ஆர்.பி. சுந்தரி, ஊர்க்காடு, திருச்சி: தற்கால இளைஞர்கள், நாட்டு மருத்துவத்தில், அதிக நம்பிக்கை காட்டுவது போல் தெரிகிறதே?
உண்மை தான்... நாட்டு மருந்தில், ரசாயன பொருள் ஏதும் இல்லை. ஆனால், ஆங்கில மருந்தில் பல தரப்பட்ட, ரசாயன மூலக்கூறுகள் உள்ளன. இது, பிற்காலத்தில், பல பக்க விளைவுகளை ஏற்படுத்தும். நாட்டு மருந்தில், வேர், கிளை, கொம்பு, இலை மற்றும் பூ மட்டுமே பயன்படுத்துவதால், அம்மருத்துவத்தை நம்ப ஆரம்பித்து உள்ளனர்.
ஆர். வெள்ளைச்சாமி, திண்டுக்கல்: உங்களின், 'சுகர்' அளவு என்ன?
ஒரே ஒரு, 'டீ ஸ்பூன்' அளவு தான்; அதற்கு மேல் சேர்த்தால், காபி, டீயின் சுவை கெட்டு விடும்!
ரா.சா. சந்திரசேகர், சென்னை: ஆடி மாதத்தில், புதுமண தம்பதியரை பிரித்து வைக்க வேண்டுமென்று, இந்த நுாற்றாண்டிலும் பெரியவர்கள் கூறுகின்றனரே...
இது, ஏற்றுக்கொள்ளக் கூடியது தான்! ஆடி மாதத்தில், தம்பதியர், 'இணைந்தால்' சித்திரை மாதத்தில் குழந்தை பிறக்கும். அப்போது, அம்மை போன்ற பல வியாதிகள் வரும். அதற்கேற்ற மருந்துகள், அக்காலத்தில் கிடையாது. அதனால், குழந்தைகள் இறந்துவிட வாய்ப்பு இருந்தது.
எனவே, ஆடி மாதத்தில், புதுமண தம்பதியரை பிரித்து வைக்க வேண்டும் என்ற சம்பிரதாயமே, இப்போதும் தொடர்கிறது!
* கி. ராமசந்திரன், மண்ணுார், கோவை:எத்தனை தான் படிப்பறிவு இருந்தாலும், சிலரால் வெற்றி பெற முடியவில்லையே...
முதலில், பேச்சு திறன் வேண்டும்; இரண்டாவது, கைத்திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும்! சிம்பிள் உதாரணம்: சினிமா நடிகர் வடிவேலு!
சி. கோபால், கோவை: லஞ்சம் வாங்கும், அமைச்சர்களும், அதிகாரிகளும், நீதிமன்ற தண்டனையிலிருந்து தப்பித்துக் கொள்கின்றனரே?
ஜோதிலட்சுமி ஆடாத சினிமா இல்லை என்ற நிலை, ஒரு காலத்தில் இருந்தது. லஞ்சம் ஆடாத இடம் இல்லை என்றாகி விட்டது, இன்று!
சுரங்க முறைகேடு வழக்கில், 2013 வரை, கர்நாடகாவில் ஆட்சியில் இருந்தது, பா.ஜ., அரசு. அப்போது, அதில் மந்திரியாக இருந்த, ஜனார்த்தன ரெட்டி, ஊழலில் சிக்கிக் கொண்டார். இப்போது, ஐதராபாத் சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு நடக்கிறது.
அப்போது நடந்த விசாரணையில், வழக்கை விசாரிக்கும் நீதிபதி, நாகமாருதியிடம், 40 கோடி ரூபாய், பேரம் பேசியுள்ளார்.
நீதிபதியோ, 'போடா... போ...' என்று சொல்லாத குறையாக, ஜாமின் மனுவை தள்ளுபடி செய்தார்!
நம்மூரிலும் இப்படி நடந்தால் சந்தோஷமாக இருக்கும்!
* அ. செந்தில்குமார், சூலுார், கோவை: மின்சார வாகனங்கள் பயன்பாட்டுக்கு வரும்போது, பெட்ரோல், டீசல் விலை குறைந்து விடுமல்லவா?
எங்கே... நடு ரோடில், புகை கக்கி மாசு ஏற்படுவது வேண்டுமானால் குறையலாம்!