கே
சென்னை பல்கலை கழகத்தில் பணிபுரியும் பேராசிரியர் ஒருவர், என்னுடைய தீவிர ரசிகராம். என்னை சந்திக்க விரும்பி, லென்ஸ் மாமாவிடம் சொல்லி அனுப்பியிருந்தார்.
'மாமா... பேராசிரியர் என்கிறீர்... ஆங்கிலத்தில் ஏதாவது கேட்டு வைக்கப் போகிறார்... எதற்கும் அவர் வரும்போது, என்னுடன் இருங்கள்...' என்றேன்.
ஓட்டல் ஒன்றில் சந்திக்க ஏற்பாடு செய்தார், மாமா. குறிப்பிட்ட நாளில், நானும், லென்ஸ் மாமாவும், அந்த ஓட்டலுக்கு சென்றோம். வரவேற்பறையில் அமர்ந்திருந்த பேராசிரியரை அறிமுகப்படுத்தி வைத்தார், மாமா.
எங்களுக்கு முன்பதிவு செய்திருந்த மேஜைக்கு சென்று அமர்ந்ததும், 'வெல்கம் டிரிங்க்ஸ்' என்று கூறி, எலுமிச்சை ஜூஸ் கொடுத்தனர்.
'இதெல்லாம் இவருக்கு கொடு. எனக்கு, 'வோட்கா' மற்றும் நான் சொல்லும் அசைவ உணவு வகைகளை எடுத்து வா...' என்று, சர்வரிடம் கூறி அனுப்பினார், மாமா.
'நீங்க திருந்தவே மாட்டீங்களா...' என்று, பேராசிரியர் கடிந்து கொண்டதை, மாமா கண்டு கொள்ளவில்லை.
சமீபத்தில், அமெரிக்காவில் நடைபெற்ற, சுற்றுச்சூழல் பாதுகாப்பு கருத்தரங்கு ஒன்றில் கலந்து கொண்டதாகவும், சுற்றுச்சூழல் பாதுகாப்பு பற்றி நம்மவர்களுக்கு போதிய விழிப்புணர்வும் இல்லை. அதற்கு, பத்திரிகை மூலம் ஏதாவது செய்ய வேண்டும் என்பதற்காக, என்னை சந்திக்க வந்திருப்பதாகவும் கூறினார், பேராசிரியர்.
'உங்கள் வேண்டுகோளை, ஆசிரியரிடம் தெரிவிக்கிறேன்... என்ன செய்யணுமோ, அதை அவர் நிச்சயம் செய்வார்...' என்றேன்.
'சரி, மணி... அப்படியே செய்...' என்றவர், கருத்தரங்கில் தான் கேட்ட விஷயங்களை பகிர்ந்துகொள்ள ஆரம்பித்தார். அது:
அறிவியலும், ஆராய்ச்சிகளும் பெருகிவிட்ட, 20ம் நுாற்றாண்டில் பெரிய சவாலாக அமைவது, சுற்றுச்சூழல் பாதுகாப்பு தான். கடந்த ஒரு நுாற்றாண்டாகவே, பூமியை சிதைக்கும் காரியத்தை துவங்கி விட்டனர், மனிதர்கள்.
கேலார்டு நெல்சன் என்ற அமெரிக்க செனட்டர், 1962ல், ஒரு கட்டுரை எழுதினார். அதில், அமெரிக்கா உட்பட எந்த நாடும், பூமி தாயை பாதுகாப்பது பற்றி சிறிதும் அக்கறை கொள்ளவில்லை என்பதை எடுத்துச் சொல்லியிருந்தார். இந்த பிரச்னையை, அப்போதைய ஜனாதிபதி, ஜான்.எப்.கென்னடிக்கும் எழுதினார், நெல்சன்.
'இந்த பிரச்னை, உண்மையிலேயே கவனிக்க வேண்டிய விஷயம்; பூமியை அழிவிலிருந்து காக்க, நீங்கள் எடுக்கும் முயற்சிகளுக்கு, அரசு ஒத்துழைக்கும்...' என்று, பதில் தந்தார், கென்னடி.
ஜனாதிபதியின் பதிலில் மகிழ்ந்து, பணிகளை தொடர்ந்தார், நெல்சன்.
கடந்த, 1963ல், ஐந்து நாள் பயணம் செய்து, 11 மாகாணங்களில், பூமியை காக்க வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைத்தார், கென்னடி. அவரது இந்த பயணம், சமூக ஆர்வலர்கள் இடையே, மிகப்பெரிய தாக்கத்தை உருவாக்கியது. ஆனால், 11 மாகாணங்களில் மட்டுமே, கென்னடி பயணித்ததால், மற்ற இடங்களில் விழிப்புணர்வு உருவாகவில்லை.
