நாகேஸ்வரன் என்ற நாகேஷ்! (20)
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 அக்
2019
00:00

சென்சார் போர்டு அதிகாரி, சாஸ்திரி அழைக்க, அவரை போய் பார்த்தேன்.
'அன்னை இல்லம் படத்தில், 'ஏ... ஏ... ஏ... என்னப்பா நீ...' என்று, இழுத்து இழுத்து பேசுகிற திக்குவாய், உனக்கு காமெடியா இருக்குதா...' என்றார்.
நான் எதுவும் பேசாமல், அவரையே பார்த்துக் கொண்டிருந்தேன்.
'திக்கு வாயை வைத்து, காமெடி பண்ணி இருப்பதற்காகவே, அந்த படத்தை நான் தடை பண்ணலாம்ன்னு நினைச்சேன். தமிழகத்தில், அது மாதிரி, திக்கு வாயால் பாதிக்கப்பட்டவங்க எத்தனை பேர் இருப்பாங்க...
'அவங்களும், அவங்களோட குடும்பத்தினரும், நண்பர்களும், படத்துல, நீ திக்கித் திக்கி பேசறதை பார்த்துட்டு, அதை ரசிச்சு சிரிப்பாங்கன்னு நினைக்கிறியா...
அதை பார்க்கிற திக்குவாய்காரங்க, அவர்களின் பெற்றோர், கூட பிறந்தவர்கள் எல்லாம் வேதனைப்பட மாட்டாங்களா...' என்றார்.
யாரோ சம்மட்டியால் அடித்தாற்போல் உணர்ந்தேன். என்ன விளக்கம் அவருக்கு சொல்லி, நடிப்பை நியாயப்படுத்த முடியும்?
என் முன்னே கையை நீட்டி, 'இனிமேல், அடுத்தவர்களின் குறைபாடுகளை கிண்டல் செய்யும் விதமாக நடிக்க மாட்டேன் என்று, இங்கே, இப்போது சத்தியம் செய்து கொடு... இந்த படத்தை வெளியிட, அனுமதி வழங்குகிறேன்...' என்றார்.
நானும் அப்படியே சத்தியம் செய்து கொடுத்தேன்.
பாடல் காட்சி ஒன்றை படம் பிடித்தார், அப்படத்தின் இயக்குனர். பாடல் காட்சியில் நடனமாடி நடிக்கிற முதல் அனுபவம், அது தான்.
பாடல் காட்சியில், என்னிடமிருந்து, இயக்குனர் என்ன எதிர்பார்க்கிறார் என்று, முதலில் தெளிவாக புரியவில்லை. அவரிடம், 'சார்... எனக்கு, டான்ஸ் ஆடி பழக்கமில்லை. நான் என்ன செய்ய வேண்டும் என்று சொல்லி விடுங்கள்... அதன்படி சரியாக செய்து விடுகிறேன்...' என்றேன்.
'நீ என்ன பண்ணறே... பாட்டோட முதல் வரிக்கு, 'கிடுகிடு'ன்னு, இந்த தென்னை மரத்துல ஏறிடு... மீதியை அப்புறம் பார்த்துக்கலாம்...' என்றார், இயக்குனர்.
மரம் ஏறி பழக்கம் கிடையாது. ஆனாலும், இயக்குனர் சொல்லி விட்டாரே, மறுப்பு ஏதும் சொல்லாமல், இரண்டு, மூன்று தடவை முயற்சித்து, ஒத்திகை பார்த்துக் கொண்டேன்.
பாடலின் முதல் வரி ஒலித்தது. இயக்குனர் சொன்னபடி, மரத்தில் ஏறினேன். முதல் வரி முடிந்தவுடன், 'கட்' சொன்ன இயக்குனரை பார்த்தபடி, மரத்தின் மேலேயே இருந்தேன்.
'என் வேலை முடிந்து விட்டது. உங்களுக்கு, ஓ.கே., தானே... நான் இறங்கலாம் இல்லையா?' என்று, என் பார்வைக்கு அர்த்தம்.
'அடுத்த வரிக்கு, அந்த இடத்திலிருந்து மெதுவாக, 'ஸ்டைல்' ஆக அப்படியே குதிச்சுடு... ஒண்ணும் ஆகாது...' என்றார், இயக்குனர்.
