கேட்டாளே ஒரு கேள்வி!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 அக்
2019
00:00

''சார்... ஒங்களை, போஸ்ட் மாஸ்டர் கூப்புடுறாரு,'' என்று, பியூன் பீதாம்பரம் வந்து சொன்ன தகவல், சகாதேவனை, சங்கடதேவன் ஆக்கியது.
''இன்னாய்யா மேட்டரு... எதுக்கென்னை கூப்புடுறாரு?'' என வினவினான், சகாதேவன்.
''எனக்கின்னா சார், தெரியும்... இட்டாரச் சொன்னாரு... சொல்லிக்கினேன்... அக்காங்,'' என்றான்.
போஸ்ட் மாஸ்டரின் அறையில் நுழைந்தவனின் கண்களில் முதலில் தென்பட்டது, கன்னியம்மாள் தான்.
மொபைல் போனில், ''ஏமிரா... பாக உன்னாரா?'' என்று, யாரிடமோ தெலுங்கில் மாட்லாடிக் கொண்டிருந்தார், போஸ்ட் மாஸ்டர்.
சைகையாலேயே, சகாதேவனை அமரச் சொன்னார்; இருக்கையின் நுனியில், பட்டும் படாமலும் அமர்ந்தான்.
கன்னியம்மாளை பார்க்கப் பார்க்க, சகாதேவனுக்கு பற்றிக் கொண்டு வந்தது. அவன் சம்பளத்திலிருந்து, மாதம், 3,000 வீதம், 12 ஆயிரம் ரூபாய், 'அம்பேல்' ஆகி இருந்தது. இந்த மாதத்தோடு, கடைசி தவணை பிடித்தம் முடிகிறது.
'பார்த்தியா... என், பவரை?' என்று, சகாதேவனை பார்த்து கேட்பது போலிருந்தது, கன்னியம்மாளின் புன்னகை.

சென்னை, அசோக் பில்லர் எதிரே, உதயம் தியேட்டர், பிளாட்பாரத்தில் இருந்தது, கன்னியம்மாளின் பூக்கடை. அவளுக்கு, 60 வயது இருக்கும்.
'கவுன்ட்டர் கிளர்க்' கனகசபை, 'கட்' அடிக்கும் நாட்களில், 'கவுன்ட்டரை' திறந்து, கொடுக்கல் வாங்கல் நிகழ்த்த வேண்டிய பொறுப்பு, சகாதேவனுடையது.
அண்ணன் அந்துமணி மாதிரி, கடமையை, சுகமாக நினைத்தால், சுகம். அதையே அரசியல்வாதி கணக்காக, சுமையாக நினைத்தால், சுமை. கனகசபை அடிக்கடி உதிர்க்கும் வார்த்தை இது. கனகசபை, முதல் ரகம் என்றால், சகாதேவன், இரண்டாவது ரகம்.
தலை குனிந்தவாறு அமர்ந்திருந்த, சகாதேவனின் மனத்திரையில், கன்னியம்மாள் அறிமுகமான அந்த சுப முகூர்த்த தினம், மறு ஒளிபரப்பானது.

அது ஒரு வியாழக்கிழமை -
தேசிய சேமிப்பு பத்திரங்களில் முதலீடு செய்திருந்தவர்களின் விபரங்களை எழுதிக் கொண்டிருந்தான், சகாதேவன்.
அவன் முன் வந்து நின்ற, உதவி போஸ்ட் மாஸ்டர் வாசுதேவன், 'சகாதேவா... மணி, 10:30 ஆயிரிச்சி... கனகசபை, இன்னும் காணோம். 'கவுன்ட்டர்'ல உட்கார்ந்து, வர்றவங்களை கவனிப்பா...' என்றார்.
'வேற யாரையாவது உட்கார சொல்லுங்க, சார்... என்னால முடியாது...' என்றான்.
'ஏம்பா, இப்படி படுத்தறே... தினமுமா, உட்காரச் சொல்றோம்... கனகசபை வரலை, அதனால தானே சொல்றோம்... இதுக்காக, புதுசா ஒரு ஆளை நியமனம் பண்ண முடியுமா... போய் வேலையைப் பாரு...' என்று உத்தரவிட்டு, அகன்றார்.
