அன்புள்ள அம்மாவுக்கு —
என் வயது, 26. நான், பிளஸ் 2 படித்தபோது, அத்தை மகன், என்னை விரும்புவதாக கூறினார். எனக்கும், அவரை பிடித்திருந்தது. கல்லுாரியில் படித்துக் கொண்டிருந்த அவர், படிப்பு, விளையாட்டு என்று எதிலும் முதல் மாணவராக இருந்தார். சொந்த அத்தை மகன் தானே என்று, நாங்கள் இருவரும் பழகுவதை, யாரும் தப்பாக எடுத்துக் கொள்ளவில்லை.
பள்ளிப் படிப்பை முடித்து, நான் கல்லுாரியில் சேர்ந்தபோது, அவரது அதிகாரம் கொடிகட்டி பறக்க ஆரம்பித்தது. 'இந்த, 'டிரஸ்' போடாதே, இப்படி தலை வாராதே... அங்கு செல்லாதே... இந்த சினிமா பார்க்காதே... இந்த புத்தகம் படிக்காதே...' என்று, ஏகப்பட்ட கட்டுப்பாடுகள், விதிக்க ஆரம்பித்தார்.
என்னுடைய ஒவ்வொரு செயலையும் கண்காணிக்க ஆரம்பித்தார். தோழியருடன், 'காபி ஷாப், மால்' என்று எங்கு சென்றாலும், பின் தொடர்வார். இதன் காரணமாக, எங்களுக்குள் அடிக்கடி சண்டை ஏற்பட்டது.
ஒரு கட்டத்தில், 'நீயும் வேண்டாம்; உன் காதலும் வேண்டாம்...' என்று, அவரை விட்டு விலகினேன்.
அப்போதும் விடாமல், 'உன் மீது கொண்ட காதலால், அவ்வாறு நடந்து கொண்டேன். இனி, அப்படி செய்ய மாட்டேன்...' என்று, உறுதி கூறினார்.
என்னை சந்தேகப்பட்டு, அவ்வப்போது கேள்வி கேட்டார்.
என் தோழி மற்றும் பேராசிரியர்களிடம், அவரை ஏமாற்றி விட்டதாக, என் மீது புகார் செய்தார். சமாளிக்க முடியாமல், அப்பாவிடம் கூற, அவர் நேரிடையாக, அத்தையிடம் பேசி, முற்றுப்புள்ளி வைத்தார். வேறு பகுதிக்கு வீடு மாறி சென்று விட்டோம்.
இப்போது, படிப்பு முடித்து, நல்ல வேலையில் இருக்கிறேன். வேலை செய்யும் இடத்தில், ஒருவர் என்னை விரும்புகிறார். எனக்கும் அவரை பிடித்திருக்கிறது. ஆனால், பழைய காதல் அனுபவங்கள், என்னை பயமுறுத்துகிறது. அத்தை மகனை போலவே இவரும் இருந்து விட்டால், என்ன செய்வது என்று கலங்குகிறேன்.
வீட்டில் திருமண ஏற்பாடு செய்ய ஆலோசனை செய்கின்றனர். அவர்கள் பார்க்கும் மாப்பிள்ளையும், 'சைக்கோ'வாக இருந்து விட்டால், என் வாழ்வு நரகமாகி விடுமே என்று பயப்படுகிறேன்.
மொத்தத்தில் ஆண்களை பார்த்தாலே, ஒரு வித பயம் வந்து விடுகிறது. இந்த பிரச்னையிலிருந்து நான் மீண்டு வருவது எப்படி அம்மா?
— இப்படிக்கு,
உங்கள் மகள்.
அன்புள்ள மகளுக்கு —
ஒரு பொருள் வாங்குகிறோம். அந்த பொருளை, விருப்பமாக எவனும் பார்க்கவும், தொடவும், திருடவும் கூடாது என்கிற ஆவலாதிகளுடன், அதை, பொத்தி பொத்தி பாதுகாப்போம். அதே மனநிலையில் தான், பெரும்பாலான மாப்பிள்ளைகளும், காதலர்களும், தம் எதிர்கால மனைவியரை, 24 மணி நேரமும் நோட்டமிடுகின்றனர்.
