அன்புடன் அந்தரங்கம்! | வாரமலர் | Varamalar | tamil weekly supplements
அன்புடன் அந்தரங்கம்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 

பதிவு செய்த நாள்

06 அக்
2019
00:00

அன்புள்ள அம்மாவுக்கு —
நான், 30 வயது பெண். திருமணமாகி, விவாகரத்தான எனக்கு, ஐந்து வயதில், ஒரு மகன் இருக்கிறான். பட்ட மேற்படிப்பு படித்துள்ளேன். தாய் இறந்து விட்டார்; தந்தை மட்டும் உள்ளார். அவரது அரவணைப்பில் தான் நானும், மகனும் இருக்கிறோம்.
என்னுடையது, காதல் திருமணம். வேலைக்கு சென்ற அலுவலகத்தில் அங்கு பணிபுரிந்தவரை விரும்பினேன். அவரும் தான். எங்கள் திருமணத்திற்கு, அவரது உறவினர்கள் யாரும் சம்மதிக்காத நிலையில், அவரின் அம்மா மட்டும் ஆதரவாக இருந்து, திருமணத்தை சிறப்பாக நடத்தினார்.
ஆனால், அதன்பின் நிலைமைமாறியது. வீட்டில், தான் வைத்தது தான் சட்டம் என்று நடக்க ஆரம்பித்தார், மாமியார். அவரது எல்லா ஆணைகளையும் ஏற்க முடியாமல், எங்களுக்குள் உரசல் ஆரம்பித்தது.
எங்கள் இருவருக்கும் இடையில் மாட்டி தத்தளித்தார், கணவர். அவருக்காகவாவது பொறுமையாக இருக்கலாம் என நினைத்தால், மாமியாரின் அராஜக செயல்பாடுகள், என் சுய மரியாதையை காயப்படுத்தின.
விவாகரத்து பெறும் நிலை வந்தபோது, நான் கர்ப்பமானேன். இருப்பினும், இச்சூழ்நிலையில் இங்கு இருந்தால், பிறக்கும் குழந்தைக்கு பாதிப்பு வரலாம் என, பிடிவாதமாக விவாகரத்து பெற்று, தந்தை வீட்டுக்கே வந்து விட்டேன்.
இப்போது, மகனுக்கு, ஐந்து வயதாகிறது. தந்தை என்ற முறையில், மகனுக்கு வேண்டிய அனைத்தும் செய்து வருகிறார், கணவர்; நாங்களும், நட்பாகவே பழகுகிறோம்.
தற்சமயம் நான், வேறொரு அலுவலகத்தில் பணிபுரிகிறேன்.
அவசரப்பட்டு விவாகரத்து முடிவு எடுத்து விட்டோமோ என்று, இப்போது தோன்றுகிறது. வயதும், அனுபவமும் என்னை மாற்றி உள்ளதா என்று தெரியவில்லை.
இன்று வரை, என் தந்தை, 100 சதவீதம் ஆதரவாக இருக்கிறார். கணவரும், என் மீது அன்பும், அக்கறையுடனும் தான் இருக்கிறார். மீண்டும் அவருடன் சேர்ந்து வாழ ஆசை இருந்தாலும், மாமியாரின் பேச்சுக்கு பயப்பட வேண்டியுள்ளது.
மன உளைச்சலில் தவித்து வரும் எனக்கு, ஆலோசனை கூறுங்கள் அம்மா.
இப்படிக்கு,
உங்கள் மகள்.


அன்பு மகளுக்கு —
வாழ்க்கையில் ஒரு முடிவு எடுக்கும் முன், சாத்தியக்கூறு விதிகளை மனதில் யோசிக்க வேண்டும். பொதுவாக, ஒரு நாணயத்தை, 10 முறை சுண்டி பார்த்தால், ஐந்து தடவை தலையும், ஐந்து தடவை பூவும் விழும். 10க்கு 10 பூவோ, தலையோ விழுந்தால், அது இயற்கைக்கு முரண். குறிப்பாக, நாம் சுண்டி விடும் நாணயம், 10ல் எத்தனை தடவை பூ விழும் என்பதை, அவதானிக்க வேண்டும்.
நீ காதலித்து மணந்தது, உன் கணவரை தான், மாமியாரை அல்ல. விவாகரத்துக்கு முன் நல்ல கணவராகவும், விவாகரத்துக்கு பின், நல்ல தந்தையாகவும் நடந்துள்ளார். உனக்கு சிறப்பான தாம்பத்யம் கிடைத்திருந்திருக்கிறது.
இருந்தும், கொசுவுக்கு பயந்து கோட்டையை விட்டு போன கதையாய், மாமியாரின் அராஜகங்களுக்காக, காதல் கணவனை விவாகரத்து செய்திருக்கிறாய். வீட்டுக்குள் உறவுகளை அனுசரிக்க தெரியாத நீ, பொது வெளியில் மனிதர்களையும், பணிபுரியும் அலுவலகத்தில் முதலாளியையும், சக ஊழியர்களையும் எப்படி அனுசரிப்பாய்?
உன் மாமியாருக்கு, இப்போது வயது, 60க்கு மேல் இருக்கும். இன்னும் எத்தனை ஆண்டுகள் உயிரோடு இருந்து துன்புறுத்துவார்... உன்னை ஆதரிக்கும் தந்தைக்கு, இப்போது அதே வயது தான் இருக்கும். இன்னும் எத்தனை ஆண்டுகள் உயிருடன் இருந்து, உன்னை ஆதரிப்பார்... சகிப்புத்தன்மையும், பொறுமையும், மதியூகமும் இல்லாவிட்டால், வாழ்க்கை வெற்றிகரமாக அமையாது மகளே...
முன்னாள் கணவருக்கும், உனக்கும் இடையே ஆன ஐந்து ஆண்டு பிரிவு, பற்பல பாடங்களை உனக்கு சொல்லித் தந்திருக்கும்.
உடல் தேவை பூர்த்தியாகாத தனிமை, முன்னாள் கணவருடன் நட்பு பாராட்டுவதால் ஏற்படும் ரகசிய அன்னியோன்யம், மாமியாரை அடக்க, புதிய ஜல்லிக்கட்டு வித்தைகள் கற்றல் மற்றும் மகனின் எதிர்காலம் பற்றிய பயம், உன்னை புரட்டி போட்டிருக்கிறது.
நீயும், உன் முன்னாள் கணவரும் இணைவது காலத்தின் கட்டாயம். உனக்கும், மாமியாருக்கும் இடையே ஆன மோதலில், உன் பக்கம் தப்பிருந்தால், திருத்திக்கொள்.
இரண்டாவது, 'இன்னிங்சில் செஞ்சுரி' அடிக்க வாழ்த்துக்கள்.
- என்றென்றும் தாய்மையுடன்
சகுந்தலா கோபிநாத்

Advertisement

 We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X