எழுதியவற்றை கட்டி வைத்தவன், 'கவுன்ட்டரில்' கணினியை உயிர்ப்பித்தான். அன்றைய பரிவர்த்தனைக்கு உரிய தொகையை, காசாளரிடம் வாங்கி, பெட்டியில் அடுக்கி, நிமிர்ந்தான்.
'கவுன்ட்டரில்' முதல் ஆளாக நின்றிருந்த கன்னியம்மாள், 'ரொம்ப நேரமா காத்துகிட்டிருக்கேன்யா... சீக்கிரமா பணம் கொடுத்தீங்கன்னா, பேத்திகிட்ட கொடுத்தனுப்பிட்டு, பொழைப்பை பார்க்க போவேன்யா...' என்று கெஞ்சினாள்.
இரண்டு நாட்களுக்கு முன் முதிர்வடைந்திருந்த, 10 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள, தேசிய சேமிப்பு பத்திரத்தை கொடுத்தாள்.
'நீங்க தான் பொழைப்பை பார்க்க போவணும்... நாங்க, பொழைப்பு இல்லாம தானே இங்கே உட்கார்ந்திட்டிருக்கோம்...' என்று, பத்திரத்தை வெடுக்கென்று பிடுங்கினான், சகாதேவன்.
'பத்திரம்யா... பத்திரம்... கிழிஞ்சிடப் போவுது... அஞ்சு வருஷமா காபந்து பண்ணி வெச்சிருக்கேன்...' என்றாள்.
'அதெல்லாம் எங்களுக்கு தெரியும். கொஞ்ச நேரம் கம்முனு நில்லு. சும்மா தொண தொணக்காதே...' என்று அதட்டியவன், கணினியில் பத்திரத்தின் பதிவு எண், வாங்கிய தேதி, பெயரை பதிவு செய்தவுடன், முதிர்வு தொகை, 14 ஆயிரத்து, 423 ரூபாய் என்று காட்டியது.
கையெழுத்து இட வேண்டிய இடத்தில், இடது பெருவிரல் ரேகை பதியப் பட்டிருந்தது; கன்னியம்மாள் கொடுத்த பத்திரத்தில், கன்னியம்மாள் என்று, ஆங்கிலத்தில் இருந்தது.
'வாங்கும் போது, கை நாட்டு; கொடுக்கும் போது, கையெழுத்து; 'சம்திங் ராங்!' கவனமாகக் கையாள வேண்டிய நபர்...' என, அவனது உள் மனம் எச்சரித்தது.
'எங்கே, கையெழுத்து போடுங்க...' என்றான்.
பத்திரத்தை வாங்கிய கன்னியம்மாள், குறித்துக் கொடுத்த இடத்தில், அவனிடமிருந்தே பேனாவை வாங்கி, ஆர்.கன்னியம்மாள் என்று, தெளிவான ஆங்கிலத்தில், கையெழுத்துப் போட்டு கொடுத்தாள்.
'கையெழுத்து போட தெரிந்த உனக்கு, பத்திரம் வாங்கும் போது மட்டும், ஏன் கை நாட்டு வெச்சு வாங்குனே...' என்றான், சகாதேவன்.
'பத்திரம் வாங்கும் போது, கையெழுத்துப் போடத் தெரியாத, கபோதி தான்... பேத்தி தான் என்னிய, 'அறிவொளி' இயக்கத்துல சேர்த்து, எழுத, படிக்க, கையெழுத்து போட எல்லாம் கத்துக் கொடுத்தது... கத்துக்கிட்டேன்...' என்றாள்.
சகாதேவனால், அதை ஏற்க இயலவில்லை.
'நீங்க தான், கன்னியம்மாள் என்பதற்கு, ஏதாவது அடையாளமா வெச்சிருக்கீங்களா?'
'அடையாளம் தானே... இந்தா பார்த்துக்கோங்க...' என்று, ஆதார் அட்டையை காட்டினாள்.
