தீபாவளிக்கும் வயசாச்சு! | வாரமலர் | Varamalar | tamil weekly supplements
தீபாவளிக்கும் வயசாச்சு!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
Advertisement
 

பதிவு செய்த நாள்

27 அக்
2019
00:00

தீபாவளியன்று, கங்கா ஸ்நானம் செய்து, எப்போதோ, மகன் வாங்கி வந்த புது துணிகளை அணிந்து உட்கார்ந்திருந்தோம்.
மன்னியோடு எங்கள் வீட்டிற்கு வந்த அண்ணா, எடுத்து வந்திருந்த பட்சணங்களை கொடுத்தனர். 'ஸ்மார்ட் போனில்' எதையோ நோண்டிக் கொண்டிருந்த மனைவி, அதை நிறுத்தி, வாங்கிக் கொண்டாள்.
''கங்கா ஸ்நானம் ஆச்சா,'' என்று விசாரித்த, அண்ணாவை, இருவரும் வணங்கி எழுந்தோம்.
''உனக்கு, ஞாபகம் இருக்கா... அப்போ, அப்பாவுக்கு மொத்த சம்பளமே, 100 - 200 தான். இப்போ, நாமெல்லாம் ஒரு மாசத்துக்கு மொபைல் போனுக்கு செய்யற, 'ரீ - சார்ஜ்'ஜை விட, மாத வருமானம் ரொம்ப கம்மி தான். ஆனா என்ன, தரித்திரமாய் இருந்தாலும், அந்த காலத்திலே, பண்டிகைன்னா கடனோ, உடனோ வாங்கி கொண்டாடின சுவாரஸ்யம் தனி தான்,'' என்றார், அண்ணா.
''நம் வீட்டு தீபாவளியை பத்தி, நீங்க சொல்லணுமா என்ன... நானே, அடிக்கடி அதை அசைப்போட்டு, பெருமூச்சு விட்டுண்டு தான் இருக்கேன். பழங்கால வீடு, எப்பவுமே கலகலன்னுதானே இருக்கும். தீபாவளி வந்துட்டா திமிலோகப்படும்.
''அப்பாவுக்கு சொற்ப சம்பளம் தான். ஆனா, தீபாவளிக்கு ஒரு வாரம் முந்தியே, பட்சணம் செய்றதுக்கு ஏற்பாடெல்லாம் செய்ய ஆரம்பிச்சிடுவாங்க. எல்லா மளிகை சாமானும் கடன் தான். பெரிய பெரிய அடுக்கிலே அரிசி, கடலை பருப்புன்னு, 'மிஷின்'லே அரைச்சுண்டு வரணும்ன்னு, நானும், நீயும், 'ஸ்கூல் லீவு' போட்டுடுவோம்...
''என்னென்ன இனிப்பு, காரம் பண்ணப் போறேன்னு பெரிய, 'லிஸ்டே' வைச்சிருப்பா, அம்மா. பரணிலிருந்து இரும்பு கடாய், ஜல்லி கரண்டியை இறக்கி வைக்க வேண்டும். ஒரு வாரம் முழுவதும் சாப்பாட்டு கடையை முடித்து, மதியத்துக்கு முன் பட்சணம் செய்ய ஆரம்பித்து விடுவாள்.
''தீபாவளிக்கு நான்கு நாள் முன், விறகு அடுப்பில் ஏற்றப்படும் எண்ணெய் கடாய், அதற்கு முதல் நாள் ராத்திரி, மீந்த எண்ணெயில் பஜ்ஜி போடுவது வரை இறங்காது,'' என்றேன்.
''ஆம்... சில பட்சணங்களை, அக்கம்பக்கத்து மாமிகளும் கூட்டாக சேர்ந்து செய்வர். ஒவ்வொரு மாமிக்கும், ஒவ்வொரு பட்சணத்தில், தன் கைப்பக்குவ நேர்த்தி இருக்கும். லட்டு, ஜாங்கிரி, பாதுஷான்னு, வீட்டிலேயே தயார் பண்ணின பட்சணங்களின் ருசி, இன்னும் நாக்கிலே ஒட்டிண்டு இருக்கு,'' என்று, அண்ணா அசை போட்டபோது, என் நாக்கிலும் நீர் ஊறியது.
''அப்பெல்லாம் எண்ணெய் தேய்ச்சி குளிச்சுட்டு, அவசர அவசரமா புது துணியை போட்டுண்டு சுவாமிக்கு நமஸ்காரம் செஞ்சு, பட்டாசு வெடிக்க ஓடுவோம்... வாங்கிண்டு வந்த பட்டாசை, எட்டு பேருக்கும் சமமா பிரிச்சி கொடுத்திருப்பா, அப்பா.
''எப்பவும் முதல்ல வாங்கற பட்டாசு, சில சமயம் காயாம, நமுத்துப் போய் இருக்கும். இருந்தாலும், எல்லாரும் சேர்ந்து ஊசி பட்டாசு, சரம், கேப், மத்தாப்புன்னு வயசுக்கு ஏத்த மாதிரி அண்ணன், தம்பி, அக்கா, தங்கைன்னு வெடிக்கிற போது, அத்தனை சந்தோஷமாக இருக்கும்.
