தாய்ப்பால் உறவு!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 நவ
2019
00:00

''எனக்கு, 'மெடிக்கல் சீட்' கெடச்சிருக்கு... நான், டாக்டருக்கு படிக்க போறேன்... படிச்சு முடிச்சதும், காசில்லாம, ஒனக்கு வைத்தியம் பாக்கிறேன்... என்னை ஆசிர்வாதம் பண்ணு ஆயா,'' என்று, அஞ்சலையின் காலில் விழுந்து வணங்கினான், சங்கர்.
''எங்கண்ணே பட்டுடும் போலிருக்கே... எப்படி வளந்துட்டான் எம் பேரன். டாக்டருக்கு படிக்க போறீயா ராசா... நீ நல்லா இருய்யா... நல்லா படிச்சு, ஏழை மக்களுக்கு வைத்தியம் பாருய்யா... நா அதுவரைக்கும் உசிரோட இருந்தேன்னா பார்த்துக்கலாம்,'' என்று, இரு கைகளாலும் அவனது கன்னங்களை தடவி, சொடக்கு முறித்தாள், அஞ்சலை.

''அஞ்சு வருஷம் தான் படிக்கணும்; அதுக்குள்ள நீ ஒண்ணும் செத்திட மாட்டே... கண்டிப்பா, நான் படிச்சுட்டு வந்து, ஒனக்கு வைத்தியம் பார்ப்பேன்... ஆனா, ஒரு விசயம் சொன்னா, கோவிச்சுக்காம கேப்பியா, ஆயா?''
''மொதல்ல என்னன்னு சொல்லுப்பா.''
''ஒனக்கு, 60 வயசுக்கு மேல ஆயிருக்கும்ன்னு அம்மா சொல்லிச்சு... பெரியப்பு வீட்டுக்கு, மாட்டு சாணி அள்ளப் போறதை நிறுத்தினா என்ன... இந்த வயசுலயும், கஷ்டப்பட்டுக்கிட்டு, அந்த வீட்டுக்கு போயி தான் ஆகணுமா...
''நாங்கள்லாம் படிச்சு நல்ல நிலைமையில இருக்கும்போது, நீ மாட்டு சாணி அள்ள போறதை சகிக்க முடியலை... சொன்னாலும், நீ மாத்திக்கவே மாட்டியா... கெஞ்சி கேக்குறேன், தயவுசெய்து, சாணி அள்ளுற வேலையை விட்டுடு,'' என, அஞ்சலையின் கைகளை பிடித்து கெஞ்சினான், சங்கர்.
''இத சொல்ல தான் இவ்வளவு பீடிகையா, சங்கரு... நா, சாணி அள்ளுறது, ஒங்களுக்கு அவமானமா இருக்கா... மாடுங்கறது வெவசாய குடும்பத்துல பொறந்தவங்களுக்கு, தெய்வம்யா... அதனால தான், மாட்டு பொங்கல்ன்னு தனியா கொண்டாடுறோம்...
''அதோட சாணிய அள்ளுறது கவுரவ கொறச்சலா... இன்னி வரைக்கும் இந்த வீட்டு மண் தரையை, சாணி போட்டு தான் மொழுவுறேன்... அதனால தான், ஈ, கொசு வராம இருக்கு. மாடு, வாயில்லா ஜீவன்; அதுக்கு, பால் குடுக்க தெரியும்; ஏறுல கட்டினா உழ தெரியும்; வண்டில கட்டினா பொதி சொமக்க தெரியும்; ஆனா, அதோட சாணிய அள்ளிக்க தெரியாது. நாம தான் செய்யணும்...
''நம் வீட்டுலயும் ஒரு பசு மாடு, கன்னும், ரெண்டு ஆடும் இருக்கு... அதோட சாணியெல்லாம் நான் தான் அள்ளுறேன்... நம் வீட்டு சாணிய அள்ளலாம்; ஆனா, சம்பளம் குடுங்கறவங்க வீட்டுல அள்ளக் கூடாதா...
''புதுசா கல்யாணமாகி வந்த என்னை, ஒம்பாட்டந்தான் அந்த வீட்டுல, வேலைக்கி சேத்து விட்டுச்சு...
