பொம்மைகள் அல்ல பெண்கள்!
என் மைத்துனருக்கு, பெண் பார்த்துக் கொண்டிருக்கிறோம். திருமண தகவல் மையத்தில் பதிவு செய்து வைத்ததில், நல்ல வரன் வந்தது. பெண்ணின் புகைப்படம் மற்றும் பிற விபரங்களை, 'வாட்ஸ் - ஆப்' மூலம் அனுப்பினர். எங்களுக்கு திருப்திகரமாக இருந்தது. அவர்களும், எங்களை, பெண் பார்க்க அழைத்தனர்.
பெண்ணின் ஊர், கன்னியாகுமரி. சென்னையில் இருந்து, ஆறு பேர் கிளம்பி சென்றோம். ரயில் நிலையம் வந்து அழைத்துச் சென்றனர். நல்ல உபசரிப்பு, மரியாதை. நல்ல குடும்பமாகவும், வசதியாகவும் இருந்தனர்.
பெண்ணை அழைத்து வரச்சொன்னோம். பட்டுப் புடவையும், நகையும் அணிந்ததை வைத்து, இதுதான் பெண் என்று, நாங்கள் உறுதி செய்தோம். ஏனென்றால், எங்களுக்கு அனுப்பிய புகைப்படத்தில் இருந்தவருக்கும், இந்த பெண்ணிற்கும் வித்தியாசம் அதிகம் இருந்தது. பெண் மிகவும் குண்டு மற்றும் மாப்பிள்ளையை விட அதிக உயரம்.
வந்ததே கோபம், 'ஏங்க... உங்களுக்கே மனசாட்சி இருக்கா... நாங்களும் சாதாரண குடும்பத்தை சேர்ந்தவர்கள் தான்... ஆறு பேர், சென்னையிலிருந்து, கன்னியாகுமரி வந்து செல்ல, எவ்வளவு செலவு ஆகும்ன்னு தெரியுமா... பெண்ணின் உண்மையான புகைப்படத்தை அனுப்புங்கள். பெண்ணுக்கு ஏற்ற மாப்பிள்ளையாக இருந்தால், வரப்போகின்றனர்; இல்லையென்றால் வேறு இடம் பார்க்க போகின்றனர்...
'உங்க பொண்ணும் பாவம், எத்தனை பேருக்கு தான், காட்சி பொருள் போல வந்து நிற்பாள்; அவள் பெண்ணா அல்லது பொம்மையா... உண்மையை சொல்லி, மாப்பிள்ளை தேடுங்கள்; உங்கள் வசதியை காட்டி, பெண்ணை விற்க நினைக்காதீர்... உங்க பொண்ணுக்கு ஏற்ற மாப்பிள்ளை தேடுங்கள்; மற்றவர்களையும் சிரமப்படுத்தாதீர்...' என்று அறிவுரை சொல்லி, பெண்ணிடம் மன்னிப்பு கேட்டு வந்தோம்.
பெற்றோரே... பெண்ணை, வாழ வைக்க பாருங்கள்; எப்படியாவது தள்ளி விட்டால் போதும் என்று நினைக்காதீர்!
— கல்பனாதேவி, சென்னை.
கிரிக்கெட் ரசிகையின் ஏக்கம்!
அதிதீவிர கிரிக்கெட் ரசிகை, நான். நடந்து முடிந்த, ஐ.பி.எல்., கிரிக்கெட் விளையாட்டுகளை, 'டிவி'யில் கண்டு ரசித்தேன்.
கிரிக்கெட் வீரர்கள், 6 அல்லது 4 ரன்களை அடித்தால், அவர்களை பாராட்டி உற்சாகப்படுத்தும் வகையில், கவர்ச்சியாக உடை அணிந்த நடன மங்கையரை ஆட விட்டு, ரசிர்களையும் மகிழ்ச்சிக்கு உள்ளாக்கி வந்தனர். கிரிக்கெட் வர்ணனையின்போது, இந்த நடன நிகழ்ச்சியை, 'டிவி'யில், 'க்ளோஸ் - அப்'பில் காட்டினர்.
கிரிக்கெட் போட்டிகளின்போது, எப்போதும் பெண்களே நடனமாடி உற்சாகப்படுத்துவதாக ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. இது, ஆண்களுக்கு வேண்டுமானால் மன மகிழ்ச்சியையும், கிளுகிளுப்பையும் உண்டாக்கலாம்.
பெண்களை நடனமாட வைப்பதை போல, ஆண்களை நியமித்து, அவர்களை நடனமாட வைத்தால், பெண்களுக்கு உற்சாகமாக இருக்குமே... கிரிக்கெட் போட்டிகளை ஏற்பாடு செய்வோர், இதையும் பரிசீலிக்கலாமே!
கே.ஆர். எழிலரசி, கோவை.
தமிழர்களே... தலை நிமிர்ந்து நில்லுங்கள்!
