நினைவுகளும் நிகழ்வுகளும்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 அக்
2019
00:00

மனைவி, அமிர்தம் இறந்து, ஒரு ஆண்டு ஆகிவிட்டது. இந்த ஒரு ஆண்டில், அவளது நினைவில் இருந்து சிறிது சிறிதாக மீண்டார், விசுவம். தாயாருக்கு திதி கொடுப்பதற்காக, பெங்களூருவிலிருந்து, மனைவி சினேகா, மகன் பரத்துடன் வந்து விட்டான், சாரதி.
ஊருக்கு திரும்பும் போது, தந்தையையும் உடன் அழைத்து செல்லும் எண்ணத்துடன், 'அம்மாவுக்கு, திதி கொடுத்த பின், இரண்டு நாட்களில், பெங்களூரு கிளம்பணும். குடியிருந்த வீட்டை விற்பதை பற்றி பிறகு யோசிக்கலாம்; தற்சமயம், பூட்டிச் செல்வோம்...' என்று, மகன் சொன்னதை ஏற்றுக் கொண்டார், விசுவம்.
சாரதியும், சினேகாவும் ஒரே அலுவலகத்தில் வேலை பார்க்கும் போது, காதலித்தனர். சினேகாவும், மகனை அனுசரித்து போக கூடியவள் என்பதை உணர்ந்து, இருவருக்கும் திருமணம் செய்து வைத்தனர். மருமகள், சினேகாவை பற்றி எந்த குறையும் சொல்ல முடியாது.
தங்களோடு சேர்ந்திருக்கா விட்டாலும், பெங்களூருவிலிருந்து, தினமும் போன் செய்து விசாரிப்பாள். பேரன் பரத் பிறந்த போது, போய் பார்த்து வந்தனர். அதன்பின், அமிர்தம் இறந்த போது தான் வந்தனர். அப்போதே, தங்களுடன் வரச்சொல்லி வற்புறுத்தினாள், சினேகா; விசுவம் தான், வர மறுத்தார்.
பழைய நினைவுகளில் மூழ்கி இருந்தவரை, ''தாத்தா... இப்போ, எங்கே போறோம்?'' என்றான், பரத்.
''ஊருக்கு போறோம் இல்லியா... தாத்தாவோட நண்பரை பார்த்து சொல்லப் போறோம். அவர், ஓட்டல் வச்சிருக்கார். உனக்கு, காபி, வடை எல்லாம் வாங்கி தரேன்,'' என்றார்.
''ஐ... ஜாலி,'' என குதித்தான், பரத்.
''தாத்தா... காலைல, பால் தான் குடிக்கணும்... காபி குடிச்சா, அம்மா திட்டுவாங்க.''
''ஒருநாள் தானே... ஒண்ணும் சொல்ல மாட்டாங்க.''
''நீங்க சொன்னதா சொல்லிடுவேன்,'' என, விரலை ஆட்டியபடி, வேடிக்கையாக மிரட்டியவன், ''தாத்தா... நீங்க வாத்தியாரா,'' என்றான்.
''ஆமாடா... முன்னாள் வாத்தியார்... தாத்தாவுக்கும் வயசாயிடுச்சுல்ல... அதனால, வேலைக்கு போகலை.''
''அப்போ, ஊருக்கு வந்தா, எனக்கு பாடம் சொல்லித் தருவீங்களா?''
''ஓ... கண்டிப்பா... நீ, ஒண்ணாம் வகுப்பு தானே படிக்கிறே... நல்லா படிக்கலைன்னா அடிக்கவும் செய்வேன்.''
''அதெல்லாம் படிப்பேன்... தினமும், 'ஸ்கூலுக்கு' கூட்டிட்டு போகணும்.''
''கூட்டிட்டு போறேண்டா, செல்லம்... உங்கப்பாவை நான் தான், 'ஸ்கூலுக்கு' கூட்டிட்டு போவேன்... 'ஸ்கூல்' விட்டதும், உங்க பாட்டி கூட்டிட்டு வந்துடுவா.''
''பாட்டி தான் இப்போ இல்லையே,'' என, சோகமானான், பரத்.
''அதனால் என்ன... நான் இருக்கேன்ல,'' என்று பேச்சை மாற்றினார், விசுவம்.
''இதோ ஓட்டல் வந்துடுச்சு,'' என்று, உள்ளே நுழைந்தவரை, வரவேற்றார் முதலாளி, குருசாமி.
''வா... விசுவம்... சார் தான், உன்னோட பேரனா,'' என்றார்.
