ஆணாதிக்கம்! | வாரமலர் | Varamalar | tamil weekly supplements
ஆணாதிக்கம்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
Advertisement
 

பதிவு செய்த நாள்

06 அக்
2019
00:00

அந்தி சாயும் மாலை நேரம். பறவைகள் கூடுகளை நோக்கிச் சென்றன. இயந்திர உதிரி பாகங்கள் தயாரிக்கும் நிறுவனத்தின் திட்ட மேலாளர், கபிலனும் அலுவலக பணி முடிந்து, வீடு திரும்பினான்.
அரசு பள்ளியில், எட்டாம் வகுப்பு படிக்கும் மகள், அருள்மொழி அருகில் வர, ''என்னம்மா,'' என்று வாஞ்சையுடன் தலையை வருடினான்.
''எங்கள் பள்ளியில், கட்டுரை போட்டி நடக்க இருக்கிறதுப்பா. அதற்காக கொடுத்த தலைப்புகளில், 'ஆணாதிக்கம்' என்ற தலைப்பை தேர்ந்தெடுத்துள்ளேன். எனக்கு, சில குறிப்புகள் கொடுங்களேன்,'' என்றாள்.
''சரி... இந்த தலைப்பை ஏன் தேர்ந்தெடுத்தாய்?''
''பேச்சு சுதந்திரம், ஆணாதிக்கம் மற்றும் இளமையில் கல்வி என்பன போன்ற, பல தலைப்புகளை, ஆசிரியர் கொடுத்தார். எனக்கு இந்த தலைப்பு பிடித்திருந்தது. அதனால் தான் தேர்ந்தெடுத்தேன்,'' என்றாள்.
''நல்லது... பழைய காலத்தில் இருந்தே, நம் சமுதாயத்தில் ஆண்களின் ஆதிக்கம் தான் உள்ளது. தற்போது கூட பெரும்பாலான தொழில்துறைகளில், பெண்களின் ஊதியம், ஆண்களின் ஊதியத்தை விட குறைவு தான். எந்தப் படிவம் நிரப்பினாலும், அங்கும் ஆண்களின் விபரம் தான் பெரும்பாலும் கேட்கப்பட்டிருக்கும். சமுதாயப் பிரச்னைகளை தீர்த்து வைக்கும் ஊர் பெரியவர்கள் அனைவரும், ஆண்களே,'' என்றார், கபிலன்.
''என்ன, அப்பாவும் பொண்ணும், அப்படி எதைப் பற்றி விவாதம் பண்ணிக்கிட்டு இருக்கீங்க,'' என்று கேட்டபடியே வந்தாள், அரசு கலைக் கல்லுாரியில் ஆங்கில பேராசிரியையாக பணிபுரியும், கபிலனின் மனைவி, கயல்விழி.
''கட்டுரை போட்டி பற்றி, நீங்களும், ஏதாவது குறிப்புகள் கொடுங்கம்மா,'' என்றாள், அருள்மொழி.
''வீட்டில் முக்கிய முடிவுகளை எடுப்பது, ஆண்கள் தான்; ஏன், குழந்தைகளைப் பெற்றெடுப்பது பெண்கள் தான் என்றாலும், நம் பெயரின் முதல் எழுத்து ஆணினுடையது தான். வெளியூரில் படிக்கவோ அல்லது வேலை பார்க்கவோ ஆண்பிள்ளைகளைத் தான் அனுப்புகின்றனர்,'' என்றாள், கயல்விழி.
''நம் வீட்டிலும் தம்பி நகுல்தானம்மா செல்ல பிள்ளை,'' என்றாள், அருள்மொழி.
''நம் வீட்டை போலவே பெரும்பாலான வீடுகளிலும் செல்லம், ஆண் பிள்ளைகள் தான். சரி... ஏதாச்சும் சாப்பிட்டீங்களா... தம்பி, நகுல் எங்கே,'' என்றாள், கயல்விழி.
''இதோ வந்துட்டேம்மா,'' என்று ஓடி வந்து, கயல்விழி மடியில் படுத்துக் கொண்டான்.
அருள்மொழி படிக்கும் அரசு பள்ளியிலேயே, நான்காம் வகுப்பு படிக்கிறான், நகுல்.
''எல்லாரும் முகம், கை, கால் கழுவி வாங்க... காபி போட்டு தரேன்,'' என்றாள், கயல்விழி.
நால்வரும் காபி அருந்தினர். கயல்விழி விளக்கு ஏற்ற, அனைவரும், கடவுளை வணங்கினர்.
அதன்பின், பிள்ளைகள், வீட்டுப் பாடங்களை படிக்க துவங்கினர். சமையல் அறையில், இரவு உணவிற்காக, கபிலன், சப்பாத்தி மாவை பிசைந்து, தேய்த்து கொடுக்க, அதை கல்லில் போட்டெடுத்து, கூடவே காய்கறி குருமாவும் தயாரித்தாள், கயல்விழி.