இச்சூழலில், மேலும், 25 மாகாணங்களுக்கு பயணம் செய்து, பூமி தாயை காப்பதன் அவசியம் பற்றி எடுத்துரைத்தார், நெல்சன். அதன்பின், பூமி தாயை சிறப்பிக்கும் விதமாகவும், காக்க வேண்டியதன் அவசியத்தை உணர்த்தும் விதமாகவும், 'பூமி நாள்' என்று, ஒரு நாளை உருவாக்க முனைந்தார்.
செப்., 1969ல், அமெரிக்காவில், வாஷிங்டன் மாகாணத்திலுள்ள சியாட்டல் நகரில் நடந்த மாநாட்டில், பூமி நாளுக்கான, கருத்துரு தரப்பட்டது. அதன்பின், உலக நாடுகள் பலவற்றிலும் இதன் முக்கியத்துவத்தை எடுத்துரைக்க, பல முயற்சிகளை செயல்படுத்தினார், நெல்சன்.
பூமியை காக்க வேண்டும்; இயற்கை வளங்களை பேண வேண்டும்; மாசுபடுதலை தவிர்க்க வேண்டும்; அழிவை தரும் நெகிழிகளை குறைக்க வேண்டும் என்பன போன்ற, பல விழிப்புணர்வு பிரசாரங்கள் தொடர, சியாட்டல் நிகழ்வு உதவியது.
பல கோடி மக்கள் தொகை கொண்ட, பூமியை காக்கும் செயல்முறை நிகழ்வை, ஏப்., 22, 1970ல் நிகழ்த்தி காட்டினார். லட்சக்கணக்கான சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், பள்ளி மற்றும் கல்லுாரி மாணவர்களின் சங்கமத்தில், இந்த பூமியை காக்கும் செயல்முறை விளக்கம், பல இடங்களில் நடத்தப்பட்டது. இது உலகமெங்கும் செய்தியாக பரவியது.
ஒவ்வொரு ஆண்டும், ஏப்., 22ம் தேதியை, 'பூமி நாள்' அதாவது, பூமியை காக்கும் நாளாக கொண்டாட வலியுறுத்தியது, ஐக்கிய நாடுகளின் சபை.
நெல்சன் என்ற மனிதர், தன் மனதில், இந்த பூமி பந்து, பழுதுபடுகிறதே என்று வேதனை பட்டதன் விளைவு, பூமியை காக்கும் ஒரு நாளை கொண்டு வந்தது.
இன்று, சுற்றுச்சூழல் பற்றிய விழிப்புணர்வு உலகமெங்கும் அதிகரிக்கவும், மக்கள் இயக்கங்கள் பல உருவாகவும், இந்த நாள் ஒரு நல்ல ஆரம்பமாக அமைந்தது.
அதன் பின்னரே, மக்களின் கவனம் சுற்றுச்சூழல் மீது லேசாக திரும்பியது. இன்னும் முழு அளவில் மக்களிடையே விழிப்புணர்வு இல்லாததால், எங்களை போன்றோர் சுற்றுப் பயணம் செய்து, மக்களுக்கு புரிய வைக்கிறோம் என்று கூறி முடிக்கவும், 'ஆர்டர்' செய்த உணவு வரவும் சரியாக இருந்தது.
புரட்டாசி மாதம் என்று கூட பார்க்காமல், 'நான் - வெஜ்'ஜை, ஒரு பிடி பிடித்தார், லென்ஸ் மாமா.
'வெஜிடபுள் ரைஸ்' மற்றும் 'பன்னீர் கிரேவி' சாப்பிட்டு, அவர்களிடமிருந்து விடைபெற்று அலுவலகம் வந்தேன்.
ப
மேஜையில், தபாலில் போடுவதற்காக எழுதி வைத்திருந்த கடிதத்தையும், கவரையும் காணாமல் தவித்தார், ஒரு செல்வந்தர்.
வேலைக்காரனை கூப்பிட்டு, 'மேஜை மீது வைத்திருந்த கவரை கண்டாயா?' என்று கேட்டார்.
'அதை, தபாலில் போட்டு விட்டேனே...' என்றான், வேலைக்காரன்.
'தபாலில் போட்டு விட்டாயா... கவரின் மீது, முகவரி எழுதவில்லையே...' என்றார்.
'நேற்று, ஒரு மொட்டை கடிதம், முகவரி இல்லாமல் வந்ததே. அதற்கு தான் பதில் எழுதி வைத்திருக்கிறீர்கள் என்று நினைத்து, தபாலில் போட்டு விட்டேன்...' என்றான், வேலைக்காரன்.
எங்கோ, எதிலோ, எப்போதோ படித்தது.