சர்வர் சுந்தரம் படத்தில் இடம்பெற்ற ஒரு காட்சியை, என்னால் மறக்கவே முடியாது. சர்வராக இருந்த நான், பிற்காலத்தில், மிகப்பெரிய நிலைக்கு வந்த பின், கதாநாயகி, ஆன, கே.ஆர்.விஜயாவை சந்திக்கிற காட்சி தான் அது.
நான் சர்வராக இருக்கிற சமயம், கதாநாயகி, கே.ஆர்.விஜயா, என்னை பார்த்து, 'டு பி ப்ராங்க் வித் யூ... ஐ லைக் யுவர் இன்னொசென்ஸ்...' என்று சொல்வார். நான் படிக்காத சர்வர் தானே... 'இன்னொசென்ஸ்' என்ற வார்த்தைக்கு, அர்த்தம் தெரியாமல் முழிப்பேன்.
பெரிய ஆளாக ஆன பின், மறுபடியும் சந்திக்கிறபோது, இந்த பழைய சம்பவத்தை நினைவு கூரும் வகையில் பேசுவேன்.
'ராதா... நான் சர்வராக இருந்தபோது, நீ, 'ஐ லைக் யுவர் இன்னொசென்ஸ்'ன்னு, சொன்னபோது, அதை புரிஞ்சுக்க முடியாத இந்த சுந்தரம்... இன்னிக்கு அது மாதிரி எத்தனை வார்த்தை... இல்லை...
'ஒரு வார்த்தைக்கு எத்தனை வார்த்தை, 'எவர்ஸ்டிங், அன்டையிங், அன்பெயிலிங், அன்லிமிடெட், பர்மனென்ட், சுப்ரீம்!' நான் ஒண்ணும் பெருமைக்காக சொல்லலை. ஒண்ணுமே இல்லாத சுந்தரம், இன்னிக்கு இந்த அளவுக்கு உயர்ந்திருக்கேன்னு சொன்னா, என் உயிர் நண்பன், ராகவன் தான் காரணம்...' என, படபடவென்று வசனம் பேசுவேன்.
இந்த காட்சியை நடித்து முடித்தவுடன், இயக்குனர், கே.பாலசந்தர், என்னை கட்டிப்பிடித்து, 'டேய் ராவ்ஜி... பிரமாதம்டா... எப்படிடா இவ்வளவு அற்புதமா நடிக்கிறே...' என்று பாராட்டியது, ஆயுசுக்கும் மறக்காது.
ஆனால், அந்த காட்சியில், ஒரு வார்த்தைக்கு எத்தனை வார்த்தை... 'எவர்ஸ்டிங், அன்டையிங், அன்பெயிலிங், அன்லிமிடெட், பர்மனென்ட், சுப்ரீம்' என்று சொன்னது, என் சரக்கே கிடையாது.
கடந்த, 1948ல், தாராபுரம் போர்டு ஹைஸ்கூலில், தலைமை ஆசிரியராக இருந்தவர், ராஜகோபாலன். அவர், ஆங்கில பாடம் நடத்தினால், அவ்வளவு அற்புதமாக இருக்கும். ஒருநாள், வகுப்பில் அவர் சொல்லிக் கொடுத்த, ஆங்கில கவிதை வார்த்தைகள் தான் அத்தனையும். என் மனதில் பதிந்து போன அவைகளை தான், சர்வர் சுந்தரம் படத்தில் நினைவு கூர்ந்து பேசினேன். அதுதான், இயக்குனர் பாலசந்தரின் பாராட்டை பெற்றுத் தந்தது.
ஒருநாள், பாலசந்தர், கண்ணதாசன், எம்.எஸ்.விஸ்வநாதன் மூன்று பேரும் ஒன்றாக இருந்தபோது, நான் அங்கே போனேன்.
'வா, நாகேஷ்... உனக்கு தான் ஒரு, 'டூயட்' பாட்டு எழுதிக் கொண்டிருக்கிறேன்...' என்றார், கவிஞர்.
'துாத்துக்குடி பாஷை பேசுவியே, அதற்கு ஏற்றார்போல் ஒரு பாட்டு கேட்டிருக்கிறேன்...' என்றார், பாலு.
