மாணவர்களின் கேள்விக்கு பதிலளிக்கிறார் த.வி. வெங்கடேஸ்வரன் மத்திய அரசு விஞ்ஞானி
1 ஏற்ற இறக்க விளையாட்டின் (Seesaw) இருக்கைகள் சமமான எடையில் இருந்தாலும் ஆளில்லாதபோது ஒரு பக்கமாகத் தாழ்வது ஏன்?
பிரமோத் விக்னேஷ், 8ஆம் வகுப்பு, பாரதி வித்யாலயா சீனியர் செகண்டரி பள்ளி, பெரும்பாக்கம், சென்னை.
ஏற்ற இறக்க விளையாட்டு அமைப்பும், தராசு அமைப்பும் ஒன்றுதான். முதலாவதாக இருக்கைகள் மிகத் துல்லியமாகச் சமமான எடையில் இருக்காது. தயாரிப்பில் அங்கும் இங்கும் சிறு சிறு வேறுபாடுகள் இருக்கும். எனவேதான் அறிவியல்பூர்வமாக அளவீடு செய்ய அதற்கென்று தயாரிக்கப்பட்ட எடைத் தராசைப் பயன்படுத்துகிறோம். இரண்டாவதாக விளையாட்டுக் கருவியின் கால்களோடு ஏற்ற இறக்கப் பலகையைப் பிணைத்து வைக்கும் சுழல் பகுதி ஏற்படுத்தும் உராய்வு காரணமாக ஏதாவது ஒருபக்கம் தற்செயலாகச் சாய்ந்து அமையலாம். மேலும், அந்தச் சுழல் பகுதிக்குள் தூசு, மண் போன்றவை புகுந்து அடைப்பை ஏற்படுத்தி பலகையை எளிதில் சாயாமல் நிறுத்தலாம். அவ்வப்போது அந்தப் பகுதியில் எண்ணெய் ஊற்றி உராய்வைக் குறைத்தால் விளையாட நன்றாக இருக்கும்.
2 பூமி சுற்றும்போது திசைகளும் சுற்றுமானால் திசைகள் நிலையற்றதா?
மு.செந்தூர்வேலன், 10ஆம் வகுப்பு, ஸ்ரீ சரஸ்வதி கிரி மெட்ரிக் பள்ளி, திருப்பூர்.
உங்கள் கையை உயர்த்தவும். கை இருக்கும் திசையை 'மேல்பகுதி' என கொள்ளவும். கோளவடிவ பூமிப் பந்தை நினைவில் கொண்டுவரவும். நீங்கள் அதன் மீது நின்றுகொண்டு ஒரு திசையை மேல் என சுட்டுகிறீர்கள். அதே சமயம், உங்கள் காலடிக்குக் கீழே, அமெரிக்காவில் வசிப்பவர்கள் இந்தத் திசையை 'கீழ்ப்பகுதி' என சுட்டுவார்கள். இடம்-, வலம்; மேலே, -கீழே போன்றவை சார்புத் தன்மை வாய்ந்த சுட்டுகள். அதாவது, எனக்கு இடப்புறமாக இருப்பது உங்களுக்கு வலப்புறமாக அமையும்.
பூமியைத் தட்டையாகக் கற்பனை செய்துகொண்டால் கிழக்கு, மேற்கு என திசைகள் நிலையாக இருக்கும். ஆனால், பூமியைப் பந்து என கருதினால் மாறிவிடும். பூமி உருண்டையை எடுத்துப் பரிசோதித்துப் பாருங்கள். இந்தியாவைப் பொறுத்தவரை ஜப்பான் கிழக்கில் உள்ளது; அமெரிக்காவைப் பொறுத்தவரை மேற்கில் உள்ளது!
3 என் அப்பா இரவு 8 மணிக்கு தூங்கச் சொல்லி காலை 5.30க்கு எழுப்பி விடுகிறார். நாங்கள் எத்தனை மணிநேரம் தூங்கினால் நல்லது?
