உலகத்தின் மக்கள் தொகையில் சுமார் கால்பகுதிப் பேர் அதாவது 200 கோடி மக்கள் பார்வைக் குறைபாடு பிரச்னையால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்று பார்வைக் குறைபாடுகள் பற்றிய உலக சுகாதார அமைப்பின் (WHO) முதல் அறிக்கை தெரிவித்திருக்கிறது. குறிப்பாக, வயதானவர்களுக்குப் பார்வைக் குறைபாட்டுப் பிரச்னைகள் மற்றும் பார்வையிழப்பு, மிக அதிக அளவில் ஏற்பட்டு வருவதாகவும் அந்த அறிக்கையில் செய்தி வெளியாகி இருக்கிறது.
நடுத்தர வயதுக்காரர்களுக்கு ஏற்படும் கண் சார்ந்த பிரச்னைகளில் ஒன்று பிரெஸ்பயோபியா (Presbyopia). இந்தப் பிரச்னையால் பாதிக்கபட்டால், அருகே இருக்கும் பொருட்களைத் தெளிவாகப் பார்க்க முடியாது.
உலகம் முழுக்க இருக்கும் மக்கள் தொகையில் 100.8 கோடி மக்கள் இந்தக் கண் பிரச்னையால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.
அதேபோல, சிலரால் அருகில் உள்ள பொருட்களைப் பார்க்க முடியும். ஆனால், தொலைவில் உள்ள பொருட்களைப் பார்க்க முடியாது. இதற்கு மையோபியா (Myopia) என்று பெயர்.
உலகம் முழுக்க இருக்கும் மக்கள் தொகையில் சுமார் 200.6 கோடி மக்கள், இந்த மையோபியாவின் தாக்கத்திற்கு ஆளாகியிருக்கிறார்கள். அவர்களில் 31.2 கோடி மக்கள், 19 வயதுக்கு உட்பட்டவர்கள் என்பதுதான் வருத்தத்திற்குரிய செய்தி.
இவைதவிர, 6.52 கோடி மக்கள் கண்புரை நோயாலும், வயதாவதால் ஏற்படும் பார்வைக் குறைபாட்டால் 1.4 கோடி மக்களும், குளுக்கோமாவால் 69 லட்சம் மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். விழி வெண்படலத்தில் ஒளி புகாமையால் ஏற்படும் கார்னியல் ஒபாசிட்டிஸ் (corneal opacities) பிரச்னையால் 42 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.
அதேபோல, 'டிராக்கோமா' (Trachoma) எனப்படும் ஒருவகைக் கண் நோயால், 20 லட்சம் மக்களும், டயபடிக் ரெட்டினோபதி பிரச்னையால் 30 லட்சம் மக்களும், பிற கண் நோய்களால் 3.71 கோடி மக்களும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.
பாக்டீரியா தொற்று காரணமாக, கண்ணில் ஏற்படும் பிரச்னைக்கு டிராக்கோமா என்று பெயர். இதில் சற்று ஆறுதலான செய்தி என்னவென்றால், இந்தியா உட்பட பல நாடுகளில் இந்த நோய் முற்றிலுமாக வேரறுக்கப்பட்டிருக்கிறது என்பதுதான்.
இதுபோன்ற பல வகையான கண் நோய்களால் மக்களின் தினசரி வாழ்க்கை பாதிக்கிறது. இந்தப் பார்வைக் குறைபாடுகள் மக்களிடத்தில் பொருளாதாரச் சுமையையும் ஏற்படுத்திவிடுவதாகவும் உலக சுகாதார அமைப்பு கருத்து வெளியிட்டிருக்கிறது.
ஆசிய பசிபிக் நாடுகளில் உள்ள அதிக வருவாய் ஈட்டும் நாடுகளில் மையோபியா எனப்படும் கண் சார்ந்த பிரச்னையால் 53.4 சதவீத மக்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்களாம்.
குறிப்பாக, சீனாவில் உள்ள நகர்ப்புறங்களில் வசிக்கும் வளர்இளம் பருவக் குழந்தைகளில் 67 சதவீதம் பேரும், தென் கொரியாவின் நகர்ப்புறங்களில் வசிக்கும் வளர்இளம் பருவக் குழந்தைகளில் 97 சதவீதம் பேரும், மையோபியாவால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் உலக சுகாதார அமைப்பு அதிர வைக்கும் தகவல்களை வெளியிட்டுள்ளது.
- நெபுளா