நால்வரும் சாப்பிட்டனர். பின்பு, மறுநாளைக்கான காய்கறிகளை நறுக்கி, குளிர்பதன பெட்டியில் வைத்து துாங்க சென்றனர்.
கபிலன் நினைவுகளில், எட்டு ஆண்டுகள் பின்னோக்கி ஓடின. நினைத்தவுடன், அவன் கண்களில் நீர் எட்டிப் பார்த்தது. துக்கம் அதிகமானதால், துாக்கம் வரவில்லை.
அப்போது, நகுலுக்கு ஒரு வயது இருக்கும். திருச்சியில், கை நிறைய சம்பளத்தில் வேலை பார்த்து வந்தான், கபிலன். நிறுவன மேலதிகாரியுடன் ஏற்பட்ட பிரச்னையால், வேலை பறிபோனது. உடனடியாக வேறு வேலை கிடைக்காத நிலையில், இருவரும் பேசி, கபிலனின் சொந்த ஊரான, தேவகோட்டைக்கு வந்தனர்.
நகுலின் பிரசவத்திற்காக, பிறந்த வீடு சென்று திரும்பியதில் இருந்தே, கயல்விழியிடம் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருப்பதை, கபிலனால் உணர முடிந்தது. ஐந்து ஆண்டுகள், உள்ளூரில் வேலை செய்து, கிடைத்த வருமானத்தில், பிள்ளைகளுக்கான செலவை மட்டுமே கபிலனால் ஈடுகட்ட முடிந்தது. குடும்ப செலவுகளுக்கு, அவன் பெற்றோரிடம் கையேந்த வேண்டியிருந்தது.
தனக்கு வேண்டிய சின்னச் சின்ன பொருட்களை கூட, கணவனால் வாங்கித் தர முடியவில்லையே என்று நினைக்கும்போது, கயல்விழியால் சரியாக சாப்பிட முடியவில்லை. நம்மால் இரு பிள்ளைகளையும் மகிழ்ச்சியாக வாழ வைக்க முடியுமா என்ற கவலையும் தொற்றிக் கொண்டது. கூடவே, 'உன் கணவர் அடுத்து என்ன செய்ய போகிறார்...' என்ற உறவினர்களின் நச்சரிப்பு வேறு.
விளைவு... பணப் பிரச்னையால், தம்பதியருக்குள் சின்ன சின்ன நெருடல்கள், வாக்கு வாதங்கள். ஒரு கட்டத்தில் கோபத்துடன், பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டாள், கயல்விழி.
கபிலனின் சமாதானம், அவளிடம் எடுபடவில்லை.
தம்பதியருக்குள் பேச்சே இல்லாமல், பல மாதங்கள் கடந்தன. பிள்ளை பாசத்தால், மனைவி மற்றும் குழந்தைகளை காண, அவள் பெற்றோர் வீட்டுக்கு சென்று பார்க்கலானான், கபிலன். அப்போது தான், கயல்விழியிடம் ஏற்பட்ட மாற்றங்கள், அவளால் அல்ல என்பதை உணர்ந்தான்.
இந்த சூழ்நிலையில், உறவினர் ஒருவரின் சிபாரிசு மூலம், சேலத்தில் வேலைக்கு சேர்ந்தாள். கபிலன் தடுத்தும், 'இருவர் சம்பாதித்தால் தான் நல்லது...' என்று வேலைக்கு சென்றாள். வேறு வழியின்றி, அவள் பின்னே, அவனும் சேலத்துக்கு சென்றான்.
இருப்பினும், அடிக்கடி தன் பெற்றோரை பார்த்து நலம் விசாரித்து வருவான்; உறவினர்களின் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வான். பல மாத வேலை தேடலுக்குப் பின், அவனுக்கு, ஒரு நிறுவனத்தில், மேலாளர் வேலை கிடைத்தது. இந்த இரண்டு ஆண்டுகளாக தான், தம்பதியருக்குள் பண(மன)ப் பிரச்னை இல்லை.
கயல்விழியின் எந்த ஒரு செயலையாவது, ஆணாதிக்கம் மூலம் தடுக்க முடிந்ததா... இதில், பெண் ஆதிக்கம் தானே அதிகம் இருக்கிறது. அனைத்தையும் ஏற்று, குடும்ப நன்மைக்காக பெண்கள் பின்னால் செல்லும் ஆண்கள் தானே, இப்போதும் அதிகம் இருக்கின்றனர். அப்படி இருந்தும், மகளின் கட்டுரையில் கூட, 'ஆணாதிக்கம் இல்லையம்மா' என்று, தன்னால் சொல்ல முடியவில்லையே என்று வருந்தினான்.

