புகழ் மறு
ம.ப.பெரியசாமித் தூரன்
26.9.1908 - 29.1.1987
"பெரியசாமித் தூரனைத் தெரியுமா? இப்படி ஓர் எண்ணம் உனக்குத் தேவையா?”
உமா மிஸ் கேட்டபோது, எனக்கு விளங்கவில்லை. நான் எங்கள் பள்ளியில் நடைபெற்ற ஓர் அறிவியல் கண்காட்சிக்கு அத்தனை ஏற்பாடுகளையும் பார்த்துக்கொண்டேன். உண்மையில், என்னோடு இன்னும் நான்கு மாணவர்கள் கூடஇருந்தனர்.
ஒவ்வொருவரும் ஒவ்வொரு வேலையைப் பார்த்தோம். உண்மையில் முதுகுத் தண்டு உடைந்தேவிட்டது. மேஜை நாற்காலிகளை தள்ளிவைத்து, விதவிதமான அறிவியல் மாதிரிகளை வரிசையாக அடுக்கிவைத்து, சுவர்கள் எங்கும் நீண்ட கயிறுகளைக் கட்டிக் கொடுத்து, உயரமான இடங்களில் சார்ட்டுகளை ஒட்டி... அப்பப்பா... எத்தனை வேலைகள். நானா இதையெல்லாம் செய்தேன் என்று ஆச்சரியமே ஏற்பட்டுவிட்டது.
ஆனால், நிகழ்ச்சி முடிந்து, சிறந்த அறிவியல் மாதிரிக்குப் பரிசு கொடுக்கும்போது, இதற்கு உதவியாக இருந்ந அனைவரையும் தலைமை ஆசிரியர் பெயர் சொல்லி, பாராட்டினார். என் பெயரை மறந்துவிட்டார். சொல்லாமல் விட்டுவிட்டார். எனக்கு ஏற்பட்ட கசப்புக்கும் வெறுப்புக்கும் அளவே இல்லை. பின்னர், வகுப்பு ஆசிரியரிடம் என் ஆதங்கத்தைக் கொட்டிவிட்டேன். அவரும் என்னென்னவோ சமாதானப்படுத்தினார். மனசே ஒப்பவில்லை.
உமா மிஸ்ஸிடம் சொன்னார் போலிருக்கிறது. அவர் தான் என்னைக் கேள்வி கேட்டார்.''நான் என் வேலைகளுக்கான உண்மையான அங்கீகாரத்தைத்தானே கேட்கிறேன். இதிலென்ன தவறு?
“நான் கேட்டதுல என்ன மிஸ் தப்பு? என் பெயரை ஏன் ஹெச்.எம். சொல்லல?”
“அப்ப நீ உனக்குப் புகழ்வேணும்னுதான் இதையெல்லாம் செஞ்சியா? உண்மையாகவே, அறிவியல்ல உனக்கு ஆர்வம் இல்லையா?”
அறிவியல் ஆர்வத்தில் தான் அத்தனை வேலைகளையும் இழுத்துப் போட்டுக்கொண்டு செய்தேன். ஒவ்வொரு மாணவரும் செய்துவந்த அறிவியல் மாதிரிகளைப் பார்த்தபோது, ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.
“உன்னை மாதிரி எதிர்பார்த்திருந்தா, இன்னிக்கு தமிழ் கலைக்களஞ்சியமே கிடைச்சிருக்காது, தெரியுமா? பெரியசாமித் தூரன் என்ற அந்த மாமனிதர் யாருன்னாவது தெரியுமா?”
நான் 'தெரியாது' என்பதுபோல் தலைகவிழ்ந்திருந்தேன்.
“ஆங்கிலத்துல 'என்சைக்ளோபீடியா'ன்னு சொல்வாங்க. அதுவும் பிரிட்டானிகா நிறுவனம் வெளியிடும் என்சைக்ளோபீடியா தான் உலக அளவுல புகழ்பெற்றது.”
“விக்கிபீடியா மாதிரியா மிஸ்?”
