மாய வலை! | வாரமலர் | Varamalar | tamil weekly supplements
மாய வலை!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 

பதிவு செய்த நாள்

13 அக்
2019
00:00

'ஈஸ்வரா... நீதாம்பா துணை... எல்லாரையும் நன்னா வைப்பா...' என, பூஜையை முடித்து, மூச்சிரைக்க நமஸ்கரித்து, நித்தியபடி வேலைகளுக்கு வந்தாள், காமாட்சி.
வயது, 70. சொந்த வீடும், அவளின் ஓய்வூதியமும், மகன், மூர்த்தி குடும்பத்தையும், ஒரு நடுத்தர வாழ்க்கை வாழ வழி செய்திருந்தது.
மூர்த்திக்கு சுமாரான உத்தியோகம். ஏழை குடும்பத்தில் பிறந்த சுதாவுடன் திருமணம் ஆனது. இவர்களுக்கு, இரு குழந்தைகள்; ஆரம்ப கல்வி பயில்கின்றனர். சுதா, ஓரளவு படித்திருந்தாலும், வேலைக்கு செல்வது பற்றி யோசிக்கவில்லை. பணப் பற்றாக்குறையால், தம்பதியருக்குள் அடிக்கடி சண்டை நடக்கும்.
அதையெல்லாம் பொருட்படுத்தாமல், காலையில் சீக்கிரம் எழுந்து, வாசல் தெளித்து, குளித்து, பூஜை செய்வது... மூர்த்தி மற்றும் குழந்தைகள் கிளம்புவதற்குள், காலை டிபன், மதிய சாப்பாட்டை செய்து, அவர்களை அனுப்பி, வீட்டு வேலைகள் அனைத்தும் பார்ப்பது...
மாலையில், பேரக்குழந்தைகள் வந்தவுடன், ஏதாவது சாப்பிட கொடுப்பது... இரவு டிபனுக்கு ஆக வேண்டியதை தயார் செய்வது, குழந்தைகளுக்கு கதை சொல்வது என, அனைத்தையும் செய்வாள், காமாட்சி. எல்லாம் முடிந்து, இரவு துாங்க, 11:00 மணி ஆகிவிடும்.
மற்றபடி, சுதாவால், அந்த வீட்டில் எவருக்கும், எந்த ஒரு உபகாரமும் இல்லை; அந்த அளவுக்கு அவளுக்கு இடம் கொடுத்திருந்தான், மூர்த்தி.
இந்நிலையில், மூர்த்தியின் முயற்சியால், சுதாவுக்கு ஒரு கம்பெனியில், சுமாரான சம்பளத்தில் வேலை கிடைத்தது. இன்னும், 20 நாட்களில் அவள், வேலையில் சேர வேண்டும்.
இரவு துாக்கம் வராமல் புரண்டு கொண்டிருந்த, காமாட்சியின் காதுகளில், மூர்த்தியும், சுதாவும் பேசுவது கேட்டது.
''என்னங்க... நாளைக்கு முதல் வேலையா, நமக்கு தனி வீடு பார்க்கணும்... எனக்கு, 'டிரெஸ்' எடுக்கணும்... அப்படியே, உங்களுக்கு, ஒரு, 'டூ-வீலரும்' இருந்தா, குழந்தைகளையும், என்னையும், 'டிராப்' பண்ணிட்டு, நீங்க அலுவலகம் போயிடலாம்...
''இனி, இந்த கட்டுப்பெட்டி வாழ்க்கை நமக்கு சரிப்படாது... நாளைக்கே இதுக்கெல்லாம் ஏதாவது, 'லோன்' கேட்டு, அலுவலகத்துல விண்ணப்பம் போட்டுடுங்க... அப்படியே அரை நாள் விடுப்பு போட்டு வந்துடுங்க... எல்லா ஏற்பாடுகளையும் செய்யணும்...
''ஏங்க இன்னொண்ணு... காலைல எழுந்தவுடனேயே, உங்க ஓட்டை வாயால மொதல்ல இந்த விஷயத்தை ஒங்கம்மாகிட்ட ஒப்பிச்சுடாதீங்க... எல்லாம், 'ரெடி' பண்ணி போகும்போது சொல்லிக்கலாம்... சரியா,'' என்றாள்.
