'சந்தோஷத்திலேயே மிகப்பெரிய சந்தோஷம், மற்றவர்களை சந்தோஷப்படுத்தி பார்ப்பது...' என, பெரியோர் கூறுவர். இதற்கு சரியான உதாரணமாக திகழ்பவர், 'தினமலர்' ஆசிரியர்.
'தினமலர்' நாளிதழில் பணியாற்றும் நுாற்றுக்கணக்கான ஊழியர்களின் சந்தோஷத்தில் தான், அவரது சந்தோஷம் அடங்கியுள்ளது என, இங்கு பணிபுரிபவர்கள் அனைவருக்கும் தெரிந்த விஷயம். இதற்கு, நானும் விதிவிலக்கல்ல.
ஒரு நாள், மாலை வேளை... அலுவலகத்தில், பரபரப்பாக பணியில் ஈடுபட்டிருந்தபோது, ஆசிரியர் என்னை அழைப்பதாக தகவல் வந்தது. அவ்வப்போது அழைத்து, செய்திகளை வடிவமைப்பது குறித்து சில கருத்துக்களை தெரிவிப்பது, அவர் வழக்கம். அதை எதிர்பார்த்து, அவர் அறைக்கு சென்றேன்.
நிமிர்ந்து பார்த்து, தன், 'டிரேட் மார்க்' புன்னகையை உதிர்த்தார். அவரது கையில் ஒரு கடிதம் இருந்தது. கடிதத்தையும், என்னையும் பார்த்து, 'எஸ்தோனியா, லாட்வியா, லிதுவேனியா நாடுகள் எங்கு உள்ளன என தெரியுமா?' எனக் கேட்டார்.
இதுவரை கேள்விப்பட்டிராத நாடுகளாக இருந்ததால், சற்று குழம்பி, 'ஆப்பிரிக்க நாடுகளாக இருக்கலாம் பாஸ்...' என, தயக்கத்துடன் கூறினேன். பலமாக சிரித்த அவர், 'உறுதி செய்து சொல்லுங்கள்...' என, அனுப்பி வைத்தார்.
இருக்கைக்கு வந்து, 'கூகுள்' உதவியுடன், தகவல்களை தேடினேன். இந்த நாடுகள் எல்லாம், ஐரோப்பா கண்டத்தில், பால்டிக் கடல் பகுதியில் உள்ள நாடுகள் என்பதும், ஒரு காலத்தில் சோவியத் ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் இருந்தவை என்பதும் தெரிந்தது.
மீண்டும், ஆசிரியர் அறைக்கு சென்று, இந்த தகவல்களை தெரிவித்தேன்.
'இது தான், சரியான தகவல். இந்த நாடுகளுக்கு, நம் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, ஐந்து நாட்கள் அரசு ரீதியிலான பயணம் மேற்கொள்கிறார். அவருடன் செல்லும் பத்திரிகையாளர் குழுவில், நம் நாளிதழ் சார்பில், நீங்கள் செல்லப் போகிறீர்கள்; சந்தோஷம் தானே...' எனக் கூறி, என்னை பார்த்தார்.
எனக்கு வார்த்தைகள் வரவில்லை. முதல் வெளிநாட்டு பயணம் என்பதால், மனதுக்குள், உற்சாகம், ஊஞ்சல் கட்டி ஆடியது. ஆனாலும், 'இதுவரை வெளிநாடுகளுக்கு சென்றதே இல்லை. அவ்வளவு துாரம் தனியாக செல்ல முடியுமா?' என, சற்று குழம்பியபடி நின்றேன்.
எதிரே இருப்பவரின் முகத்தை பார்த்தே, அவர்களின் மனநிலையை துல்லியமாக அறியக் கூடிய திறன் பெற்றவர், ஆசிரியர். என் குழப்பத்தையும், தயக்கத்தையும் நொடியில் உணர்ந்த அவர், இருக்கையிலிருந்து எழுந்தார்.