''அதுக்கு முன்ன, அதோட அம்மா, அந்த வேலய செய்துகிட்டு இருந்துச்சாம்... இதுநாள் வரைக்கும் சாணி அள்ளிக்கிட்டு இருக்கேன்... இத்தினி வருசத்துல இல்லாம, இப்ப என்ன, ஒங்களுக்கு அவமானம் தாங்கலைன்னு எனக்கு புரியல,'' என்றாள், அஞ்சலை.
''சரி... சரி... ஒன்னயெல்லாம் திருத்தவே முடியாது... நான் பொறப்படுறேன்... வீட்டுல, மாமி இல்லியா?'' என்றான்.
''என்னப்பா சொல்றே... இப்பதான் வந்தே, அதுக்குள்ள போகணும்ங்கிறே... ரெண்டு நாளக்கி இருந்துட்டு போகப்புடாதா... சரி... சரி... சோறாக்கிட்டேன்; ஒரு வாய் சாப்பிட்டு அப்புறம் ஊருக்கு கெளம்பு...
''உன் சின்ன மாமி, பொறந்த வீட்டுக்கு போய் இருக்கா, சீக்கிரம் வந்துடுவா... போற வழியில, பெரியப்பு வீட்டுக்கு போயி, டாக்டருக்கு படிக்க போற விசயத்த சொல்லிடு... ரொம்ப சந்தோசப்படுவாங்க,'' என்றாள்.
'எப்ப பாரு... பெரியப்பு, பெரியப்பு... கெழவிக்கு இதே நெனப்பு தான் போலிருக்கு...' என, மனசுக்குள் கறுவிக் கொண்டான், சங்கர்.
''இல்ல, ஆயா... இப்பவே நேரமாயிடுச்சு... சரியான நேரத்துக்குள்ள போகணும்... மதியம், 12:00 மணி ரயிலை விட்டுட்டா, அப்புறம் ராத்திரிக்கு தான்... அதனால தான், இப்ப பொறப்படுறேன்... நீயே பெரியப்புகிட்ட சொல்லிடு.''
சாப்பிட்ட பின், ஆயாவிடம் கூறி, வெளியே வந்தான், சங்கர். எதிரே, சைக்கிளில் வந்து கொண்டிருந்தார், பெரியப்பு என்று எல்லாராலும் அழைக்கப்படும், ராஜராஜன்.
சங்கரை பார்த்ததும், சைக்கிளை நிறுத்தி, ''எப்போ வந்தே, சங்கர்... கிளம்பிட்டியா... அப்பா - அம்மா எல்லாம் நல்லாயிருக்காங்களா... என்ன படிக்க போற,'' என்றார்.
''ஐயா... எம் பேரன், டாக்டருக்கு படிக்க போறானாம்... அத சொல்லிட்டு போக தான் வந்திருக்கான்... ஒங்கள்ட்ட சொல்லி போக சொன்னேன்... அதுக்குள்ள நீங்களே வந்துட்டீங்க... எதுக்கு இவ்வளவு துாரம் வந்தீங்கய்யா... ஏதாவது வேலை இருக்கா... யார்கிட்டேயாவது சொல்லிவிட்டிருந்தா, நானே வந்திருப்பேனே,'' என்றாள், அஞ்சலை.
''ரொம்ப சந்தோஷம், சங்கர்... எந்த காலேஜ், எப்ப சேரணும்... பொன்னுசாமி பேரன், டாக்டர்னா கேட்கவே ரொம்ப சந்தோஷமா இருக்குப்பா... பார்த்து, பெருமைப்பட ஒங்க தாத்தா தான் இல்ல... அஞ்சலை, ஒனக்கு சந்தோஷம் தானே... டாக்டருக்கு படிக்கிறது, சாதாரண விஷயமில்லப்பா... கெடச்ச வாய்ப்பை பயன்படுத்தி, நல்லா படி,'' என்றார்.
''எதுக்காக வந்தீங்கன்னு சொல்லலியே,'' என்றாள், அஞ்சலை.
