அன்புள்ள அம்மாவுக்கு — நான், 28 வயது பெண். என்னுடையது காதல் திருமணம். இரண்டு குழந்தைகள் உள்ளனர். விவசாயியான என் அப்பா, மூத்த மகளான என்னை, இளவரசியாக வளர்த்தார். எங்கள் வீட்டுக்கு அருகில் இருக்கும் ஒரு குடும்பத்துக்கும், எங்களுக்கும் ஏற்பட்ட இடப்பிரச்னையால், அப்பாவை, அவர்கள் அடித்து விட்டனர். அவமானம் தாங்காமல், தலை குனிந்தபடி வந்து விட்டார். அதிலிருந்து, அக்குடும்பத்தினரை பார்ப்பதையும், பேசுவதையும் தவிர்த்தார்.
இது நடந்து சில மாதங்களுக்கு பின், அந்த வீட்டு பையனுக்கும், எனக்கும் காதல் மலர்ந்தது. திருமணத்துக்கு பின், இரு குடும்பங்களும் சேர்ந்து விடும் என்ற நம்பிக்கையில், வீட்டுக்கு தெரியாமல், திருமணம் செய்து கொண்டோம். புகுந்த வீட்டினர் ஏற்றுக் கொண்டாலும், என்னை ஒதுக்கி வைத்தார், அப்பா. அவருக்கு தெரியாமல், அம்மா மற்றும் சகோதர - சகோதரிகள், என்னுடன் சகஜமாக பேசுவர். அப்பாவுடன் பேச பலமுறை முயற்சித்தும், அவர் பேசவே இல்லை. என் குழந்தைகள் இருவரும், அப்பாவை பார்த்தால், 'தாத்தா... தாத்தா...' என்று அழைப்பர். அவரோ, கண்டுகொள்ளாமல் சென்று விடுவார். இந்த அளவுக்கு அவர் மனம் வேதனைப்பட்டுள்ளதை நினைத்து, தினம் தினம் அழுகிறேன். இந்நிலையில், சொந்த வீடு கட்டி, புதுமனை புகு விழாவுக்கு, அப்பாவை அழைக்க, நானும், என் கணவரும் போனோம். இருவரையும் அவமானப்படுத்தி அனுப்பி விட்டார். 'என் குடும்பத்தினர் செய்த தவறுக்காக, நான் மன்னிப்பு கேட்டு, பலமுறை உன் அப்பாவுடன் சமாதானமாக போக முயற்சித்தேன். ஆனால், ஒவ்வொரு முறையும் என்னை விரோதி போலவே, அவர் பார்க்கிறார். இனி, என்னால் அவமானப்பட முடியாது...' என்று, கணவர் சொல்ல, உடைந்தே போனேன். எனக்கு அப்பாவும், குழந்தைகளுக்கு தாத்தாவும் வேணும். அதற்கு என்ன செய்ய வேண்டும் அம்மா. — இப்படிக்கு, அன்பு மகள்.
அன்பு மகளுக்கு — இடப் பிரச்னையில், உன் வீட்டுக்கும், கணவர் வீட்டாருக்கும் சண்டை வந்தது சரி. சண்டையில், மாமனாரா, கணவரின் உடன் பிறந்தவர்களா அல்லது கணவர் வீட்டார் அனைவரும் சேர்ந்து, தந்தையை அடித்தனரா... அடித்தவர் யாரோ, அவர் வந்து, தன்னிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என, தந்தை கருதுகிறாரோ என்னவோ? இப்பிரச்னையை, கீழ்கண்டவாறு நீ அணுக வேண்டும்... 'தாத்தா... யாரோ செய்த தப்புக்காக, எங்களை ஒதுக்குகிறீர்களே... இது நியாயமா... பெரியவங்க செஞ்ச தப்புக்கு, நாங்க மன்னிப்பு கேட்டுக்கறோம்; எங்களை கொஞ்சுங்க தாத்தா... உங்களை, நாங்க நேசிக்கிறோம், எங்களிடம் அன்பு காட்டுங்க தாத்தா...' என, உன் குழந்தைகளை விட்டு, தந்தையிடம் பேசச் சொல். பேரன் - பேத்திகளின் கெஞ்சல், தாத்தாவின் கல் மனதை கரைக்கிறதா என பார்ப்போம். நீயும், கணவரும், தந்தைக்கு, உருக்கமான மன்னிப்பு