அவரது புத்தக அலமாரியில், சில புகைப்படங்களும் உள்ளன. அதில், முன்னாள் பிரதமர் ராஜிவ் உடன், விமான பயணத்தில் எடுத்த, கறுப்பு - வெள்ளை புகைப்படம் ஒன்றும் இருந்தது.
பல தலைவர்களுடன், பல நாடுகளுக்கு பயணம் செய்த அனுபவம் மிக்கவர், ஆசிரியர். ஓரிரு முறை, சில தலைவர்களுடனான வெளிநாட்டு அனுபவத்தை, ஊழியர்களிடம் பகிர்ந்து கொண்டதும் உண்டு. ராஜிவ் படத்தை சுட்டிக்காட்டி, அவருடன் வெளிநாட்டுக்கு பயணம் செய்த அனுபவத்தை சுவையாகவும், சுருக்கமாகவும், சுவாரஸ்யமாக எடுத்துக் கூறினார்.
'மூத்த தலைவர்களுடன் செல்வதால் குழப்பம் வேண்டாம்; அது, சிறந்த அனுபவம் தரும். அனுபவமே சிறந்த ஆசான்; சந்தோஷமா போயிட்டு வாங்க...' என கூறினார்.
என் முகம் மலர்ந்ததையும், குழப்பம் நீங்கியதையும் உணர்ந்தார்.
'இங்கு பயன்படுத்தும், 'மொபைல் சார்ஜர்'களை, ஐரோப்பிய நாடுகளில் பயன்படுத்த முடியாது; வேறு, 'சார்ஜர்' வாங்கிக்குங்க. தேவையான, 'யூரோ' கரன்சிகளை கேட்டு வாங்கிக்குங்க. அங்கு என்ன மாதிரியான, 'கிளைமேட்' நிலவுகிறது என்பதை தெரிந்து, அதற்கு ஏற்றாற்போல் உடைகளை வாங்கிச் செல்லுங்கள்...' என, குழந்தைக்கு சொல்வது போல, அன்புடன் பல, 'டிப்ஸ்'களை கொடுத்தார்.
நன்றி கூறி திரும்பினேன்.
அறையில் இருந்து வெளியில் வந்ததும், அடுத்தடுத்து காரியங்கள் துரிதமாக நடந்தன. விசா, பயணச்செலவு போன்றவற்றுக்கான ஏற்பாடுகள் சுறுசுறுப்பாக நடந்தன.
டில்லி சென்று, அங்கிருந்து துணை ஜனாதிபதி உடன் செல்லும் குழுவினருடன் இணைந்து, பயணத்தை துவக்க வேண்டும். வழக்கமாக வெளிநாடு செல்வது போல இல்லை; துணை ஜனாதிபதிக்கு சிறப்பு விமானம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
துணை ஜனாதிபதி அலுவலக அதிகாரிகள், வெளியுறவுத்துறை அதிகாரிகள் என, 'கோட் சூட்'டில் கம்பீரமாக பலர் இருக்க, அவர்களுடன் நானும் இணைந்தேன்.
டில்லியிலிருந்து, புறப்பட்ட
தனி விமானத்தில், எட்டு மணி நேரம் பயணித்து, பால்டிக் நாடுகளில் கால் பதித்தேன்.
துணை ஜனாதிபதியின் பயணம், முழுக்க முழுக்க அரசு ரீதியிலானது என்பதால், அங்கு, சுற்றிப் பார்ப்பதற்கோ, 'ஷாப்பிங்' செய்வதற்கோ, நேரம் கிடைக்கவில்லை. ஆனாலும், அந்த மூன்று நாடுகளிலும், அதிகமான தமிழ் முகங்களை பார்க்க முடிந்தது.
அனைவருமே, அங்குள்ள கல்லுாரி, பல்கலை கழகங்களில் படிக்கும், மாணவ - மாணவியர் என்பதை அறிந்தபோது, ஆச்சரியம் ஏற்பட்டது.