''அப்பாவாலே கொஞ்சமாத்தான் பட்டாசு வாங்கித்தர முடியும்... தெருவில் சிதறிக் கிடக்கும் வெடிக்காத பட்டாசுகளை குவிச்சு வைச்சு கொளுத்துவோமே, அந்த பரவசம்... இன்னிக்கு எத்தனை டாலர் கொடுத்தாலும் கிடைக்குமா சொல்லுங்க,'' என்று ஆதங்கப்பட்டபடி, ''அண்ணாவுக்கும், மன்னிக்கும் டிபன் கொடு,'' என்றேன், மனைவியிடம்.
உடனே, என் மன திரையில், அப்போதெல்லாம் தீபாவளியன்று காலையில், சாம்பாரில் மிதந்த வடையுடன் கூடிய இட்லிகள் வந்து ஏக்கமூட்டின.
''உனக்கு ஒண்ணை ஞாபகப்படுத்தறேன்,'' என்று ஆரம்பித்தார், அண்ணா...
''அப்போதெல்லாம் வாரா வாரம், தேவை இல்லாம, 'ஷாப்பிங்' போய், வேண்டாததை எல்லாம் வாங்க, பர்சில் பணமோ, கார்டோ கிடையாது. பள்ளிக்கூடம் திறந்தா, நமக்கெல்லாம், 'யுனிபார்ம்' வாங்க தான், ஜவுளிக்கடைக்கு போவோம். அப்புறம், அக்கா, அண்ணா கல்யாணம்னா தான் புதுசு...
''தீபாவளிக்கு மட்டும் நிக்கர், சட்டை, பாவாடை, தாவணின்னு வாங்கியே ஆகணும். தெருவிலே வாரா வாரம் சைக்கிளிலே வர்ற ஜவுளிக்காரன்கிட்டே தான், கடனில் வாங்கித் தருவாள், அம்மா. பாசமலர் டிசைன், பானுமதி டிசைன்னு எதையாவது பேரைச் சொல்லி, அவன் எடுத்து வர புடவைகளை, கடனா தலையிலே கட்டிட்டு போவான்...
''அந்த பணத்தை, மாசா மாசம் அடுத்த வருஷ தீபாவளி வரைக்கும் கட்ட வேண்டி இருக்கும். அதுக்குள்ளே ஜம்பமா, ஒவ்வொரு மாமியும், 'சாவித்திரி இந்த படத்திலே கட்டிண்ட டிசைன், அக்கம்பக்கத்து மாமிகள்கிட்டே, தங்களோட தீபாவளி புடவையை பத்தி பெருமைப் பட்டுப்பா...
''புடவை வாங்கிய கடன் அடையறதுக்கு ஆறு மாசம் முன், சாயம் வெளுத்து அந்த புடவைகள், தம் கடனை முடித்துக் கொண்டு விடும். ஆனாலும், இப்போதெல்லாம், ஆயிரம் கடை அலைந்து திரிந்து, பல்லாயிரம் கொட்டி வாங்கி வரும் புடவைகள் தராத திருப்தி, அந்த கால புடவைகளில், பேரன் - பேத்திகளுக்கு துாளி கட்டி ஆனந்தப்படும் வரை நிலைத்திருக்கும்,'' என்று, தன் மகன், 'அமேசானில்' அனுப்பியிருந்த, ஆயிரத்து சொச்ச புது சட்டையை அணிந்து, பழைய நினைவுகளில் ஏங்கினார், அண்ணா.
நானும், என் பங்குக்கு, ''தீபாவளி அன்னிக்கு, தட்டு நிறைய லட்டு, மிக்சர், தேன் குழல்ன்னு, அம்மா பண்ணினதை சாப்பிடுவோம்... எண்ணெயிலே செஞ்சது, ரொம்பவும் சுகர், 'ஹைஜீனிக்' என்ற பயமுறுத்தலெல்லாம் இருக்காது. இது போதாதென்று அத்தை, மாமா, அக்கம்பக்க வீடுன்னு, எல்லார் வீட்டு பட்சணமும் வரும்... இங்கிருந்து பல வீடுகளுக்கு போகும்...
''வீட்டில் வேலை செய்றவங்க, இனாம் வாங்க வர்றவங்கன்னு, எல்லாருக்கும் கொடுத்தது போக, தீபாவளி முடிஞ்சு, 10 நாளானாலும் சம்படங்களில் உள்ள பட்சணம் தீராது,'' என்றேன்.
''நாங்க ரெண்டு பேருதானேன்னு, கொஞ்சமா பண்ணினேன்,'' என்று, அண்ணா - மன்னியிடம் தட்டை நீட்டினாள், மனைவி.
''மன்னி எடுத்து வந்த இனிப்பை எடுத்துட்டு வா... சுவைத்து பார்க்கறேன்,'' என்று, மனைவியிடம் கேட்டேன்.
''நேத்திக்கு, 350 இருந்தது; ஞாபகம் இருக்கட்டும்,'' எனக் கூறி, சுகர் எண்ணிக்கையை எச்சரித்து, என்னை அடக்கினாள்.
