இது உங்கள் இடம்! | வாரமலர் | Varamalar | tamil weekly supplements
இது உங்கள் இடம்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
Advertisement
 

பதிவு செய்த நாள்

06 அக்
2019
00:00

முதுமையின் புதுமை!
என் நண்பரை சந்திக்க, அவர் வீட்டுக்கு சென்றேன். 70 வயதை தாண்டிய, அவரது பெற்றோருடன், கல்லுாரியில் படிக்கும் மகனும், இன்னும் சில நண்பர்களும், இன்றைய சினிமா முதல் அரசியல் வரை கலகலப்பாக பேசி, அரட்டையடித்துக் கொண்டிருப்பதை, வியப்புடன் பார்த்தேன்.
பேச்சினுாடே, நண்பரின் அப்பா, தன் மனைவியை காட்டி, 'சின்ன வயசுல, இவ கூட, ப்ரியா பவானி சங்கர் மாதிரி தான் இருப்பா...' என்று சொன்னார்.
பதிலுக்கு, 'இவர் கூட, சின்ன வயசுல, விஜயதேவரகொண்டா மாதிரி, 'ஸ்மார்ட்'டா இருப்பார்...' என்று, பாட்டி சொல்ல, இளைஞர்கள் கை கொட்டி சிரிக்க, அவர்களோடு நாங்களும், சிரித்து மகிழ்ந்தோம்.
இதுபற்றி நண்பரிடம் கேட்டபோது, 'இருவரும், 70 வயதை கடந்து விட்டனர். பல உடல் உபாதைகள் இருக்க தான் செய்கிறது. ஆனாலும், எதையும் வெளிக்காட்டிக் கொள்ளாமல், தங்களை எப்போதும் இளமையாகவும், சந்தோஷமாகவும் வைத்திருக்க முயற்சி செய்வது, எனக்கும், என் மனைவிக்கும் மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது.
'என் மனைவி கூட, 'வயதான பிறகு, நாமும் இப்படிதான் இருக்க வேண்டும்...' என்று அடிக்கடி கூறுகிறாள்...' என்றார்.
மனதளவில் சந்தோஷமாக இளமையாக இருக்க விரும்பும், வயதான தம்பதியரை கேலி செய்யாமல், ஊக்கமளிக்கும், மகன் மற்றும் மருமகளை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
எம். கோவிந்தன், விருதுநகர்.

பொங்கி எழுந்த மனைவி!
உறவினர் ஒருவருக்கு, 10 ஆண்டுக்கு முன் திருமணம் நடந்தது. தம்பதியருக்கு, குழந்தை பாக்கியம் இல்லை. இதை கருத்தில் கொண்டு, முக்கிய உறவினர்கள் ஒன்று கூடி ஆலோசித்து, அந்த கணவருக்கு, இரண்டாம் திருமணம் செய்து வைக்க முடிவெடுத்தனர்.
இதையறிந்த மனைவி, 'குழந்தை வேண்டி, கணவர் இன்னொரு திருமணம் செய்து கொள்வதில், எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை; ஆனால், அதற்கு முன், நாங்கள் இருவரும், மருத்துவ பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
'அப்போது தான், இருவரில் யாருக்கு குறையுள்ளதென தெரிய வரும்...' என்று, பிடிவாதமாக வற்புறுத்தினார். அதற்கு சம்மதித்து இருவரும், மருத்துவ பரிசோதனை செய்து கொண்டனர்.
பரிசோதனை முடிவில், பெண்ணுக்கு எந்த குறையும் இல்லை; கணவருக்கு தான் பிரச்னை. இரண்டாம் திருமணம் செய்து கொண்டாலும், குழந்தை பிறக்க, 100 சதவீதம் வாய்ப்பு இல்லை என, தெரிய வந்தது.
இதையறிந்த அந்த பெண், 'வாரிசு வேண்டும் என, என் கணவருக்கு இரண்டாம் திருமணம் செய்து வைக்க துடித்தீர்களே... இப்போது, அவரிடம் தான் குறை என்பது தெளிவாகியுள்ளது; என்னிடம் குறை ஏதுமில்லை என்று உறுதியாகி விட்டது. இந்நிலையில், என்ன செய்யப் போகிறீர்கள்... எனக்கு வேறு மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்து வைக்கிறீர்களா...' என, உறவினர்களிடம் ஆவேசப்பட்டார்.
உறவினர்கள் திகைத்து, வாயைடைத்து நின்றனர்.
அப்பெண், பழம் பஞ்சாங்கமாக, மவுனமாகி இருந்தால் என்னவாகி இருக்கும்.
தற்சமயம், நிலைமை உணர்ந்து, மீண்டும் ஆலோசித்து, உறவுக்குள் ஒரு குழந்தையை தத்தெடுத்து கொள்வது என, ஒரு மனதாக முடிவெடுத்துள்ளனர்.
பெண்களே... எப்போது, எதற்கு, எப்படி நம் மவுனத்தை கலைக்க வேண்டுமோ, அப்போது பொங்கி எழுங்கள். துணிவு தான் ஆயுதம் என்பதையும், மறந்துவிடக் கூடாது.
எஸ். ராஜேந்திரன், தஞ்சாவூர்.

இப்படியும் வீட்டுப்பாடம்!
நண்பரின் குழந்தை படிக்கும் பள்ளியில், அவர்களுக்கு, 'புராஜெக்ட்' ஆக, இயற்கை விவசாயம், மழைநீர் சேகரிப்பு மாதிரி வடிவம் போன்றவற்றை, தயார் செய்து வர சொல்லியிருந்தனர்.
நண்பருக்கு, இதுபற்றி எதுவும் தெரியாததால், என்னை அணுகினார்.
எனக்கு தெரிந்த அளவில், மழைநீர் சேகரிப்பு பற்றி, 'தெர்மாகோலில்' செய்து கொடுத்தேன். ஒரு வாரத்திற்கு பின், பெற்றோர் - ஆசிரியர் சந்திப்பு நடக்க இருப்பதாக கூறி, பள்ளிக்கு சென்றார், நண்பர்.
அங்கே, பெற்றோரை வரவேற்ற பள்ளி நிர்வாகத்தினர், 'மாணவர்களுக்கு, மழை நீர் சேகரிப்பு மாதிரியை ஏன் செய்து கொடுத்தீர்கள்...' என, வினவினர்.
'மாணவர்கள், மதிப்பெண் எடுப்பதற்காக, நாங்கள் சிரத்தை எடுத்தோம்...' எனக் கூறினர், பெற்றோர்.
'மாணவர்களின் மதிப்பெண்களை மட்டும் சிந்திக்காமல், அவர்களை போன்ற வருங்கால சந்ததியினரின் நலனிற்காக, நாம் விட்டுச் செல்லும் விலை மதிக்க முடியாத ஒரே சொத்து, தண்ணீர் தான். நீராதாரத்தை நாம் தான் பேணி காக்க வேண்டும். இது, மாணவர்களுக்கான வீட்டுப்பாடம் மட்டும் இல்லை; பெற்றோருக்கான வீட்டுப்பாடம்...' என்று சொல்லி அசத்தினர்.
மாணவர்களுக்கு, தேவையற்ற வீட்டுப்பாடங்களை கொடுக்காமல், இதுபோன்ற வாழ்வியல் பாடங்களை கொடுத்தால், அதனால், பெற்றோரும் விழிப்புணர்வு பெறுவர் என்பது உண்மைதானே!
எம். விக்னேஷ், மதுரை.

Advertisement

 We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X