கடந்த, 40 ஆண்டுகளாக, தரத்தையே தாரக மந்திரமாக வைத்து, உணவக தொழிலில் அசத்தி வருபவர், 'ஹாட் பிரட்' மகாதேவன்.
இந்தியாவில் மட்டும், 37 கிளைகள், வெளிநாட்டில், 20 கிளைகள் உள்ளன. இதனால், 1,400 பேர் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர்.
சென்னை நுங்கம்பாக்கத்தில், இவரின், ஆறாவது கிளையான, 'ரைட்டர்ஸ் கபே' எனும் உணவகம் உள்ளது. படித்துக் கொண்டே காபி குடிக்கலாம், 'பர்கர்' சுவைக்கலாம், 'பிட்சா' சாப்பிடலாம், விதவிதமான, 'கேக்'குகளை ருசிக்கலாம்; இத்துடன், பாரம்பரிய செட்டிநாட்டு சைவ மற்றும் அசைவ உணவுகளையும் சாப்பிடலாம்.
சென்னை, கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவ மனையில், 'பேக்கரி' தொழில் துவங்குவது தொடர்பாக, மகாதேவன் அங்கு சென்றார்.
அப்போது, தீக்காய சிகிச்சை பிரிவில், தீக்காயம், ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட அபலைப் பெண்கள் மற்றும் மற்றவர்களுக்கு தீங்கு செய்யாத, உள்ளம் உடைய, மனநலம் பாதித்த ஆண்களையும் பார்த்துள்ளார்.
இவர்களுக்கு தேவை, பரிதாபம் அல்ல; கவுரவமாக பிழைக்க, ஒரு வழி. இந்த சமுதாயத்தில் அவர்கள் வாழ, ஒரு வழி ஏற்படுத்தி தர, விரும்பினார். அப்படி துவக்கப்பட்டது தான், 'ரைட்டர்ஸ் கபே!'
ஓட்டலில், 'வாடிக்கையாளர்களே... நீங்களும், நானும், சக உயிர்களிடம் அன்பு செலுத்தி, ஆதரவு தராவிட்டால், வேறு யார் இதை செய்வர். ஆகவே, சின்ன சின்ன தவறை பொருட்படுத்தாதீர்; இவர்களிடம் வித்தியாசம் பார்க்க வேண்டாம். இவர்களும் நம்மவர்களே...' என்று, அறிவிப்பு பலகை வைத்துள்ளார்.
மாற்றுத்திறனாளிகளான பலருக்கு, நாம் மறைமுகமாக உதவுகிறோம் என்று எண்ணுவதால், பாரம்பரியமான, சுவையான உணவு வகைகளை ருசிக்க, 'ரைட்டர்ஸ் கபே'க்கு நிறைய பேர் வருகின்றனர். 'கிச்சன், சர்வீஸ்' மற்றும் 'பேக்கிங்' என, அவர்கள் சுறுசுறுப்பாக செயல்பட்டுக் கொண்டு இருந்தனர். அனைவருக்கும் நல்ல சம்பளம் வழங்கப் படுகிறது.
'கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனை வளாகத்தினுள், உணவகம் நடத்த எல்லா ஏற்பாடுகளும் செய்து விட்டேன். அரசின் அனுமதிக்காக காத்திருக்கிறேன். அனுமதி கிடைத்ததும், இங்கே சிலருக்கு வேலை தந்தது போல், அங்கேயும், பலருக்கு வேலை தர முடியும்...' என்கிறார், மகாதேவன்.
இவரின் இந்த மனித நேயத்திற்கு, அரசு, உடனே அனுமதி கொடுக்கும் என்று நம்புவோம்.
'ரைட்டர்ஸ் கபே' பற்றிய கூடுதல் தகவலுக்கு, தொடர்பு கொள்ள வேண்டிய எண்: சாரதா - 98402 96567.
எல். முருகராஜ்