தொலைத்து விட்ட தெய்வம்! | வாரமலர் | Varamalar | tamil weekly supplements
தொலைத்து விட்ட தெய்வம்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
Advertisement
 

பதிவு செய்த நாள்

06 அக்
2019
00:00

அலுவலகத்திலிருந்து வீடு திரும்பியிருந்த, சிவராமனிடம், அவன் மனைவி, விசாலம், காபியை நீட்டியபடியே, ''என்னங்க... உங்க பேருக்கு, 'ஸ்பீட் போஸ்ட்'ல, ஒரு தபால் வந்திருக்கு... மேஜையிலே வச்சிருக்கேன், பாருங்க,'' என்றாள்.
''தபாலா... யாருக்கு, எனக்கா,'' என்றான்.
''யாருக்கு தெரியும்... அனுப்பினவங்க முகவரி, இந்தியில எழுதியிருக்கு.''
காபி அருந்தியபடியே, தபாலை பிரித்து பார்த்தான், சிவராமன்.
உள்ளிருக்கும் தாளில், தமிழ் எழுத்துகள், 'அன்புள்ள சிவராமனுக்கு, அனேக ஆசிர்வாதங்களுடன் அம்மா எழுதிக் கொண்டது...'
படித்ததும், சட்டென நிமிர்ந்து உட்கார்ந்தான். இதயத்தில் ஏதோ ஒன்று சுருண்டு பிசைவதை போலிருந்தது. மயக்கத்தில், கண்கள் சுழல, படபடப்பாக இருந்தது.
''விசாலம்... குடிக்க கொஞ்சம் தண்ணி எடுத்து வா!''
சொம்பில் தண்ணீர் எடுத்து வந்து, மேஜையில் வைத்தவள், ''ஏங்க... இன்னிக்கு, வெள்ளிக்கிழமை... பெருமாள் கோவில்ல, சுக்ர ஹோர பூஜை இருக்கு... நான் கோவிலுக்கு போயிட்டு வர்றேன்,'' என்று, அவனது பதிலை எதிர்பாராமல் கிளம்பி விட்டாள்.
அவள் போகும் திசையை வெறித்து பார்த்து, அமைதியாய் இருந்தான், சிவராமன்.
'எந்த உறுத்தலும் இல்லாமல், இவள் மட்டும் எப்படி, வீட்டிலும், வெளியிலும் நடமாடுகிறாள்...' என, யோசித்தான்.
மீண்டும் அந்த கடிதத்தை பார்த்தான். முத்து முத்தான எழுத்துக்கள்; இது, அம்மாவின் கையெழுத்து தான். ஆனால், இது எப்படி சாத்தியம். கடிதத்தை மேலும் படிக்க விடாமல், அவனது எண்ணங்கள், நிகழ் காலத்திலிருந்து பின்னோக்கி சென்றன.
'சிவராமா... சிவராமா...' அம்மாவின் குரல்.
நிச்சலனமாய் ஓடிக்கொண்டிருந்தாள், கங்கை. மக்கள், இறங்குவதற்கும், ஏறுவதற்குமாய் வாகாய் அமைந்திருந்தன, நீள நீளமான, படித்துறை. ஆண்டாண்டு காலமாய், கங்கையின் அமுத பிரவாகத்தையும், யாத்ரீகர்களின் பாத ஸ்பரிசத்தையும், தினமும், கங்கா மாதாவிற்கான ஆரத்தியையும், அந்த ஒளிச்சுடர் பிரதிபலித்து, கங்கை நீரில் உண்டாகும் சித்திர சலனத்தையும் அனுபவித்துக் கொண்டிருக்கின்றன.
'இந்த படித்துறையில் தான், கங்கா ஆரத்தி நடக்கும். படிக்கட்டில் ஓரமா உட்கார்ந்துக்கோ... இதோ வந்துடறேன்...' என்றான்.
'டேய், சிவராமா... எங்கே போற...' மலங்க மலங்க விழித்தபடி, சிவராமனை கேட்டாள், அன்னபூரணி.