அது, கண்ணை உறுத்தாமலும், சம்பந்தப்பட்ட பெண்ணை, உள்ளும், புறமும் பாதிக்காத வரையிலும், பிரச்னைகள் வெடிப்பதில்லை. நோட்டமிடுதல் அதிகமாகி விட்டால், பெரும்பாலான திருமணங்கள் பாதியிலேயே நின்று விடுகின்றன. கூடுதலாய், அத்தை மகன் என்கிற, ரத்த உறவு முறை கொடுத்த மெகா உரிமை, அவனை தலைவிரித்து ஆட வைத்து விட்டது.
திருமணம் செய்து கொள்வது, அதிக முள் உள்ள, அதேநேரம், சுவையான மீனை தின்பதற்கு சமம். முட்களை கவனமாய் களைந்து, சதையை தின்ன வேண்டும். கவனக்குறைவாய் இருந்தால், தொண்டையில் முள் சிக்கி, உயிருக்கு போராடும் நிலை ஏற்படும்.
திருமணம் என்பது, ஆணுக்கும் - பெண்ணுக்கும் தவிர்க்க முடியாத, ஒரு தீமை. கணவன் என்பவன், மருந்தில் சிறிதளவு கலக்கப்பட்ட, 'ஆல்கஹால்' போன்றவன். போதைக்காக இல்லாவிட்டாலும், உடல் நலத்துக்காவது அந்த, 'ஆல்கஹால்' கலந்த மருந்தை குடித்தாக வேண்டும்.
ஒரு ஆண், 'சைக்கோ'வா, இல்லையா என்பதை, பின்வரும் காரணிகளை வைத்து யூகித்து விடலாம்...
உத்தமர்களுக்கு எல்லாம் தலைவனாய் நடிப்பவனை நம்பாதே; மேலோட்டமான வசீகரம் உள்ளவன், ஆபத்தானவன்; 'கிங்சைஸ் ஈகோ' இருந்தால், அவனை உதாசீனப்படுத்து; 'சைக்கோ' ஆண்,
அக புற துாண்டுதல்களுக்கு அதிகம் ஆசைப்படுவான்; நோய் பிடித்தது போல, பொய் பேசுவான்.
அவனிடம் நரித்தனமும், திரித்து பேசும் குணமும் இருக்கும்; குற்ற உணர்ச்சிகளை அறவே களைந்திருப்பான்; பிறரின் துக்கங்களை பற்றி, சிறிதும் கவலைப்பட மாட்டான்; ஒட்டுண்ணி போன்ற வாழ்க்கை முறையை வாழ்வான்; திருமண உறவுகளை நீடிக்க, அவனுக்கு வழிவகை தெரியாது; மொத்தத்தில் அசாதாரண செயல்பாடு உள்ள ஆண்களை, புறக்கணிப்பது நல்லது.
உலகின் எல்லா ஆண்களையும் கண்டு பயப்படுவது அனாவசியம். குடும்பம் என்கிற அமைப்புக்கு, கணவனும் - மனைவியும் முக்கியம். பரஸ்பர துணை இல்லாவிட்டால், தாம்பத்ய சுகம் கிடைக்காது.
வாழ்க்கையின் லாப, நஷ்ட கணக்கை பார்த்தால், லாப கணக்கில் குழந்தைகளை சேர்க்க வேண்டும். குழந்தைகளை பெற, ஆணுக்கு பெண்ணும், பெண்ணுக்கு ஆணும் கட்டாய தேவை. உலகின் மற்ற எல்லா உறவுகளையும் விட, கணவன் - மனைவி உறவு உன்னதமானது.
துணிச்சலாக தென்னை மரம் ஏறி, இளநீர் பறித்து குடி. அலைகளுக்கு பயந்து, கடலில் நீந்தாமல் இராதே. எதிராளியின் எல்லைக்குள் புகுந்து, 'பலிங் சடுகுடு' கூறி, கபடி விளையாடு. அனைத்தையும் மீறி கணவன், 'சைக்கோ'வாக அமைந்து விட்டால், திருத்த பார்ப்போம்.
திருந்தா விட்டால், இருக்கவே இருக்கிறது விவாகரத்து என்கிற இறுதி ஆயுதம். இல்லறம் என்பது, அடிமை சாசனம் எழுதி கொடுப்பதல்ல; அது, ஒரு வாழ்க்கை ஒப்பந்தம். மகிழ்ச்சி தராவிட்டால், அதை ரத்து செய்வோம் மகளே.
— என்றென்றும் தாய்மையுடன்
சகுந்தலா கோபிநாத்