'துாத்துக்குடியா...' என்று கேட்டு, பக்கத்தில் இருந்த, பஞ்சு அருணாசலத்திடம், 'பஞ்சு... பாட்டை எழுதிக்கோ...' என்று சொல்ல ஆரம்பித்தார், கண்ணதாசன்.
முத்துக் குளிக்க வாரீகளா, மூச்சை அடக்க வாரீகளா...
'அட... துாத்துக்குடின்னு மனுஷரிடம் சொன்ன மாத்திரத்தில், அதற்கு ஏற்றபடி பாடல் வரிகள் வந்து விழுகின்றனவே...' என்று, நாங்கள் அனைவரும் ஆச்சரியப்பட்டோம்.
அத்துடன் விடவில்லை.
எம்.எஸ்.வி.,யிடம், 'நம்ம நாகேஷுக்கு, பாட்டுல ஸ்பெஷலா ஏதாவது செய்...' என்று, கவிஞர் கூறினார். தான் போட்டிருந்த, 'டியூனை' தாலாட்டு பாணியில் சற்றே நீட்டி, போட்டுக் காட்டினார்.
ஆளான பொண்ணுக பாக்கு வெக்கும் முன்னமே... என்று, தாலாட்டு வரிகளை சேர்த்து, இன்னும் சந்தோஷத்தில் ஆழ்த்தினார்.
அனுபவி ராஜா அனுபவி படத்தில் நடித்து கொண்டிருந்த போது, கண்ணதாசனை சந்தித்தேன்.
'மெட்ராஸ் ரோடுல நடந்துகிட்டே பாடுறதா, ஒரு பாட்டு எழுத சொல்லியிருக்காங்க...' என்றார்.
'கவிஞரே... நான் தாராபுரத்துக்காரன்; மெட்ராஸ் வந்ததுலேர்ந்து, எனக்கு ஒரு பெரிய சந்தேகம்... எங்க ஊர்ல எல்லாம் கன்னு குட்டியை அவிழ்த்து, மாடுகிட்ட விடுவாங்க... அது ஓடி போய், பசு மாட்டு மடியில முட்டி முட்டி, பாலை குடிக்கும். அப்புறம் கன்னுகுட்டியை இழுத்து கட்டி விட்டு கறந்தால், மாடு, பால் சுரக்கும்.
'ஆனா, பாருங்கண்ணே... இந்த மெட்ராஸ்ல, கன்னு குட்டியோட தோலுக்குள்ளே வைக்கோலை அடைச்சு வெச்சிடறாங்க... அந்த வைக்கோல் கன்னு குட்டியை, மாடுகிட்ட எடுத்து போய், ரெண்டு நிமிஷம் காட்டறான்; மாடு பால் சுரக்க ஆரம்பிச்சிடுது... இது எப்படின்னு எனக்கு ரொம்ப ஆச்சரியமா இருக்கு...' என்றேன்.
'நீ சொல்றது கூட சுவாரசியமா தான் இருக்கு... இதைக் கூட பாட்டுல வெச்சுக்கலாம்...' என்றார்.
'ம்... பஞ்சு, எழுதிக்க...' என்று சொல்லி, மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்... என்று ஆரம்பித்து, மடமடவென்று பாடல் வரிகளை சொல்லியபடியே வந்தவர், எனக்கு இனிய ஆச்சரியத்தை கொடுத்தார்...
வைக்கோலால கன்னுக்குட்டி, மாடு எப்போ போட்டது... கக்கத்துல துாக்கி வெச்சா கத்தலயே என்னது... என்று, அவர் சொன்னபோது, எனக்கு ரொம்பவும் சந்தோஷமாக இருந்தது.
'என்ன, நாகேஷ் நல்லா இருக்கா...' என்றார், கவிஞர்.
'அண்ணே... எனக்குள்ளே இருக்குற சந்தோஷத்தை எப்படி சொல்றதுன்னே தெரியலை...' என்று சொல்லி, கை குலுக்கினேன்.
இந்த பாட்டை, கே.பாலசந்தர் எடுத்த விதம் கூட மறக்க முடியாதது. அப்போ, நான் மிகவும் பிரபலமான காமெடி நடிகன். இந்த பாடலை, 'பிசி'யான சென்னை நகர தெருக்களில் தான் படமாக்கியாக வேண்டும். நடுரோடில் எப்படி, 'ஷூட்' பண்ண போகின்றனர்... கூட்டம் சேர்ந்து விடுமே என்றெல்லாம் குழம்பிக் கொண்டிருந்தேன்.