''பருத்தி வெடிக்க ஆரம்பிச்சிடுச்சு... கெடைக்கிற ஆளுங்கள வச்சு, நாளையிலேர்ந்து பருத்தி எடுக்கணும்... இன்னிக்கே ஆளுங்களுக்கு சொல்லி வெச்சுடு... அத சொல்லிட்டு போகலாம்ன்னு தான் வந்தேன்... வந்த எடத்துல, ஒம் பேரன் நல்ல சேதி சொல்லிட்டான்... ரொம்ப சந்தோஷமாயிருக்கு.''
இருவரும் செல்லும் திசையை பார்த்தவாறே, சாணி மொழுகிய திண்ணையில், புடவை தலைப்பை விரித்து, ஒருக்களித்து படுத்த, அஞ்சலை, அப்படியே துாங்கி போனாள்.
''அத்தே... அத்தே... என்ன, பட்ட பகல்ல இப்பிடி துாங்குது,'' என்றபடி, அஞ்சலையை உலுக்கினாள், கடைசி மருமகள், அமுதா.
''ம்!'' என்றபடி, துடித்து எழுந்தாள், அஞ்சலை.
''என்னத்தே... பகல்ல எப்பவும் துாங்க மாட்டியே... இப்பிடி துாங்கறே,'' என்றாள்.
''பட்டணத்துலேர்ந்து, சங்கர் வந்தான்... டாக்டருக்கு படிக்க எடம் கெடச்சிருக்காம்... அவனுக்கு, சோறு போட்டு அனுப்பினேன்... பெரியப்பு வந்தாக, காலைல பருத்தி எடுக்கணும்ன்னு சொன்னாங்க... அவுங்களை பேசி அனுப்பிட்டு, கட்டய திண்ணையில சாச்சேன்; எப்பிடி துாங்கினேன்னே தெரியல.''
''மணி, 5:00 ஆயிட்டு... சோறு தின்னியா இல்லியா?''
''சங்கருக்கு போட்டுட்டு மிச்சம் அப்பிடியே இருக்கு... அது சரி, துபாய்லேர்ந்து சின்னவன் பேசினானா... எப்ப வர்றானாம்?''
''மூணு மாசத்துல வர்றேன்னு சொன்னாங்க, அத்தே.''
''ஒன்னோட வயத்துல ஒரு புழு பூச்சி உண்டாகலியேன்னு தான் கவலையா இருக்கு... அந்த நல்ல சேதிய சொல்லிட்டா, எனக்கு ஒரு கவலையும் இல்ல... நிம்மதியா எப்ப வேணா கண்ண மூடிடுவேன்.''
''ஒனக்கு என்ன வயசாயிட்டு, அதுக்குள்ள சாவுறத பத்தி பேசுற... நான், ரெண்டு புள்ள பெத்து தரேன்... வளத்து குடுத்துட்டு அப்புறமா சாவு,'' என்றாள், அமுதா.
''எல்லாரும், ரெண்டு பெத்துக்கறதுலயே குறியா இருங்க... நாந்தான் சூது வாது தெரியாம, அந்த காலத்துல ஆறு பெத்துட்டேன். நாளக்கி பருத்தி எடுக்க, தெரு சனம் யார் யார் வர்றாவோன்னு இப்பவே கேட்டு வச்சிடறேன்; வெள்ளென போயிட்டா, உச்சி வெயிலுக்கு முன்ன திரும்பிடலாம்.''
''பெரியப்பு வீட்டுக்கு போக மாட்டியா அத்தே?''
''போகாம என்ன, காலயிலயே போயிட்டு வந்துடுறேன்... உச்சி வெயிலுக்கு போனா அதுவரைக்கும் மாடெல்லாம் சாணியிலியே கெடக்கும்... பெரியப்பு சம்சாரம் கூட இல்ல; ஊருக்கு போயிருக்காங்க... ராத்திரிக்கு ஒல வச்சி, அரைப்படி சோறு மட்டும் வடிச்சு தண்ணி ஊத்தி வச்சுடு... காலைல ரெண்டு வாயி சோறு, நீரார தண்ணிய குடிச்சுட்டு போயிடலாம். நடவாளுக்கு சொல்லிட்டு வர்றேன்,'' என்றாள், அஞ்சலை.