'எங்கயும் போகல... இங்கேயே இரு... நீதானே, கங்கா ஆரத்தி தரிசனம் பண்ணணும்னே... இங்கேர்ந்து பார்த்தா நல்லா தெரியும்... இந்தா உன்னோட துணி பை... இதிலே பணம், பிஸ்கெட் இருக்கு... பத்திரமா பார்த்துக்கோ... இதோ வந்துடறேன்...' என்றான், சிவராமன்.
'எங்கேழா... டேய், சிவா...' என நாக்குழற, கை நீட்டும், அன்னபூரணியின் அழைப்பை பொருட்படுத்தாமல், அங்கிருந்து நகன்றான்.
கனத்த இதயத்துடன், 'இனி, அம்மா பாடு... காசி, கங்கா பாடு...' என்று, கையை உதறியவாறு, திரும்பி பார்க்காமல் நடந்தான், சிவராமன்.
அவனுக்கு இதில் உடன்பாடு இல்லை தான். இருந்தாலும், எப்படியெப்படியோ அவன் மனதை திசை திருப்பி, இந்த முடிவிற்கு வர வைத்து விட்டனர்.
வயோதிகத்தின் காரணமாக, திடீரென, சிவராமனையே, 'ஏம்பா, நீ யாரு... எதுக்கு இந்த பொம்பளையை இங்கே கூட்டி வந்திருக்கே...' என்று விசாலத்தை காட்டி, கேட்டாள்.
ஒருநாள், வாசலில் வந்த பிச்சைக்காரனுக்கு, சிவராமனின் சம்பள கவர் முழுவதுமாக போட்டு விட்டாள். பிச்சைக்காரனும் கிடைத்த வரை லாபமென ஓடி விட்டான்.
அன்னபூரணியிடம் கேட்டதற்கு, 'நானா... சாதந்தானே போட்டேன்... ஏன், என்னாச்சு... ஆமா, நீ யாரு... சிவராமனா, இல்லியே...' என, கேள்வி கேட்டாள்.
ஒருமுறை, விசாலம் உறவு முறையினர் வந்திருந்தபோது, ஹாலில், மேலாடையை அவிழ்த்தபடி நிற்க, உறவுகள் முகம் சுளித்தன.
'மாப்ளே... காலா காலத்திலே, இதுக்கு ஒரு வழி பண்ணுங்க...' என, எச்சரித்தபடி விடைபெற்றனர்.
வேறு வழியின்றி, மருத்துவரை நாடினான், சிவராமன்.
'இது, வயோதிகத்துல வர்ற வியாதி, மறதி... மூளையின் சில அடுக்குகள் சரிவர இயங்காம, என்ன செய்றோம்கறதே தெரியாம பண்ணிடும்... 'செலக்டிவ் அம்னீசியா'ன்னு சொல்வாங்க... உங்கம்மாவுக்கு கொஞ்சம் முத்திப்போச்சு... இதுக்கு, மருத்துவத்துல கொடுக்கற சிகிச்சையை விட, உங்களின் அன்பான ஆதரவு தான் தேவை...' அறிவுரையுடன், சில மருந்தும் எழுதி தந்தார், மருத்துவர்.
ஆனால், குணமாகவில்லை. ஒருநாள், பூஜையறையை, கழிப்பிடமாக்கி இருந்தாள், அன்னபூரணி.
'ஏங்க... இந்த அநியாயத்தை பார்த்தீங்களா... இனி, இந்த சனியனை, வீட்டிலே வச்சிருக்க முடியாது... எங்கேயாவது அழைத்து போய் விட்டுட்டு, இல்லே தொலைச்சுட்டு வந்திருங்க... உங்களுக்கு புண்ணியமா போகும்...' என்றாள், விசாலம்.
அன்னபூரணியின் அலங்கோலத்தை காண சகிக்காமல், முகத்தை திருப்பியவன், சனியன் என்ற வார்த்தை பிரயோகத்தால், கோபத்துடன் அடிக்க கை ஓங்கியவன், தாழ்த்திக் கொண்டான்.
முதியோர் இல்லத்தில் சேர்க்க முயற்சித்தான். அன்னபூரணியின் நிலை கேட்டு, யாரும் சேர்த்துக் கொள்ளவில்லை.