கடிதம் எழுதுங்கள். இரு வீட்டு அங்கத்தினர்களும், வீட்டு பெரியவர்கள் அல்லது ஊர் பெரியவர்கள் முன்னிலையில் கூடி, சமாதானம் பேசுங்கள். உன் தந்தையை, யார் அடித்தனரோ, அவர்களை பிரத்யேகமாக, அவரிடம் மன்னிப்பு கேட்க ஏற்பாடு செய். மன்னிப்பு இயந்திர கதியாக இல்லாமல், உணர்வுப்பூர்வமாக இருக்கட்டும். கேட்கப்படும் மன்னிப்பு, அடிபட்ட காயத்துக்கு இடப்படும் அருமருந்து ஆகட்டும். உன் தந்தைக்கு, அடித்தவர் மீதான கோபத்தை விட, அந்த வீட்டு பையனை காதலித்து விட்டாளே என்கிற கோபம் தான், அதிகம் இருக்கும். அடித்தவர்களை தண்டிப்பதற்கு பதில், உன்னையும், குழந்தைகளையும் தண்டிக்கிறார். தாத்தாவுக்குரிய சந்தோஷங்களை அனுபவிக்காமல், தன்னைத்தானே தண்டித்துக் கொள்கிறார். உன் தந்தைக்கு, சம வயது நண்பர்கள் இருப்பர். அவர்களில் யாராவது ஒருவரை அணுகி, சமாதான துாது அனுப்பு. தந்தையின் மனம் மாற, அனைத்து வாசல்களையும் திறந்து வை. அனைத்து வகை சமாதானங்களையும், தந்தை உதாசீனப்படுத்தினால், நம்பிக்கை இழக்காமல் காத்திரு. தந்தையின் மனம் மாற, குலதெய்வம் கோவிலில், வாரா வாரம் பிரார்த்தனை செய். தந்தையை கடந்து செல்லும்போது, நீயும், உன் கணவரும், இரு வீட்டு அங்கத்தினர்களும் அன்பான, இணக்கமான மன்னிப்பு இறைஞ்சும் முகத்தை, தொடர்ந்து காட்டுங்கள். தொடர்ந்து பேரக் குழந்தைகளை விட்டு, தாத்தாவின் பாசத் தாக்குதலை நடத்திக் கொண்டே இரு; துாங்கும் தாத்தாவின் கன்னங்களில் முத்தங்களை கொடுத்து, ஓடி வரச்சொல். உருகி வழிந்து விடுவார், தாத்தா. — என்றென்றும் தாய்மையுடன், சகுந்தலா கோபிநாத்
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.
4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.
நேத்துதான் பார்த்தேன் . தன தங்கை காதலனோடு பேசறான்னு துப்பாக்கியை எடுத்துக்கொண்டு அண்ணன் வருவான் . என் அண்ணனுக்குப் பிடிக்காத இந்தக் காதல் வேண்டாம்னு தங்கை காதலனை அனுப்பிடுவா அதே துப்பாக்கியால் தனது கண்ணீரைத் துடைப்பான் அண்ணன் . - பாசமலர் . - சிவாஜி , சாவித்திரி , ஜெமினி
ம்ம்ம்ம்ம் அது அந்தக் காலம் . இந்தப் பெண் இபபோது உருகுவது போலி வேஷம் . .
.. அது அந்தக்காலம் இல்ல.. பாசமலர் அந்தக்கால "சினிமா".. அன்றிலிருந்து இன்றுவரை, அதீத உணர்ச்சிகளை (emotions) எளிதாக தூண்டும் காதல்/பாசம் தான் நிறைய சினிமாக்களில் உண்டு.. உறவுகளில் உள்ள நெளிவு சுளிவுகளை, சிக்கல்களை, குழப்பங்களை சரியாக/விரிவாக காட்டும் சினிமாக்கள் குறைவே.. இந்த வார கடிதமும் உண்மையா என்று நாம் யாருக்கும் தெரியாது.. ஒருவேளை உண்மையாக இருப்பின், அதனை ஒரு சினிமாவோடு உப்பிடுவது சிறுபிள்ளைத்தனம்.. பலபேர் பால்கவர்ச்சியை காதலென்றும், காதலை ஆழமான அன்பென்றும், நம்பி வறுபடுவது இது போன்ற சினிமாக்களால் தான்.....