இதுவரை கேள்விப்பட்டிராத, வரைபடத்திலேயே எளிதில் அடையாளம் காண முடியாத நாடுகளில் எல்லாம், தமிழக மாணவர்கள் படிப்பது எப்படி என, விசாரித்தேன். அப்போது தான், இளம் தலைமுறைக்கு பயன்படும் வகையிலான தகவல்கள் கிடைத்தன.
'ஏழையாக பிறந்து, ஏழையாக மடிவது, நம் காலத்துடன் போகட்டும். நம் பிள்ளைகளாவது, வசதி வாய்ப்புடன் வாழட்டும்...' என்பதே, நம் நாட்டின் பெரும்பாலான நடுத்தர குடும்பத்து பெற்றோரின் லட்சியம்.
கடந்த, 15 ஆண்டுகளுக்கு முன், இன்ஜினியரிங் படிப்புகளுக்கு ஏற்பட்ட மவுசு; இப்படிப்பட்ட பெற்றோரின் கனவுகளுக்கு, தீனி போட்டது.
இந்த நிலை ரொம்ப நாள் நீடிக்கவில்லை. புற்றீசல் போல் அதிகரித்த இன்ஜினியரிங் கல்லுாரிகளில் இருந்து, வீட்டுக்கு ஒரு இன்ஜினியர் உருவாகினார். இவர்களில் பலர், இன்ஜினியரிங் படிப்புக்கான எந்த தகுதியும் இல்லாதவர்களாக இருந்தது தான் சோகம். இவர்களுக்கு ஏற்ற வேலை வாய்ப்புகள் கிடைக்கவில்லை.
இதுபோன்ற சூழ்நிலையில் தான், சில பெற்றோரின் பார்வை, வெளிநாடுகள் மீது விழத் துவங்கியுள்ளது. குறிப்பாக, ஐரோப்பிய நாடுகளில் குறைந்த செலவில் இன்ஜினியரிங் படிக்க முடியும் என்றும், படிப்பை முடித்த பின், அங்கேயே நல்ல வேலை வாய்ப்பு கிடைக்கும் என்றும், அவர்களது காதுகளுக்கு செய்திகள் வந்தன.
— தொடரும்.
லாட்வியர்களை மயக்கிய மசால் தோசை!
திருச்சியை சேர்ந்த, பிரவீன் என்ற இளைஞர், லாட்வியா தலைநகர் ரிகாவில் உள்ள கல்லுாரியில், மெக்கானிகல் இன்ஜினியரிங் முடித்து, அங்கேயே, 'பனானா லீப்' என்ற பெயரில் உணவகம் நடத்துகிறார். இங்கு, தோசை, இட்லி, பொங்கல், வடை என, முழுக்க முழுக்க தமிழக உணவு வகைகளே, சூடாகவும், சுவையாகவும் தயாரித்து அளிக்கப்படுகிறது.
பிரவீன் கூறியதாவது:
லாட்வியாக்காரர்களுக்கு, நம் நாட்டு உணவு மீது, விருப்பம் அதிகம். இதையறிந்து தான், இங்கு உணவகம் துவக்கினேன். தோசை வகைகளை அதிகம் விரும்பி சாப்பிடுகின்றனர். அதிலும், மசாலா தோசைக்கு, லாட்வியாக்காரர்களை அடிமையாக்கி விட்டோம் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.
காரம் மட்டும், அவர்களின் விருப்பத்துக்கு ஏற்ப, குறைத்துக் கொள்கிறோம். பிரியாணி வகைகளும் உண்டு. இந்த ஓட்டலுக்காக, திருச்சியிலிருந்து சமையல்காரர்களை அழைத்து வந்துள்ளேன். இங்கு கல்லுாரிகளில் படிக்கும் தமிழக மாணவர்கள் சிலர், இந்த உணவகத்தில், பகுதி நேரமாக பணியாற்றுகின்றனர். இந்த தொழிலை இன்னும் பெரிய அளவில் செய்ய வேண்டும் என்ற ஆசை உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
பிரவீனை, +37128909000 என்ற, 'வாட்ஸ் ஆப்' எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
சி. சண்முகநாதன்