“அதுக்கு முன்னோடியே என்சைக்ளோபீடியாதான். தமிழ்ல அது மாதிரியான ஒரு கலைக்களஞ்சியத்தை உருவாக்கியே தீரணும்னு ஆசைப்பட்டார் அவினாசிலிங்கம் செட்டியார். அதுக்காகவே 'தமிழ் வளர்ச்சிக் கழகம்'னு ஓர் அமைப்பையே உருவாக்கினார். பெரியசாமித் தூரன் மிகப்பெரிய தமிழறிஞர். சிறுவர்களுக்கு அவர் எழுதிய கவிதைகள், கட்டுரைகள் ரொம்ப பிரபலம். அவரைத்தான் கலைக்களஞ்சியத்துக்கு 'முதன்மை ஆசிரியராக' நியமிச்சாங்க. இருபது ஆண்டுகால உழைப்பு, 1200 கட்டுரை ஆசிரியர்கள், 15,000 தலைப்புகள், 7,500 பக்கங்கள், 10 தொகுதிகள் கொண்டது கலைக்களஞ்சியம். 1953இல் ஆரம்பிச்ச கலைக்களஞ்சிய வேலை, 1968இல் தான் நிறைவு பெற்றுச்சு. பல்வேறு விதமான அறிவியல், தாவரவியல், உயிரியல், இயற்பியல், வேதியியல், மனையியல், மருத்துவம், சோதிடம், சாஸ்திரம், பக்தி இலக்கியம், பெளதிகம் என்று ஏராளமான செய்திகளை உள்ளடக்கி, இந்தக் 'கலைக்களஞ்சியத்தை' உருவாக்கினார் தூரன்.
இது பெரியவங்களுக்கான கலைக்களஞ்சியம். 'குழந்தைகள் கலைக்களஞ்சியம்'ன்னு இன்னொரு பத்து தொகுதிகள் உருவாச்சு. அதுக்கும் முதன்மை ஆசிரியராக இருந்து உழைச்சவர் தூரன் தான்.
காலாகாலத்துக்கும் நிற்கக்கூடிய புத்தகங்கள் இவை. இவற்றை உருவாக்கும்போது, அவர் எப்படியெல்லாம் சிரமப்பட்டார்னு ஒரு புத்தகம் இப்போது வெளியாகி இருக்கு. சிற்பி பாலசுப்பிரமணியம், 'ம.ப.பெரியசாமித் தூரன் நினைவுக் குறிப்புகள்'னு ஒரு புத்தகம் தொகுத்து இருக்கார்.
அந்தக் காலத்துல, தூரனுக்குப் போதிய வருமானம் இல்லை. அதனால தான், அவர் கலைக்களஞ்சியத்துக்குத் முதன்மை ஆசிரியரா வேலைக்கே வந்தார். அதைவிட, இரண்டு மடங்கு சம்பளத்துல வானொலி நிலையத்துல பின்னாடி வேலை கிடைச்சிருக்கு. ஆனால், அவர் அதை ஏத்துக்கலை. கலைக்களஞ்சியத்தைத் தன்னோட கனவுத் திட்டமாகவே அவர் நினைச்சார். அதுக்காகவே தன்னுடைய உழைப்பையெல்லாம் செலவிட்டார்.
இதனால தனக்குப் புகழ் கிடைக்கும், பெயர் கிடைக்கும்னு அவர் நினைக்கலை. ஏன், வருமானம் கூடுதலா தரக்கூடிய இன்னொரு வேலை வந்தபோதுகூட, அவர் மாறலை.
அதுக்குப் பெயர் தான் உண்மையான ஈடுபாடு. தமிழுக்கு தன்னால ஒரு நல்ல விஷயம் நடக்கப் போகுதுன்னு நினைக்கும்போது, மத்த எதுவுமே முக்கியமில்லை. தன்னலமற்ற சேவைன்னா இதுதான்.”
மிகப்பெரிய வேலைகளைச் செய்தவர்கள்கூட, அதற்காக எந்தவிதமான கெளரவத்தையும் எதிர்பார்க்காமல் இருந்திருக்காங்க. நான் இதில் எம்மாத்திரம்? என்னை நினைத்து எனக்கே வெட்கமாக இருந்தது.
தொகுப்பாசிரியராக, திரு. தூரன் அவர்களைத் தேர்ந்தெடுத்தது நல்வாய்ப்பாக அமைந்தது. கலைக்களஞ்சியம் உருவாக்கும் பணி பகீரத முயற்சியாகும். எவ்வளவு பேரறிஞரானாலும் ஒருவரோ, ஒரு சிலரோ கலைக்களஞ்சியத்தைத் தொகுத்து வெளியிட்டுவிட முடியாது. பல்வேறு துறைகளின் வல்லுநர்களுடைய ஒத்துழைப்புத் தேவை. அவ்வொத்துழைப்பைப்பெற ஊக்கப்படுத்தும் திறமையும் பிழைபொறுக்கும் பொறுமையும் வேண்டும். பெரியசாமித் தூரனிடம் இரண்டு தன்மைகளும் சேர்ந்திருந்தன. (ம.ப.பெ.தூரன் நினைவு மலர், 1987)
- நெ.து. சுந்தரவடிவேலு
சுட்டிகள்:
கலைக்களஞ்சியம்:
http://www.tamilvu.org/library/kalaikalangiyam/lkk00/html/lkk00hom.htm
குழந்தைகள் கலைக்களஞ்சியம்:
http://www.tamilvu.org/library/kulandaikal/lku00/html/lku00hom.htm