''நான், சார் இல்லை... பாய் தான்,'' என்று, வெடுக்கென்று சொன்னவனை பார்த்து, இருவரும் சிரித்தனர்.
சர்வரிடம், வடை, காபி எடுத்து வரச்சொல்லி, விசுவத்திடம், ''கேள்விப்பட்டேன்... பெங்களூருவுக்கு போறீயாமே... தங்கச்சி இருந்த வரை, உனக்கு அந்த நினைப்பே வந்ததில்லை,'' என்றார், குருசாமி.
விசுவத்தின் மனைவியை, தங்கச்சி என்று பாசத்தோடு கூப்பிடுவார்.
''ஆமாப்பா... கொஞ்ச நாளா இங்கே வராததால, உனக்கு விஷயம் தெரியாதுல்ல... எனக்கும் வயசாகுது... பையனோடு சேர்ந்து இருக்கலாம்ன்னு முடிவு பண்ணிட்டேன்... எங்கே போனாலும், உன்னையும், உன் ஓட்டலையும் மறக்க மாட்டேன்...
''எத்தனை முறை நானும், மனைவியும் வந்து சாப்பிட்டிருக்கோம்... இங்கே வந்தாலே, அவ நினைப்பு தான் வரும்... என்னமோ தெரியலை, அவ கூட பழகினவங்களை, பேசினவங்களை பார்த்தாலே, அவ என்னோட இருக்கற மாதிரி, மனசுக்கு சந்தோஷமா இருக்கு... அதனால, மகனுடன் இருக்கற ஒவ்வொரு நிமிடமும், அவளை பற்றி பேசிப் பேசி, பொழுதை போக்குவேன்,'' என்றவர், காபியை குடித்தபின், பரத்துடன் கிளம்பினார்.
வீட்டு வாசலில், சாரதியும் - சினேகாவும் காத்திருந்தனர்; அவளின் முகம் இறுகி இருந்தது.
''எங்கேப்பா போனீங்க... ரொம்ப நேரமாச்சே,'' என்றான், சாரதி.
''ஓட்டலுக்கு போய் காபி சாப்பிட்டுட்டு, முதலாளி நண்பர்கிட்ட, ஊருக்கு போறேங்கறதை சொல்லிட்டு வந்தேன்.'' பதறினான், சாரதி.
''என்னப்பா இப்படி பண்ணிட்டீங்க... கண்ட ஓட்டல்ல சாப்பிடுறது, சினேகாவுக்கு பிடிக்காதுன்னு தெரியுமில்ல... அதுவும், காபி வேற... அவ, ரொம்ப சுத்தம் பார்ப்பா... எதையாவது செய்து, பிரச்னையை உண்டு பண்ணிடாதீங்க.''
சாரதியா இப்படி பேசியது, அவரால் நம்ப முடியவில்லை. சிறு வயதில், சாரதியும், தானும் வெளியில் சென்று வடை சாப்பிட்டதை, மனைவியிடம் சொன்னதும், 'எனக்கு ஏன் வாங்கி வரவில்லை...' என்று செல்லமாக திட்டியது நினைவுக்கு வந்தது.
காலை டிபனுக்கு பின், மனைவியின் அண்ணன் முறையாக இருப்பவரின், வீட்டுக்கு போனார்.
''என்ன விசுவம்... தங்கச்சி இறந்து ஒரு வருஷம் ஆகப்போகுதே... திதி கொடுக்க எல்லா ஏற்பாடும் பண்ணியாச்சா... சாரதி வந்துட்டானா... ஏதாவது உதவி வேணும்னா சொல்லு,'' என்று, அவர் கேட்க, விஷயத்தை சொன்னார், விசுவம்.
''அடடா... என்ன விசுவம், நான் இதை எதிர்பார்க்கவே இல்லை. தங்கச்சி இல்லைன்னாலும், உன் வீட்டுக்கு வந்து பழங்கதைகளை பேசிட்டு இருக்கறதுல மனசுக்கு சந்தோஷமா இருக்கும்... அதுக்காக, உன்னை தடுக்க முடியுமா...
''நீயும், எத்தனை நாள் தான் தனியா இருப்ப... உன் மகனோட இருந்தா, தங்கச்சியோட இருக்கற ஞாபகத்தோட இருப்ப... சரி, ஊருக்கு போறதுக்குள்ள வீட்டுக்கு வர்றேன்,'' என்றார்.
''சரி... கிளம்பறேன்,'' என்றார், விசுவம்.
