பூக்குழி எனப்படும் அக்னி குண்டத்தில், வேண்டுதலுக்காக, பக்தர்கள் இறங்குவது வழக்கம். ஆனால், ஈரோடு மாவட்டம் பண்ணாரி மாரியம்மன் கோவிலில், பக்தர்களுடன், கால்நடைகளும் குண்டத்துக்குள் இறங்கும். விஜயதசமி சமயத்தில், இந்த அம்மனை தரிசித்து வரலாம்.
'பண்ணாரி' என்ற கன்னட சொல்லுக்கு, நகர மாட்டேன் அல்லது வரமாட்டேன் என்று பொருள். இங்கு ஓடிய, தோரணப்பள்ளம் ஆற்றங்கரையில், மாடு மேய்த்தனர், மக்கள்.
ஒரு காராம் பசு, மடி நிறைய பாலுடன், வேங்கை மரத்தடியில் உள்ள புற்றில், தினமும் பால் பொழிவதைப் பார்த்தனர். அந்த இடத்தை சுத்தம் செய்த போது, அம்மன் சிலை இருந்தது.
அப்போது, ஒருவருக்கு தெய்வ அருள் வந்து, 'நான் மண்ணார்க்காடு (கேரளா) என்ற ஊரிலிருந்து, பொதி மாடுகளை ஓட்டி, மைசூரு செல்லும் மக்களுக்கு வழித்துணையாக வந்தேன். எழில் மிகுந்த இந்த இயற்கை சூழலில், தங்க விரும்புகிறேன். இங்கிருந்து எங்கும் போக மாட்டேன். என்னை, 'பண்ணாரி மாரியம்மன்' என, பெயரிட்டு வணங்கி வாருங்கள்...' என்றார்.
அதன்படி அந்த இடத்தில், புற்களால் குடில் அமைத்து, அம்பாளை பிரதிஷ்டை செய்தனர். காலப்போக்கில் கோவில் கட்டப்பட்டது. இங்கு, அம்மனுக்கு உயிர் பலி ஏதும் இல்லாமல், சைவ படையல் மட்டுமே செய்யப்படுகிறது.
திருநீறுக்கு பதிலாக, காட்டிலிருந்து வெட்டி எடுக்கப்படும் புற்று மண், பிரசாதமாக வழங்கப்படுகிறது.
பங்குனியில் நடைபெறும் குண்டம் திருவிழாவிற்கு, மரங்கள் வெட்டும் சடங்கிற்கு, 'கரும்பு வெட்டுதல்' என்று பெயர். குண்டத்தில், பருத்தி, மிளகாய், தானியங்கள் மற்றும் தேங்காய்களை போடுகின்றனர். இதில், பக்தர்களுடன், கால்நடைகளும் இறங்கும்.
முன்பு, ஆங்கிலேயர் ஒருவர், துப்பாக்கியால் கோவில் சுவரில் சுட்டார். அவரது கண்கள், ஒளி இழந்தன. தவறை உணர்ந்து, அம்மனிடம் வேண்டி, கோவிலில் வழங்கிய தீர்த்தத்தால், மீண்டும் கண் ஒளி பெற்றார். தற்போதும், கண் வியாதி உள்ளவர்களுக்கு தீர்த்தம் வழங்கப்படுகிறது.
கோவில் அருகிலுள்ள சத்தியமங்கலம் காட்டில், கொடிய மிருகங்கள் உள்ளன. தெப்பக்கிணறு அருகில், காட்டு யானைகள் தண்ணீர் குடிக்க தொட்டிகள் கட்டப்பட்டுள்ளன. ஆனால், திருவிழா காலங்களில், பக்தர்கள் கண்களில் அவை படுவதில்லை.
பங்குனி பூச்சாற்று விழாவில், அம்மன் வீதி உலா வரும்போது, மலைவாசிகள் வாத்தியங்கள் இசைத்து வழிபாடு செய்கின்றனர்.
ஈரோட்டிலிருந்து, 64 கி.மீ., துாரத்தில் சத்தியமங்கலம் உள்ளது. இங்கிருந்து, மைசூரு செல்லும் சாலையில், 15 கி.மீ., துாரத்தில், பண்ணாரி ஊர் அமைந்துள்ளது.
தி. செல்லப்பா