ஒளிப்பதிவாளர், சுந்தரம் தான், அந்த பாடல் காட்சியை படம் பிடித்தார். ஒரு ஜீப்பின் பின் பகுதியில், கேமராவை பொருத்தி விட்டார்.
இயக்குனர், பாலசந்தர் என்னிடம், 'நீ எதை பற்றியும் கவலைப்பட வேண்டாம். காரில் ஏறிக்கொள், நான் சொல்கிற இடத்தில், சொல்கிற நேரத்தில் காரிலிருந்து இறங்கி விடு... உனக்கு முன், ஜீப்பில் கேமரா தயாரா இருக்கும். ஒரே ஒரு பாட்டு வரியை பாடியபடி நடி... அதை எடுத்தவுடன், மறுபடியும் காரில் ஏறிக்கொள்...' என்று அறிவுரை தந்தார்.
'பிசி' ஆன, பாரீஸ் கார்னருக்கு போய், காரிலிருந்து இறங்கி, சீட்டுக்கட்டு கணக்கா, இங்கே வீட்டை கட்டி இருக்காக... என்று பாடி நடிப்பேன். அதை படம் பிடித்தவுடன், மறுபடி காரில் ஏறி புறப்பட்டு விடுவோம்.
இப்படி, சென்னை நகரின் பல்வேறு பகுதிகளுக்கும் போய், பல்வேறு பாடல் வரிகளையும் படம் பிடித்தது, மறக்க முடியாது.
ஒருநாள் காலை, தொலைபேசி அழைப்பு வந்தது.
'நான் உங்கள் ரசிகன்...' என்றார், பேசியவர்.
'நல்லது... சொல்லுங்க...' என்றேன்.
'என் பெயர், சாஸ்திரி. சென்சார் போர்டு அதிகாரி... ' என்றார்.
'சொல்லுங்க சார்... உங்களை போன்றவர்களை, ரசிகராக பெற்றிருப்பதில் எனக்கு ரொம்ப பெருமை...' என்றேன்.
'நான் உங்களை பார்க்கணும். என் அலுவலகம், பனகல் பார்க் அருகில் தான் இருக்கு... நீங்கள், 'ஷூட்டிங்' போகிறபோது, ஒரு சில நிமிடங்கள், எனக்காக ஒதுக்கணும்... முடியும் இல்லையா...' என்றார்.
'கண்டிப்பாக...' என்று கூறி, அன்று, 'ஷூட்டிங்' போகிற வழியில், சென்சார் போர்டு அலுவலகத்துக்கு போய், சாஸ்திரியை சந்தித்தேன்.
மிக நல்ல மனிதர். திறமையான, அதே சமயம், மிகவும் கறாரான அதிகாரி. அவர் பெயரை சொன்னாலே, பல சினிமாக் காரர்களுக்கு நடுக்கம் வந்து விடும்.
என்னை அன்போடு வரவேற்று, உட்கார சொன்னார்.
'நானும் பார்க்கிறேன், 52 வாரத்துல, 45 வாரம், நீ நடிக்கிற படம் வெளியாகிறது. ஏறத்தாழ எல்லா படத்திலேயும் நடிக்கிறே... எல்லா படத்தையும், சென்சார் அதிகாரிங்கிற முறையில நானும் தவறாமல் பார்க்கிறேன்... உன் நடிப்பு, எனக்கு ரொம்ப பிடிக்கும்...' என்றார்.
எனக்கு பெருமையாக இருந்தது.
'முந்தாநாள் கூட ஒரு படம் பார்த்தேனே... பேர் கூட...' என்று இழுத்தார்.
'அன்னை இல்லம்... நல்ல காமெடி கேரக்டர்... நடிப்பு உங்களுக்கு பிடிச்சிருந்ததா சார்...' என்றேன்.
அதற்கு அவர்...
— தொடரும்.
நன்றி: கிழக்கு பதிப்பகம், சென்னை.
எஸ். சந்திரமவுலி