சாரதி பள்ளியில் படித்துக் கொண்டிருந்த சமயம், ஒரு திருமணத்திற்கு வெளியூர் சென்றிருந்தாள், அவரது தங்கை. விசுவத்தையும், சாரதியையும் தன் வீட்டில் வந்து தங்குமாறு அழைத்தார்.
ஆனால், மனைவி, தினமும் போன் செய்து விசாரிக்கையில், 'ஒருநாள் கூட உம்மால் பேசாமல் இருக்க முடியாதா...' என, அவர் கேலி செய்யலாம் என, மறுத்து விட்டார், விசுவம்.
இந்த ஒரு ஆண்டில், மனைவி இல்லாமல் எப்படி இருந்தார் என்று, அவர்களுக்கு மட்டுமல்ல, விசுவத்துக்கே ஆச்சரியம். உண்மையில் மனைவி இல்லை என்றே, அவர் நினைக்கவில்லை. வீட்டில் அவள் இருந்த இடங்கள், வெளியில் அவளோடு பேசி பழகிய உறவினர்கள், அவளை பற்றி பேசும்போது, தன்னோடு அவள் இருப்பது போன்ற உணர்வு தான், அவருக்குள் ஏற்படும்.
அடுத்து, மனைவியின் அக்கா, வீட்டிற்கு சென்றார்.
வெளியே கிளம்பிக் கொண்டிருந்தவர், இவரை பார்த்ததும், ''வாப்பா... உங்க வீட்டுக்கு தான் கிளம்பிக் கொண்டிருக்கிறேன்... சாரதி வந்துருக்கானாமில்ல,'' என்றார்.
அவரை விடவும் வயதில் மூத்தவள் என்ற உரிமையில், ஒருமையில் தான் அழைப்பாள்.
''வாங்க... நடந்துகிட்டே பேசுவோம்,'' என்றார், விசுவம்.
மருமகளிடம் சொல்லி, அவருடன் கிளம்பினாள்.
''ஊருக்கு போறீயாமே... எங்களை மறந்துடாதே,'' என்றவள், பழைய சம்பவங்களை நினைவுபடுத்தி பேசிக் கொண்டே வரவும், வீடு வந்தவுடன் தான், விசுவத்தால், அவள் பேச்சை நிறுத்த முடிந்தது.
''சாரதி...'' என கூப்பிட்டுக் கொண்டே உள்ளே நுழைந்தவள், மூவரும் சாப்பிட்டுக் கொண்டிருப்பதை பார்த்து, ''உங்கப்பாவை விட்டுட்டு சாப்பிடுறீங்களா... உங்க அம்மா இருந்த வரை, வயிறு வாட விட மாட்டா... அவன் சாப்பிடுறதை பார்த்துட்டு தான் சாப்பிடுவா,'' என்றாள்.
''நாங்க எல்லாரும் வேலைக்கு போறவங்க... நேரத்துக்கு சாப்பிட்டு பழக்கம்,'' என, வெடுக்கென்று கூறினாள், சினேகா.
''அண்ணி, நேரமாச்சுல்ல... குழந்தை பசி தாங்க மாட்டான்... வாங்க, நாம சேர்ந்து சாப்பிடுவோம்,'' என்றார், விசுவம்.
''இல்லப்பா... வீட்ல எனக்காக காத்துட்டு இருப்பாங்க... போய் சாப்பிட்டுக்கறேன்,'' என்றவள், சாரதியிடம், ''பெரியம்மாவை மறந்துடாதே... உங்க அப்பாவை நல்லா பார்த்துக்கோ,'' என்று சிறிது நேரம் பேசிவிட்டு கிளம்பினாள்.
சாப்பிட்டு, சிறிது நேரம் கண்ணயர்ந்தார், விசுவம்.
''அப்பா... எழுந்திருச்சு காபி சாப்பிடுங்க,'' என்று, சாரதி எழுப்பிய போது தான், கண் விழித்தார்.
காபியை வாங்கியபடியே, மணியை பார்த்தார்; மாலை, 6:00 மணி ஆகி இருந்தது.
''நல்லா துாங்கிட்டேன்... எழுப்ப கூடாதா,'' என்றார்.
''பரவாயில்லப்பா... பரத்தை கூட்டிட்டு, 'டிரஸ்' எடுக்க போயிருக்கா, சினேகா... அவங்க வருமுன் பேசிடணும்ன்னு தான், உங்களை எழுப்பினேன்,'' என்று கூறியபடியே, தானும் ஒரு காபி கோப்பையுடன் அருகில் அமர்ந்தான்.