மறுநாள் மதியம் சாப்பாட்டுக்கு, வீட்டுக்கு வந்து விட்டான், மூர்த்தி. வெளியில் கொஞ்சம் வேலை இருப்பதாக அம்மாவிடம் சொல்லி, மாலை, 4:00 மணிக்கு, குழந்தைகளை வீட்டில் விட்டு விட்டு, மூர்த்தியும், சுதாவும் ஆட்டோவில் சென்றனர்.
ஓரிரு நாட்களுக்கு பின், சுதா, வெளியில் சென்று விட, காமாட்சி அருகில் தயங்கியவாறே வந்தமர்ந்தான், மூர்த்தி.
''அம்மா... எனக்கு, அவசரமா ஒரு லட்சம் ரூபாய் தேவைப்படுது... உன்னை தான் நம்பியிருக்கேன்... வங்கியில் நீ, 'பென்ஷன் லோன்' கேட்டால் கிடைக்கும்; விசாரிச்சுட்டு வந்தேன்... நான், 'லோன்' போட்டு, சீக்கிரமே குடுத்துடுவேன்... தர்றீயாம்மா,'' என்றான்.
''பெரிய தொகையாச்சே... இருப்பதை வைத்து செலவு செய்யணும்ப்பா... யோசிச்சு செயல்படு... மத்தபடி, உனக்கு செய்யாம, யாருக்கு செய்யப் போறேன்... நாளை வங்கிக்கு போகலாம்,'' என்றாள்.
அவன் விருப்பப்படி, கடனும் வாங்கி கொடுத்து விட்டாள்; இனி, ஓய்வூதியத்தில் மாதா மாதம், அதற்கான தொகை பிடித்தமாகும்.
கடந்த ஒரு வாரமாக, சுதாவின் போக்கில் நிறைய மாற்றம் தெரிந்தது. மூர்த்தியுடன் அடிக்கடி வெளியே போய் வந்தபடி இருந்தாள். எதையுமே கண்டுகொள்ளவில்லை, காமாட்சி.
''அம்மா... ஒரு விஷயம். சுதாவுக்கு ஒரு கம்பெனியில வேலை கிடைச்சிருக்கு... சீக்கிரமே வேலையில் சேரணும்... அதான், உனக்கு தகவல் சொல்றேன்... அவ அலுவலகத்திற்கும், குழந்தைகள் பள்ளிக்கும் பக்கமா ஒரு, 'பிளாட்'டில், வீடு பார்த்து, இன்னிக்கு காலையில, பால் கூட காய்ச்சிட்டோம்... வீட்டுக்கு தேவையானதை வாங்கணும்... இனிமே நீ, அவசரமா எழுந்து வேலை செய்ய வேண்டாம்... உனக்கு, 'ரிலீப்' தான்,'' என்றான்.
''அப்படியா... நன்னாருங்க,'' என்றவாறே துாங்க சென்றாள், காமாட்சி.
காமாட்சியின், 'பென்ஷன் லோனில்' கிடைத்த ஒரு லட்சம் ரூபாயில், சுதாவும், மூர்த்தியும் புது குடித்தனம் வந்து விட்டனர்.
வீட்டுக்கு முன்பணம், 80 ஆயிரம் போக, மீதி, 20 ஆயிரம் ரூபாயில், 'குக்கர், மிக்சி' இன்னும் சில அத்தியாவசிய பொருட்களும், சுதாவுக்கு, 'டிரஸ்' மற்றும் அவசர தேவைக்கு, 'இன்டக் ஷன்' அடுப்பு தான் வாங்க முடிந்தது. அதோடு, தன் நண்பனிடம் ஒரு தொகையும் கடனாக கேட்டிருந்தான், மூர்த்தி. அதை வாங்கி தான், மீதி செலவுகளை சமாளிக்க வேண்டும்.
அன்று இரவு, மற்ற செலவுகளை எப்படி சமாளிப்பது என்று யோசித்தான். அப்போது, அங்கு வந்தாள், சுதா.
''ஏங்க... உங்க, 'ஆபீஸ் லோன்' என்னாச்சு... 'டூ-வீலர்' வாங்கிடுவோம்ல... உங்க நண்பர், கைமாத்து கேட்டதை தந்துடுவாரில்ல... இனிமே, நீங்க அதிகமா, 'ஆபீஸ் கேம்ப்' போங்க... நமக்கும் மேல் வரும்படி வரும்,'' என, படபடவென பேசினாள்.
