பா-கே
குப்பண்ணா வீட்டு மொட்டை மாடியில், ரேடியோவில் பாட்டு கேட்டபடி உட்கார்ந்திருந்தோம், நானும், அவரும். வானம் கரு மேகம் சூழ, குளிர்காற்று வீச, ரம்மியமான சூழ்நிலை நிலவியது.
சிறிது நேரத்திற்கு பின் எழுந்து, மேற்படியில் நின்றபடி, 'ரெடியாம்மா...' என்று, எதற்கோ குரல் கொடுத்தார், குப்பண்ணா.
'வர்றேன்... வர்றேன்...' என்று, அவர் மனைவியிடம் இருந்து, கடுப்பான எதிர் குரல் வரவே, அமைதியாகி, என் அருகில் வந்து அமர்ந்தார்.
திடீரென எதையோ நினைத்தவர், 'ஏம்பா மணி... அன்று ஒருநாள், ஆபீசுக்கு நான் வந்த போது, உன் நண்பர் ஒருவர், தன் மகனுக்கு வேலைக்கு ஏற்பாடு செய்ய முடியுமான்னு கேட்டாரே... அந்த பையனுக்கு வேலை கிடைச்சிடுத்தோ...' என்றார்.
'இல்லையே, ஏன்... ஏதாவது வேலை இருக்கிறதா...' என்றேன்.
'அதைப்பற்றி தான் சொல்ல வந்தேன்...' என்று ஆரம்பித்தார்:
பெரிய பெரிய தேயிலை தயாரிப்பு நிறுவனங்களில், 'டீ டேஸ்ட்டர்'ன்னு, ஒருவரை நியமிச்சிருப்பாங்க... தங்கள் நிறுவன தேயிலையில் தயாரான தேநீரை குடித்து பார்த்து, நிறை - குறைகள் சொல்வது தான், இவர்களின் வேலை. இதற்கு கணிசமான சம்பளம் கொடுக்கப்படும். அதுபோல், பிரபல ஐஸ்கிரீம் நிறுவனங்களில் தயாரிப்பவற்றை சோதித்து, முடிவு கூற வேண்டும்.
உதாரணமாக... வாசனை, வண்ணம், சுவை மற்றும் அதன் தோற்றம் எப்படி உள்ளது என்பதை சுவைத்து, கருத்து கூற வேண்டும். இந்த, 'டேஸ்டரு'க்கு, ஆண்டுக்கு, 35 லட்ச ரூபாய் வரை, சம்பளம் கிடைக்கும். ஒரே கஷ்டம், உடல் எடை அதிகரிக்கும்; உடற்பயிற்சி செய்து, எடையை குறைத்துக் கொள்ள வேண்டியது தான்.
* 'கோமாளிகளின் எண்ணிக்கை மூன்றில் ஒன்றாக குறைந்து விட்டது...' என, வருத்தத்துடன் அறிவித்துள்ளது, உலக கோமாளிகள் கழகம். கோமாளிக்கு பயிற்சியளிக்க, உலகின் சில இடங்களில் பள்ளிகள் கூட உள்ளன. இந்த தொழிலுக்கு நல்ல, 'டிமாண்ட்' உள்ளதால், ஆண்டுக்கு, 30 முதல், 50 லட்ச ரூபாய் வரை சம்பாதிக்கலாம். அடுத்தவரை, அங்க சேஷ்டையின் மூலம் மகிழ்விக்க வேண்டும் அவ்வளவே! பல கோமாளித்தனங்களை செய்யும் திறமை கொண்டவர்களுக்கு, இந்த தொழிலில், நல்ல எதிர்காலம் உள்ளது.
* தோழியருக்கு, திருமணத்தின் போது, அலங்காரம் செய்வது, மணப்பெண் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கு பயிற்சி அளிப்பது போன்றவற்றை செய்யும் திறமை படைத்தவரா... மணமகளின் தோழியாக இருக்கவும் வாய்ப்பு உள்ளது. ஒரு நாளைக்கு, 70 ஆயிரம் ரூபாய் வரை கிடைக்கும்.
* உலக விஷயம் அறிந்தவரா, பேச்சு திறமை உள்ளவரா... அடுத்தவர் மனதை அறிந்து, அவர்களுக்கு ஏற்ப கருத்துக்களை எடுத்து வைத்து, அசத்தும் திறன் படைத்தவரா... ஆறாவது அறிவு உங்களுக்கு சகஜமா... அப்படியானால், அடுத்தவர் மனதை படித்து, 'அட்வைஸ்' செய்யும் வேலை, 'ரெடி!' இந்த திறமையை வைத்து, ஆண்டுக்கு, 25 லட்ச ரூபாய் வரை சம்பாதிக்கலாம்.