''அப்பா... காலையில நீங்க, பரத்கிட்ட, அவனை, 'ஸ்கூலு'க்கு கூட்டிட்டு போறதா சொன்னீங்களா?''
''ஆமாம்... அதுக்கென்ன?''
''அப்பா... பரத் விஷயத்துல, நீங்க தலையிடாதீங்க... அவனுக்கு, 'ஸ்கூல்' வேனும், வீட்டுக்கு வந்து, 'டியூஷன்' சொல்லித் தரவும், சினேகா ஏற்பாடு பண்ணியிருக்கா... நீங்க ஏதாவது குட்டையை கிளப்பாதீங்க... அவ நினைக்கிற படிதான் எல்லாம் நடக்கணும்... பரத் அடம்பிடிக்க ஆரம்பிச்சா, எங்களுக்குள்ள பிரச்னை வந்துடும். யாராவது ஒருத்தர் விட்டுக் கொடுக்கணும்ன்னு தான், நான் அவ போக்கிலேயே போறேன்...
''ஊரிலேயும், உங்களுக்கு தனி அறை தந்துடறேன்... உங்க வேலையை மட்டும் நீங்க பாருங்க... அப்புறம், இங்கே போயிட்டு வர்ற மாதிரி, அக்கம்பக்கத்துல யார் வீட்டுக்கும் போயிடாதீங்க... சினேகா கொஞ்சம், 'ரிசர்வ்டு டைப்!' அவங்களும் நம் வீட்டுக்கு வர ஆரம்பிச்சா, 'பிரைவசி' போயிடும்ன்னு பார்ப்பா... நீங்களும் கொஞ்சம் உங்களை மாத்திக்கணும்பா,'' என்றான்.
'சரி...' என்பது போல், மெதுவாக தலையாட்டினார், விசுவம்.
அன்று இரவு, வெகு நேரம் துாங்கவில்லை, விசுவம். மகனாக பார்த்த சாரதிக்கும், சினேகாவின் கணவனாக பார்க்கும் சாரதிக்கும் தான், எவ்வளவு வித்தியாசம்.
சிறு வயதில், அவன் கேட்டதை எல்லாம் வாங்கி கொடுத்தார். வளர்ந்த பின், இஷ்டப்படி படிப்பு, விரும்பிய பெண்ணுடன் திருமணம் என்று, அவன் மனம் கோணாமல் ஏற்பாடு செய்தார். அவை எல்லாம் அவன் சம்பந்தப்பட்டது என்பதால், அவன் விருப்பத்திற்கு மதிப்பு கொடுத்தார்.
ஆனால், இன்று, அவருடைய விருப்பங்களுக்கு மதிப்பு கொடுக்காதது, ஏமாற்றம் அளித்தது. சுதந்திர மனிதனாக இருந்த தன்னை, சூழ்நிலை கைதியாக மாற்றி விடுவானோ என்று தோன்றியது. குழப்பத்துடன் துாங்கி விட்டார்.
மறுநாள், அவரின் குழப்பத்துக்கு தெளிவு பிறந்தது.
சினேகா, தான் எடுத்து வந்த உடைகளை காட்டி, ''மாமா... இது உங்களுக்கு... பெங்களூருவுக்கு வந்ததும், இனி, நீங்க, 'பேன்ட் - ஷர்ட்' தான் போட்டுக்கணும்... அப்ப தான் எங்களுக்கு கவுரவமா இருக்கும்... ஒண்ணு சொல்றேன், தப்பா நினைக்காதீங்க... அடிக்கடி அத்தையை பற்றி பேசி, 'சென்டிமென்ட்'டா, 'பீல்' பண்ண வைக்காதீங்க,'' என்றாள்.
'இனி, தான் வாழப்போகும் வாழ்க்கையின் ஆணி வேரே, மனைவியின் நினைவுகள் தான். அதுவே கூடாது என்றால்...' ஒரு முடிவுக்கு வந்தார், விசுவம்.
அன்று மாலை, சாரதியையும் - சினேகாவையும் அழைத்து, ''நான் பெங்களூருக்கு வர விரும்பலை... டிக்கெட்டை, 'கேன்சல்' பண்ணிடு,'' என்றார்.
''அப்பா,'' என்றான், அதிர்ச்சியாக.
''உன் நிலையை நீ சொல்லிட்டே... என் நிலையை நான் புரிஞ்சுகிட்டேன்... என்னை மாத்திக்கணும்ன்னு சொன்னா, அது எனக்கு ஏமாற்றமா ஆயிடக் கூடாதுல்ல... என் சந்தோஷமே, உங்க அம்மாவோட வாழ்ந்த வாழ்க்கையின் நினைவுகளோடு வாழ்வது தான்...
