அமெரிக்காவுல படிக்க ஆசை! | பட்டம் | PATTAM | tamil weekly supplements
அமெரிக்காவுல படிக்க ஆசை!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 

பதிவு செய்த நாள்

14 அக்
2019
00:00

“விண்வெளி பிடிக்கும், ஆனால், இப்போது அதிகம் பிடித்துவிட்டது” என படபடப்புடன் பேசத் தொடங்கினார் லக்ஷ்னா. தினமலர் மாணவர் பதிப்பு 'பட்டம்' இதழ் நடத்திய 'பதில் சொல், அமெரிக்கா செல்' வினாடி- வினா போட்டியில் வெற்றிபெற்ற பொலச்சேரி, மகரிஷி வித்யா மந்திர் பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் ஹரிஷ் மற்றும் லக்ஷ்னா வெற்றிகரமாக அமெரிக்கப் பயணத்தை முடித்துக்கொண்டு இந்தியா திரும்பிவிட்டனர். லக்ஷ்னா தம் அமெரிக்க அனுபவத்தைத் தொடர்ந்து சொல்லத் தொடங்கினார்.
“அமெரிக்காவுல மியாமி, ஒர்லாண்டோ, புளோரிடா ஆகிய மூன்று இடங்களுக்குப் போனோம். மியாமி நம்ம சென்னையைப் போல இருந்துச்சு. வெயில் ரொம்ப அதிகம். அதனால, பெரிய வித்தியாசமே தெரியல. அமெரிக்காவுல சாப்பாட்டை பத்தி பயம் அவ்வளவா இல்ல.
பீட்சா, பர்கர், பிரெட் என, நம்ம ஊருல கிடைக்கிறதுதான் அங்கேயும் இருந்துச்சு. இரவு நேரங்களில் இந்திய உணவு சாப்பிட்டோம்.
அந்த ஊருல எல்லா பக்கமும் மரங்கள் இருக்கு. காத்து ரொம்ப சுத்தமா இருக்கு. அங்கேயும் தொழிற்சாலைகளில் இருந்து புகை வெளியேற்றம் இருக்கு. ஆனா, அது மாசு ஏற்படாம இருக்க தேவையான வேலைகள் செய்றாங்கன்னு சொன்னாங்க. அதனால, புகையால எந்தவிதப் பிரச்னையையும் சந்திக்கவில்லை.
என்னை ரொம்ப ஈர்த்த விஷயம், சுத்தம். கண்ட இடத்துல குப்பைகளை வீச முடியாது. தெருக்கள் எல்லாம் அவ்வளவு சுத்தம். அந்த ஊர் விமான நிலையத்தில் இருந்து கவனிச்சுட்டு வந்தேன். ஓரிடத்தில்கூட குப்பைகள், துர்நாற்றம் இல்ல. எனக்கு நம்ம ஊருக்கு வந்ததும், ஏதாவது ஓர் அமைப்புல சேர்ந்து, அமெரிக்கா மாதிரி நம்ம ஊரையும் சுத்தமா வச்சுக்க ஏதாச்சும் செய்யணும்னு தோணுது.
அங்கே பெரும்பாலும் எட்டு வழிச்சாலைகள் தான். நடக்கறவங்க எந்தவித பயமும் இல்லாம நிம்மதியா நடக்கலாம். போக்குவரத்து நெரிசல் எங்கேயும் இல்ல.
ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்துக்குப்போக ரொம்ப நேரம் எடுத்தாலும், சாலை நெரிசல் எதுவும் இல்லாம, மரங்களை வேடிக்கை பார்த்துக்கிட்டே போகலாம். அங்கே நீர்நிலைகளுக்கு நடுவுலதான் சாலைகள் இருக்கு. தண்ணீர் ரொம்ப சுத்தமா இருந்துச்சு. நடக்கும்போது, அதை வேடிக்கை பார்த்துட்டே போலாம்.
யுனிவர்சல் ஸ்டூடியோ, டிஸ்னி ஸ்டூடியோ போனோம். எனக்குப் பிடிச்ச பல படங்களோட பொம்மைகள், ஆர்ட் ஒர்க்ன்னு, அவங்க பேருல ரோலர் கோஸ்டர், நிறைய கேம்ஸ்னு... டைம் போனதே தெரியல.
இதை எல்லாம் முடிச்சு நாசாவுக்கு போயாச்சு. மூணு நாள் நாசாவுலதான் இருந்தோம். செவ்வாய் கிரகத்த பத்தின ஆராய்ச்சிகள் அவங்க செஞ்சுட்டு இருக்காங்க. அங்க என்ன மரம் வளரும், அந்த மிஷன் பத்தி ஏகப்பட்ட விஷயங்கள் சொல்லிக் கொடுத்தாங்க.
விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் எங்களுக்கு ஒரு டாஸ்க் கொடுத்தாங்க. விண்வெளிக்குச் சென்றதும், அங்கே ஏதாவது கோளாறு வந்தால், அதை எப்படிச் சமாளிக்க வேண்டும் என்பதை நாங்க செய்து காட்டினோம். நாசாவோட பல ராக்கெட்டுகள், மாதிரி ராக்கெட்டுகளைப் பார்த்தோம். விண்வெளி விஞ்ஞானிகளோட நேருக்குநேர் நிறைய கேள்விகள் கேட்டு, பல விஷயங்கள தெரிஞ்சுகிட்டோம். அவர் சொல்லிக் கொடுத்த ஒரு விஷயத்தை என் வாழ்க்கையில மறக்கக்கூடாதுன்னு இருக்கேன். அது என்ன தெரியுமா?
எந்தத் துறையில வேணுமானாலும் நாம இருக்கலாம். ஆனா அந்தத் துறையைப் பத்தி படிக்கணும், ஆராய்ச்சி செய்யணும்னு அவர் சொன்னாரு. எனக்கு விண்வெளி அறிவியல் பிடிக்கும், இப்போ எனக்கு கூடுதலா பிடிச்சுப்போயிடுச்சு. என்னோட மேற்படிப்பை நிச்சயம் நான் அமெரிக்காவுலதான் செய்வேன்.” என்று முடித்தார் லக்ஷ்னா.

என்னை ரொம்ப ஈர்த்த விஷயம், சுத்தம். ஓரிடத்தில்கூட குப்பைகள், துர்நாற்றம் இல்ல. எனக்கு நம்ம ஊரில், ஏதாவது ஓர் அமைப்புல சேர்ந்து, அமெரிக்கா மாதிரி நம்ம ஊரையும் சுத்தமா வச்சுக்க ஏதாச்சும் செய்யணும்!

Advertisement

 We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X