அப்போது, யாரோ ஒரு பிரகஸ்பதி, 'சிவராமா... இந்த மாதிரி உள்ளவங்களை எல்லாம், கண்காணா இடத்திலே அழைத்து போய் விட்ரணும்... பேசாம, காசியிலே விட்டுட்டு வந்துடேன்... போற வேளைக்கு புண்ணியமாவும், அங்கே உயிர் போனா, முக்தியுமாச்சு...' என, கருத்து சொல்ல, விசாலமும் பிடிவாதம் பிடித்தாள்.
இந்த யோசனை, சிவராமனை ஆட்டிப் படைக்க, விசாலமும் வற்புறுத்த, அரை மனதோடு, அம்மாவை காசிக்கு கூட்டி வந்து விட்டான்.
'கங்கை கரையில் அழைத்து வந்து விட்டாச்சு... இனி, அவள் பாடு... காசி, விஸ்வநாதர் பாடு...' என்று, ஊமை அழுகையுடன், ஊர் திரும்ப, ரயில் ஏறினான்.
ரயிலில், எதிர் இருக்கையில் அமர்ந்திருந்த ஒருவர், இவனிடம், 'காசிக்கு போனீங்க, சரி... கயாவுக்கு போய், பித்ருக்களுக்கு, பிண்டம் இட்டு வந்தீங்களா?' என்றார்.
அனிச்சையாக தலையாட்டி மறுத்தான், சிவராமன்.
'மாத்ரு சோடஸி மந்திரத்தை, அதனோட அர்த்தத்தோட சொல்லி, மாதாவுக்கு சேர வேண்டிய, 16 பிண்டங்களை இடச்சொல்றா பாருங்கோ... கேக்கறவா அத்தினி பேரோட கண்லேயும் கண்ணீர்... சில பேர் அழவே செஞ்சிட்டா...
'கருவா உருவானதிலேர்ந்து, அம்மாவோட வயித்துல இருக்கும்போது, நம்மால அவ படற கஷ்டத்தையெல்லாம் ஒவ்வொரு ஸ்லோகமா... இப்படி, 16 ஸ்லோகம் சொல்லி, பிண்டம் இடச் சொல்லும் போது, என்னாலயே கட்டுப்படுத்திக்க முடியலே... அழுதுட்டேன்... ஆமா... காசிக்கு போனா, பிரியமான ஏதாவது ஒண்ண விட்டுட்டு வரணுமே... நீங்க எதை விட்டீங்க?' என்று கேட்டார், எதிர் இருக்கையில் அமர்ந்திருந்தவர்.
அதற்கு மேல், சிவராமனால், தாங்க முடியவில்லை. ஓவென அழ ஆரம்பித்தான். சுற்றிலும் இருந்த பயணிகள் திகைப்புடன் பார்த்தனர்.
'விலை மதிக்க முடியாத தாயை அல்லவா விட்டுட்டு வந்திருக்கிறேன்... என்னைப் போல, பாவி யார் இருப்பார்?' உள்ளுக்குள்ளேயே அழுத, சிவராமன், அடுத்து வரும் நிறுத்தத்தில் இறங்கி, காசி திரும்பினான்.
காலை முதல் இரவு வரை எங்கெங்கோ தேடி பார்த்தும், தொலைத்து விட்ட தெய்வத்தை காண முடியவில்லை. வேறு வழியின்றி, இயலாமையை நொந்தபடி ஊர் திரும்பினான், சிவராமன்.
காசிக்கு சென்று வருவோரிடமெல்லாம் கேட்டான். ஒன்றும் பயனில்லை. ஆயிற்று... ஒரு ஆண்டு கடந்தும், அம்மா பற்றி, எந்த தகவலும் கிடைக்கவில்லை.
இதோ... இன்று தான், கடிதம் வந்துள்ளது. அதுவும், அம்மாவின் அனேக ஆசிர்வாதங்களுடன். கண்களை துடைத்து, மீண்டும் கடிதத்தை படித்தான், சிவராமன்...