மறுநாள், மூர்த்தியை அழைத்து கொண்டு, வார விடுமுறை நாளுக்குள், எல்லா வேலைகளையும் முடித்துவிட, திட்டம் தீட்டியிருந்தாள், சுதா. ஆனால், இரவு நீண்ட நேரத்திற்கு பின் வீடு திரும்பிய, மூர்த்தியின் முகம், பேயறைந்தது போலிருந்தது.
''என்னங்க, ஏன் இவ்வளவு நேரம்... சீக்கிரமா சாப்பிட வாங்க... சாயங்காலம், 'கரண்ட் கட்' ஆயிடுச்சு... 'இன்டக் ஷன்' அடுப்ப உபயோகிக்க முடியலே... பக்கத்து, 'மெஸ்'ல, சாயந்திரமே இட்லி வாங்கி வச்சிட்டேன்... நாங்கல்லாம் சாப்பிட்டாச்சு,'' என்று, ஆறிய இட்லிகளை தட்டில் வைத்தாள்.
''முதல்ல, ஒரு, 'இன்வெர்ட்டர்' வாங்கணும்; அதையும் ஞாபகம் வச்சுக்கங்க,'' என்றாள்.
அலுவலகம் விட்டு வந்த களைப்பில், உடை மாற்றாமல், வராண்டாவில் சோர்வாக படுத்திருந்தான், மூர்த்தி.
''என்னங்க... நா பாட்டுக்கு பேசிட்டிருக்கேன்... சாப்பிட வராம, இங்க படுத்துட்டீங்க... என்னாச்சுங்க,'' என்றாள்.
''மனசு சரியில்லை, சுதா... நாம அவசரப்பட்டிருக்க கூடாது,'' என்றான்.
''என்னங்க... என்னாச்சு?''
''இன்னிக்கு யார் முகத்துல விழிச்சேனோ தெரியல... கைமாத்து தர்றதா சொன்ன, நண்பனிடம் கேட்டேன்... 'சாரிடா... அப்பா, திடீர்ன்னு குளியலறையில் வழுக்கி விழுந்துட்டாரு... அவருக்கு மருத்துவம் பார்க்கணும்... இப்ப, உனக்கு உதவ முடியலைடா'ன்னு, கை விரிச்சுட்டான்...
''நேரா, நீ வேலைக்கு சேர வேண்டிய கம்பெனியில, அலுவலக நேரம், இதர விபரங்களை கேட்டு வரலாம்ன்னு போனேன்... எனக்காகவே காத்திருந்த மாதிரி, 'சார்... 'போஸ்ட்'ல அனுப்பலாம்ன்னு இருந்தோம்; நீங்களே வந்துட்டீங்க'ன்னு சொன்னான்...
''யாரோ உன்னை விட, கல்வி தகுதியும், அனுபவமும் உள்ளவராம்... மேலும், ஆணா இருந்தா, கம்பெனிக்கு வசதியா இருக்கும்ன்னு, உனக்கு பதிலா, அவரை நியமிச்சுட்டாங்களாம்... அதனால், 'இந்தாங்க, வேலை ரத்து ஆர்டர்'ன்னு கொடுத்தார்... இந்தா,'' என்று, சுதாவிடம் நீட்டினான், மூர்த்தி.
''என்னங்க இது... தாங்க முடியலியே,'' என்றாள்.
''இன்னும் நான் சொல்லி முடிக்கலியே... இதையெல்லாம் தாண்டி, எப்பவும் போல அலுவலகத்துக்கு போனேன்... திடீர்ன்னு, 'ஜி.எம்., மீட்டிங்' நடந்தது. நான், 'கேம்ப்' போகும் இடங்களை எல்லாம் வேறு, 'சர்க்கிளோடு' சேர்த்துட்டாங்களாம்...
