சென்னை, நங்கநல்லுாரை சேர்ந்தவர், காத்தியாயினி பிரகாஷ். வங்கியில் மேலாளராக இருந்தார். இவரது மாமியார், சரோஜா. பாரம்பரிய முறைப்படி, துணியால் பொம்மைகள் செய்பவர். இவரிடம் இருந்து, அக்கலையைக் கற்று, தான் செய்த பொம்மைகளை தெரிந்தவர்களுக்கு கொடுத்தார், காத்தியாயினி.
இதற்கு நல்ல வரவேற்பு கிடைக்கவே, முழு நேர தொழிலாக செய்ய முடிவு செய்தார். வங்கி வேலையிலிருந்து விலகி, பொம்மைகள் தயாரித்து, விற்பனை செய்து வருகிறார்.
சுற்றுச் சூழலுக்கு கேடு தராத பொம்மைகள் மட்டுமே தயாரிப்பது என்ற கொள்கை அடிப்படையில், களிமண் மற்றும் துணியில் செய்கிறார். தன் பொம்மை தயாரிப்பு நிறுவனத்திற்கு, 'ஓலைப் பெட்டி' என்று பெயர் வைத்துள்ளார்.
துணி பொம்மைகளில், என்ன மாதிரியான உருவங்களையும் கொண்டு வரலாம்; சேதமடையாது. நீண்ட நாட்கள் பராமரிப்பது எளிது; விலையும் குறைவு.
கடந்த ஏழு ஆண்டுகளாக, முழு வீச்சில் பொம்மைகள் தயாரித்து வரும் இவர், ராமாயணம், மகாபாரதம் போன்ற இதிகாச புராணங்களில் வரக்கூடிய காட்சிகளை, தத்ரூபமாக வடிவமைப்பதில் வல்லவர்.
பிளாஸ்டிக் ஒழிப்பு, மரம் வளர்ப்பு, பாரம்பரிய விளையாட்டுகளை நினைவு படுத்துதல் போன்ற பொம்மைகளை, பள்ளிகளில் கண்காட்சியாக வைத்துள்ளார். அதேபோல், திருமணத்தின் போது நடைபெறும் சடங்குகளை வரிசையாக காட்சிப்படுத்துகிறார். இதற்கு, நல்ல வரவேற்பு உள்ளது.
தமிழகத்தில், பல கிராம மக்களுடன் தொடர்பில் இருந்து, அவர்களிடம் பனை ஓலை பொருட்களை தயார் செய்ய சொல்லி, வாங்கிக் கொள்கிறார். அசாம், நாகலாந்து போன்ற வட மாநிலங்களுக்கு சென்று, அங்கு, கிடைக்கக் கூடிய சணல் பொருட்களால் ஆன பொம்மைகளையும் வாங்கி, விற்கிறார்.
இதன் காரணமாக, நேரிடையாகவும், மறைமுகமாகவும், 50க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு, இவரால் வாழ்வாதாரம் கிடைத்து வருகிறது.
'சாய் சரித்திரா' என்ற சாய்பாபா கதை சொல்லும் பொம்மைகள் மற்றும் சென்னை, மெரினா கடற்கரை வாழ் சிறு வியாபாரிகள் பொம்மைகள், இந்த ஆண்டு பிரபலம். புதுமையானதும், தரமானதுமான இவரது பொம்மைகளுக்கு, அமெரிக்கா மற்றும் சிங்கப்பூர் நாடுகளில், நல்ல வரவேற்பு உள்ளது.
'வங்கியில் வேலை பார்த்திருந்தால், நான் மட்டுமே நன்றாக இருந்திருப்பேன். இப்போது, என்னை சுற்றியுள்ள பல குடும்பத்தினருடன் சேர்ந்து, நானும் நன்றாக இருக்கிறேன். என்னால், இத்தனை பேருக்கு வேலை கொடுக்க முடிவதை எண்ணி மகிழ்கிறேன். அதைவிட, பாரம்பரியமான நம் கலைகள் வளர, நானும் கரம் கொடுக்கிறேன் என்பதில் இன்னும் மகிழ்ச்சி...' என்று சொல்லும், காத்தியாயினிடம் பேச, தொலைபேசி எண்: 98416 95164.
எம். ராகவேந்தர்