'அன்புள்ள, சிவராமனுக்கு... அனேக ஆசிர்வாதங்களுடன், அம்மா எழுதிக் கொண்டது. மகனே... உனக்கு ரொம்ப கஷ்டத்தை கொடுத்துட்டேன்... நல்லவேளை, வேற எங்கேயும் அழைத்து போய் விடாம, காசியிலேயே விட்டியே... உனக்கு புண்ணியம் தான்... அன்னிக்கு அந்த படித்துறையில விட்டுட்டு போன நீ, வருவே வருவேன்னு உட்கார்ந்திருந்தேன்...
'ஒரு பண்டிட் தான், 'அய்யோ... ராத்திரியாச்சே, கிழவி தனியா இருக்காளே'ன்னு, ரொட்டியும், டீயும் வாங்கி கொடுத்து, டீக்கடைகாரரிடம் என்னமோ சொன்னார்... அவன் தான், என் நிலையை பார்த்து, தன் வீட்டுக்கு அழைத்து போய், திண்ணையிலே தங்க இடம் கொடுத்தான்...
'தினம், கங்கா ஜலத்திலே குளிச்சு வந்தேனா... உடம்புக்கு வந்த வியாதியெல்லாம் பறந்து போச்சுன்னு நினைக்கிறேண்டா... சரி, ஏன் சும்மா இருக்கணும்ன்னு, டீக்கடைக்காரன்ட்டயே, ஜாடையா சொல்லி, அவன் கடையிலேயே இட்லி, தோசை போட அனுமதி வாங்கினேன்...
'நம் ஊரு சாம்பாரு மணம், அங்கே இருக்கறவங்களுக்கு ரொம்ப பிடிச்சு போச்சு... இட்லி, தோசை, சாம்பார்ன்னு கேட்டு, தினம் கூட்டம் கூடிருச்சா... டீக்கடைகாரன், மணிலாலுக்கு நல்ல வியாபாரம்; சந்தோஷமும் தான்... பெத்த தாயை விட, ஒரு படி மேலே, என்னை பார்த்துக்கறான்னா பாரேன்... தினம், என் காலை தொட்டு கும்பிடாம, எந்த வேலையும் பார்க்கறதில்லே...
'இந்த கடிதத்தோடு, 50 ஆயிரம் ரூபாய்க்கு, டி.டி., எடுத்து அனுப்பியிருக்கேன்... செலவுக்கு வச்சுக்கோ... ஒண்ணு சொல்ல விட்டுட்டேன்... மறுபடியும், நீ தேடி வந்துடாதே... நான் தொலைஞ்சவ... தொலைஞ்சவளாவே இருக்கேன்... அப்படியே விட்டுடு... படித்துறையில விட்டுட்டு போன மறுநாளே, நீ, என்னை தேடி வந்தத பார்த்தேன்... உனக்கு எதுக்கு வீண் சிரமம்ன்னு தான், உன் கண்ணுல படாம இருந்தேன்...
'ஆமா... சிவராமா, எனக்கு இங்கேயே இருக்க பிடிச்சிருச்சு... என்னை நல்லா பார்த்துக்கறான், மணிலால்... காசியிலே இறந்தா, முக்திம்பாங்க... எனக்கு, முக்தி கிடைக்க, ஒரு நல்ல காரியம் பண்ணிட்டே... விசாலத்தையும், பேரப் பிள்ளையையும் விசாரிச்சேன்னு சொல்லு... என்னிக்கும் உன்னோட அன்பு அம்மா, அன்னபூரணி...' என்று எழுதியிருந்தது.
'அம்மா... அம்மா...' என்று தலையிலடித்து, அழ ஆரம்பித்தான், சிவராமன்.
கோவிலிலிருந்து திரும்பிய விசாலம், கணவனின் செய்கையை கண்டு, செய்வதறியாது திகைத்து நின்றாள்.

டி. எச். லோகாவதி
வயது: 61,
படிப்பு: பி.காம்., கவிதை எழுதுவதில் ஆர்வமுள்ளவர். கணவர் கொடுத்த ஊக்கம் காரணமாக, முதன் முறையாக சிறுகதை எழுதியுள்ளார். அச்சிறுகதைக்கு, இரண்டாவது பரிசு கிடைத்திருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
சிறு அளவில் பதிப்பகம் துவங்கி, ஆன்மிக நுால்கள் வெளியிட வேண்டும் என்பது, இவரது விருப்பம்.

Advertisement

 We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X