சில ஆண்டுகளுக்கு முன், குடும்ப உறவுகளுடன், மஹாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள, ஷீரடி சாய்பாபா கோவிலுக்கு யாத்திரை சென்றோம். பாபாவை தரிசித்த பின், நானும், உடன் வந்த மற்ற பெண்களும், பிரசாதம் வாங்க வரிசையில் நின்றிருந்தோம்.
எங்களுக்கு பின் நின்றிருந்த, 70 வயது நிரம்பிய ஒருவர், எங்களை பார்த்து, 'நீங்கள் தமிழ்நாடா...' என்று கேட்டார்.
நானும், 'ஆம்...' என்றேன்.
உடனே அவர், வாய்க்கு வந்தபடி, ஆங்கிலத்தில்,'உங்களுக்கு, ஹிந்தி தெரியாதே... அது, நம் தேசிய மொழி. இருந்தும், உங்கள் மக்கள், அதை கற்றுக்கொள்வது கிடையாது. பின், ஏன் இந்தியாவில் வாழ்கிறீர்கள்...
'உங்கள் மக்களுக்கு தெரிந்தது எல்லாம் ஒரே வார்த்தை, சாப்பாடு இருக்கா...'
அந்த வார்த்தையை, அப்படியே தமிழில் கூறியதுடன், மேலும், மேலும் தமிழர்களை தரக்குறைவாக பேசியபடியே வந்தார்.
அப்போது தான், வட மாநிலங்களில், தமிழர்களுக்கு என்ன மதிப்பு என்று புரிந்தது. பாபாவின் கோவிலில் சண்டையிட வேண்டாமே என்று, பேசாமல் நகர்ந்து விட்டோம்.
ஷீரடியில் இருந்து சென்னை திரும்பியவுடன், ஹிந்தி பிரசார சபாவின் வகுப்புகளில் சேர்ந்து படித்தேன். இன்று, ஒரு ஹிந்தி ஆசிரியையாக, மற்றவர்களுக்கு கற்பித்து வருகிறேன்.
அரசியல்வாதிகளின் பேச்சைக் கேட்டு, ஹிந்தி படிப்பதை தவிர்க்காதீர். தமிழர்களை தரக்குறைவாக பேசும், வட மாநிலத்தவரை, ஹிந்தியில் பேசி விளாசுங்கள்.
— எம். உமாமகேஸ்வரி, சென்னை.
தொடர் மழை... கவனம்!
நம் மாநிலத்தில், பருவ மழை துவங்கி விட்டது. சாலையில் உள்ள பள்ளங்களில் தண்ணீர் தேங்கி நிற்கும். இதனால், ஆழம் தெரியாது. எனவே, அதை கவனமாக கடக்க வேண்டும்.
மழையின் போது, வெட்ட வெளியில், மரங்களின் கீழ் நிற்காமலும், இரும்பு கூரை வேய்ந்த கட்டடம் மற்றும் இரும்பு கட்டுமானம் கீழ் நிற்பதையும் அறவே தவிர்க்கவும். மின் கம்பத்தை தொடாமலும், அதில் கயிற்றை கட்டி பயன்படுத்துவதையும் தவிர்க்க வேண்டும்.
மின்சாரம் இல்லாத ஒயர்கள்தானே என, மழை நேரத்தில், கேபிள், 'டிவி' மற்றும் தொலைபேசி ஒயர்களை சரி செய்ய கூடாது. ஏனெனில், மின்சாரம் வரும் ஒயர்களின் தொடர்புபட்டிருந்தால், பெரும் ஆபத்தை விளைவிக்கும்.
மழையின் போது, அனைத்து வாகனங்களையும் மிக நிதானமாக ஓட்ட வேண்டும். பெரிய வாகனங்களின் முன், பின் மற்றும் பக்கவாட்டு கண்ணாடி, வெளிக்காட்சிகளை தெளிவாக காட்டாது. எதிரே வருவோர், மழை காரணமாக, வேகமாக அல்லது தலைகுனிந்தபடி வர அதிக வாய்ப்புள்ளது. அது மாதிரியான நேரத்தில், நாம் தான் கவனமாக இருக்க வேண்டும்.
கான்கிரீட் கட்டடம்தானே என, கவனக்குறைவாக இருக்கக் கூடாது. சற்று பழைய கட்டடத்தின் உட்பகுதி, மழையால் ஊறிப்போய், தகடு தகடாய் நம் மீது விழ வாய்ப்பு உள்ளது. நாம் கவனமாக இருப்பதுடன், சிறுவர் - சிறுமியருக்கும் இவற்றை கூறி, முன்னெச்சரிக்கை செய்வது நல்லது.
கவனமாக இருந்து, பருவ மழையை மகிழ்ச்சியுடன் வரவேற்போம்!
ஜி.டி.என். மோகன்குமார்,
ராமநாதபுரம்.