மரத்திலிருந்து குதித்து, 'ரிஸ்க்' எடுக்க விரும்பாமல், மேலிருந்து மெதுவாக சறுக்கியபடி இறங்கி வந்ததும், ஓ.கே., என்றார்.
கொஞ்சம் ஆர்வம் மற்றும் பயம் கலந்த உணர்வுடன், 'அடுத்து, மூணாவது வரிக்கு என்ன பண்ணணும் சார்...' என்றேன்.
'ம்... மூணாவது வரிக்கு, நீ வேணவே வேணாம். நான் என்ன பண்ணறேன், தென்னை மரத்தோட உச்சியை, 'குளோஸ் - அப்'பில் காட்டி விடுகிறேன்...' என்றார்.
'அப்பாடா...' என்று சொல்லிக் கொண்டேன்.
'அடுத்தது, நாலாவது வரி. என்ன பண்ணவியோ... ஏது பண்ணுவியோ எனக்கு தெரியாது... இந்த வரியை நீயே பாடி, டான்ஸ் ஆடணும்...' என்று சொல்லி விட்டார்.
பாடலின் நான்காவது வரியை போட்டனர். நான் ஏதோ, 'ஸ்டெப்' போட்டு காட்டினேன். அது எனக்கே சரியாக இல்லை என்று தோன்றியது. இயக்குனரின் முகத்தில் அதிருப்தி.
படத்தில், நான், கார் டிரைவர். 'தேரோட்டி நீ, தசாவதாரத்தில் பத்து தடவை செத்து பிழைத்தாய். காரோட்டியான நானோ, தினம் செத்து செத்து பிழைக்கிறேன்...' என்பதாக, பாடல் வரிகள் எழுதப்பட்டிருந்தன.
படத்தின் தயாரிப்பாளர், அப்போது, அங்கு வந்திருந்தார். அவரிடம், 'காரோட்டி, தினம் தினம் சாகறானோ இல்லையோ... இவனை இந்த படத்துல போட்டதுல, நான் செத்துக் கொண்டிருக்கேன்...' என்று, இயக்குனர் சொன்னது, காதில் விழுந்தது.
'எனக்கு நடனம் ஆடிய அனுபவம் இல்லாததால் சரியாக வரவில்லை. அதற்காக, இப்படி கடுமையான விமர்சனம் செய்கிறாரே...' என்று, மனம் புழுங்கினேன்.
இயக்குனரிடம், 'சார்... இன்று எனக்கு, 'மூடு அவுட்' ஆயிடுச்சு... இனிமேல் என்னால் நடிப்பிலோ, நடனத்திலோ கவனம் செலுத்த முடியாது. பேக் - அப்...' என்று சொல்லி, வீட்டுக்கு வந்து விட்டேன்.
'என்னை, யாரும் தொந்தரவு செய்ய வேண்டாம்...' என்று, கடுமையான குரலில் கூறி, அறைக்குள் போய், கதவை தாழ் போட்டுக் கொண்டேன்.
சில நிமிடம் கண்களை மூடி அமைதியாக உட்கார்ந்தேன். ஒரு தீர்மானத்துடன் எழுந்து, 'அதெப்படி நமக்கு, நடனம் வராமல் போகும்...' என்று, அடி மனதில் ஒரு குரல், ரீங்காரமிட்டுக் கொண்டே இருந்தது.
அறையிலிருந்த, 'ரெக்கார்ட் பிளேயரில்' மேற்கத்திய இசை தட்டை போட்டு, இசைக்கு ஏற்ப தலை முதல் கால் வரை அசைத்து, ஆட ஆரம்பித்தேன். திரும்ப திரும்ப அதே போல ஆடி, பயிற்சி செய்தேன்.
வேறு ஒரு இசைத் தட்டை எடுத்து போட்டேன். இம்முறை, முன்பு ஆடியதற்கு துளியும் சம்பந்தம் இன்றி, வேறு வகையான அசைவை கொடுத்தேன். மறுபடியும் சிறிது நேரம் அதே போல பயிற்சி செய்தபின், இரண்டு வகை அசைவுகளையும் கலந்த புது, 'ஸ்டைலில்' ஆடி பழகினேன்.
