பெண்கள் வயதுக்கு வந்ததும், வீடுகளில் பூப்புனித நீராட்டு விழா நடத்துவர். அம்மனுக்கும் இதே சடங்கை செய்யும் தலம், மதுரை மீனாட்சியம்மன் கோவில். ஆனால், சத்தமே இல்லாமல் இந்த நிகழ்ச்சியை நடத்தி விடுவர்.
அம்பிகை அருளாட்சி செய்யும் தலங்களில், மதுரைக்கு மிகுந்த சிறப்பு உண்டு. 64 சக்தி பீடங்களில் முதல் பீடமானதால், எல்லா பூஜைகளும், தேவிக்கு நடந்த பின்னரே, சுவாமிக்கு நடக்கின்றன. ஆடிப்பூரம் நட்சத்திரத்தில், பார்வதி தேவி வயதுக்கு வந்ததாக ஐதீகம்.
பூலோகத்தில் அம்பிகை, மலையத்துவஜ பாண்டியனின் மகளாக அவதரித்தாள். கன்னிப்பருவம் அடைந்த அவளுக்கு, மானிடப் பெண் என்ற அடிப்படையில், ஆடிப்பூரத்தன்று சடங்கு நடத்தினர்.
அன்று காலை, 9:30 மணிக்கு மேல், மூலவருக்கு அபிஷேகம் செய்யப்படும். அப்போது, திரை போட்டு மறைத்து விடுவர். மூலவரான அம்மனுக்கு, சிறப்பு அலங்காரம் நடக்கும். பிறகு திரையை விலக்கி, 'ஏற்றி இறக்கும் சடங்கு' என்ற நிகழ்ச்சி நடத்தப்படும்.
மதுரை பகுதி வீடுகளில், பூப்புனித நீராட்டு விழா நடத்தும் போது, பெண்ணை அமர வைத்து, சாதம் ஒரு புறமும், காய்கறி வகைகளை ஒரு புறமும் வைப்பர். தாய் மாமன் மனைவியும், தந்தையின் சகோதரியும், தங்கள் கைகளை குறுக்காக வைத்து, சாதத்தையும், கறியையும் மூன்று முறை எடுத்து, பெண்ணுக்கு கொடுப்பது போல, மேலும் கீழுமாக இறக்கி, பாவனை செய்வர்.
கைகள் மேலும், கீழும் செல்வதால் இதற்கு, 'ஏற்றி இறக்கும் சடங்கு' என பெயர் வந்தது.
உற்சவர் மீனாட்சிக்கு, நாழி (படி) ஒன்றில் நெல் நிரப்பி, அதில் தீபம் ஏற்றி, மூன்று முறை மேலும், கீழுமாக இறக்குவர். வயதுக்கு வந்த அம்பிகைக்கு திருஷ்டி கழிப்பதற்காக, இந்த சடங்கு செய்யப்படும்.
பிறகு, சம்பா சாதம், புளியோதரை, தேங்காய் சாதம், தயிர் சாதம் மற்றும் சர்க்கரைப் பொங்கல் என, இதில் ஏதாவது ஒன்றை பிரதானமாக படைப்பர்.
அம்பாளின் பாதத்தில், ஒரு முறத்தில் சட்டைத்துணி, குங்குமச்சிமிழ், மஞ்சள் கிழங்கு, திருமாங்கல்யம் வைத்து பூஜை செய்யப்படும். அம்மனுக்கு அணிவிக்கப்பட்ட கண்ணாடி வளையல்களை பிரசாதமாக வழங்குவர்.
இந்த நிகழ்ச்சி எளிய முறையில் நடத்தப்படுவதால், வெளியே தெரியாது. ஒரு காலத்தில், இந்த நிகழ்வு பிரதானமாக பல கோவில்களிலும் இருந்தது. கன்னிப் பெண்களுக்கு பாதுகாப்பும், மாங்கல்ய பாக்கியமும் கிடைக்க, எல்லா கோவில்களிலும் இந்த நிகழ்ச்சி விமரிசையாக நடத்தப்பட வேண்டும்.
தி. செல்லப்பா