அரண்டு போயினர்.
இருப்பினும், 'வழக்கம் போல, ஒரு சமாதான மாநாடு நடத்தி விட்டு போகப் போகிறான். அதுவரை பணிவு காட்டினால் போதும்...' என்று, கொஞ்சம் அலட்சியமாக இருந்தனர்.
ஆனால், இந்த முறை, புயலாக சீறினான், ராஜன்.
''என்னடா நினைச்சுகிட்டிருக்கீங்க மனசுல... கேட்க ஆள் இல்லைன்னு நினைச்சீங்களா... என்ன பார்க்கும்போது ஒரு பேச்சு, நான் வராத போது, ஒரு பேச்சா... வாங்க, உங்க நிலம் எது வரைக்கும்ன்னு சொல்லுங்க... சரியா இருந்தால், தலை வணங்கி சலாம் பண்றேன்...
''அப்படியில்லாமல், எங்க நிலத்துல, விளையாடினது உறுதி ஆச்சுன்னா, தலை கீழா கட்டி தொங்க விட்டு, தோலை உரிச்சு, மிளகாய் தடவிடுவேன்... வாங்கடா வாங்க,'' என்றான், ராஜன்.
பெட்டிப் பாம்பாக அடங்கிப் போயினர்; தலை காட்டவில்லை.
இரண்டு நாள் ஊரில் இருந்து, நிலத்தை அளந்து, கம்பி வேலி போட்டான்.
''இனிமே, இந்த மாதிரி பிரச்னை செய்தீங்கன்னா, லாரிய எடுத்து வந்து, ஒட்டுமொத்தமா ஏத்தி, நசுக்கிட்டு போயிடுவேன்... ஜாக்கிரதை,'' என்று, முத்தரசன் மகன்களை எச்சரித்தான்.
''நகரத்துல முதியோர் இல்லத்துல இருக்கும் பெற்றோரும், கிராமத்தில் தனியாக வாழும் பெற்றோரும், ஏறக்குறைய சமம் தான். மாசம்தோறும் பணம் கொடுத்துட்டா மட்டும் போதாது... அடிக்கடி வந்து பார்த்துக்கணும்... அது தான் முக்கியம், அது தான் அவர்களுக்கு தெம்பு...
''அவனுங்க கொடுத்த தொல்லையில, அப்பா நிலை குலைஞ்சு கிடந்தார்... கோடி ரூபாய் கொடுத்தாலும், அவர் மன வேதனை போகாது... திண்ணையில சுருண்டு கிடந்தவர், உன்னை பார்த்ததும், கிண்ணுன்னு துள்ளி குதிச்சு, 'வாங்கடா... ஒரு கை பார்க்கறே...'ன்னு நிமிர்ந்தார்
பாரு... அதானே முக்கியம்... அடிக்கடி வந்துட்டு போப்பா,'' என்றார், ராமசாமி.
தலையாட்டியபடியே நடந்தான், ராஜன்.
மனம் நிறைய உற்சாகத்துடன், மகனை வழியனுப்ப சென்றார், பாக்கியநாதன்.

எஸ். ராஜசிம்மன்

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
24-செப்-201908:18:37 IST Report Abuse
skv srinivasankrishnaveni பலக்கிராமங்களிலே நடக்குதுங்க இந்த எல்லாப்பிரச்சினை நான் அறிந்த ஒருவர் வயல்வெளிகளேதான் அவருக்கு தெரியும் ஆனால் வாய்ச்சவடால் அதிகம் எப்படியோ பையனை பி இ பட்டதாரி ஆக்கிட்டார் பிராமணன் வேறு கேட்கணுமா அரசுவேலைலே கிடைக்கவாய்ப்பே இல்லே பிள்ளை தான் பெரியப்ப பிள்ளைகள் போல பாரினலேதானாவென் ஈப்ரு ஆடம் பண்ணிண்டு படிச்சபடிப்பையும் வீணாக்கிண்டு சோம்பிரியா கிடக்கான் ஏவா வேலைக்கு சிபாரிசு செய்தாலும் போகாமல் படிப்புமுடிச்சு வெட்டிய உக்காந்துருக்கான் வடிச்சோட்டா அம்மா இருக்கிறாங்க அரட்டைக்கு தங்கையிருக்கா இருவத்துநாலு வயதிலே நல்லாளாகவும் அடக்கமாவும் இருக்கும் பொண்ணு படிப்பு பத்தான்கிளாஸ் தான் பட்டதாரிகள் வேலைகிடைக்காமல் தவிக்கும்போ பத்தமகிளாஸுக்கு எவன் வேலைத்தருவான் சொல்லுங்க அய்யர் வீட்டுப்பொண்ணுகள் பாத்திரம் தேய்க்கும் வேலைக்குப் போகாதுகள் விடமாட்டாங்க பால்ஸ் ப்ரேSடீஜ் தான் அதுலேயும் கூட இன்று ரெண்டாயிரம் வர்துகங்களே சொந்த நிலம் வீடெல்லாம் என்னாச்சு பவே (பகவானுக்கு வெளிச்சம் )அரியர்ஸ் இல்லாமல் முதல் ரெண்டகளே தெரியும் நோ யூஸ், பெரியப்பாக்களெல்லாம் முதுமையே தான் பேங்க்ஷனிலே இருக்காங்க இவருக்கு எவன் பேங்க்ஷன் தருவான் எம் எ படிச்சும் வயலில் வேலை என்றாரு எப்படியோ பிள்ளைக்குப்படிப்பைத்தந்தாரு ஆனால்பிள்ளையோ தாத்தியாட்டம் குந்திண்டுருக்கான்
Rate this:
Cancel
அழகர்சாமி எட்டையபுரம் கிராமத்தில் உள்ள பழைய நினைவுகள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X