மறுநாள் காலையிலேயே நடவாள்களை அழைத்து, பெரியப்பு வீட்டு பருத்தி வயலுக்கு சென்றாள். எடுக்கிற பருத்தியை எடை போட்டு கொடுத்து, கூலியை வாங்க வேண்டுமென்பதால், அனைவரும் குனிந்த தலை நிமிராமல் பேசியபடியே, பருத்தி எடுக்க ஆரம்பித்தனர்.
காலை, 11:00 மணி இருக்கும்.
அஞ்சலைக்கு சற்று அதிகமாகவே வியர்க்க ஆரம்பித்தது. புடவை தலைப்பால் துடைத்தபடியே, பருத்தி எடுப்பதில் மும்முரமாய் இருந்தாள். திடீரென்று கண்கள் சுழல, குப்புற விழுந்தாள். பருத்தி செடிகளின் கொப்புகளும், கிளைகளும் அவளது கறுத்த உடம்பில், சிவப்பு கோடுகளை வரைந்து விட்டிருந்தன.
பருத்தி செடிகளின் சலசலப்பையும், அஞ்சலையை காணவில்லை என்பதையும் வினாடிகளில் உணர்ந்த, அமுதா, ''அத்தே... அத்தே,'' என, பதறி ஓடி வந்தாள்.
களத்து மேட்டிலிருந்த அரச மரத்தடி நிழலுக்கு, அஞ்சலையை துாக்கி வந்தனர்.
''ஐயய்யோ தெய்வமே... கண்ணு தொறக்க மாட்டேங்குதே... பாம்பு, தேளு ஏதாச்சும் கடிச்சிருக்குமா,'' பெருங்குரலெடுத்து அழ ஆரம்பித்தாள், அமுதா.
பெரியப்புக்கு தகவல் சொல்ல, ஓட்டமும், நடையுமாய் விரைந்தாள், பக்கத்து வீட்டுக்காரி.
''ஆயா... ஒனக்கு தான் நாடி பாக்க தெரியுமே... எப்படியிருக்குன்னு பாத்து சொல்லு,'' கிழவியிடம் கூறினாள், ஒருத்தி.
''நாடி கொஞ்சம் வேகமா ஓடுறா மாதிரி இருக்கு... அதான், மயக்கமாயிருக்கா போலிருக்கு,'' என்றாள்.
பருத்தி எடுத்தவர்கள், கரையேறி விட்டனரா என்பதை காண, வயலுக்கு வந்து கொண்டிருந்தார், ராஜராஜன்.
''பெரியப்பு... பெரியப்பு... அஞ்சலக்கா, மயக்கம் போட்டு விழுந்துட்டுதுங்க... களத்து மேட்டுல படுக்க வெச்சிருக்கோம்... மொகத்துல தண்ணி தெளிச்சும் மயக்கம் தெளியல... பல்லு வேற கிட்டியிருக்கு, 108 ஆம்புலன்சுக்கு போன் பண்ணி வரச்சொல்லுங்க,'' என்றாள், பக்கத்து வீட்டுக்காரி.
புடவை தலைப்பால், மாமியாருக்கு விசிறி கொண்டிருந்தாள், அமுதா. அஞ்சலையின் கண்கள் லேசாக திறந்திருந்தன. வாய், வலது பக்கம் கோணலாக திரும்பி இழுத்துக் கொண்டிருந்தது.
நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து, 'ஸ்ட்ரோக் தான்...' என, முணுமுணுத்துக் கொண்டே, ''நல்ல வைத்தியம்னா, மூணு மணி நேரத்துக்குள்ள, தஞ்சாவூர் தான் போகணும்,'' என்றபடியே, கொல்லுமாங்குடியில் உள்ள, ராமநாதனுக்கு பேசி, கார் எடுத்து வரச் சொன்னார், ராஜராஜன்.