இப்படியே அன்று இரவு முழுக்க, வியர்க்க வியர்க்க, உடம்பு அசதியையும் பொருட்படுத்தாமல், பல்வேறு இசை தட்டுகளையும் போட்டு, அவற்றுக்கு ஏற்ப நடன அசைவுகளை பழகினேன்.
'அட... பரவாயில்லையே... நமக்கும் மிக நன்றாக, நடனம் ஆட வருகிறதே...' என்று ஆச்சரியப்பட்டேன். கடைசியில், 'நாளைக்கு பார், நடனத்தில் பிச்சு உதறிடறேன்...' என்று சொல்லிக் கொண்டேன்.
மறுநாள், 'ஷூட்டிங்' போனபோது, 'என்ன நாகேஷ்... நேத்து மாதிரி இன்னிக்கும், உனக்கு, 'மூட் அவுட்' ஆகாதே... இன்னிக்கு எப்படியும், பாதி பாடல் காட்சியையாவது எடுத்து முடித்து விட வேண்டும்... கொஞ்சம் பார்த்து ஒத்துழைப்பு கொடுப்பா...' என்றார், இயக்குனர்.
'இன்னிக்கு, நான் பக்காவா, 'ரெடி!' வேண்டுமானால், முழு பாட்டையும் எடுத்துக் கொள்ளுங்கள்...
'நான் ஒரு நடன அசைவை செய்து காட்டுகிறேன். உங்களுக்கு பிடிச்சிருந்தால், 'ஷூட்' பண்ணுங்கள்...' என்றேன்.
என் நடனத்தை பார்த்து, 'அட... இது, நல்லா இருக்குப்பா... இதையே வெச்சுக்கலாம்...' என்றார்.
இன்னொரு, நடன அசைவை செய்து காட்டவும், 'இதுவும் ரொம்ப நல்லா இருக்கே... சபாஷ்!' என்றார்.
'அவசரப்படாதீங்க... இன்னொரு நடன அசைவையும் பண்ணி காட்டுகிறேன்...' என்றேன்.
'எல்லாமே புது, 'ஸ்டைலில்' பிரமாதமா இருக்கு, நாகேஷ்... ஒவ்வொரு வரிக்கும், இதில் ஒவ்வொன்றை வெச்சுக்கலாம்...' என்றார்.
பாடலின் ஒவ்வொரு வரிக்கும், நான் ஒவ்வொரு விதமான அசைவுகளை செய்து காட்ட, இயக்குனர் மட்டுமின்றி, ஒட்டுமொத்த, 'யூனிட்'டுமே அசந்தது.
'எப்படி, நாகேஷ்... நேத்து, இதே பாட்டுக்கு ஆட எவ்வளவு கஷ்டப்பட்ட... இன்னிக்கு பிரமாதமா செய்திட்டியே... ஒரே நாளில் எப்படி சாத்தியமாச்சு...' என்று ஆச்சரியப்பட்டார், இயக்குனர்.
'எல்லாம் நீங்க குடுத்த, 'என்கரேஜ்மென்ட்' தான் சார்...' என்றேன்.
இயக்குனருக்கு ஒன்றும் புரியவில்லை.
'நான், உன்னை, 'என்கரேஜ்' பண்ணினேனா... உனக்கு, சரியா நடனம் வரலைன்னு தானே நொந்துகிட்டேன்...' என்றார், இயக்குனர்.
'நீங்கள் நொந்துகிட்டது தான், எனக்கு பெரிய வெறியை ஏற்படுத்திடுச்சு... ராத்திரி முழுக்க, வியர்க்க விறுவிறுக்க, நான் பண்ணின, 'பிராக்டீஸ்' எவ்வளவுன்னு எனக்கு தானே தெரியும்...' என்றேன்.
இப்படி, எதிர்மறையாக பேசி, எனக்குள் ஓர் உந்துதலை ஏற்படுத்திய இயக்குனர் யார் தெரியுமா... கே.எஸ்.கோபால கிருஷ்ணன் தான்!
தொடரும்.
நன்றி: கிழக்கு பதிப்பகம், சென்னை.

எஸ். சந்திரமவுலி

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Krish - Chennai ,இந்தியா
14-அக்-201906:00:52 IST Report Abuse
Krish முயற்சி திருவினை ஆக்கும். இவரால் ஆனந்தபாபு நன்றாக நடனம் ஆடினார்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X