வலி மிகுதல் என்னும் பண்பை முன்வைத்து, பல சொற்களின் பிழையில்லாத பயன்பாடுகளை அறியலாம். சொற்கள் தமக்குரிய பொருளை உணர்த்துவதற்காகவே வலி மிகுகின்றன என்பதுதான் அடிப்படை. வலி மிகுதல் என்னும் நிலை சொற்களுக்குள்ளேயும் உண்டு. பகுபத இலக்கணத்தில் அதைச் சந்தி என்பார்கள்.
வழிகிறான் என்பதற்கும் வழிக்கிறான் என்பதற்கும் இடையில் என்ன வேறுபாடு? வழி என்கிற பகுதியோடு கிறு என்னும் நிகழ்கால இடைநிலை சேர்கிறது.
'வழிகிறான்' என்பதில் வழிதல் என்ற பொருளை உணர்த்த வலி மிகவில்லை.
வழித்தல் என்னும் பொருளை உணர்த்த வலி மிகுந்தது - வழிக்கிறான்.
தண்ணீரைப் பிடிக்கும் குடம் என்ற பொருளை உணர்த்த 'தண்ணீர்க் குடம்' என்று வலி மிகும். தண்ணீரும் குடமும் என்ற பொருளை உணர்த்த 'தண்ணீர் குடம்' என்று வலி மிகாமல் எழுத வேண்டும். இதுதான் அடிப்படை.
இப்போது கள் விகுதிக்கு வலி மிகுமா மிகாதா என்று பார்க்கலாம்.
கள் என்பது தனிச்சொல்லாக மது,தேன் என்ற பொருளைத் தரும். 'மலர்க்கள்' என்றால் மலரில் திரண்டிருக்கும் தேன் என்று பொருள்.
பன்மைப் பொருளை உணர்த்துவதற்காகத் தோன்றும்போது, கள் என்பது தனிச்சொல் இல்லை. அங்கே அதற்குப் பன்மை விகுதி என்று பெயர். மலர்கள் என்றால் பல மலர்கள் என்று பொருள். மலர்க்கள் என்றால், பூவில் இருக்கும் தேனைக் குறிக்கும்.
ஒரு சொல்லில் விகுதி சேரும்போது, பெரும்பாலும் வலி மிகாமல் இயல்பாகவே நிற்கும். ஆனால், ஒவ்வொரு சொல்லும் ஒவ்வொரு தன்மையுடையது என்பதால், இடத்திற்கேற்ப அதை முடிவு செய்ய வேண்டும். கள் விகுதியைக்கொண்டே அந்த வேறுபாடுகளை எடுத்துக்காட்டலாம்.
1. வன்தொடர்க் குற்றியலுகரத்தினை அடுத்து கள் விகுதி சேரும்போது இயல்பாகவே நிற்கும். வாழ்த்துகள் என்பதே வாழ்த்தின் பன்மையை உணர்த்தும். வாழ்த்துக்கள் என்றால் வாழ்த்துடன் தேன் என்ற பொருளைத் தந்துவிடும்.
2. ஒரு சொல் குற்றியலுகர வகை எதுவாயினும், அங்கே கள் விகுதிக்கு வலி மிகாது. ஆடுகள், மருந்துகள், அழகுகள், எஃகுகள், கொக்குகள்.
3. முற்றியலுகரச் சொற்களுக்கும் கள் விகுதிக்கு வலி மிகாது. கதவுகள், உறவுகள்.
4. தனிக்குறில் எழுத்தினை அடுத்து உகர ஈற்றெழுத்து வரும் சொற்களில், கள் விகுதிக்கு வலி மிகும். கொசுக்கள், அணுக்கள், உருக்கள், தெருக்கள், மடுக்கள்.
5. ஒரு சொல்லின் கடைசி எழுத்து நெடில் எழுத்தாக இருந்தால், அங்கே கள் விகுதிக்கு வலி மிகும். திருவிழாக்கள், வெண்புறாக்கள், தேனீக்கள்.
6. ஓரெழுத்தே சொல்லாக (ஓரெழுத்து ஒருமொழி) வரும்போது, அங்கேயும் கள் விகுதிக்கு வலி மிகும். பூக்கள், ஈக்கள், ஆக்கள்,
7. சொல்லின் ஈற்றெழுத்து நெடிலாக இருந்தாலும், ஐகாரத்திற்கு வலி மிகாது. கொள்கைகள், மெத்தைகள்.
8. ஓரெழுத்து ஒருமொழி ஐகார வரிசை எழுத்துகளில் அமைந்தால் அங்கேயும் கள் விகுதிக்கு வலி மிகாது. கைகள், பைகள்.
9. தனிக்குறிலை அடுத்து ல், ள் ஆகிய மெய்யெழுத்துகள் அமைந்த சொற்களில் கள் விகுதிக்குப் புணர்ச்சி உண்டு. புற்கள், சொற்கள், முட்கள்.
10. தனிக்குறிலை அடுத்து ல், ள் ஆகிய மெய்யெழுத்துகள் தோன்றும் சொற்களில் கள் விகுதிக்குப் புணர்ச்சி இல்லை. இயல்பாக அமையும். விரல்கள், கால்கள், ஆள்கள், நாள்கள், குறள்கள்.
(வலி மிகுதல் நிறைவுற்றது)
- மகுடேசுவரன்