''அமுதா... ஒண்ணும் பயப்படாத... காருக்கு சொல்லியிருக்கேன்... இவங்கள துாக்கிகிட்டு, மெயின் ரோட்டுக்கு வாங்க... வீட்டுக்கு போயி, பணம் எடுத்துகிட்டு வரேன்... உடனே, ஆஸ்பத்திரியில சேர்க்கணும்... நீயும், இன்னொருத்தரும் வாங்க, தஞ்சாவூர் போகணும்.''
''ஐயா... ஆம்புலன்ஸ் வேணாங்களா?''
''ஆம்புலன்ஸ்னா, திருவாருக்கு தான் கொண்டு போவாங்க... இதுக்கு, தஞ்சாவூர் தான் நல்லது... உடனடியா சேத்துட்டா காப்பாத்திடலாம்.''
கார் வந்தது. அஞ்சலையுடன் இருவரும் ஏறிக் கொண்டனர். காரில் பயணிக்கும்போதே, மகன், மகள்களுக்கு தகவல் தெரிவித்தார், ராஜராஜன்.
இரண்டு மணி பயணத்தில், அஞ்சலையை, தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.
''சார்... முதல்ல, 20 ஆயிரம் பணம் கட்டுங்க... நோயாளி பற்றி விபரம் சொல்லுங்க.''
''பேர், அஞ்சலை; வயது, 70; கீழத்தெரு, கீரனுார், திருவாரூர்.''
''இப்போதைக்கு இது போதும்... நோயாளியை பரிசோதித்து, சிகிச்சை ஆரம்பிச்சிடுவோம்... உட்காருங்க,'' என்றனர்.
அடுத்த அரை மணி நேரத்தில், ''நல்ல நேரத்துல கொண்டு வந்தீங்க... இன்னும் ஒரு மணி நேரம் தாமதிச்சிருந்தாலும் நிலைமை மோசமாகியிருக்கும்... இனி, பயமில்லை... ஒரு வாரம் இருந்தா போதும்... அதுக்கப்புறம் வீட்ல ஓய்வெடுத்துக்கலாம்... பூரணமாய் குணமாயிடும்; பயப்படாதீங்க,'' என்றார், டாக்டர்.
''இப்ப, பாக்கலாமா?''
''கிட்ட போயி பாக்க முடியாது... கண்ணாடி வழியா பாருங்க,'' என்றார்.
கண்ணாடி வழியே பார்த்து அழுது கொண்டிருந்தாள், அமுதா.
''வாங்க... போயி சாப்பிட்டு வரலாம்,'' என, இருவரையும் அழைத்துச் சென்றார், ராஜராஜன்.
சாப்பிட்டு வருவதற்குள், உறவுகள், 10 பேர் வந்திருந்தனர்.
அஞ்சலை மகனிடம், ''அம்மாவுக்கு, 'ஸ்ட்ரோக்!' இது, தனியார் ஆஸ்பத்திரி; செலவு அதிகம்னாலும், பூரணமா குணமாக்கிடுவாங்க... பணத்த பத்தி கவலைப்படாத... ஆஸ்பத்திரி செலவு என்னோடது... 'பில்'லை நான் கட்டிடறேன்... இதுல, 5,000 ரூபாய் இருக்கு... கை செலவுக்கு வச்சுக்கோ... நான் புறப்படறேன்,'' என, வந்த காரிலேயே திரும்பினார், ராஜராஜன்.
ஒரு வாரத்திற்கு பின், டாக்டரின் அறிவுரைப்படி கம்பு ஊன்றி நடக்க ஆரம்பித்தாள், அஞ்சலை. பக்கவாதத்தில் முடங்கி போக வேண்டிய, தன் வாழ்க்கையை மீட்டு கொடுத்த, பெரியப்புவை நினைத்து பெருமிதம் கொண்டாள்.
'பெரியப்பு, நான் பெத்த புள்ள இல்லாட்டியும், வளத்த புள்ள. அதான் எம்மேல, இம்புட்டு பாசமா இருந்திருக்கு...' என, மனதுக்குள், பழைய நினைவுகளை அசை போட்டாள், அஞ்சலை.