கன்னியம்மாளின் புகைப்படம் மற்றும் விலாசமும் சரியாக இருந்தது. ஆனால், அதில் கை நாட்டோ, கையெழுத்தோ இல்லை.
உதடு பிதுக்கி, கன்னியம்மாளை தவிர்ப்பதிலேயே குறியாக இருந்தான்.
'ஆமா... இந்த அலுவலகத்துல வேலை செய்யுறவங்க யாரையாவது தெரியுமா?'
'தந்தி அலுவலகத்துல, தாமோதரன்னு ஒருத்தர் இருக்காரு, அவரை தெரியும்... பத்திரம் வாங்கும் போது, அவர் தான் கையெழுத்து போட்டு கொடுத்தாரு...'
கன்னியம்மாள் சொன்ன, தாமோதரன், பரிந்துரை சாட்சியாக, கையெழுத்து போட்டிருந்தார்.
'சரிம்மா... தாமோதரன் சாரை அழைச்சிட்டு வந்திடுங்க... அவராண்ட, அடையாளத்துக்கு ஒரு கையெழுத்து வாங்கிட்டு, பணம் தர்றேன்...' என்று, பத்திரத்தை திருப்பி கொடுத்தான், சகாதேவன்.
அடுத்து, வரிசையில் நின்றிருந்தவர்களை கவனிக்க துவங்கினான்.
மீண்டும், அங்கு வந்த கன்னியம்மாள், 'ஐயா... அவரு இன்னிக்கி, 'லீவு!' நாளைக்கு தான் வருவாராம்...' என்றாள்.
'அப்படீன்னா... நாளைக்கு அவரை அழைச்சிட்டு வந்து பணம் வாங்கிக்குங்க...' என்றான்.
'ஐயா... கொஞ்சம் தயவு பண்ணுங்க... பேத்தியை காலேஜ்ல சேர்த்து இருக்கேன்... இன்னிக்கு மத்தியானத்துக்குள்ள பணம் கட்டியாகணும்... 15 ஆயிரம் குறையுது... அதுக்கு தான் இந்த பணம்...' என்று, மன்றாடினாள்.
மனம் இரங்கவில்லை, சகாதேவன்.
'ஏம்மா... உங்களுக்கு, அசோக் நகர்ல தானே வீடு... அங்கேயே வாங்கி இருக்கலாம்ல... அதை விட்டுட்டு, இங்கே வாங்கிட்டு, ஏம்மா, என் உயிரை எடுக்குறே...' என்றான், எரிச்சலோடு.
'அது சரி... இந்தியாவுல இருக்குற, எந்த தபால் அலுவலகத்திலேயும், எங்க இருக்குறவங்களும் பத்திரம் வாங்கலாம், அது தெரியுமில்லே... அடுத்த தபா வாங்கும்போது, அசோக் நகர்லயே வாங்கிக்கிறேன்... இப்ப, இங்க வாங்குன பத்திரத்துக்கு, பணத்தை குடுங்க ஐயா...
'கட்டுன பணத்தை கேட்டா, உயிரை எடுக்குறேன்னு சொல்றத்துக்கா, உனக்கு சம்பளம் கொடுத்து உட்கார வெச்சிருக்காங்க...' என்ற, கன்னியம்மாளின் கோபத்தில் நியாயம் இருந்தது.
ஆனால், அதை ஏற்கும் பக்குவமோ, மன நிலையோ சகாதேவனிடம் இல்லை.
'போம்மா... எங்கே வேணும்ன்னாலும் புகார் பண்ணு... அடையாளத்துக்கு சரியா எதுவும் இல்லாம, பணம் கொடுக்க முடியாதுன்னா முடியாது தான்...' என்றான், உறுதியாக.
'கவுன்ட்ட'ருக்கு உள்ளே இருந்தவர்கள், சகாதேவனுக்கு ஆதரவாக இருந்தனர்; வெளியே இருந்தவர்கள், கன்னியம்மாளுக்கு ஆதரவுக்கரம் நீட்டினர். ஆனாலும், ஒன்றும் வேலைக்காகவில்லை. அன்றைய வார்த்தை போரில் வெற்றி வாகை சூடியது, சகாதேவன் தான்.
