மரியாதை
காலையில் இருந்தே பல விஷயங்கள் மனத்தில் ஓடிக்கொண்டு இருந்தன. அன்று பேச்சுப் போட்டி. பரிசு கிடைக்கும் என்ற நம்பிக்கை இல்லை. ஆனால், தமிழ் மிஸ் என் பெயரைச் சேர்த்துவிட்டதாகச் சொன்னார். 'மரியாதை' என்பதுதான் தலைப்பு. உண்மையில், கடைசிநாள் வரை இதைப்பற்றி எந்தக் குறிப்பும் எடுத்துக்கொள்ளவில்லை.
முதல்நாள் இரவுதான் இணையத்தில் விதவிதமாகத் தேடினேன். அத்தனையும் பொக்கிஷங்கள். எப்படித் தொகுத்துப் பேசப் போகிறேன் என்று தெரியவில்லை.
என் பெயரை அழைத்தார்கள். மேடை ஏறினேன்.
“அனைவருக்கும் வணக்கம். மரியாதை மனத்தில் இருந்தால் போதாதா? அதை வெளிப்படையாகச் சொல்ல வேண்டுமா என்றெல்லாம் கேட்டுக்கொண்டு இருந்தவன் நான். இன்றைக்கு இந்தத் தலைப்பில் பேசுவதற்காகத் தயார் செய்தபோதுதான், என் தவறு எனக்கே உறைத்தது. என்ன உறைத்தது என்பதைக் கடைசியில் சொல்கிறேன்.
முதலில் தெரிந்துகொண்டதைச் சொல்கிறேன். ஒவ்வொருவருமே மாணவர்கள் தான். தொடர்ச்சியாக கற்றுக்கொள்பவர்கள் தான். சொல்லிக் கொடுப்பவர்கள் எல்லோருமே நம் ஆசிரியர்கள்தான். அவர்கள் சொல்லிக் கொடுத்த விஷயம், நம் வாழ்க்கையையே புரட்டிபோட்டுவிடக் கூடும். அதை அப்போது உணர மாட்டோம். உணரும்போது, அதற்கு மூல காரணமாக இருந்தவர்கள் எல்லோரும் மரியாதைக்குரியவர்கள் ஆகிவிடுகிறார்கள்.
நமக்கு சச்சின் டெண்டூல்கரைத் தெரியும். ரமாகாந்த் அர்ச்ரேக்கரைத் தெரியுமா? தெரியாது. அர்ச்ரேக்கர் தான் சச்சினுக்கு கிரிக்கெட் விளையாடச் சொல்லிக் கொடுத்தவர். அவருடைய அத்தனை திறன்களையும் வளர்த்தவர். சின்னப் பையனாக அர்ச்ரேக்கரிடம் போனார் சச்சின். அவருடைய திறமையைக் கண்டுபிடித்து, படிப்படியாக கிரிக்கெட்டின் அத்தனை நுணுக்கங்களையும் சொல்லிக் கொடுத்து, பழக்கியவர் அவரது குரு.
அதன் பிறகு, உலக அளவில் சச்சின் புகழ்பெற்றபோது, தன்னுடைய உந்துசக்தியாக, வழிகாட்டியாக இருந்த அர்ச்ரேக்கரை மறக்கவில்லை. அவர் மறைந்தபோது, சச்சின் நேரே போய், அவருடைய உடலைத் தோளில் சுமந்துசென்றார்.
சச்சின் பேசினதுதான் என்னை ரொம்பவும் கவர்ந்தது. 'அர்ச்ரேக்கர் சாருடைய வரவால், சொர்க்கத்தில் ஆடப்படும் கிரிக்கெட் மேம்படப் போகிறது. அவருடைய பல மாணவர்களைப்போல், நானும் சாரின் வழிகாட்டலில்தான் கிரிக்கெட்டின் அனா, ஆவன்னா கற்றுக்கொண்டேன். என் வாழ்க்கையில் அவர் செய்திருக்கும் பங்களிப்பை வார்த்தைகளால் வர்ணித்துவிட முடியாது. நான் நிற்பதற்கான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தவர் அவரே. அர்ச்ரேக்கர் சார், எங்களுக்கு நேரடியாக விளையாடவும், நேர்மையோடு வாழவும் சொல்லிக் கொடுத்தார். நன்றாக விளையாடினீர்கள் சார், நீங்கள் எங்கிருந்தாலும் அங்கே நிறைய பேருக்கு விளையாடச் சொல்லிக் கொடுங்கள் சார்.'