''நண்பர்கள், உறவினர்களோடு பேசி பழகுறதுல, ஒரு நிம்மதி கிடைக்குது... என்கிட்ட யாரும் உதவின்னு வந்தா, என்னாலும் முடியும்ங்கற நம்பிக்கையுடன் கூடிய, ஆத்ம திருப்தி கிடைக்குது... எனக்கு அது போதும்,'' என சொல்லி, 'நான் சொன்னது சரிதானே...' என்பது போல், மனைவியின் புகைப்படத்தை பார்த்தார், விசுவம்.

என். உஷாதேவி
கல்வி: பட்டப்படிப்பு, நிறைய படிப்பதும், எழுதுவதும் இவரது விருப்பம்.
பல்வேறு தமிழ் வார, மாத இதழ்களில் இவரது படைப்புகள் வெளியாகியுள்ளன. 'தினமலர் - வாரமலர்' இதழில், இரண்டு சிறுகதைகள் வெளியாகியுள்ளன. சிறுகதை போட்டியில், பல ஆண்டுகள் கலந்து கொண்டாலும், பரிசு பெறுவது இதுவே முதல் முறை. ஆறுதல் பரிசு கிடைத்ததில் மகிழ்வதாகவும், மேன்மேலும் நிறைய எழுத இது ஊக்கப்படுத்துவதாகவும் தெரிவித்துள்ளார்.

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (6)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Girija - Chennai,இந்தியா
28-அக்-201918:34:01 IST Report Abuse
Girija ஏன் அப்பாசாமி அது இது என்று கதை கட்டுகிறீர்?
Rate this:
Cancel
Girija - Chennai,இந்தியா
28-அக்-201918:31:44 IST Report Abuse
Girija ஒரு பெண்ணே இப்படி கதை எழுதினால் எப்படி ? கதையின் நாயகியை யாரும் தொந்தரவு படுத்தவில்லை , கட்டாயப்படுத்தவும் முடியாது என்கிறமாதிரி கதை செல்கிறது . மாமனாரை அழைத்துவந்து பார்த்துக்கொள் என்று. அவளாக தானே அவரை தங்களுடன் வந்து இருக்க சொல்கிறாள் அப்படி என்றால் ஒரு அப்பா ஸ்தானத்தில் இருப்பவர் மீது அன்பு கரிசனம் அவளிடம் உள்ளது . தாத்தா பேரன் பாசம் மற்றும் அவர்கள் பேச்சு துணைக்கு அக்கம்பக்கத்தில் பழகுவர் என்பது தெரியாதா ? சொந்த அம்மா இருந்தால் கூட அப்படித்தானே செய்வாள்? பின் எதற்காக பழியை அவள் மீது போடவேண்டும் ? கூடுனானவரை அப்பா அம்மா மாமனார் உறவுகளை வீட்டில் வைத்து அன்புடன் பராமரியுங்கள் , எல்லா நலமும் கைகூடும். வசதி இல்லை அல்லது குடும்பத்திற்குள் ஒற்றுமை இல்லை என்றால் மாதம் ஒருமுறையாவது நேரில் சென்றுபார்த்து முடிந்த உதவிகளை செய்துவாருங்கள். காசி ராமேஸ்வரம் என்று பின்னாளில் அலையவேண்டாம்.
Rate this:
crap - chennai,இந்தியா
29-அக்-201917:12:22 IST Report Abuse
crapஇன்னிக்கு என்ன யதார்த்தமா அதைத்தான் எழுதியிருக்காங்க. முதுமை அடைந்தவர்களை எப்படி அவர்களின் விருப்பங்களுக்கு எதிராக வாழ தூண்டுகிறார்கள் இன்றைய தலைமுறை என்பது நிதர்சனம்....
Rate this:
Cancel
M Selvaraaj Prabu - Gaborone,போஸ்ட்வானா
28-அக்-201917:46:18 IST Report Abuse
M Selvaraaj Prabu நல்ல கதை. ஒவ்வொருவரின் எதிர்பார்ப்புகள் வேறு, எதார்த்த உண்மைகள் வேறு என்பதை அருமையாக விளக்கியிருக்கிறார். கதையை இத்துடன் முடித்ததும் நல்லதே. சொத்தை பற்றி மருமகளோ, மகனோ உடனேயோ அல்லது பிறகோ பேச ஆரம்பித்து, சொத்து சண்டையில் முடிந்தது போல காட்டாதது நன்றாக இருக்கிறது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X