நாகேஸ்வன் என்ற நாகேஷ்! (22) | வாரமலர் | Varamalar | tamil weekly supplements
நாகேஸ்வன் என்ற நாகேஷ்! (22)
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
Advertisement
 

பதிவு செய்த நாள்

27 அக்
2019
00:00

படபிடிப்பு முடிந்து காரில் சென்னைக்கு வரும் வழியில், காஞ்சிபுரம் மாவட்டம், தொழுப்பேடு ரயில்வே கேட் திறக்க, நேரமாகும் என்பதால், என்ன பண்ணலாம் என்று கேட்டு விட்டு, 'பிச்சை எடுக்கலாமா?' என்றார், ஜெயகாந்தன்.
'என்ன சொல்றீங்க, ஜே.கே.,?' என்றேன்.
'ஏன்... ரயில்வே கேட் திறக்கிற வரை, சும்மாதானே இருக்கணும்... அதுவரை பிச்சை எடுத்து பார்ப்போமே...' என்றார்.
அந்த புது அனுபவத்துக்கு தயாரானோம். பேன்ட், சட்டையை கழற்றி, டிராயருடன், சாலையோரத்தில் உட்கார்ந்து விட்டோம். யாருக்கும் எங்களை அடையாளம் தெரியாதது, சவுகரியமாக போய் விட்டது.
போகிறவர், வருகிறவர்களிடம் பிச்சை கேட்க, சில்லரை சேர்ந்தது. ரயில்வே கேட் திறக்கிற வேளையில், காருக்கு போனோம்.
யாருக்கு எவ்வளவு சில்லரை கிடைத்தது என்று கணக்கு பார்த்ததில், ஜே.கே., திறமைசாலி தான் என்று நிரூபணமாயிற்று.
தமிழ் நகைச்சுவை நடிகைகளில் மிகவும் முக்கியமானவர், மனோரமா. அவரும், நானும் எத்தனையோ படங்களில், என்னென்ன மாதிரியான கதாபாத்திரங்களில் எல்லாம் வந்து, ரசிகர்களை மகிழ்வித்து இருக்கிறோம். அவை, இனிமையான காலங்கள்.
'மாடர்ன் தியேட்டர்ஸ்'சின், டி.ஆர்.சுந்தரம் மிகவும் திறமையானவர். சினிமா பற்றிய அவரது அறிவு ஆழமானது; அதேசமயம், ஜனரஞ்சகமானதும் கூட. அவரிடம், தன் நடிப்பு திறமையால் பாராட்டு பெற்று, 'மாடர்ன் தியேட்டர்ஸ்' எடுத்த ஏராளமான படங்களில் சிறப்பாக நடித்தவர், மனோரமா.
அவரது ஞாபக சக்தி, வசன உச்சரிப்பு, குரலில் ஏற்ற இறக்கம் மற்றும் 'பாடி லாங்குவேஜ்' எல்லாம் அற்புதமாக இருக்கும். ஆரம்ப காலத்தில், என்னை போன்ற புதுமுக நகைச்சுவை நடிகருடன் அவர் நடிக்க ஒப்புக்கொண்டது, என் அதிர்ஷ்டம்.
என் மனைவியும், மனோரமாவும் நல்ல சினேகிதிகள்.
ஒருநாள், நான், மனோரமாவுக்கு போன் செய்து, 'ஒரு சின்ன பிரச்னை... வீடு வரைக்கும் கொஞ்சம் வந்துட்டு போக முடியுமா?' என்றேன்.
அடுத்த, அரைமணி நேரத்தில் எங்கள் வீட்டில், மனோரமா ஆஜர். உள்ளே நுழைந்த கணமே, அவர் முகத்தில் அதிர்ச்சி. வீட்டு சாமான்கள் பலவும், வீடெங்கும் சிதறிக் கிடந்தன. முதலில் எதிர்பட்டது, எங்கள் பையன், ஆனந்த்பாபு தான்.
'என்ன ஆச்சு?' என்று கேட்டார், மனோரமா.
'அம்மாவுக்கும், அப்பாவுக்கும் ஒரே சண்டை...' என்றான், பாபு.
