மகனும், மருமகளும் தனிமையில் பேசிக் கொண்டிருக்கும் போது, ஒட்டு கேட்கும் சில மாமியார்கள், மறுநாள், மருமகளிடம், 'என் மகனுக்கா, தலையணை மந்திரம் போடுறே...' என, வம்பிழுப்பர். தன் மகள்களுடன் கூட்டணி அமைத்து, மருமகளுக்கு எதிராக ஆட்டம் போடுவர்.
இப்படிப்பட்ட மாமியார்களின் ஆட்டத்தை அடக்கி, தண்டனை வழங்குவதற்கென்றே காத்திருக்கிறார், விழுப்புரம் மாவட்டம், டி.இடையாறு (திருவிடையாறு) மருந்தீசர்.
கயிலையில், பார்வதி தேவிக்கு சிவ ரகசியத்தை, சிவன் உபதேசித்த போது, ஆர்வக்கோளாறில் கிளி முகம் கொண்ட, சுகப்பிரம்மர் மறைந்திருந்து ஒட்டு கேட்டார். இதையறிந்த பார்வதி, அவரை பூமியில் பிறக்க சபித்தாள். பதறிப் போன, சுகப்பிரம்மர், சிவனிடம் சாப விமோசனம் கேட்டார்.
'பெண்ணை நதிக்கரையிலுள்ள திருவிடையாறில், லிங்க வடிவிலுள்ள என்னை பூஜித்தால், மீண்டும் சிவலோகம் வரலாம்...' என்றார்.
அதன்படி, லிங்க பூஜை செய்து, விமோசனம் பெற்றார், சுகப்பிரம்மர்.
'பிறர் விஷயத்தில் மூக்கை நுழைக்காதே...' என்ற சொல் வழக்கு, சுகப்பிரம்மரின் மூக்கை அடிப்படையாக வைத்து எழுந்ததே.
சில சிவாலயங்களில், சிவனுக்கும், பார்வதிக்கும் நடுவில், முருகன் இருப்பார். இதை, சோமாஸ்கந்த வடிவம் என்பர். இங்கு வித்தியாசமாக, பாலகணபதி நடுவில் இருக்கிறார். இவரது மேலிரு கரங்களில், குழந்தைகளுக்கு பிரியமான லட்டு, பலாச்சுளையும், கீழ்க்கரத்தில், கரும்பும் உள்ளது.
இங்குள்ள சிவனுக்கு, கிருபாபுரீஸ்வரர், இடையாற்றுநாதர், மருதீஸ்வரர், மருந்தீசர் மற்றும் ஆதிமத்யார்ஜுனேஸ்வரர் என்ற பெயர்கள் இருக்கின்றன. இவர், மேற்கு நோக்கி இருப்பது விசேஷம்.
அம்பாள் ஞானாம்பிகை எனும், திருஇடையாற்று நாயகி, கிழக்கு நோக்கி இருக்கிறாள். இவ்வாறு, எதிரும் புதிருமாக சுவாமி, அம்பாள் உள்ள தலங்களை, 'மாலை மாற்றும் அமைப்பு' என்பர்.
திருமணத் தடை நீங்க, சுவாமி - அம்பாளுக்கு மாலை மாற்றி, அதை பிரசாதமாக பெற்று, பூஜையறையில் வைக்கின்றனர். மாசி, 15, 16ல், மாலை, 5:00 - 5:15 மணி வரை, சூரிய கதிர்கள், சுவாமி மீது விழும். மேற்கு நோக்கிய சிவன் என்பதால், அஸ்தமன கதிர்கள், அவர் மீது படுவது விசேஷம்.
விழுப்புரத்தில் இருந்து திருக்கோவிலுார் வழியாக, 35 கி.மீ., கடந்தால், டி.இடையாறை அடையலாம்.
தி. செல்லப்பா