பழங்காலத் தமிழ் நூல்கள் பலவற்றின் அச்சுப்பிரதிகளைக் கவனித்துப்பார்த்தால், முதல் பக்கத்தில் மூன்று பெயர்களைக் குறிப்பிட்டிருப்பார்கள்: எழுதியவர், பரிசோதித்தவர், பதிப்பித்தவர்.
எழுதியவர், பதிப்பித்தவர் ஆகிய இருவரையும் நமக்குத் தெரியும். இன்றைக்கும் நூலாசிரியர்கள், பதிப்பாளர்கள் என்கிற இரு தனிப்பிரிவுகள் இருக்கின்றன. முதலாமவர் நூலிற்கு அறிவுச்செல்வத்தை வழங்குகிறார். இரண்டாமவர் அந்நூல் வெளியாவதற்குத் தேவையான பொருட்செல்வத்தை வழங்குகிறார்.
இவர்களுக்கிடையில் 'பரிசோதித்தவர்' என்றொருவர் வருகிறாரே; அவர் யார்?
ஒருவர் நூலை எழுதியதும், அது நேரடியாகப் பதிப்பிக்கப்படுவதில்லை. இன்னொருவர் அந்நூலைக் கவனமாக வாசித்து, அதில் இருக்கக்கூடிய பிழைகளையெல்லாம் திருத்தித் தருகிறார். அவரைத்தான் 'பரிசோதித்தவர்' என்று குறிப்பிடுகிறார்கள்.
இன்றைக்கு புரூப் ரீடர் (Proof Reader) எனப்படும் மெய்ப்புத் திருத்துநர்கள் கிட்டத்தட்ட இதேபோன்ற ஒரு பணியில் ஈடுபடுகிறார்கள். நூல்களில் பல திருத்தங்களைச் செய்கிறார்கள். ஆனால், அவர்களுக்கு முதல் பக்கத்தில் நூலாசிரியருக்கு இணையாகப் பெயரைக் குறிப்பிடும் மதிப்பு அளிக்கப்படுவதில்லை.
ஏனெனில், மெய்ப்புத் திருத்தம் என்பது, அச்சுக்கோக்கும்போது நேர்கிற பிழைகளைத் திருத்துவது. அப்பணி மதிப்புமிக்கது என்பதில் ஐயமில்லை. அதேசமயம், அதற்கு முன்பாக இன்னொரு மிக முக்கியமான பணி இருக்கிறது. நூலாசிரியர் எழுதியதை வாசித்து, அதிலுள்ள சொற்குற்றம், பொருட்குற்றம், பிற குறைபாடுகளை ஆராய்ந்து, அதன் தரத்தை மதிப்பிட்டு, தேவைப்படும் திருத்தங்களைச் செய்து தருவது. இப்பணியைச் செய்த அறிஞர்களைத்தான் 'பரிசோதித்தவர்' என்று சிறப்பித்துக் குறிப்பிட்டார்கள்.
இன்றைக்கு, நூலாசிரியருடைய பெயரைப் பார்த்து நூல்களை வாங்குகிறவர்கள் உள்ளார்கள். 'இவர் எழுதியது நிச்சயம் சிறப்பாகத்தான் இருக்கும்' என்று நம்பிக்கையுடன் சொல்கிறார்கள்.
ஓர் அறிஞர் எழுத்துப்பிரதியைக் கவனமாகப் பரிசோதித்தபிறகுதான் அது அச்சுக் கோக்கப்படும். பின்னர், அந்தப் பிரதியில் பிழைகளைத் திருத்துவார்கள். இதுதான் மெய்ப்புத் திருத்தம் (Proof Correction). இதுவும் நூலைப் பரிசோதிப்பதும் ஒன்றில்லை.
இதற்குச் சான்றாக, ஒரு பழைய கடிதம். 1898இல், நடேச சாஸ்திரி என்ற எழுத்தாளர் உ.வே.சா.
அவர்களுக்கு எழுதிய அந்தக் கடிதத்திலிருந்து சில வரிகளை மட்டும் இங்கு காண்போம்:
“வால்மீகி இராமாயணத்தை நான் தமிழில் எழுத எத்தனித்திருக்கிறேன். நான் எழுதிய பக்கங்களைத் தங்களுக்கு அனுப்புகிறேன். அதைப் படித்துச் சிவப்பு மையில் பிழை திருத்தம் பண்ணவேணும். திருத்தித்தான் அச்சுக்குக் காகிதங்களைக் கொடுக்கவேண்டும்.”
இந்தக் கடிதம் வெளிவந்த நேரத்தில் உ.வே.சா. பழந்தமிழ் நூல்களைப் பதிப்பிக்கும் முயற்சியில் இருந்தார். ஆகவே, அவரால் நடேச சாஸ்திரியுடைய நூலைப் பரிசோதிக்க இயலவில்லை. எனினும், முதல் பகுதியை மட்டும் அவர் மேற்பார்த்துக் கொடுத்தார் என்று ஆ.இரா. வேங்கடாசலபதி குறிப்பிடுகிறார்.
உ.வே.சா. போன்ற பேரறிஞர்கள் நூல்களைப் பரிசோதிக்கும் பணியில் ஈடுபட்டிருக்கிறார்கள் எனும்போது, அன்றைக்கு இப்பணிக்கு எந்த அளவு மதிப்பு இருந்தது என்பதை அறியலாம். இப்படிக் கடினமான பரிசோதித்தலைத் தாண்டி வருகிற நூல்கள், முன்பைவிடச் சிறப்பாகவும் தரமாகவும் இருந்திருக்கும். அதனால்தான் நூலாசிரியருக்கு இணையாகப் பரிசோதித்தவருடைய பெயரும் சிறப்புடன் அச்சிடப்பட்டிருக்க வேண்டும்!
- என். சொக்கன்