அடுத்து, என் மனைவியை பார்த்தவுடன், அவள் கைகளை பிடித்து, 'என்ன ஆச்சு... உங்களுக்குள்ள என்ன சண்டை... புருஷன் - பெண்டாட்டிக்குள்ள சண்டை வர்றது, சகஜம் தான்... அதுக்காக இப்படியா?' என்று கேட்டார்.
என் மனைவி ஒன்றும் பதில் சொல்லாமல், மனோரமாவின் தோளில் சாய்ந்து கொண்டார்.
இருவரும், நான் இருந்த அறைக்குள் வந்தனர்.
'என்னங்க... உங்களுக்குள் என்ன சண்டை...' என்றார், மனோரமா.
'அவளையே கேளுங்க... தப்பு அவ பேர்ல தானே...' என்றேன்.
'என்ன சொல்லு... உங்களுக்குள்ள ஏன் சண்டை...' என்றார், என் மனைவியிடம்.
இப்படியே மாற்றி மாற்றி, 'என்ன சண்டை... என்ன சண்டை...' என்று எங்களிடம், மனோரமா கேட்டாரே ஒழிய, நானோ, என் மனைவியோ, எங்களுக்குள் என்ன சண்டை என்று சொல்லவில்லை.
'என்ன சண்டையானாலும் சரி, இதோடு போகட்டும்... சண்டை போட்டதை மறந்துடுங்க... ஒருத்தர ஒருத்தர் காதலிச்சு கல்யாணம் பண்ணிக்கிட்டு, இன்னிக்கு, எலியும், பூனையுமா இருக்கறீங்களே... இது, துளி கூட நல்லா இல்லை... யார் மேல தப்புன்னாலும், விட்டுக்கொடுத்து போறது தானே குடும்பம்...' என்று அறிவுரை சொன்னார்.
நானும், என் மனைவியும் ஒருவரை ஒருவர் பார்த்து, நமுட்டு சிரிப்பு சிரித்துக் கொண்டோம். மனோரமாவுக்கு ஒன்றும் புரியவில்லை.
'என்ன... சிரிக்கிறீங்க...' என்றார்.
'இன்னிக்கி என்ன தேதி?' என்றேன்.
'ம்... ஏப்ரல் ஒண்ணு...'
'அதான் நாடகமாடி, உங்களை முட்டாளாக்கிட்டோம்...' என்றோம்.
அந்த சமயத்தில், ஏமாற்றம், வெட்கம், கோபம் இத்தனையையும் கலந்து, மனோரமா தன் முகத்தில் ஒரு, 'எக்ஸ்பிரஷன்' குடுத்தாங்க பாருங்க... அதை இன்று வரை, சினிமாவில் கூட பார்த்தது கிடையாது.
தமிழ் சினிமா உலகில், இன்னும், 10 ஆண்டுகள் கழித்து செய்யப்பட இருப்பவற்றை எல்லாம், கமல், இன்று செய்து கொண்டிருப்பார் என்று சொல்வேன். அந்த அளவுக்கு சிந்திக்ககூடிய பக்குவம், இன்னும் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ஏற்படவில்லை என்பதால், கமலுக்கு உண்மையில் கிடைக்க வேண்டிய அளவுக்கு வெற்றி கிடைக்காமல் போய் விட்டது என்று தான் சொல்ல முடியும். ஆகவே, அன்றும், இன்றும், என்றும் கமல், கமல் தான்!
அபூர்வ ராகங்கள் படப்பிடிப்பு. அருகில், ரஜினி நின்று கொண்டிருந்தார். அப்போது தான், ரஜினியை முதல் முறையாக பார்த்தேன்.
என் கவனத்தை கவர்ந்தது, அவரது...
தொடரும்.
நன்றி: கிழக்கு பதிப்பகம், சென்னை.
எஸ். சந்திரமவுலி

Advertisement

 We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X