''கம்பெனி நஷ்டத்தில் போவதால், யாருக்கும் பயணப்படி கொடுக்க முடியாது; யாரும் இனி, 'டூர்' போக வேண்டியதில்லை; அந்தந்த ஏரியா பணியாளர்களே பார்த்துப்பாங்க... அதோட என்னையும் சேர்த்து, சிலரை, கீழ்நிலை பதவியில் நியமிச்சிருக்காங்க... விருப்பம் இல்லாதவர்கள், வேலையை ராஜினாமா செய்துட்டு போகலாம்ன்னு சொல்லி, கூட்டம் முடிஞ்சுடுச்சு,'' என்றான், மூர்த்தி.
அப்போது, ''சார்... தண்ணீர் கேட்டிருந்தாங்க... நாலு கேனும், டிபாசிட்டும் சேர்த்து, 300 ரூபாய்,'' என, தண்ணீர் கேனுடன் நின்றிருந்தான், ஒருவன்.
''இந்தாப்பா... சில்லரையா இல்ல, கொண்டு வந்த கேனை, அப்படியே எடுத்துட்டு போயிடு... காலையில நானே வந்து பணத்தை கொடுத்துட்டு, கேன் எடுத்துக்கறேன்,'' என்று, அவனை அனுப்பி விட்டான்.
அலுவலகத்தில் பிடித்து வைத்திருந்த, பாட்டில் தண்ணீரை குடித்து, ''சே... குடிக்கிற தண்ணி கூட காசு கொடுத்து வாங்கணும்,'' என்று சலித்தபடியே விளக்கை அணைத்து, படுக்க சென்றான்.
அன்று விடுமுறை -
காலை, 6:00 மணிக்கு எழுந்த, மூர்த்தி, ''சுதா... சீக்கிரம் புறப்படு... வெளியே போகணும்... குழந்தைகளை பக்கத்து வீட்டுல விட்டுட்டு, நீ மட்டும் வா,'' என்று, அவன் கர்ஜித்த குரலுக்கு, மறு வார்த்தை பேசாமல் கிளம்பினாள், சுதா.
''இந்தாப்பா, இந்த வீடு தான் நிறுத்து,'' என, ஆட்டோகாரருக்கு பணம் கொடுத்து, வீட்டு வாசலில் இறங்குகையில், பூஜையை முடித்து வெளியே வந்த, காமாட்சியின் கண்களில் பரவசம்.
''வாப்பா, மூர்த்தி - சுதா... குழந்தைகள் எங்கே... போன இடத்துல, எல்லாம் வசதியா இருக்கா... கடை கண்ணி இருக்கா... பக்கத்து மனுஷங்களோட பழகியாச்சா... அடடே, ஒங்கள பாத்து, 10 நாளுக்கு மேல ஆச்சா... கையும் ஓடலே, காலும் ஓடலே... ஒக்காருங்க, இதோ வரேன்,'' என்று, சமையலறைக்குள் நுழைந்தாள்.
அன்னியபட்டவர்களை போல் சோபாவில் அமர்ந்து, இந்த பிரிவு நாட்களில், அந்த வீட்டில் ஏற்பட்டிருந்த மாற்றங்களை நோட்டமிட்டனர். ஹாலின் ஒருபுறம், டேபிளில் துணி பரத்தி, வத்தல், வடாம் காய்ந்து கொண்டிருந்தது. மறுபுறம், பக்கத்து அறையில் கதவை மூடியபடி, குழந்தைகளின் கலகலவென்ற குரல் கேட்டது.
''காலையில உன் பிரண்ட், கோபி வந்திருந்தாம்பா... அப்பாவை டாக்டர்கிட்ட கூட்டிட்டு போனானாம்; அவன் மனைவி ஊரில் இல்லையாம்... ஏதாவது டிபன் செஞ்சு குடுங்கம்மான்னு கேட்டான்...
''நீயும், அவனும், எனக்கு ஒண்ணுதானேப்பா... அதான் ஒன்ன நெனச்சிட்டே, உனக்கு பிடிச்ச காஞ்சிபுரம் இட்லியும், தக்காளி தொக்கும் செஞ்சு குடுத்தேன்... ரெண்டு பேரும் கையலம்பிண்டு வந்து சாப்பிடுங்க,'' என்று, வாஞ்சையுடன் தட்டை நீட்டினாள், காமாட்சி.
