'டெரர்' ஆகும், சந்தானம்!
கதாநாயகன் ஆன பின், சில படங்களில் காமெடி கலந்து, 'ரொமான்ஸ்' செய்த, சந்தானம், இப்போது, 'ஆக் ஷனு'க்கு மாறி விட்டார். இதனால், விஜய், அஜித் போன்ற முன்வரிசை நடிகர்களை போன்று, தன் படங்களிலும், யோகிபாபு போன்ற காமெடியன்களை நடிக்க வைத்து வருகிறார். அதோடு, காமெடியன் என்ற முத்திரை, முற்றிலுமாக தன்னை விட்டுப் போக நினைக்கும், சந்தானம், அடுத்தபடியாக, 'டெரர் ஹீரோ' ஆகவும் தன்னை வெளிப்படுத்த முயற்சிக்கிறார்.
சினிமா பொன்னையா
ஆர்யாவுக்கு வந்த திடீர் பொறுப்பு!
சினிமா படப்பிடிப்புகளில் நடிகைகளை கலாய்ப்பதையே முக்கிய வேலையாக கொண்டிருந்தார், ஆர்யா. நடிகை, சாயிஷாவை திருமணம் செய்து கொண்ட பின், அடக்க ஒடுக்கமான நடிகராகி விட்டார். அதோடு, இதுவரை ஜாலியான கதைகளாக நடித்து வந்துள்ள அவர், திருமணத்திற்கு பின், சமூக பொறுப்புள்ள கதைகளில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார். 'ஆர்யாவா இது...' என்று, இயக்குனர்கள் மேலும் கீழும் பார்த்தால், 'திருமணத்திற்கு பின், குடும்ப பொறுப்பு வந்து விட்டதை அடுத்து, சினிமா மீதும், பொறுப்பு வந்து விட்டது...' என்று கூறி, அவர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்துகிறார்.
— சி.பொ.,
சமூகத்தை சாடும், ஸ்ரத்தா ஸ்ரீநாத்!
'திருமணமாகி விட்டால் பெண்கள், பிள்ளை பெறும் ஒரு, 'மிஷின்' ஆகவே, இந்த சமூகம் நினைக்கிறது...' என்று சாடுகிறார், நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்த, ஸ்ரத்தா ஸ்ரீநாத். மேலும், 'என் தாத்தா, 15 பிள்ளைகளை பெற்றுக் கொண்டார். ஆனால், என் அம்மா, இரண்டு பிள்ளைகளைத் தான் பெற்றார். நானோ, திருமணம் செய்து கொண்டாலும், பிள்ளை பெற்றுக் கொள்ள மாட்டேன். அதற்காக, இந்த சமூகம் என்னை குறையுள்ள பெண்ணாக பார்க்கக் கூடாது. எப்படி வாழ வேண்டும் என்பதை, நான் தான் முடிவு செய்ய வேண்டும். அது என் சுதந்திரம்...' என்கிறார். அதிசயம் அடி அம்மங்காரே, அம்மி புரண்டு ஓடுகிறது!
— எலீசா
வரலட்சுமியின் பிரசாரம்!
சினிமா நடிகைகள் மட்டுமின்றி, மற்ற பெண்கள் யாரேனும், பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டால், அதற்கு எதிராக, முதல் நபராக குரல் கொடுத்து வருகிறார், நடிகை வரலட்சுமி. இந்நிலையில், தற்போது, தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரமான, காவிரி நதிக்கு புத்துயிர் ஊட்டி, அவர்களின் வாழ்க்கையை மேம்படுத்து வகையில், 'ஈஷா அறக்கட்டளை'யுடன் இணைந்து, 'காவிரி கூக்குரல்' என்ற பிரசாரத்தை துவங்கியிருக்கிறார். 'விரைவில், இந்த பிரசாரத்தை, தமிழக விவசாயிகள் மத்தியில் நடத்தப் போகிறேன்...' என்கிறார், வரலட்சுமி.
— எலீசா
கறுப்புப்பூனை!
* அங்காடித்தெரு நடிகைக்கு, 'செகண்ட் இன்னிங்சில்' பெரிதாக படங்கள் வெற்றி பெறாததால், மார்க்கெட்டில் பின்தங்கி இருக்கிறார். தன் திறமை மீண்டும் ஜொலிக்க வேண்டுமென்றால், இயக்குனர்களின் கைவண்ணம் முக்கியம் என்பதால், அவர்களின் கைப்பாவையாகி விட்டார், நடிகை. அந்த இயக்குனர்களிடம், தன்னை கதையின் நாயகியாக ஆக்கினால், தான் தெறமை காட்ட தரப்படும் கூலியில்,
50 சதவீதம் கமிஷனாக வெட்டுவதாகவும், ஒப்பந்தம் போட்டுள்ளார்.
மீன் விற்கும் இரு தோழியர்:
'அஞ்சலி அக்கா... இது, புரட்டாசி மாசம்... மீன் வாங்குறவங்க குறைஞ்சுட்டாங்க, நீ அந்த தெருவுக்கு போய், மீன் விக்க ஆரம்பி... நான் மேலத் தெருவுக்கு போறேன். உனக்கு வியாபாரம் ஆகாம, எனக்கு ஆச்சுன்னா, வரவுல உனக்கு பாதி பங்கு தரேன்...
எனக்கு வியாபாரம் ஆகாம, உனக்கு ஆச்சுன்னா, நீ எனக்கு, பாதி பங்கு கொடுத்துடு... இப்படி சமாளிச்சா தான் பொழப்பு ஓடும்...' என்றாள், தோழி.
சினி துளிகள்!
* 'ஹீரோ'க்களின் நிழலில் நின்று, கவர்ச்சி காட்டி காலம் தள்ளாமல், என் தனித்திறமையை வெளிப்படுத்தி, ரசிகர்களை வென்று காட்டவே ஆசைப்படுகிறேன்...
— சாய் பல்லவி
* எனக்கு லட்சங்கள், கோடிகளை விட, நல்ல கதாபாத்திரங்களில் நடித்து, சினிமாவில் நீடிக்க வேண்டும் என்பதே லட்சியம். அதனால் தான், பணத்திற்காக அலையாமல், நல்ல வேடங்களுக்காக அலைகிறேன்...
— காஜல்அகர்வால்
* நாடோடிகள் - 2 படத்தில், செங்கொடி என்ற கேரக்டரில் நடித்துள்ளார், அஞ்சலி.
அவ்ளோதான்!