'பெரியப்பு பிறந்து ஒரு மாசத்துல, அவங்க அம்மாவுக்கு மஞ்சள் காமாலை. இப்ப மாதிரி அப்பல்லாம் வைத்தியம் பார்க்கிற வசதி இல்ல. பரவைக்கு போயி, மருந்து சோறு சாப்பிட்டு வந்தாங்க. ஆனா, குணமாகிறதுக்கு ரொம்ப நாள் ஆயிடுச்சு...
'வரிசையா மூணு பொட்ட புள்ள பொறந்த பின் வரம் வாங்கி, தவமிருந்து பொறந்த புள்ள, பெரியப்பு. ஆனா, புள்ளக்கி தாய்ப்பால் கொடுத்தா, அதுக்கும் மஞ்சள் காமாலை வந்துடுமேன்னு, பயந்தாங்க... அதனால, தெனமும், மூணு வேளையும் என்னோட தாய்ப்பால பாலாடையில பீச்சி குடுத்துட்டு வருவேன்...
'அப்ப பெரியவன், கைப்புள்ளயா இருந்தான்... ரெண்டு பேரும் என்னோட பாலை குடிச்சு வளர்ந்தாங்க... இந்த விசயமெல்லாம் யாருக்கும் தெரியாது. ஆச்சிக்கு ஒடம்பு சரியானதும், அவுங்களே பால் குடுக்க ஆரம்பிச்சுட்டாங்க...
'அதுக்கப்புறம், இன்னொரு ஆம்புள புள்ள பெத்துக்கிட்டாங்க. அதனால தான், இத பெரியப்புன்னு கூப்புட ஆரம்பிச்சோம்... என்னோட பாலை குடிச்சு வளர்ந்த விசயம், பெரியப்புக்கு தெரியுமோ தெரியாதோ... ஆனா, விசயம் தெரிஞ்சவங்க யாருமே இப்ப உயிரோட இல்ல; நாந்தான் இவ்வளவுக்கு அப்புறமும் உயிரை வச்சுக்கிட்டு இருக்கேன்...
'பெரியப்பு, ஒருநாள் கூட என்னை, ஒரு வார்த்தை வித்தியாசமா சொன்னதில்ல; அவ்வளவு நல்ல குணம். அதே போல அவுங்க சம்சாரமும், புள்ளைங்களும் அவ்வளவு மரியாதையா நடந்துக்குங்க... அதனால தான், நான் சாகற வரைக்கும், பெரியப்பு வீட்டு மாட்டு சாணி அள்ளி சாகணும்; நாந்தான் மொத நடவு, களம் பெருக்கணும்...
'என் உழைப்புல சோறு திங்கணும்; பெரியப்பு செஞ்ச ஆஸ்பத்திரி செலவை, வேலை செஞ்சு அடச்சிடணும்... யாரு என்ன சொன்னாலும் கேட்கக் கூடாது...' என்று, மனதுக்குள் தீர்மானித்துக் கொண்ட, அஞ்சலை, பெரியப்பு வீட்டு, மாட்டு கொட்டகையை நோக்கி நடந்தாள்.

க. ராஜசேகரன்
வயது: 60,
படிப்பு: பி.எஸ்சி., அஞ்சல் துறையில் பணி செய்து, கடந்த பிப்ரவரி மாதம் ஓய்வு பெற்றவர். இப்போட்டிக்கு அனுப்பிய முதல் சிறுகதையே, ஆறுதல் பரிசு பெற்றிருப்பது, மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்துள்ளார். நிறைய படிப்பதும், எழுதுவதும் இவரது பொழுதுபோக்கு.

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Girija - Chennai,இந்தியா
08-நவ-201901:02:59 IST Report Abuse
Girija முடில யாராவது ஏதாச்சும் நெஞ்சை தொட்டது கண்கள் பனித்தன என்று பதிவு போடுவார்கள் என்று எதிர்பார்த்தேன் நன்றி ரசனை மாறிவிட்டது . நோய்வாய்ப்பட்ட வேலைக்காரி பெட்ரா மகனுக்கு பெரிய வீட்டுக்காரர் மனைவி தாய்ப்பால் ஊட்டியிருந்தால் ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X