சே.ஜெய்ஆகாஷ், 7ஆம் வகுப்பு, சே.ஜெய்சச்சின், 5ஆம் வகுப்பு, வி.எஸ்.மெட்ரிக் பள்ளி, மாமல்லபுரம்.
உடல்நலம், சூழல் போன்ற பல அம்சங்கள் தாக்கம் செலுத்தும் என்றாலும், ஒவ்வொரு வயதுக்கும் ஏற்ற இன்றியமையாத தூக்க நேரம் உண்டு.
தூங்கும் நேரம் (நாளொன்றுக்கு)
பிறந்த குழந்தை - 14-17 மணிநேரம்
6-13 வயதுச் சிறுவர்கள் - 9-11 மணிநேரம்
14-17 வயது பதின்பருவத்தினர் - 8-10 மணிநேரம்
18-25 வயது இளம் வயதினர் - 7-9 மணிநேரம்
65+ மூப்பு அடைந்தவர்கள் - 7-8 மணிநேரம்
4 சந்திரயான்- 2 விண்கலம் பூமியையும் சந்திரனையும் பலமுறை நீள்வட்டப் பாதையில் சுற்றி, நிலவுக்குச் சென்றது ஏன்?
ஜே.ஜாய்வில்லியம்ஸ், 11ஆம் வகுப்பு, சாம்பவிகா மேல்நிலைப் பள்ளி, சிவகங்கை.
பூமியின் ஈர்ப்பு விசையை விட்டு விடுதலை பெற்று விண்வெளிக்குச் செல்ல விண்கலத்தை நொடிக்கு 11.2 கி.மீ. என்ற விடுபடு வேகத்தில் செலுத்த வேண்டும். அவ்வாறு செய்ய மிக ஆற்றல் வாய்ந்த ராக்கெட் தேவை. சற்றே மதியூகத்தோடு செயற்பட்டால் நிலவுக்குச் செல்ல பூமியின் ஈர்ப்பு விசையிலிருந்து விடுபட வேண்டியது இல்லை.
நிலவுக்கும் ஈர்ப்பு விசை உண்டு. நிலவின் ஈர்ப்பு விசை பூமியின் ஈர்ப்பு விசையைவிட கூடுதல் தாக்கம் செலுத்தும் புள்ளிவரை சென்றுவிட்டால் போதும்; அதன் பின்னர் நிலவே விண்கலத்தை அதனை நோக்கி இழுத்துக்கொள்ளும். அந்தப் புள்ளிவரை செல்ல நொடிக்கு 10.9 கி.மீ. வேகத்தில் செலுத்த வேண்டும். ஆனால், இந்தியாவின் அதிபலசாலி ராக்கெட் ஜி.எஸ்.எல்.வி. நொடிக்கு 10.2 கி.மீ. வேகம் மட்டுமே செல்லும். கயிற்றில் கல்லைக் கட்டி சுழற்றிச் சுழற்றி அடித்தால், கல் மிக வேகமாகச் செல்லும். அதைப்போல, பூமியை நீள்வட்டப் பாதையில் சுழலச் செய்து, பூமிக்கு அருகே வரும்போது விண்கலத்தில் உள்ள ராக்கெட்டை இயக்கினால் மெல்ல மெல்ல வேகத்தைக் கூட்ட முடியும். மீதமுள்ள 0.7 கி.மீ. (நொடிக்கு) வேகத்தைப் பெறவே சந்திரயான்- 2 விண்கலத்தைப் பூமியை பலமுறை சுற்றச் செய்தனர். அதே போல நிலவுக்கு அருகில் செல்லும்போது, அதன் வேகத்தைக் குறைக்க வேண்டும். விண்கலம் செல்லும் திசைக்கு எதிரே ராக்கெட்டை இயக்கி வேகத்தைக் குறைப்பார்கள். மெல்ல மெல்ல அதன் வேகத்தைக் குறைக்கவே பல முறை நிலவைச் சுற்றச் செய்தனர். இதன்மூலம், குறைவான எரிபொருளைப் பயன்படுத்தி நிலவை அடைய முடியும்.