மறுநாள் காலை -
அதிகாலையிலேயே எழுந்து, துணிகளை இயந்திரத்தில் போட்டு, சமையல் முடித்து, பாத்திரங்களை கழுவி, வேலைக்கு தயாரானாள், கயல்விழி. கபிலன் எழுந்ததும், துவைத்த துணிகளை கொடியில் உலர்த்தினான். பிள்ளைகளுக்கு, மதிய சாப்பாட்டை நிரப்பி, அவர்களின் பையில் வைத்து, தானும் தயாரானான்.

அந்தி சாயும் வேளை -
கபிலனும் - கயல்விழியும் வந்ததும், ''கட்டுரைப் போட்டியில் எனக்கு பரிசு கிடைச்சிருக்கு... நாளை நடக்கும் விழாவில் அதைக் கொடுப்பாங்க... எங்கள் ஆசிரியர், உங்களையும் அழைத்தார்... இருவரும் கட்டாயம் வரவேண்டும்,'' என்று, மகிழ்ச்சி பொங்க கூறினாள், அருள்மொழி.
''ரொம்ப நல்லது... விழா எப்போ?''
''சாயங்காலம், 4:00 மணிக்கு.''

மறுநாள் மதிய விடுப்பு எடுத்து, இருவரும் பள்ளிக்கு வந்தனர். பெற்றோர் - ஆசிரியர் சங்கம் ஏற்பாடு செய்த விழாவில், பள்ளியின் முன்னேற்றம், மாணவர்களின் கல்வி மேம்பாடு, ஒழுக்க நெறி ஆகியவை பற்றி, தலைமை ஆசிரியர் மற்றும் சங்க உறுப்பினர்கள் பேசினர்.
பின், கட்டுரைப் போட்டிக்கான பரிசளிப்பு என்றதும், ஆர்வமானாள், கயல்விழி.
மூன்றாம் பரிசு... இரண்டாம் பரிசு.. மகள் பெயர் இல்லை. முதல் பரிசு... யார் யார் என அரங்கமே காத்திருக்க... தலைமை ஆசிரியர், அருள்மொழியின் வகுப்பு ஆசிரியரை மேடைக்கு அழைத்தார். முகத்தில் ஏகப்பட்ட மகிழ்ச்சி; மேலும், உற்சாகமானாள், கயல்விழி.
''முதல் பரிசை வாங்கி இருக்கும் இந்த கட்டுரையின் தலைப்பு: ஆணாதிக்கம்.
இதை எழுதி இருப்பவர், எட்டாம் வகுப்பு மாணவி. வீட்டிலும், சமுதாயத்திலும், வேலை செய்யும் இடங்களிலும் உள்ள ஆண்களின் ஆதிக்கத்தை பற்றி, நிறைய எழுதி இருந்தாலும், இதை, ஆளுமையின் ஆதிக்கமாகவே இவர் கருதுகிறார்.