''உனக்கு ஞாபகம் இருக்கா... அப்பா, ஒரு சிவாஜிகணேசன் பைத்தியம்... தீபாவளியன்னிக்கு வெளியாகும் படத்துக்கு, 'மேட்னி ஷோ பார்த்துட்டு வரேன்'னு கிளம்புவார்... அம்மாவோ, 'எம்.ஜி.ஆர்., படம் தான் போகணும்'ன்னு அடம் பிடிப்பாள். எல்லாரும் சாப்பிட்டு, 'மேட்னி ஷோ'வுக்கு கிளம்புவோம். கமலா, ராஜா, விஜயான்னு, ஒவ்வொரு தியேட்டரா அலைவோம். எல்லாத்திலயும், 'ஹவுஸ்புல்' போட்டுடுவான்.
''அப்புறம், பிரபலமில்லாத நடிகர் படம் ஓடற தியேட்டர்ல தான், டிக்கெட் கிடைக்கும்... ஆனா, அந்தப் படம் தான், தீபாவளி, 'ரிலீஸ்' படத்திலேயே, 'ஓகோ'ன்னு இருக்கும்; 100 நாள் ஓடும்...
''தீபாவளி அன்னிக்கு இப்படி ஏதாவது ஒரு சினிமாவை பார்க்காம விட்டா, தீபாவளியே சுவைக்காது. அப்புறம், அந்தப் படத்தை பத்தியே பேசிட்டிருக்கறதும், 'சிலோன் ரேடியோ'வில், படத்தோட பாட்டை போடுவாளான்னு காத்துட்டிருக்கிறதும், ஒரு அலாதி ஆனந்தம் தான்,'' என்றார், அண்ணா.
தீபாவளியன்று, தியேட்டரில் வரிசையில் நின்று டிக்கெட் கிடைக்காதா என்று ஏங்கி படம் பார்த்து வந்த சுவாரஸ்யத்தை, நானும் அசை போட்டேன்.
''அண்ணா... இதோ பாருங்க... 'யு டியூப்'லே, நேத்திக்கு, 'ரிலீஸ்' ஆன படமே வருது... ஒண்ணும் பார்க்கற மாதிரி இல்லே,'' என்று, தன் பங்கிற்கு, நிகழ்கால அலுப்பை வெளிப்படுத்தினாள், மனைவி.
'அப்போ, நாங்க கிளம்பறோம்...' என்று கூறி, அண்ணனும், மன்னியும் கிளம்பி, சென்றனர்.
''பரத், 'ஸ்கைப்'பில் கூப்பிடறான்,'' என்று, போனை நீட்டினாள், மனைவி.
''ஏய் பரத்... 'ஹாப்பி' தீபாவளி... அங்கே, இரவு, 10:00 மணியாக்கும்... உங்களுக்கு, நாளைக்கு தான் தீபாவளி... சாஸ்திரத்துக்கு ஒரு ஸ்பூன் எண்ணெய் வைச்சுண்டு, ஸ்நானம் பண்ணுங்கோ... குழந்தைக்கும் தேய்ச்சு, வெந்நீரில் குளிப்பாட்டுங்கோ... ஏதாவது இனிப்பு பண்ணியிருக்கியா... டிரஸ் வாங்கினியா,'' என்று அடுக்கினேன்.
''இல்லப்பா... அவனுக்கு ரெண்டு நாளா ஏதோ அலர்ஜி... ரெண்டு தும்மல் போட்டான்... குளிப்பாட்டி, 'ரிஸ்க்' எடுக்க வேண்டாம்ன்னு சொல்லிட்டா, பவித்ரா... புது, 'ஜீன்ஸ், டீ ஷர்ட்'ன்னு, போடாமலே நிறைய இருக்கு... தீபாவளிக்குன்னு எதுவும் வாங்கலே...
''நாளைக்கு பவித்ரா, ஆபீஸ் போயாகணும்... தீபாவளின்னு, நானி வர மாட்டா... குழந்தையை நான் தான் பார்த்துக்கணும்... எனக்கும் காலை, 8:00 மணிக்கு ஒரு வேலை இருக்கு... என்னமோ, தீபாவளின்னு பேரு தான்,'' என்று, சலித்துக் கொண்டான்.
''சரி... பவித்ரா இருந்தா கூப்பிடு... 'விஷ்' பண்றோம்,'' என்றேன்.
''அவ, போன்ல பேசிண்டிருக்கா... நான் சொல்லிடறேன்... தீபாவளி வாழ்த்துக்கள்... ஓ.கே., பை,'' என்று, வேதனையும், விரக்தியுமாக, அவன் முகம், 'ஸ்கைப்'பில் இருந்து அகன்றது, எங்களுக்கு சங்கடத்தைத் தந்தது.
அந்த காலத்து தம்படி காசு தந்த தீபாவளி சுவாரஸ்யங்களை எல்லாம், இந்த டாலர் காலம், இழந்து விட்டிருப்பதை நினைக்கையில், நமுத்துப் போன பட்டாசாக, நொந்து போனது மனசு.

அகிலா கார்த்திகேயன்

Advertisement

 We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X