'Daddy's Princess' என்று சொல்லிக்கொள்வது இப்போது fashion ஆகிடுச்சு.. அதெல்லாம் 'சும்மாமட்டும்தான்'ங்கறத மனசாட்சி உள்ள மகள்கள் தங்களது நடத்தை & நடவடிக்கைகளை self analysis செஞ்சு ஒத்துக்கவேண்டிய உண்மை..
அதுமாதிரிதான் இந்த பெண்ணும் நடந்துண்டுருக்கா.. உன்ன Princess ஸா பாத்த அப்பாவோட வலி உனக்கு புரியலையாம்மா..? 'உன் அப்பா அவமானப்பட்ட' சம்பவம் நடக்கும் முன்பிருந்தே.. நீ அந்த பையன காதலிச்சிருந்தா கூட, உங்க அப்பாவுக்காக அத மறுபரிசீலனை செஞ்சிருக்கணும்.. அதுதான் (உண்மையான) பாசம்னு சொல்லிக்கறதுலயே அர்த்தம் உண்டாக்கும்.. ஆனா நீ.. உன் அப்பா அவமானப்பட்டதற்கு பிறகுதான் காதலே வந்தது என்கிறாய்.. அவ்ளோ சுயநலம்.
நல்லவேளை.. அந்த உண்மையயையாவது ஒத்துக்கற மனசு இருக்கே..
இப்ப.. உன் வாழ்க்கைத் துணை உன் தந்தையிடம் சமாதானமாகப் போகும் முயற்சியில் 'இதற்கு மேல் அவமானப்பட முடியாது.. ' என்கிறார்.. அவரது பொறுமை அடடா.. அந்தளவு ரோசம் இருப்பவர் தங்களால் அவமானப்படுத்தப்பட்டவரின் மகளை காதலிக்கும் போது யோசித்திருக்க வேண்டும்.. Atleast திருமணமாவது அவரை சமாதானப் படுத்திவிட்டு, நடத்தியிருக்கணும்..
உன்னை Princess ஸா வெச்சிருந்த உன் அப்பாவின் மனக் காயத்துக்கு நீ மருந்தாக இல்லாமல்.. வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் வேலையை நீ - உன் கணவன் மற்றும் அவரது குடும்பத்தினர் சேர்ந்து செய்துவிட்டீர்கள்.. அந்த வலியை யாராலும் உணரவே முடியாது.. அனுபவித்தால் மட்டுமே புரியும்..
இதற்கு ஒரே தீர்வு.. >> அவர் மனம் மேலும் காயப்படாமல் எப்போதும் அனுசரணையாக இருங்க..
>> உங்க குழந்தைகளை வெறுமனே தாத்தாவிடம் பேசச் சொல்லி, சொல்லிக் குடுக்காம (சூர்யவம்சம் சரத்குமார் - தேவயானி செய்வது போல) நடந்தவைகளை சொல்லி புரிய வெச்சு.. அவர்களுக்கு தங்கள் தாத்தா மீது உண்மையாகவே பாசம் உண்டாகச் செய்யுங்க.. இல்லனா.. 'தங்களின் அம்மா - அப்பா இவ்ளோ இறங்கி வந்தும்.. ' என்று அவர்களும் உன் தந்தையை வெறுக்கக் கூடும்.. அதுவும் 'உறவுகளைப் பேணுவதில் இன்றைய குழந்தைகள்..' நாம் தான் நல்லவர்களை நல்ல விதமாக அடையாளப்படுத்தணும்..
>> நல்லதே நடக்க வாழ்த்துக்கள்.. <<
காதலிக்கும் போது , ஓடிப்போகும்போது அப்பா ஞாபகம் வராது .. வைராக்யமான மனுஷர் அவரு ... அவனுங்க அடிச்ச அடிய விட நீ செஞ்ச காரியம் சாகும் வரை அவரை வதைக்கும் .. நாளைக்கு உன் புள்ள அப்படி செய்யும் போது உனக்கு புரியும் ..
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.