* பொதுவாக, ஏரி, பெரிய குட்டைகளின் அருகில் தான், 'கோல்ப்' விளையாட்டு மைதானங்கள் இருக்கும். இந்த சூழலில், கோல்ப் வீரர்கள் அடிக்கும் பந்துகள், ஏரி, குட்டைகளில் விழும் வாய்ப்பு அதிகம். விழுந்த பந்துகளை, ஏரிக்குள், 'டைவ்' அடித்து, மீட்டு தரும் வேலை. இந்த ஏரி மற்றும் குட்டைகளில், பாம்புகள், முதலைகள் இருக்கக் கூடும்; சமாளித்துக் கொள்ள வேண்டும்.
* மிருகங்களின் உணர்வுகளை கச்சிதமாக கணித்து, அதன் பழக்க வழக்கங்கள், உணவுகள், நடைமுறை வாழ்க்கை பற்றி நன்கு அறியும் திறன் படைத்தவரா... மேலும், அது சார்ந்த வகுப்புகள், சொற்பொழிவுகள் ஆற்றுபவரா... இந்த வேலைக்கு, ஆண்டுக்கு, 50 லட்ச ரூபாய் வரை சம்பளம் கிடைக்கும்.
* குழந்தைகளை கவரும், ஐந்து ரூபாய், 10 ரூபாய் நொறுக்குத் தீனி பாக்கெட்டுகளை வாங்கினால், அதனுள் ஒரு அன்பளிப்பு வைத்திருப்பர். அது வெறும், சிறு அட்டையாக கூட இருக்கலாம். அந்த அட்டையில் குழந்தைகளை குஷிப்படுத்தும் வாசகங்கள் இருக்கும்.
அதேபோல், பிஸ்கெட் பாக்கெட்டுகளில் அதிர்ஷ்ட வார்த்தைகளை எழுத வேண்டும். இது, 'டூப்' வார்த்தைகளாக இருந்தாலும், ரசிக்கும்படி இருக்க வேண்டும். இப்படி, தினமும், குறைந்தது, 500 வார்த்தைகளையாவது எழுதும் சாமர்த்தியம் உள்ளதா... ஒரு வார்த்தைக்கு, 50 ரூபாய் வரை, பிஸ்கெட் கம்பெனிகள் தர தயார்.
* ஆர்வத்தை துாண்டி, உணவுப் பொருட்களை வாங்க வைக்கும் அளவில், புகைப்படம் எடுக்க தெரியுமா... உங்களை பல ஓட்டல்கள் பயன்படுத்திக் கொள்ள தயார். அதுமட்டுமல்ல, நாளிதழ்கள், 'டிவி' சேனல்களும் பயன்படுத்திக் கொள்ளும். பலன், ஆண்டுக்கு, 25 லட்ச ரூபாய் வரை சம்பாதிக்கலாம்.
* இன்று பலர், மனதளவில் பாதிக்கப்பட்டு, தனிமையை உணர்ந்து வாடுகின்றனர். இத்தகையவர்களை கட்டிப்பிடித்து, சமாதானம் கூறி, தேற்ற வேண்டும். இதற்கு கட்டணம், ஒரு மணி நேரத்திற்கு, 5,000 ரூபாய். 'கட்டிப்பிடி' வைத்தியம் மூலம் ஆறுதல் பெற, இவர்கள், 'ரெடி!' நீங்கள், 'ரெடி'யா...
குப்பண்ணா சொல்லி முடிக்கவும், அவர் மனைவி, தட்டு நிறைய சுடச்சுட மசால் வடையும், சொம்பில் டீயும் எடுத்து வந்து வைத்தவர், 'ஹுக்கும்... வேலைக்கு ஐடியா தர்றாராம் ஐடியா...' என்று, முகவாயை, தோளில் இடித்தவாறு, இறங்கி சென்றார்.
'இவ ஏன் மணி, என்னை கோச்சுக்கறா... இந்த பேப்பர்ல போட்டிருக்கிறதை தானே சொன்னேன்...' என்று, ஆங்கில பத்திரிகையை எடுத்து காண்பித்தார்.
நான், கருத்து ஏதும் சொல்லாமல், மசால் வடையை சாப்பிட ஆரம்பித்தேன். 'க்ளைமேட்'டுக்கு ஏற்றபடி இருந்தது.