'யோவ்... என்னை, இன்னிக்கு சத்தாய்ச்சிட்டே... ஆனா, உன்னை விடமாட்டேன்யா... இதுக்கு, நீ பதில் சொல்லியே ஆகணும்... அக்காங்...' என்றாள், கன்னியம்மாள்.
'சரிதான் போம்மா... என், 'சர்வீஸ்'ல, உன்னிய மாதிரி எத்தனை பேரை பார்த்திருப்பேன்... போம்மா போ...' என்று விரட்டினான்.

மாவட்ட நுகர்வோர் நீதி மன்றத்துக்கு போனாள், கன்னியம்மாள்.
பெயர், பணி விபரம் மற்றும் 'சர்வீஸ்' குறித்து, நீதிபதி கேட்க, சொன்னான்.
'மிஸ்டர், சகாதேவன்... தேசிய சேமிப்பு பத்திரம் வாங்க, கொடுக்குற மனுவை நீங்க முழுமையா படிச்சு புரிஞ்சிட்டிருக்கீங்களா?'
பதில் சொல்லாமல், தலை குனிந்தான், சகாதேவன்.
'ம்... நீங்க, 'டீல்' பண்ற விண்ணப்பத்தை, முழுமையா படிச்சு புரிஞ்சு வெச்சிருக்கலைன்னு தெரியுது...' என்ற நீதிபதி, 'கிளார்க்'கிடம் ஒரு மனுவைக் கொடுத்து, அதை சகாதேவனை படிக்க சொன்னார்.
படித்தான்.
'சிக்னேச்சர் - தம்ப் இம்ப்ரிஷன் ஆப் தி அப்ளிகென்ட்னு இருக்கா?'
'இருக்கு சார்...'
'ஓ.கே., அதாவது, கையெழுத்து போடத் தெரிஞ்சவங்களும், போடத் தெரியாத படிக்காதவங்களும், கை நாட்டு வெச்சி, பத்திரம் வாங்கலாம்... அப்படித்தானே?'
'ஆமாம் சார்...'
'பத்திரம் வாங்கும்போது, கையெழுத்து போட்டு வாங்குனவருக்கு, கை உடைஞ்சு போயிரிச்சி... இப்ப, அவரால கையெழுத்து போட முடியாது... கை நாட்டு தான் வெக்க முடியும்... அவரு வந்து, பத்திரத்துல கை நாட்டு வெச்சி பணம் கேட்டா, கொடுப்பீங்களா, மாட்டீங்களா?'
'சரியான அடையாளம் பார்த்து கொடுப்போம், சார்...'
'என்னய்யா... சரியான அடையாளம்... அரசாங்கம்... அதுவும், உங்க மத்திய அரசு கொடுத்திருக்குற ஆதார் கார்டு அடையாளத்தை விடவா வேற வேணும்...'
பேச வார்த்தையின்றி, 'திருதிரு'வென்று முழித்தான், சகாதேவன்.
'பத்திரம் வாங்கும்போது, எனக்கு எழுத படிக்க தெரியாது... அப்புறம், இந்த அஞ்சு வருஷத்துல கத்துகிட்டேன்னு, தெளிவா சொல்லியும், அதை ஏத்துக்காம, அந்தம்மாவை அலைக்கழிச்சிருக்கீங்க...
'பத்திரத்துக்கு பணம் கொடுக்காம, மன உளைச்சல் ஏற்படுத்தி இருக்கீங்க... இதுக்கு உங்க துறை காரணமில்லே... முழுக்க முழுக்க, உங்க சேவை குறைபாடும், பணியில் அலட்சியமும்... 'சர்வீஸ் பிபோர் செல்ப்'ங்கற தபால் இலாகாவின் சேவையையே கேள்விகுறி ஆக்கி இருக்கு...