இதேபோல், மைக்ரோசாஃப்ட் நிறுவனத்த்தின் தலைவர், பில்கேட்ஸ் எழுதியதைப் படித்தபோதும் எனக்கு ஆச்சரியம் ஏற்பட்டது. அவருடைய பள்ளிக்கூடத்தில் நூலகராகவும் ஆசிரியராகவும் இருந்த திருமதி கஃபியேர் பற்றி, பில்கேட்ஸ் எழுதியது இதுதான்:
'நான் முதன் முதலில், திருமதி கஃபியேரைச் சந்தித்தபோது, அவர் சியாட்டில் வியூ ரிட்ஜ் ஆரம்பப் பள்ளியில், அற்புதமான பள்ளி நூலகராக இருந்தார். நான் அப்போது நான்காம் வகுப்பு மாணவன். நான் என்னை எப்போதும் மறைத்துக்கொள்வேன். எனக்குப் பல குறைகள் இருந்தன. முக்கியமாக, என் கையெழுத்து படுமோசமானது. என் வகுப்பு மேஜையோ ஒழுக்கற்று இருக்கும். அதேபோல் எனக்கு வாசிப்பதில் ஆர்வம் உண்டு என்பதையும் அவரிடம் இருந்து மறைத்துக்கொண்டு இருந்தேன். படிப்பது என்பது, பெண் பிள்ளைகளுக்கானது, ஆண்களுக்கானது அல்ல என்ற எண்ணம் அப்போது இருந்தது.
திருமதி. கஃபியேர் என்னை அரவணைத்துக்கொண்டார். ஒழுங்கற்று இருப்பது ஒன்றும் தவறில்லை என்றார். மூளைக்கார பையன்கள் எல்லோரும் எப்போதும் படித்துக்கொண்டுதான் இருப்பார்கள் என்றார்.
தன்னுடைய புத்தக ஆர்வத்தை என்னோடு பகிர்ந்துகொண்டு, என்னைக் கூட்டுக்குள் இருந்து வெளியே கொண்டுவந்தார். 'என்ன புத்தகங்கள் படிக்கப் பிடிக்கும்?' 'உனக்கு எதிலெல்லாம் ஆர்வம்?' என்பன போன்ற கேள்விகளின் மூலம் என்னை நெருங்கத் தொடங்கினார். உடனே அவரே எனக்கு ஏராளமான புத்தகங்களை எடுத்துக்கொடுத்தார். அப்போது நான் படித்துக்கொண்டிருந்த பல புத்தகங்களைவிட, அவை குழப்பமாகவும் சவால்விடுவதாகவும் இருந்தன.
அவர் படித்த அற்புதமான வாழ்க்கை வரலாற்று நூல்களை எனக்குப் படிக்கக் கொடுத்தார். அவற்றை நான் படித்தவுடன், அதைப் பற்றிப் பேசுவதற்கு நேரம் ஒதுக்கிக்கொண்டு வருவார்.
'அந்தப் புத்தகம் உனக்குப் பிடித்திருந்ததா?' 'அதிலிருந்து என்ன கற்றுக்கொண்டாய்?' என்று கேட்பார். நான் சொல்வதையெல்லாம் கவனமாகக் கேட்டுக்கொள்வார். நூலகத்திலும் வகுப்பறையிலும் நான் மேற்கொண்ட புத்தகங்கள் தொடர்பான உரையாடல் மூலம், மிகச்சிறந்த நண்பர்கள் ஆனோம்.'
என்றெல்லாம் தொடர்ந்து எழுதும் பில்கேட்ஸ் கடைசியில் முடித்த விதம் தான் என் நெஞ்சை நெகிழச் செய்தது.
'ஒரு குழந்தையின் வாழ்க்கையை வடிவமைக்க ஒரு நல்ல மனிதருக்கு எப்படிப்பட்ட ஆற்றல் இருந்திருக்கிறது என்பதை நினைக்கும்போது ஆச்சரியமாக இருக்கிறது.' என்று முடித்தார்.
2006இல் திருமதி. கஃபியேர் மறைந்துபோனார். அதற்கு முன்னர், அவரைப் போய்ச் சந்தித்து, தன் வாழ்க்கையில் அவர் எவ்வளவு தாக்கத்தை ஏற்படுத்தினார் என்பதைத் தெரிவித்திருக்கிறார் பில்கேட்ஸ்.
மரியாதை மனத்தில் இருந்தால் அர்த்தமில்லை. அதை வெளிப்படையாகத் தெரிவிக்கவும் வேண்டும் என்று புரிந்துகொண்ட தருணம் இது. உண்மையில், இன்றைய தலைப்பு மூலம் என்னை மேன்மேலும் வாசிப்பதில் ஆர்வம் ஏற்படுத்திய தமிழ் மிஸ்ஸுக்கு நன்றி, வணக்கம்.”
நான் இறங்கியபோது, ஒலித்த கைத்தட்டல் காதுகளில் விழவில்லை. இவர்கள் எல்லோரும் என் வாழ்வில் மறைமுகமாக ஏற்றிவரும் ஞான தீபம் மட்டுமே நினைவில் இருந்தது.