எண்ணெய் சேர்க்காமல், தேங்காய், வேர்க்கடலையில் உள்ள இயற்கையான எண்ணெயில், உடலுக்கு அவசியமான, நல்ல கொழுப்பு உள்ளது. பழங்காலத்தில், மன்னர்கள் மட்டுமே சாப்பிட்ட கறுப்பு அரிசி, புரதம், நார்ச்சத்து நிறைந்தது. விட்டமின் ஈ இருப்பதால், தோலின் ஆரோக்கியத்திற்கு நல்லது. கறுப்பு அரிசி சாதம் சாப்பிட சற்று சிரமம் என்பதால், பண்டிகை காலங்களில், லட்டு செய்து சாப்பிட்டால், அதனுடைய பலன் கிடைக்கும்.
தேவையான பொருட்கள்
கறுப்பு அரிசி - 1 கப்
ஏலக்காய் - 10
பொடித்த வெல்லம் - 3/4 கப்
தேங்காய துருவல் - 1 கப்
வறுத்த வேர்க்கடலை - 1 கப்
செய்முறை
அரிசியை நன்கு கழுவி, நீரை வடித்து, 10 நிமிடங்கள் கழித்து, வெறும் வாணலியில் வறுத்துக் கொள்ளவும். ஆறியதும், மிக்சியில் போட்டு, ஏலக்காய் விதைகளை சேர்த்து, நொறுங்கலாக அரைத்துக் கொள்ளவும். இதில், பொடித்த வெல்லத்தை சேர்த்து அரைத்து, அத்துடன் தேங்காய் துருவலையும் போட்டு அரைக்கவும். இதில், வேர்க்கடலையை சேர்த்து அரைக்கவும்.
அகலமான பாத்திரத்தில் கலவையை மாற்றி, சிறு உருண்டைகளாக செய்து, காற்றுப் புகாத கண்ணாடி பாட்டிலில் வைத்தால், ஒரு வாரம் வரை அப்படியே இருக்கும். பிரிஜில் வைத்தால், இன்னும் அதிக நாட்கள் வரும்.