'பத்திரத்தின் முதிர்வு தொகையோட, மனுதாரருக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கும், உங்க சேவை குறைபாட்டுக்கும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும், வழக்கு செலவுக்கு, 2,000மும் மொத்தம், 12 ஆயிரம் ரூபாயை, உங்க நாலு மாச சம்பளத்துல பிடித்தம் செஞ்சி, கன்னியம்மாளுக்கு கொடுக்கும்படி உத்தரவிடுகிறேன்...' என்றார், நீதிபதி.
சகாதேவன் தலை நிமிர்ந்த போது, மொபைல்போன் உரையாடலை முடித்திருந்தார், போஸ்ட் மாஸ்டர்.
''அந்தம்மா, உங்ககிட்ட ஒரு கேள்வி கேக்கணுமாம், சகாதேவன்,'' என்றவர், கன்னியம்மாளிடம் திரும்பி, ''அப்படித் தானேம்மா?'' என்றார்.
''ஆமாம்யா,'' என்ற கன்னியம்மாள், கையில் வைத்திருந்த பையிலிருந்து,
100 ரூபாய் கட்டு ஒன்றை எடுத்து, சகாதேவனிடம் நீட்டினாள்.
திகைத்து, திருதிருவென்று முழித்தான், சகாதேவன்.
''என்னய்யா பாக்குறே... உனக்கு, புத்தி வரணும்ன்னு தான், கோர்ட்டுக்கு இழுத்தேன்... உன்னாண்ட தண்டம் வசூலிச்சி, வாங்கிக்கணும்ன்னு இல்லே... உழைச்சு சம்பாதிக்குற காசுதான்யா உடம்புல ஒட்டும்...
''அதான், கோர்ட்டுக்கு செலவு பண்ண காசை மட்டும் எடுத்துகிட்டு, மீதி, 10 ஆயிரம் ரூபாயை திருப்பி கொடுத்திட்டு, உன்னை பார்த்து, ஒரு கேள்வி கேக்கோணும்ன்னு தான் வந்திருக்கேன்,'' என்றாள்.
''வாங்கிக்கோங்க,'' என்றார், போஸ்ட் மாஸ்டர்.
''சாரி... என்னை மன்னிச்சிடுங்க,'' என்றான், சகாதேவன்.
''மன்னிக்குறது இருக்கட்டும்... அன்னிக்கு, என்னை பார்த்து, அசோக் நகர்லயே போஸ்ட் ஆபீஸ் இருக்கே, அங்கேயே பத்திரம் வாங்காம, இங்கே ஏன் வந்தேன்னு தானே கேட்டே?''
''அ... ஆமாம்மா... தெரியாம கேட்டுட்டேன்,'' என்றான்.
''உங்க வீடு எங்கய்யா இருக்கு?''
''தா... தாம்பரத்துல.''
''தாம்பரத்துலேயும் போஸ்ட் ஆபீஸ் இருக்கில்லே?''
''இ... இருக்கு.''
''பின்னே, நீ ஏன் தாம்பரத்துலே வேலை பாக்காம, இந்த போஸ்ட் ஆபீசுக்கு வந்து வேலை பாக்குறே?''
தலை குனிவதை தவிர வேறு ஒன்றும் செய்ய முடியவில்லை. குனிந்தான், உறைந்தான்.
போஸ்ட் மாஸ்டரின் சேம்பரிலிருந்து, வீர நடை போட்டு, கம்பீரமாக வெளியே வந்தாள், கன்னியம்மாள்.

எஸ்ஸாரெஸ்

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (3)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mannathil Muralidharan - Singapore,சிங்கப்பூர்
20-அக்-201920:47:46 IST Report Abuse
Mannathil Muralidharan Very good story
Rate this:
Cancel
Murugan - Bandar Seri Begawan,புருனே
20-அக்-201909:07:51 IST Report Abuse
Murugan வாடிக்கையாளரை மதிக்காதவர்களுக்கு சரியான செருப்படி..
Rate this:
Cancel
20-அக்-201906:00:52 IST Report Abuse
keno upanishad அவருக்கு எங்கே போஸ்ட்டிங் போடுகறார்களோ அங்கேதான் வேலை பார்க்க முடியும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X