'பதில் சொல் அமெரிக்கா செல்' போட்டியில் முதல் பரிசு வென்ற மற்றொரு மாணவர் ஹரிஷ். அமெரிக்கப் பயணம் முடிந்து பள்ளிப் பாடங்களில் மூழ்கிவிட்டார். நாசாவிற்குச் செல்ல வேண்டும் என்ற பல்லாண்டுக் கனவு நிறைவேறிய மகிழ்ச்சியில் இருந்தார் ஹரிஷ். அமெரிக்காவின் யுனிவர்சல், டிஸ்னி வேர்ல்டு, நாசா, வால்மார்ட் என, பல விஷயங்களை அமெரிக்காவில் பார்த்து மிகப்பெரிய அனுபவங்களோடு வந்திருக்கிறார். அவருடன் பேசியதில் இருந்து...
"முதல்முறையா அப்பா, அம்மா யாரும் இல்லாம வெளியில போறதே கொஞ்சம் பயமும், உற்சாகமும் கலந்து இருந்தது. முதல் முறை விமானப் பயணம், அதுவும் அமெரிக்கா வேற என்றதும் ஏகப்பட்ட கனவுகள், எதிர்பார்ப்புகள் இருந்துச்சு. அந்த நாட்டு மக்கள் எப்படி இருப்பாங்க, அவங்களோட பழக்க வழக்கம் எப்படி இருக்கும் என, பல விஷயங்கள தெரிந்து கொள்ள ஆசைப்பட்டேன். என்னை முதல்ல ஈர்த்த விஷயம்ன்னா அது சாலைகள்தான். பெரிய நகரங்களில்கூட சாலையில் வண்டிகள் தேங்கி நெரிசல் இல்ல. சாலைப் பயணங்களை ரசிக்க முடிஞ்சது. அதேபோல, சுத்தமான காத்து, எந்தவித மாசுபாடும் இல்லாம இருந்துச்சு.
நாடு சுத்தமா இருக்கு என்பதை எல்லாம் தாண்டி, வேற ஒரு விஷயத்துல நான் அசந்து போயிட்டேன். அங்கே இருக்கிற மக்கள் ரொம்ப அன்பானவங்களா இருந்தாங்க. நானே தப்பு செய்தாகூட, சாரின்னு சொல்லுவாங்க. தெரிஞ்சவங்க, தெரியாதவங்கன்னு எந்தவித வேறுபாடும் இல்லாம சிரிச்சாங்க, வணக்கம் சொன்னாங்க. ஓரிடத்தில்கூட கும்பலா நிக்க முடியாது. எல்லா இடத்திலேயும் க்யூல நின்னு போகணும். இந்த மாதிரி சில நல்ல விஷயங்களைப் படிப்பைத் தாண்டி நான் பார்த்துப் புரிஞ்சுக்கிட்டேன். அவங்களோட பண்பு அசர வச்சுடுச்சு.
சின்னவயசில் இருந்தே நாசா போகணும்ன்னு எனக்கு ரொம்ப ஆசை. என்னுடைய பல ஆண்டு கனவு நிறைவேறியாச்சு. மூன்று நாட்கள் நாசாவில் இருந்தோம். செவ்வாய் கிரகத்தில் வாழ்வது எப்படி, விண்வெளியில் செடிகள் வளர்ப்பது எப்படி என, பல விஷயங்கள் பத்தி தெரிஞ்சுக்க முடிஞ்சது.
விண்வெளி ஆராய்ச்சியாளர்களைச் சந்திச்சுப் பேச முடிஞ்சது. இது வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாத அனுபவம். அதேபோல், அங்கே நிறைய ராக்கெட்ஸ் இருந்துச்சு, முக்கியமா அப்பல்லோ மிஷின் பத்தி தெரிஞ்சுகிட்டோம்.
இப்போதைக்கு டாக்டர் ஆகணும்னு நினைக்கிறேன், அப்படி இல்லன்னா, கண்டிப்பா விண்வெளி ஆராய்ச்சியில் சேருவேன்” என்று உத்வேகத்துடன் பேசி முடித்தார் ஹரிஷ்.