அக்டோபர் 24: ஐ.நா. தினம்
ஐக்கிய நாடுகள் சபை, 1945ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. பொதுச்சபை, பாதுகாப்புச் சபை, பொருளாதார சமூக சபை, பன்னாட்டு நீதிமன்றம், அறங்காவலர் அவை மற்றும் செயலகம் என, ஆறு முக்கிய அங்கங்களுடன் இந்தச் சபை நிறுவப்பட்டது. இந்த ஆறு அங்கங்களே சர்வதேச நாடுகளில் நடைபெறும் பல்வேறு பிரச்னைகளுக்குத் தீர்வுகண்டு வருகின்றன.
ஐ.நா.வின் முக்கிய மற்றும் நிரந்தர அமைப்பாக, பொதுச்சபை உள்ளது. முக்கிய நடவடிக்கைகள் அனைத்தையும் மேற்கொள்ள இந்தச் சபைக்கு அனைத்து அதிகாரங்களும் உண்டு. பொதுச்சபை ஆண்டுக்கு ஒருமுறை கூடி, பன்னாட்டுப் பிரச்னைகளைப் பேசும். இந்தியாவுக்குப் பெருமை சேர்க்கும் விதமாக, 1953ஆம் ஆண்டு முன்னாள் பிரதமர் நேருவின் சகோதரி விஜயலட்சுமி பண்டிட், பொதுச்சபையின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
உலக நாடுகளில் அமைதியை நிலைநாட்டவும், பாதுகாப்பு நடவடிக்கைகளை பலப்படுத்தவும் பாதுகாப்பு சபை வழிவகுக்கிறது. பல நாடுகள் இதில் உறுப்பினர்களாக உள்ளன. அவற்றில் அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ், இங்கிலாந்து, சீனா ஆகிய நாடுகளுக்கு மட்டும் தடையில்லா அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இந்த நாடுகள்தான் நிரந்தர உறுப்பு நாடுகளாகவும் இருக்கின்றன. இந்தியா, ஜெர்மனி, ஜப்பான் போன்ற நாடுகள் நிரந்தர உறுப்பினர்கள் பட்டியலில் சேர்க்கக் கோரிக்கை விடுத்துள்ளன.
பொருளாதார சமூக செயற்பாடுகளை, அதே பெயரில் இயங்கும் அமைப்பு கண்காணிக்கிறது. அறங்காவலர் அவை, உறுப்பு நாடுகளைக் கண்காணித்து நெறிப்படுத்துகிறது. உறுப்பு நாடுகளின் சர்வதேசப் பிரச்னைகளை விசாரித்து, தீர்ப்பு வழங்கும் பணியை பன்னாட்டு நீதிமன்றம் செய்கிறது. நெதர்லாந்தில் பன்னாட்டு நீதிமன்றம் செயற்படுகிறது. நிர்வாகப் பணிகளை நிறைவேற்றும் பணியை ஐ.நா. செயலகம் செய்கிறது.
இன்னும் பல கிளை அமைப்புகளுடன் சர்வதேச நாடுகளின் பாதுகாவலனாக விளங்கி வருகிறது ஐ.நா. சபை. அத்தகைய பெருமைக்குரிய ஐக்கிய நாடுகள் சபை தோற்றுவிக்கப்பட்ட தினத்தை அக்டோபர் 24, 1948 முதல் உலக நாடுகள் கொண்டாடி வருகின்றன.