''கட்டுரையின் இறுதி வரிகள்: ஓர் ஆண், தான் வாழும் சமுதாயத்தில் நேர்மையானவனாக இருக்கிறான். தன்னை ஈன்றவர்களுக்கு, நல்ல மகனாக; உடன்பிறந்தவர்களுக்கு, உற்ற சகோதரனாக; மனைவிக்கு, ஏற்ற கணவனாக; பிள்ளைகளுக்கு, பாசமிகு தந்தையாக இருக்கிறார். அப்படிபட்டவர் தான் என் தந்தையாக இருக்கிறார்; அதனால், நான் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன். பெருமைக்காக இதை எழுதவில்லை.
''ஆம்... ஆறு வயது முதல், தந்தையையும், அவர் செயல்களையும் நேசிக்கிறேன். அவரைப் பெருமைப்படுத்தவே, இந்த தலைப்பை தேர்ந்தெடுத்தேன். அவரைப் போன்று, பல ஆண்கள், இப்பூவுலகில் கட்டாயம் இருப்பர் என்றும் நம்புகிறேன். எனவே, இந்த சமூகத்தில், ஆளுமையின் ஆதிக்கம் தான் உள்ளது, ஆணாதிக்கம் இல்லவே இல்லை...
''இந்த கட்டுரைக்கு பரிசு கிடைத்தால், அப்பாவின் கையால் பெற வேண்டும் என, அருள்மொழி விருப்பம் தெரிவித்துள்ளாள். முதல் பரிசு, அருள்மொழி,'' என்று, ஆசிரியர் பேசி முடிக்க, பலத்த கைதட்டல்!
கபிலனை அழைத்தார், ஆசிரியர். கூடவே, கயல்விழியும் எழுந்தாள். இருவரும் மேடையேற, அருள்மொழியும் வந்தாள்.
ஆனந்தக் கண்ணீருடன், அப்பா பரிசை கொடுக்க, அதைப் பெற்று, அம்மாவிடம் கொடுத்தாள், அருள்மொழி.
'எட்டாவது படிக்கும் மகள், தன் எட்டு ஆண்டு வாழ்க்கையையும் சேர்த்து படித்து விட்டாளே...' என்ற எண்ணம் தோன்ற, மகள் மீது முத்த மழை பொழிந்தாள், கயல்விழி.
கபிலனின் பெற்றோர் மற்றும் உடன் பிறந்தவர்களுக்கு போன் செய்தாள். வீட்டிற்கு வந்தவுடன், அவனிடம் மனதார மன்னிப்பு கேட்டாள். கபிலனின் பெற்றோரை தங்களுடன் வந்து தங்குமாறு கேட்டுக் கொண்டாள். இப்போது, கயல்விழியிடம் ஏற்பட்ட மாற்றங்கள், அவளால் அல்ல;
தன் மகளால் என்பதையும் உணர்ந்தான், கபிலன்.
இனி, ஆணாதிக்கமோ, பெண்ணாதிக்கமோ, ஆளுமையின் ஆதிக்கமோ இல்லை. அன்பின் ஆதிக்கம் தான் அதிகம் இருக்கும் என்று நினைத்தான், கபிலன்.

முத்துகிருஷ்ணன்

Advertisement

 We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X