மூர்த்தியின் மனநிலை எப்படி இருந்தாலும், முதல் நாள் முழுக்க சாப்பிடாமலே இருந்தது, 10 நாட்களுக்கு மேல் கண்டபடி சாப்பிட்டு, நாக்கு செத்து போயிருந்தது, மீண்டும் அம்மாவின் பாச வலையில் சிக்கிய அவன், சற்று அதிகமாகவே சாப்பிட்டான்; சுதாவும் தான்.
''நீங்க ரெண்டு பேர், பேரக் குழந்தைகளோடு, கலகலன்னு இருந்த வீடு... நீங்க போன பின், 'ப்ரிஜ், வாஷிங் மிஷின்' மற்றும் 'டிவி' இவைகளோடவா, நான் காலங்கழிக்க முடியும்... அதான், கொஞ்சம் குழந்தைகளுக்கு, பாட்டு கத்துக் கொடுக்க சேர்த்திருக்கேன்...
''நடமாடற வரைக்கும், வத்தல், வடாம், ஊறுகாய்ன்னு போட்டு, கேக்கறவாளுக்கு கொடுக்க ஆரம்பிச்சிருக்கேன்... 'பென்ஷன் லோன்' வேற போட்டிருக்கேனே... இதுல வர்ற வருமானத்தை வச்சு, அதையும் அடைச்சுடலாம்லியா... நீ சொன்ன மாதிரி, இந்த பணத்தை திருப்பியெல்லாம் கொடுக்க முடியாதுன்னு தெரியும்பா... அதான், இந்த ஏற்பாடு,'' என்றாள், காமாட்சி.
''என்னை மன்னிச்சிடும்மா... உன்னை மதிக்காமலும், உன்கிட்ட ஆலோசனை கேட்காமலும், கேட்பார் பேச்சை கேட்டு, நான் செஞ்சது எல்லாம் ரொம்ப தப்பா போச்சும்மா,'' என, கண்ணீர் விட்டு அழுதபடியே, காமாட்சியின் காலில் விழுந்தான்.
''சீ... அசடு... மொதல்ல கண்ண துடை... உன் சம்பளத்துல, தனியா வரவு - செலவு செஞ்சா போதாதுன்னு, எனக்கு நல்லா தெரியும்... ஆனா, நான் அப்ப அதை சொல்லியிருந்தா, ரெண்டு பேரும் கேட்க மாட்டீங்க... வாழ்வும், வயசும் நிறைய படிப்பினையும், அனுபவங்களையும் தரும்...
''இது, உனக்கு புது அனுபவம்... வயசுக்கு ஏன் மதிப்பு கொடுக்கணும்ன்னா, அதுல கடந்து வந்த பாதைகளும், கற்பிக்கபட்டவைகளும் நிறைய இருக்கு... இந்த உலகத்துல, சாசுவதமானதுன்னு ஏதும் இல்லை... அப்பப்ப நடப்பதை, அப்படியே ஏத்து பழகிட்டோம்னா, எந்த மாய வலையிலேயும் சிக்க வேண்டியதில்லை... 'விரலுக்கு தகுந்த வீக்கம் வேணும்...' கவலைப்படாதே, அம்மா இருக்கேன்...
''புதுசா ஏற்பட்ட சிக்கலிலிருந்து, உன்னை விடுவிக்க ஏதாவது ஏற்பாடு பண்றேன்... போய் குழந்தைகளை கூட்டிண்டு வந்து, எப்பவும் போல, இங்கேயே இரு,'' என்றபடி, குழந்தைகளுக்கு பாட்டு சொல்லிக் கொடுக்க சென்றாள்.
அம்மாவின் பாச வலையில் மீண்டும் சிக்கிய, மூர்த்தி, பூஜையறைக்கு சென்று, கை கூப்பி, கண்ணீர் வடித்துக் கொண்டிருந்தான்; சுதாவின் கண்களும் சற்றே பனித்தது.

ஆ. ஜெம்பகலட்சுமி
வயது: 65. மாநில அரசு உயர் பதவியில் இருந்து, ஓய்வு பெற்றவர். வானொலி நாடகங்களில் நடித்துள்ளார். கதை, கவிதைகள் எழுதுவதும், தொண்டு நிறுவனங்களில் சேவை செய்வதும், இவரது விருப்பம்.
இச்சிறுகதை போட்டியில், பரிசு பெற்றிருப்பது, மகிழ்ச்சி அளிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

 We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X